டீஸ்டா பாலம் பத்தாண்டுக்குப் பிறகு வங்காள அரசின் இசைவைப் பெறுகிறது: திட்டம், அதன் பாதுகாப்பு முக்கியத்துவம் -அத்ரி மித்ரா

 தற்போது, ​​மேற்கு வங்கத்தையும் சிக்கிமையும் இணைக்கும் டீஸ்டாவில் ஆங்கிலேயர் காலப் பாலம் ஒன்று மட்டுமே உள்ளது. இந்தப் பாதை ஏன் முக்கியமானது? ஒன்றிய அரசின் திட்டம் என்ன? புதிய பாலம் ஏன் இவ்வளவு காலமாக கிடப்பில் போடப்பட்டது?


10 ஆண்டுகளுக்குப் பிறகு, சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தை இணைக்கும் டீஸ்டா பாலத் திட்டத்திற்கு மேற்கு வங்க அரசு இந்த வாரம் ஒப்புதல் அளித்துள்ளது. புதிய பாலம் சுற்றுலாவை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், இராஜதந்திர நோக்கங்களுக்கும் முக்கியமானது.


இந்தத் திட்டத்திற்கு முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு அனுமதி கொடுத்துள்ளதாகவும், விரிவான திட்ட அறிக்கையை (Detail Project Report (DPR)) தயாரிக்க பொதுப்பணித்துறைக்கு (Public Works Department (PWD)) உத்தரவிட்டுள்ளதாகவும் மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


தற்போது, ​​மேற்கு வங்கத்தையும் சிக்கிமையும் இணைக்கும் டீஸ்டாவில் ஆங்கிலேயர் காலப் பாலம் ஒன்று மட்டுமே உள்ளது. இந்த பாதை ஏன் முக்கியமானது, மையத்தின் திட்டம் என்ன? புதிய பாலம் ஏன் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டது?


டீஸ்டாவின் மீது தற்போது உள்ள பாலம் என்ன?


அரசர் ஆறாம் ஜார்ஜ் மற்றும் ராணி எலிசபெத் நினைவாக 1937ஆம் ஆண்டு முதல் 1941ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட கொரோனேஷன் பாலம், அப்போது இதன் கட்டுமானப் பணிக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவானது. அதன் அடிக்கல்லை வங்காள கவர்னர் ஜான் ஆண்டர்சன் நாட்டினார்.


80 ஆண்டுகளுக்குப் பிறகும், மேற்கு வங்காளத்திற்கும் சிக்கிமிற்கும் இடையிலான ஒரே இணைப்பாக இது உள்ளது. 2011ஆம் ஆண்டு பூகம்பத்தில் பாலம் சேதமடைந்தது. அதன் பிறகு இந்த இராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாதையில் இரு மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பை அதிகரிக்க மாற்று பாலத்தை மத்திய அரசு திட்டமிடத் தொடங்கியது.


2017ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான டோக்லாம் மோதல் புதிய பால கட்டுமானத்தை மிகவும் அவசரமாக்கியது. ஏனெனில், சீனா மற்றும் பூடான் எல்லை மற்றும் இராணுவத் தளங்களுக்கு தேவையான உபகரணங்களை ஆயுதப்படைகளுக்கு கொண்டு செல்ல கொரோனேஷன் பாலம் மட்டுமே உயிர்நாடியாக உள்ளது.


அதிகாரிகளின் கூற்றுப்படி, திட்டத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்துவதில் முதல்வர் மம்தா பானர்ஜி அதிருப்தி அடைந்தார்.


மாநில உள்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ​​“நிலம் கையகப்படுத்துவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால், மம்தா பானர்ஜி இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதைத் தடுத்து நிறுத்தினார். பானர்ஜி எப்போதும் வலுக்கட்டாயமாக நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்க்கிறார். இருப்பினும், வங்கதேசத்தில் ஹசீனா அரசாங்கத்தின் வீழ்ச்சி மற்றும் சிக்கிம் எல்லையில் சீனாவின் அதிகரித்து வரும் பிரசன்னத்துடன், இந்த பாலத்தின் பாதுகாப்பு முக்கியத்துவம் தெளிவாகத் தெரிகிறது.  இதனால், அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.


அந்த அதிகாரி மேலும், கூறுகையில், “மேற்கு வங்கத்தில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் சிக்கிமும் ஒன்றாகும். இந்த புதிய பாலம் சுற்றுலா பயணிகளை எளிதாக்கும்.


மாநில அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, இத்திட்டத்திற்கு ரூ.1,100 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்பிறகு நிலம் கையகப்படுத்தும் பணியில் மாநில அரசு இறங்கும். மத்திய அரசின் DPR ஒப்புதல் கிடைத்ததும், கட்டுமான பணிக்கு டெண்டர் கோரப்படும்.




Original article:

Share: