நுரையீரல் புற்றுநோய் மிகவும் கொடியதாக இருந்தாலும், இந்தியாவில் இன்னும் முறையான நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை திட்டம் இல்லை.
நுரையீரல் புற்றுநோய் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதாரப் பிரச்சனையாகும். இது முதன்முதலில் 1900-ஆம் ஆண்டின் முற்பகுதியில் பிரேத பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், இமேஜிங் தொழில்நுட்பங்கள் (imaging technologies), நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகளை நேரடியாகப் பார்க்கும் செயல்முறை (bronchoscope) மற்றும் மூலக்கூறு கண்டறிதல் (molecular diagnostics) ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் 20-ஆம் நூற்றாண்டில் நுரையீரல் புற்றுநோயை நம்பகத்தன்மையுடன் கண்டறிவதை எளிதாக்கியது. உலக நுரையீரல் புற்றுநோய் தினம் (World Lung Cancer Day) ஆகஸ்ட் 1 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் நுரையீரல் புற்றுநோயின் பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. இதில் நுரையீரல் புற்றுநோயின் ஆபத்துக்கள் மற்றும்
அதனை முன்கூட்டியே கண்டறிவதன் அவசியம்ஆகியவை அடங்கும்.
அமைதியாக வளர்ந்து வரும் நுரையீரல் புற்றுநோய்
நுரையீரல் புற்றுநோயானது பொதுவாக கண்டறியப்பட்ட புற்றுநோயாகும் மற்றும் உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு முக்கிய காரணமாகும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (Indian Council of Medical Research (ICMR)) தரவுகளின் படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நுரையீரல் புற்றுநோயின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது, மேலும் 10% புற்றுநோய் இறப்புகளுக்கு காரணமாகிறது. 2022-ஆம் ஆண்டில் 81,000 புதிய நோயாளிகள் மற்றும் 75,000 இறப்புகள் பதிவாகி உள்ளன. நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளின் முழுமையான எண்ணிக்கையில் இந்தியா உலகளவில் நான்காவது இடத்தில் உள்ளது. இது 2025-ஆம் ஆண்டில் இரட்டிப்பாகும்.
இந்தியர்களில் நுரையீரல் புற்றுநோய் பொதுவாக நிலை 3 அல்லது 4-ல் கண்டறியப்படுகிறது. இந்த நிலையில், நோயைக் குணப்படுத்த முடியாது. இதன் விளைவாக மோசமான உயிர் பிழைப்பு விகிதம் (poor survival rates) ஏற்படுகிறது. நோய்ப் பாதிப்பு கண்டறியும் போது பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகள் தொலைதூர மெட்டாஸ்டாசிஸைக் (distant metastasis) கொண்டுள்ளனர். இந்தத் தாமதம் சிக்கலான பாதிப்பு மற்றும் காசநோய் (Tuberculosis (TB)) போன்ற பாதிப்பை ஏற்படுகிறது. இந்த சிக்கல்களால் நுரையீரல் புற்றுநோயைக் முதலில் மருத்துவர்கள் கண்டறிவதைத் தவறவிடலாம். எனவே, நுரையீரல் புற்றுநோயின் தொடக்க நிலையினைக் கண்டறிய, மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு அமைப்பைப் பயன்படுத்துவது உதவியாக இருக்கும்.
பல்வேறு புற்றுநோய் பரிசோதனை திட்டங்களுக்கான கட்டமைப்பை இந்தியா உருவாக்கியிருந்தாலும், நுரையீரல் புற்றுநோய் அதில் இன்னும் சேர்க்கப்படவில்லை. சமீபத்தில் மக்கள் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நுரையீரல் புற்றுநோய் குறித்து தகுந்த வழிகாட்டுதல்களை ஏற்படுத்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆராய்ச்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.
நுரையீரல் புற்றுநோயின் பரவலானது புகைபிடிப்பதால் மட்டுமல்லாமல், காற்று மாசுபாட்டின் அளவு அதிகரிப்பதும் ஒரு காரணம் ஆகும். ஆபத்தான வகையில், 2007-ஆம் ஆண்டிலிருந்து காற்று மாசுபாட்டினால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய் இறப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30% அதிகரித்துள்ளது. துகள்கள் (PM10, PM2.5, நச்சு உலோகங்கள்) மற்றும் வாயுக்கள் (PM10, PM2.5, நச்சு உலோகங்கள்) போன்ற ஏராளமான தீங்கு விளைவிக்கும் பொருட்கள் காற்றில் சேரும் போது (சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு) அவை நுரையீரல் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும், இதன் விளைவாக நுரையீரல் புற்றுநோய் ஏற்படும்.
புகையிலை புகைத்தல் (சிகரெட், பீடிகள், சுருட்டுகள் மற்றும் குழாய்கள் உட்பட) நுரையீரல் புற்றுநோய்க்கான முதன்மை ஆபத்துக் காரணியாகும். புகைபிடிக்காதவர்களை பாதிக்கும் காரணிகளில், இரண்டாவது புகை (second-hand smoke), தொழில்சார் ஆபத்துகள் (அஸ்பெஸ்டாஸ் (asbestos), ரேடான் (radon) மற்றும் சில இரசாயனங்கள் போன்றவை), காற்று மாசுபாடு, பரம்பரை புற்றுநோய் நோய்க்குறிகள் மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய்கள் ஆகியவை அடங்கும். பெரும்பாலும், இக்காரணிகளின் கலவையானது புகை பிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய்க்கு பங்களிக்கிறது. வட இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயாளிகளில் 40% பேர் புகைபிடிக்காதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மரபணு மாற்றமும் ஒரு காரணமாக உள்ளது. புகைபிடிக்காதவர்களுடன் தொடர்புடைய நுரையீரல் புற்றுநோய்கள் பெரும்பாலும் இளைய தலைமுறையினரையே அதிகம் பாதிக்கின்றது. புகைபிடிப்பவர் தொடர்பான புற்றுநோய்களுடன் ஒப்பிடும்போது இவை தனித்துவமான மரபணு மாற்றங்களைக் காட்டுகின்றன. இது நுரையீரல் புற்றுநோயைப் பற்றி விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம்
இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயினை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமை, உயிர்வாழும் விகிதங்களை அதிகரிக்கும் செயல்முறை இல்லாமை போன்றவை நுரையீரல் புற்றுநோயினை முன்கூட்டியே கண்டறிவதற்கான அவசரத் தேவையைக் காட்டுகிறது. நுரையீரல் புற்றுநோய் மோசமான விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கு முன்கூட்டியே கண்டறிதல் முக்கியமானது. நுரையீரல் புற்றுநோயின் பாதிப்பு இருந்தபோதிலும், இந்தியாவில் ஒரு முறையான தொடக்க நிலை சோதனைத் திட்டம் இல்லை. இது செலவுகள், ஏற்றுமதி - இறக்குமதி சிக்கல்கள் மற்றும் காசநோயின் பரவல் போன்றவையை சார்ந்துள்ளது. மேம்பட்ட புதிய மருந்துகள் நுரையீரல் புற்றுநோய்க்கான ஆயுளை நீட்டிக்க முடியும் என்றாலும், அவை பெரும்பாலும் விலை உயர்ந்தவை. நுரையீரல் புற்றுநோயைத் தடுப்பது மற்றும் முன்கூட்டியே கண்டறிவது ஒரு சிறந்த அணுகுமுறையாகும்.
ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், நுரையீரல் புற்றுநோயை குணப்படுத்த முடியும். நுரையீரல் புற்றுநோயை மார்பு எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் போன்ற இமேஜிங் முறைகள் மூலம் கண்டறியலாம். எக்ஸ்-கதிர்கள் பொதுவாக 2 செமீ அளவு அல்லது மார்புச் சுவருக்கு (<2.5 செமீ) அருகில் இருக்கும் முடிச்சுகள் அல்லது பாதிப்புக்களை மட்டுமே எடுக்கின்றன. எனவே ஆரம்ப நிலை நுரையீரல் புற்றுநோயை திறம்பட கண்டறிய முடியாது. நுரையீரல் புற்றுநோய்க்கான இரத்த உயிர் குறிப்பான்கள் (blood biomarkers) இன்னும் இல்லை, இருப்பினும் சுவாசத்தை வெளியேற்றும் பகுப்பாய்வு உட்பட பல்வேறு நுட்பங்கள் பற்றிய தீவிர விசாரணை நடந்து வருகிறது.
சமீபத்திய காலங்களில், எக்ஸ்ரே இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட கணினியைப் பயன்படுத்தும் LDCT (Low-Dose Computed Tomography) செயல்முறை ஒரு பெரிய மாற்றமாக வெளிப்பட்டுள்ளது. இந்த ஸ்கேன் வழக்கமான CT ஸ்கேனை விட ஐந்து மடங்கு குறைவான கதிர்வீச்சைப் பயன்படுத்துகிறது மற்றும் ஆரம்பகால நுரையீரல் புற்றுநோய் பரிசோதனைக்கான முதல் தேர்வாக மாறியுள்ளது. இது தற்போது அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் வழக்கமான நுரையீரல் புற்றுநோய் பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்படுகிறது. இந்த LDCT செயல்முறை மிகக் குறைந்த அளவிலான கதிர்வீச்சைப் பயன்படுத்துவதால், இச்சோதனையானது தேவைப்படும் போது செய்யப்படலாம்.
மார்பு எக்ஸ்-கதிர்களுடன் (Chest X-rays) ஒப்பிடும்போது எக்ஸ்ரே இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட கணினியைப் பயன்படுத்தும் LDCT செயல்முறை நுரையீரல் புற்றுநோய் இறப்பை 20% குறைக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. தொடக்க நிலை சோதனையின் போது கண்டறியப்படுவதால், இதன் மூலம் இறப்பு விகிதத்தை 24% குறைக்கலாம். இம்முறை குறைந்த கதிர்வீச்சைப் பயன்படுத்துகிறது ஆனால் அதிக உணர்திறன் கொண்டது. அறிகுறிகள் தோன்றுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே நுரையீரலில் புற்றுநோய்க்குரிய முடிச்சுகள் அல்லது புண்களைக் கண்டறிய இது அனுமதிக்கிறது. ஆரம்பகால கண்டறிதல் சாத்தியமான சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகளின் வரம்பை இம்முறை மேம்படுத்துகிறது.
நுரையீரல் புற்றுநோய் ஒரு தீவிர பிரச்சினை. இதற்கு தனிநபர்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் கூட்டு முயற்சிகள் தேவை. நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். புகைபிடிப்பதை நிறுத்தும் திட்டங்களையும் செயல்படுத்துவது அவசியம். தொழில்சார் வெளிப்பாடுகளைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டும். கூடுதலாக, இந்திய மக்களுக்கான சிறந்த நோய் அறிதல் தொழில்நுட்பங்கள் மற்றும் சிகிச்சைகளை உருவாக்க ஆராய்ச்சி தேவை. இந்த நோயை நிவர்த்தி செய்வதற்கும் உயிர்வாழும் விகிதங்களை மேம்படுத்துவதற்கும் தேசிய நுரையீரல் புற்றுநோய் பரிசோதனைத் திட்டமும் (national lung cancer screening programme) அவசியம்.
டாக்டர் மது சசிதர், டாக்டர். சாய் பிரவீன் ஹரநாத் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனையில் நுரையீரல் நிபுணர்களாக உள்ளனர்.