'சட்டவிரோதக் குடியேற்றம்' இன வன்முறைக்கு காரணம் என்று பிரேன் சிங் தொடர்ந்து கூறிவருகிறார்.
மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, இராணுவ ஆட்சிக்குழு முழுக் கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொண்டு மக்களை கடுமையாக ஒடுக்கியது. அடிக்கடி உள்நாட்டுப் போரை எதிர்கொள்ளும் நாட்டில் ஓரங்கட்டப்பட்ட இனக்குழுக்களுக்கு ஜனநாயகம் அல்லது அதிக உரிமைகளுக்கான எந்தவொரு அழைப்பையும் நசுக்குவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர். இராணுவ ஆட்சியின் நடவடிக்கைகளில் குண்டுவீச்சு மற்றும் முழு கிராமங்களையும் இடம்பெயரச் செய்தல் ஆகியவை அடிக்கடி நடைபெறுகின்றன. இதன் விளைவாக, பல குடிமக்கள், குறிப்பாக இன சிறுபான்மையினர், இந்தியா போன்ற அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
மியான்மரின் சாகிங் பகுதி மற்றும் சின் மாநிலத்தைச் சேர்ந்த பல அகதிகள் இந்தியாவின் மிசோரம் மற்றும் மணிப்பூருக்கு வருகின்றனர். மிசோரமில், சின் அகதிகளை இன உறவினர்களாக கருதும் உள்ளூர் மக்கள் அவர்களை நன்றாக கவனித்து கொள்கின்றனர். ஆனால், மணிப்பூரில் நிலைமை வேறு. முதலமைச்சர் என்.பிரேன் சிங் தலைமையிலான அரசாங்கம் அகதிகளை சரியாக நடத்துவதில்லை. மணிப்பூர் அரசாங்கம் பெரும்பாலும் அகதிகளை எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இணைக்கிறது.
மணிப்பூரில் இன மோதல்களால் இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாகியுள்ளது. கடந்த ஆண்டு, குக்கி-சோ சமூகத்திற்கும் மெய்தேயி சமூகத்திற்கும் இடையே வன்முறை வெடித்தது. அப்போதிருந்து, மணிப்பூர் அரசாங்கம் இனப் பிரச்சினைகளை அகதிகள் மீது தொடர்ந்து குற்றம் சாட்டுகிறது. இந்த நிலைப்பாடு அகதிகளை களங்கப்படுத்தும் கொள்கைகளுக்கு வழிவகுத்துள்ளது. இந்தக் கொள்கைகள் மிசோரம் எடுத்த மனிதாபிமான அணுகுமுறையுடன் முற்றிலும் முரண்படுகின்றன.
இந்தியா மற்றும் மியான்மர் குடிமக்கள் இரு நாடுகளுக்கும் சுதந்திரமாக சென்றுவரும் முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சி என்றே இதைப் பார்க்க வேண்டும். மியான்மருடனான 1,643கி.மீ எல்லையை வேலி அமைக்கும் இந்தியாவின் திட்டமும் இதில் அடங்கும். கூடுதலாக, மணிப்பூரின் கம்ஜோங் மாவட்டத்தில் 5,457 "சட்டவிரோத" குடியேறிகள் கண்டறியப்பட்டதாக முதல்வர் என்.பிரேன் சிங் அறிவித்தார்.
மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 50,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர், இது அவரது அரசாங்கத்தின் பாப்பி சாகுபடி மற்றும் சட்டவிரோத குடியேற்றம் மீதான ஒடுக்குமுறையிலிருந்து உருவாகிறது என்று முதலமைச்சர் சிங் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இந்த விளக்கம் மாநிலத்தில் இனப்பிரச்சினை பற்றிய புரிதலை மிகைப்படுத்தி ஒரு பக்கச்சார்பாக காட்டுகிறது. இனப் பதட்டங்களை நிவர்த்தி செய்யவும், குக்கி-சோ சமூகத்துடன் நம்பிக்கையை கட்டியெழுப்பவும் சிங் தலைமையிலான அரசாங்கம் தவறியதால் இந்த மோதல் ஏற்படுகிறது.
மணிப்பூர் மாநிலம் கலவரம் மற்றும் இராணுவமயமாக்கப்பட்டதால் நிலைமை மோசமடைந்துள்ளது. மலைகள் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில், நவீன ஆயுதங்களுடன் கண்காணிப்புக் குழுக்கள் உருவாகியுள்ளன. இந்தக் குழுக்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன மற்றும் பாதுகாப்புப் படையினர் அமைதியை நிலைநாட்ட இடையூறு செய்துவருகின்றன. மணிப்பூரில் தலைமை மற்றும் அணுகுமுறையில் மாற்றம் இல்லாவிட்டால், குறிப்பாக மோதலைக் கையாளும் விதத்தில், மாற்றம் ஏற்படாவிட்டால் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது.