கைது செய்யப்படுபவர்களுக்கு கைதுக்கான காரணங்களை அவர்களுக்கு முறையாக தெரிவிக்க வேண்டியது அரசு மற்றும் விசாரணை அமைப்புகளின் அடிப்படை கடமை என்பதை உச்ச நீதிமன்றம் அடிக்கோடிட்டுக் காட்டியது.
கைது செய்யப்பட்டவர்களை கைது செய்வதற்கான காரணங்களை தெரிவிப்பது அரசு மற்றும் விசாரணை அமைப்புகளின் அடிப்படை கடமை என்பதை உச்சநீதிமன்றம் திங்களன்று அடிக்கோடிட்டுக் காட்டியது.
நீதிபதிகள் பூஷண் ஆர். கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மகாராஷ்டிரா அரசாங்கத்தை விமர்சித்து இந்தக் கருத்தை எடுத்துரைத்தது. தடுப்புக்காவலில் வைப்பதற்கான காரணங்களை சம்பந்தப்பட்ட நபருக்கு அதிகாரிகள் தெரிவிக்கத் தவறிவிட்டனர். அவரை விடுவித்த நீதிமன்ற உத்தரவை மகாராஷ்டிரா அரசு மேல்முறையீடு செய்திருந்தது குறிபிடத்தக்கது.
பிரிவு 22 (1) கீழ் இதுபோன்ற அடிப்படை உரிமைகளை புறக்கணிக்க முடியாது என்று அமர்வு எச்சரித்தது. கைது செய்வதற்கான காரணங்களை தெரிவிப்பது இந்தியாவின் நீதித்துறை செயல்முறையில் ஒரு கட்டாய விதி என்பதை மீண்டும் வலியுறுத்தியது. பிரிவு 22 (1) கைதிகள் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்து உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
பங்கஜ் பன்சால் மற்றும் பிரபீர் புர்கயஸ்தா வழக்குகளில் முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, மாநிலங்களும் விசாரணை அமைப்புகளும் இந்த தீர்ப்புகளுக்கு கட்டுப்பட்டவை என்று அமர்வு சுட்டிக்காட்டியது. தடுப்புக்காவலுக்கு எழுத்துப்பூர்வ காரணங்களை வழங்க தவறுவது ஒரு தனிநபரின் சுதந்திரத்திற்கான உரிமையை மீறுவதாகும் என்று இரண்டு தீர்ப்புகளும் கூறின. மேலும், இந்த பிரிவு 22(1)-க்கு விதிவிலக்கு இல்லை என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியது.
வீடு வாங்குபவர்களை ஏமாற்றி நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுப்ரீம் கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் டெவலப்பர்ஸ் (Supreme Construction and Developers) நிறுவனத்தின் இயக்குநர் மனுல்லா காஞ்ச்வாலாவின் கைதை ரத்து செய்து ஆகஸ்ட் மாதம் மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் தற்போதைய நடவடிக்கைகள் எழுந்தன. காஞ்ச்வாலாவை கைது செய்வதற்கான காரணங்கள் எழுத்துப்பூர்வமாக வழங்கப்படவில்லை என்று உயர் நீதிமன்றம் அடிக்கோடிட்டுக் காட்டியது.
தற்போதைய வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது எங்கள் தீர்ப்புகளை மீறுவதாகும் என்று அமர்வு குறிப்பிட்டது. எந்த விதிவிலக்கும் இதில் இருக்க முடியாது என்றும், நமது அணுகுமுறையில் நாம் சீராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது.
மகாராஷ்டிரா அரசின் வழக்கறிஞர் ஆதித்யா ஏ பாண்டே வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்ட போது, மேல்முறையீட்டைத் தொடரும் மாநிலத்தின் முடிவை அமர்வு கண்டித்தது. தீபாவளி விடுமுறை மற்றும் மூத்த வழக்கறிஞரை ஈடுபடுத்த இயலாமை ஆகியவற்றை மேற்கோள் காட்டி, பாண்டே ஒரு வார காலத்திற்கு வழக்கை ஒத்திவைக்க கோரியபோது, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பெரும் அபராதம் விதிக்கப்படும் என்று அமர்வு எச்சரித்தது.
"நாங்கள் ஒத்திவைப்போம். ஆனால், இதன் செலவு ஒத்திவைப்பு செலவில் சேர்க்கப்படும்" என்று அமர்வு கூறியது. மாநில அரசுக்கு ஒரு முன்மாதிரியான அபராதம் விதிக்கப்படலாம் என்பதை வலியுறுத்தியது. அபராதம் குறித்து மகாராஷ்டிராவின் உள்துறை செயலாளருடன் கலந்தாலோசிக்குமாறு வழக்கறிஞருக்கு அமர்வு அறிவுறுத்தியது.
இந்த எச்சரிக்கையை எதிர்கொண்ட மகாராஷ்டிராவின் வழக்கறிஞர் மேல்முறையீட்டை திரும்பப் பெற முடிவு செய்தார். அமர்வு மேல்முறையீட்டு வழக்கை திரும்பப் பெறுவதை ஏற்றுக்கொண்டது. உயர் நீதிமன்ற உத்தரவை முறையீடு செய்வதற்கான மாநிலத்தின் செயல் முடிவுக்குக் கொண்டு வந்தது.
கைது காரணங்களை தெரிவிக்கத் தவறுவது சட்டப்பூர்வ மீறல் மட்டுமல்ல. ஜனநாயக கொள்கைகளை அவமதிப்பதாகும் என்பதால், பிரிவு 22 (1) கடைப்பிடிப்பது முக்கியமானது என்பதை விசாரணை அமைப்புகளுக்கு, இந்த நடவடிக்கைகள் ஒரு முக்கியமான நினைவூட்டல்ஆகும்.
பங்கஜ் பன்சால் vs இந்திய அரசு மற்றும் பிறர் ( Pankaj Bansal vs Union of India and others (2023)), வி செந்தில் பாலாஜி vs இந்திய அரசு மற்றும் பிறர் ( V Senthil Balaji vs State and others (2024)) மற்றும் பிரபீர் புர்கயஸ்தா vs இந்திய அரசு (Prabir Purkayastha Vs State (2024)) உள்ளிட்ட சமீபத்திய தீர்ப்புகள் மூலம், உச்சநீதிமன்றம் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், அரசியலமைப்பின் பிரிவு 22 (1)-க்கு ஏற்ப சட்ட அமலாக்க நிறுவனங்கள் உரிய செயல்முறையை பின்பற்றுவதை உறுதி செய்வதற்கு, உச்ச நீதிமன்றம் தனது உறுதிப்பாட்டை வெளிபடுத்தியுள்ளது. இது தாம் ஏன் தடுப்புக் காவலில் வைக்கப்படுகிறோம் என்பதை அறிந்து கொள்ளும் மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்கின்றது. இந்த தீர்ப்புகள், விசாரணை முகமைகள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கைது செய்வதற்கான எழுத்துப்பூர்வ காரணங்களை வழங்க கடமைப்பட்டுள்ளன. இது தவிர, நடைமுறை அல்லது கணிசமான மீறல்கள் இருந்தால் கைது செய்யப்பட்ட நபரை உடனடியாக நீதிமன்றங்கள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கலாம்.
துஷ்பிரயோகம் மற்றும் கைது செய்வதற்கான அதிகாரத்தை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதைத் தடுக்க அரசியலமைப்பு மற்றும் சட்டமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட கடுமையான பாதுகாப்புகளை வலியுறுத்திய உச்சநீதிமன்றம், தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், சட்ட அமலாக்க நிறுவனங்கள் உரிய செயல்முறை மற்றும் நியாயத்தை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கான முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது.
இந்த தீர்ப்புகள் மூலம், கைது செய்யப்பட்ட காரணங்களைத் தெரிவிப்பது ஒரு முக்கியமான அரசியலமைப்பு பாதுகாப்பு என்றும், வெளிப்படைத்தன்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்த இவை ஒரே மாதிரியாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு கைது நடைமுறைகளுக்கு அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறது. குறிப்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act, (PMLA)) போன்ற கடுமையான சட்டங்களின் கீழ், அவை சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு விரிவான அதிகாரங்களை வழங்குகின்றன. இது பெரும்பாலும் தேசிய பாதுகாப்பு, நிதி ஒருமைப்பாடு மற்றும் தனிநபர் உரிமைகள் ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலை குறித்து கேள்விகளை எழுப்புகிறது.