கனிம வள வரிவிதிப்பு சூழலில் ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான உறவைப் புரிந்துகொள்வதில் நிதி கூட்டாட்சி (Fiscal federalism) ஒரு முக்கியமான கருத்தாகும்.
கனிமப் பகுதி மேம்பாட்டு ஆணையம் & Anr. vs M/S Steel Authority of India & Anr (Mineral Area Development Authority & Anr. v. M/S Steel Authority of India & Anr) வழக்கின் தீர்ப்பில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் (Mines and Minerals (Development and Regulation) Act (MMDR)), 1957 மூலம் நிறுவப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பை மீறி, கனிம உரிமைகள் மீது வரிகளை விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்தத் தீர்ப்பு, மாறுபட்ட கருத்துடன், கனிமப் பிரித்தெடுப்பதைப் (mineral extraction) பொறுத்தவரையில், உரிமைத் தொகை (royalty) வழங்குவதை சட்டப்பூர்வமாக வகைப்படுத்துவதை மையமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, உரிமைத் தொகை (royalty) என்பது கனிம உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு வரி அல்லது ஒப்பந்த அடிப்படையில் பரிசீலிக்கப்படுகிறதா என்பதை நீதிமன்றம் புரிந்துகொள்கிறது. இந்த வேறுபாடு இந்திய நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, கனிம வளங்களில் இருந்து வருவாயை ஈட்டும் திறனை இது பாதிக்கிறது.
பெரும்பான்மையான கருத்து, உரிமைத் தொகை என்பது ஒரு வரி அல்ல என்பதாகும். இதன் மூலம் கனிம உரிமைகள் மீதான மாநில வரிவிதிப்பு மீதான நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டின் வரம்பைக் கட்டுப்படுத்துகிறது. மாறாக, உரிமைத் தொகை ஒரு வரியாக செயல்படுகிறது என்றும், கனிம வளர்ச்சியில் நாடாளுமன்றத்தின் பரந்த ஒழுங்குமுறை அதிகாரம் இந்த பகுதியில் மாநில வரிவிதிப்பைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது என்றும் மாறுபட்ட கருத்து வாதிடுகிறது. மாறுபட்ட கண்ணோட்டங்கள், குறிப்பாக, இயற்கை வள மேலாண்மை தொடர்பானவை இந்தியாவில் நிதிக் கூட்டாட்சியின் சிக்கல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
வழக்கின் பின்னணி
இந்தத் தீர்ப்புக்கு வழிவகுத்த வழக்கில் பல முறையீடுகள் மற்றும் ரிட் மனுக்கள் (writ petition) இருந்தன. இவை, கனிம நிலங்கள் மீதான மாநில வரிகளின் செல்லுபடியை சவால் செய்தன. இந்தியா சிமெண்ட் லிமிடெட் vs தமிழ்நாடு மாநிலம் (India Cement Ltd. vs. State of Tamil Nadu) 1990-ம் ஆண்டு வழக்கின் ஒரு முக்கிய குறிப்பானது, இந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட உரிமைத் தொகை, வரியாகக் கருதப்படும் என்று முடிவு செய்தது. கனிம உரிமைகள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு பின்னர் மேற்கு வங்க மாநிலம் vs கேசோரம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (State of West Bengal vs Kesoram Industries Ltd) 2004 வழக்கில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அங்கு நீதிமன்றம் உரிமைத் தொகை ஒரு வரி அல்ல என்று தெளிவுபடுத்தியது.
இந்தியா சிமென்ட் வழக்கு, உரிமைத் தொகை வழங்களுக்கு செஸ் விரியை விதிக்கும் தமிழக அரசின் முயற்சியைச் சுற்றியே உள்ளது. உரிமைத் தொகை வளங்கள் ஒரு வரிக்கு நிகரானவை. இதனால், மத்திய அரசின் வரம்புக்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு கனிம உரிமைகள் மீது வரி விதிக்கும் மாநிலத்தின் திறனைக் கணிசமாகக் கட்டுப்படுத்தியது. இது அடுத்தடுத்த சட்ட சவால்களில் மறுபரிசீலனை செய்யப்படும் ஒரு முன்மாதிரியாக அமைந்தது.
சிக்கலை மறுபரிசீலனை செய்தல் மற்றும் தற்போதைய தீர்ப்பு
தற்போதைய வழக்கில், பல்வேறு மாநில அரசுகள் கனிம உரிமைகள் மீதான வரிகளை விதிக்கும் சட்டமியற்றும் தகுதி குறித்து இந்தியா சிமென்ட் (India Cement) மற்றும் கேசோரம் இண்டஸ்ட்ரீஸ் (Kesoram Industries) வழக்குகளில் முரண்பட்ட விளக்கங்களைக் கேட்டன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாநிலங்களின் அதிகாரத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. மேலும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் உரிமைத் தொகை வழங்கள் கனிம உரிமைகள் மீது மாநிலங்கள் வரி விதிப்பதைத் தடுக்காது என்பதை வலியுறுத்துகிறது.
கூட்டாட்சி மற்றும் சட்டமன்றத் திறன்
கனிம வள வரிவிதிப்பு சூழலில் ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான உறவைப் புரிந்துகொள்வதில் நிதிக் கூட்டாட்சி ஒரு முக்கியமானக் கருத்தாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், இது ஒன்றியம் மற்றும் மாநிலங்கள் இரண்டும் தங்கள் அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்புகளை நிறைவேற்ற போதுமான ஆதாரங்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது. இந்தச் சட்டப்பிரிவின் அடிப்படை இந்தியாவில் கூட்டாட்சிக் கட்டமைப்பை அறிமுகப்படுத்திய இந்திய அரசுச் சட்டம் (Government of India Act), 1935-ல் இருந்து அறியலாம்.
தற்போதைய அரசியலமைப்பு கட்டமைப்பிற்கான அடித்தளத்தை அமைத்து, கூட்டாட்சி மற்றும் மாகாண பட்டியல்களாக பாடங்களை ஒரே மாதிரியாகப் பிரிப்பதற்கு சட்டம் வழங்கியது. தற்போதைய தீர்ப்பு ஒன்றிய மற்றும் மாநில அதிகாரங்களை சமநிலைப்படுத்தும் வரலாற்று நோக்கத்துடன் ஒத்துப்போகிறது. மாநிலங்கள் தங்கள் வளங்களின் மீது குறிப்பிடத்தக்க கட்டுப்பாட்டை வைத்திருப்பதை இது உறுதி செய்கிறது.
ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே சட்டமன்ற அதிகாரங்கள் எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகின்றன என்பதுதான் இந்தச் சட்டப் போரில் முக்கியப் பிரச்சினை ஆகும். இது அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. ஏழாவது அட்டவணையானது, அரசாங்கத்தின் ஒவ்வொரு நிலையிலும் மாநிலங்களுக்கு வரிகளை விதிக்கக்கூடிய விதிமுறைகளைப் பட்டியலிடுகிறது.
ஒன்றியப் பட்டியலின் பிரிவு 54-ன் கீழ் இயற்றப்பட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் (Mines and Minerals (Development and Regulation) Act (MMDR)), 1957, கனிம ஒழுங்குமுறைக்கான விரிவான கட்டமைப்பை வழங்குகிறது. எவ்வாறாயினும், மாநிலப் பட்டியலில் உள்ள நுழைவு 50, நாடாளுமன்றத்தால் விதிக்கப்படும் எந்தவொரு வரம்புக்கும் உட்பட்டு கனிம உரிமைகள் மீது வரிகளை விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. தற்போதைய தீர்ப்பு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் (MMDR) அத்தகைய வரம்பைக் கொண்டிருக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. இதன் மூலம் மாநிலங்கள் தங்கள் வரிவிதிப்பு அதிகாரங்களை இந்த பிரிவின் கீழ் பயன்படுத்த அனுமதிக்கிறது.
நிதி கூட்டாட்சி (Fiscal federalism) இரண்டு நலன்களை சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க சுரங்கம் போன்ற தொழில்களை ஒழுங்குபடுத்த ஒன்றியம் விரும்புகிறது. அதே நேரத்தில், மாநிலங்கள் தங்கள் சொந்த வளங்களில் இருந்து வருவாய் ஈட்ட விரும்புகின்றன. கூட்டுறவு கூட்டாட்சி (Cooperative federalism) என்பது பொதுவான இலக்குகளை அடைய ஒன்றியம் மற்றும் மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதாகும். இதற்கு ஒரு உதாரணம் கனிம வளர்ச்சி ஆகும். இந்த ஒத்துழைப்பிற்கு, வருவாயை உருவாக்க மாநிலங்களின் அதிகாரத்துடன் ஒழுங்குபடுத்தும் ஒன்றியத்தின் அதிகாரத்தை சமநிலைப்படுத்த வேண்டும். தேசிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில் கனிம வளங்களை நிலையானதாக மேம்படுத்துவதே இதன் முக்கிய குறிக்கோள் ஆகும்.
மாநில வரி வசூலில் தாக்கங்கள்
கனிம உரிமைகளுக்கு வரி விதிக்கும் மாநில அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது பல தாக்கங்களைக் கொண்டுள்ளது.
மாநிலங்களுக்கான மேம்பட்ட வருவாய் : கனிம உரிமைகள் மீது மாநிலங்கள் இப்போது வரிகளை விதிப்பதன் மூலம், அவற்றின் வருவாயை அதிகரிக்க வழிவகுக்கலாம். இதில், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் போன்ற கனிம வளங்கள் நிறைந்த மாநிலங்களுக்கு இது மிகவும் முக்கியமானது. இது நிதித் திறனை அதிகரிக்க அவற்றின் இயற்கை வளங்களைப் பயன்படுத்த முடியும்.
ஒழுங்குமுறை தெளிவு (Regulatory Clarity) : இந்த தீர்ப்பு, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் நோக்கம் பற்றிய தெளிவை வழங்குகிறது. இது மாநிலங்களால் நிர்வகிக்கப்படும் கனிம உரிமைகள் மீதான வரிவிதிப்பிலிருந்து மத்திய அரசால் கையாளப்படும் கனிமங்களின் ஒழுங்குமுறையை பிரிக்கிறது. இந்தப் பிரிப்பு அதிகார வரம்பு மோதல்களைத் தடுக்க உதவுகிறது.
கூட்டாட்சியை வலுப்படுத்துதல் : இந்தத் தீர்ப்பு மாநில சட்டமன்றங்களின் அதிகாரத்தை வலுப்படுத்துகிறது. இது இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், இது அரசியலமைப்பிற்குள் மாநில சுயாட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. மத்திய அரசின் அதிக தலையீடு இல்லாமல் மாநிலங்கள் தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும்.
தீர்ப்பின் பகுப்பாய்வு
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசியலமைப்பு விதிகள், முந்தைய வழக்குச் சட்டங்கள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் (MMDR) ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்கிறது.
தீர்ப்பின் முக்கிய விதிமுறைகள் பின்வருமாறு:
உரிமைத் தொகையின் தன்மை (Nature of Royalty) : உரிமைத் தொகை என்பது கனிமங்களைப் பிரித்தெடுக்கும் உரிமைக்கான கட்டணமே தவிர வரி அல்ல என்று நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது. எனவே, கனிம உரிமைகள் மீது வரி விதிக்கும் மாநிலங்களின் அதிகாரம் அப்படியே உள்ளது.
பட்டியல் II-ன் பிரிவு 50 : நீதிமன்றம் பிரிவு 50 ஐ பரந்த அளவில் விளக்கியது. இதன் பொருள் கனிம உரிமைகள் மீது மாநிலங்கள் வரி விதிக்கலாம். நாடாளுமன்றம் விதித்துள்ள வரம்புகள் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் மாநிலங்களின் வரிவிதிப்புத் திறனை மறைமுகமாகக் கட்டுப்படுத்தவில்லை எனவும் கூறியது.
அரசியலமைப்புத் தத்துவம் (Constitutional Philosophy) :
இந்த தீர்ப்பு அரசியலமைப்பில் உள்ள கூட்டாட்சி கொள்கையை எடுத்துக்காட்டுகிறது. இந்தக் கொள்கை ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளின் தெளிவான பிரிவை உருவாக்குகிறது. இந்த பிரிவின் நோக்கம் அதிகாரத்தை சமநிலைப்படுத்துவதும், ஒன்றிய அரசு அதிகாரத்தை மீறுவதைத் தடுப்பதும் ஆகும்.
கனிம உரிமைகள் மீது வரி விதிக்கும் மாநிலங்களின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதுடன், இந்திய சட்டத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கிறது. முந்தைய தீர்ப்புகளில் இருந்து உருவான குழப்பங்களை தீர்ப்பதன் மூலம், கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சி கொள்கைகளை நீதிமன்றம் வலுப்படுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பு மாநிலங்களின் நிதித் திறனை அதிகரிப்பது மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள கனிம வளங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், வரி விதிப்பதற்கும் தெளிவான கட்டமைப்பையும் வழங்குகிறது. மாநிலங்கள் தங்கள் புதுப்பிக்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தத் தொடங்கும் போது, இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளின் நிர்வாகத்திற்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.