அத்தகைய கொள்கையை எவ்வாறு உருவாக்குவது? இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) இடஒதுக்கீடு மாதிரி ஒரு வரைபடத்தை வழங்க முடியும்.
பட்டியல் வகுப்பினர் (Scheduled Castes) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீட்டுக்கு (sub-classification) உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களில் உள்ள மேல் நிலையினரை (creamy layer), அரசு அடையாளம் காண நீதிபதி பி.ஆர்.கவாய் (Justice B R Gavai) உத்தரவிட்டுள்ளார். பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் மேல் நிலையினர் (creamy layer) நடைமுறையை அமல்படுத்த புதிய கொள்கையை வரையறுக்க வேண்டும். அத்தகைய கொள்கையை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் (OBC) இடஒதுக்கீடு மாதிரியை அடிப்படையாக வைக்கவும் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
மேல் நிலையினர் (creamy layer) என்ற கருத்து 1992-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்திரா சஹானி தீர்ப்பிலிருந்து வந்தது. ஆகஸ்ட் 13, 1990-ஆம் ஆண்டு, வி.பி.சிங் அரசு, மத்திய அரசுப் பணிகளில் 27% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் (OBC) இடஒதுக்கீட்டை அறிவித்தது. இதை எதிர்த்து இந்திரா சஹானி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நவம்பர் 16, 1992-ஆம் ஆண்டு, நீதிபதி பி.பி.ஜீவன் ரெட்டி தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு, 27% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் (OBC) இடஒதுக்கீட்டை உறுதி செய்தது. மேல் நிலையினர் (creamy layer) அல்லது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் (OBC)களில் சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வியில் முன்னேறிய உறுப்பினர்களை விலக்கி 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது. இடஒதுக்கீட்டுப் பலன்கள் மிகவும் தேவைப்படுபவர்களுக்குப் சென்று சேர வேண்டும் என்பதற்காக இது செய்யப்பட்டது.
மேல் நிலையினர் (creamy layer) என்பது உள் ஒதுக்கீட்டிலிருந்து (sub-classification) வேறுபடுகிறது. உள் ஒதுக்கீடு பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையிலான ஒரு முறையை மாற்றுகிறது. மேல் நிலையினர் (creamy layer) என்பது ஒரு சாதி அல்லது சமூகத்தில் உள்ள வசதியான மக்களைக் குறிக்கிறது.
நீதிபதி ராம் நந்தன் பிரசாத் தலைமையிலான நிபுணர் குழு மேல் நிலையினர் (creamy layer) என்பதை வரையறுத்தது. செப்டம்பர் 8, 1993-ஆம் ஆண்டு, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training (DOPT)) ஆறு மேல் நிலையினர் (creamy layer) வகைகளைப் பட்டியலிட்டது. இவர்களில் சட்டமுறையான பதவி சார்ந்தவர்கள், குழு 'ஏ' மற்றும் 'பி' அதிகாரிகள், உயர் பதவியில் உள்ள இராணுவ வீரர்கள், சில தொழில் வல்லுநர்கள், சொத்து உரிமையாளர்கள் மற்றும் வருமான வரி மதிப்பீட்டாளர்கள் அடங்குவர்.
மேல் நிலையினர் (creamy layer) இரண்டு முக்கிய குழுக்களை உள்ளடக்கியது: அரசு ஊழியர்களின் குழந்தைகள் மற்றும் தனியார் துறை ஊழியர்களின் குழந்தைகள். தனியார் துறையைப் பொறுத்தவரை, பெற்றோரின் வருமானம் மேல் நிலையினர் (creamy layer) நிலையை தீர்மானிக்கிறது. அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, இது தரவரிசையை அடிப்படையாகக் கொண்டது. வருமான வரம்பு ஆரம்பத்தில் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாயாக இருந்தது. ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் இம்முறை திருத்தப்படும். 2017-ஆம் ஆண்டு இது 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு எந்த திருத்தமும் நடக்கவில்லை. 2015-ஆம் ஆண்டில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (National Commission for Backward Classes (NCBC)) இதை 15 லட்சம் ரூபாயாக உயர்த்த பரிந்துரை செய்தது.
அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, பெற்றோரில் ஒருவர் குரூப்-ஏ அதிகாரியாக இருந்தால் அல்லது 40 வயதுக்கு முன்பு குரூப்-ஏ நிலையில் இருந்தால், அக்குழந்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) இடஒதுக்கீட்டிற்கு தகுதியற்றது. பெற்றோர் இருவரும் குரூப்-பி அதிகாரிகளாக இருந்தால், ஒருவரை மேல் நிலையினர் (creamy layer) பிரிவில் வைக்கிறார்கள். இராணுவத்தில் உயர் பதவிகளில் உள்ளவர்களின் குழந்தைகளும் இதில் அடங்குவர்.
மார்ச் 2019-ஆம் ஆண்டு, இந்த அளவுகோல்களை மறுஆய்வு செய்ய பி.பி. சர்மா தலைமையில் ஒரு குழுவை அரசாங்கம் அமைத்தது. அதில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பட்டியலிடப்பட்ட வகுப்பினர், பழங்குடியினருக்கான மேல் நிலையினர் (creamy layer) அளவுகோல்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அளவுகோல்களிலிருந்து வேறுபடலாம் என்று நீதிபதி கவாய் கூறினார். ஆனால் அவர் குறிப்பிட்ட அளவுகோல்களை வழங்கவில்லை. நீதிபதி பங்கஜ் மித்தல் கல்வி ஒரு காரணியாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தார். செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் படிக்கும் குழந்தையை கிராமப்புற பள்ளி மாணவனுடன் ஒப்பிட முடியாது என்று அவர் கூறினார்.
மேல் நிலையினர் (creamy layer) என்பது மிகவும் சிக்கலான ஒரு பிரச்சினை. உறுதியான நடவடிக்கையின் பலன்கள் இருந்தபோதிலும், குறிப்பிட்ட வகுப்பினரின் வரலாற்று அநீதிகளை அழிக்க முடியுமா?, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு பொருளாதார மற்றும் சமூக அளவுகோல்கள் பின்தங்கிய நிலையில் இருந்து மேல்நோக்கிய நிலைக்கு அனுமதிக்கலாம். ஆனால், பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின பிரிவுகளுக்கும் இதையே கூற முடியாது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மேல் நிலையினர் (creamy layer) விதிவிலக்கு உருவாக்கம் குறித்த இறுதி முடிவை மாநிலங்களுக்கு விட்டுவிடுகிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) இடஒதுக்கீட்டிற்காக நீதிபதி ஆர்.என்.பிரசாத் குழுவைப் போன்ற குழுக்களை மாநிலங்கள் அமைக்க வேண்டும்.