வேளாண்மையை பெண்கள்மயமயமாக்கல் என்பது விவசாய நடவடிக்கைகளில் பெண்களின் அதிகரித்து வரும் பங்கேற்பைக் குறிக்கிறது. ஆனால் இந்த மாற்றம் பெண்கள் முடிவெடுப்பதில் அதிக அதிகாரத்தைப் பெறவும் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக மாறவும் எவ்வாறு உதவும்?
இந்தியாவில் விவசாயத் தொழிலாளர்களில் 63% பெண்கள் பங்களிக்கின்றனர். இருப்பினும், அவர்களுக்கு நில உடைமை, நிதி மற்றும் மேம்பட்ட விவசாயத் தொழில்நுட்பங்கள் போன்ற முக்கிய ஆதாரங்களுக்கான அணுகல் இல்லை. இந்த சூழ்நிலையில், விவசாயத்தில் பெண்மையாக்கம் என்றால் என்ன? ஆண்கள் விவசாயத்திலிருந்து வெளியேறுவதால் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிகாரமளிப்புக்கு வழிவகுக்குமா? அல்லது நில உரிமைகள் மற்றும் முடிவெடுப்பதில் பாலின சமத்துவமின்மையை மோசமாக்குகிறதா?
இந்தியாவில், பெண் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 2004-05 ஆம் ஆண்டில் 40.8% ஆக உயர்ந்தது. ஆனால், அதன் பின்னர் குறைந்துள்ளது. இருப்பினும், 2017 முதல் பெண் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் (female labour force participation rate (FLPR)) பல வருட சரிவுக்குப் பிறகு அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்குப் பிந்தைய ஆண்டுகளில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில், FLPR 2022-23-ல் 41.5%-லிருந்து 2023-24-ல் 47.6% ஆக உயர்ந்தது. நகர்ப்புறங்களில், அதே காலகட்டத்தில் FLPR 25.4%-லிருந்து 28% ஆக அதிகரித்துள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் பெண் தொழிலாளர் படை பங்கேற்பு விகிதத்தில் (FLPR) வளர்ச்சிக்குக் காரணமாகியது. இது போன்ற மாற்றங்கள் முன்பு வேலை செய்யாத பல பெண்களை வேலை தேட ஆர்வத்தை தூண்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (FLPR) திடீரென அதிகரிப்பதற்கு பொருளாதார சிக்கல்களும் காரணமாகும். இந்தச் சவால்கள் அதிகமான பெண்கள் வருமானம் ஈட்டுவதற்கு வேறு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.
இந்திய தொழிலாளர் படையின் பெண்ணியமயமாக்கல் என்பது அதிகமான பெண்கள் ஊதியம் பெறும் வேலைகளில் சேர்வதைக் குறிக்கிறது. இருப்பினும், இந்தப் போக்கை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். குறிப்பாக, பெண் தொழிலாளர் படை பங்கேற்பு விகிதம் (FLPR) விவசாயத்தில் அதிகரிப்பதற்கு, அதிகமான பெண்கள் சுயதொழில் செய்பவர்களாக மாறுவதே காரணமாகும். மாநில வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு (state-wise census data), பெண்களின் தொழிலாளர் படை பங்கேற்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், விவசாயத்தில் அதிக பெண்கள் பணிபுரிவதே இதற்குக் காரணம் என்பதைக் காட்டுகிறது.
இந்தப் போக்கு, பெண்களுக்கு பண்ணை அல்லாத (non-farm) வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பதைக் காட்டுகிறது. பெரும்பாலான கிராமப்புற பெண்கள் இன்னும் விவசாயத்தில் வேலை செய்கிறார்கள். இது விவசாயத்தின் பெண்ணியமயமாக்கலுக்கு வழிவகுக்கிறது. பொருளாதார இலக்கியங்கள் விவசாயத்தின் பெண்கள்மயமாக்கலை இரண்டு வழிகளில் விளக்குகின்றன. முதலாவதாக, விவசாயம் தொடர்பான வேலைகள் பெண்களால் அதிகமாக செய்யப்படுகின்றன. இதில் சிறு விவசாயிகள் அல்லது சாதாரண விவசாய கூலித் தொழிலாளர்கள் என்ற அவர்களின் வளர்ந்து வரும் பொறுப்புகளும் அடங்கும்.
இரண்டாவதாக, விவசாயத்தை பெண்ணியமாக்குவது என்பது விவசாயத்தில் பெண்களின் கட்டுப்பாடு உரிமை மற்றும் பங்கேற்பு பற்றிய புரிதலையும் குறிக்கும். இதில் பெண்கள் விவசாய நிலங்களை சொந்தமாக வைத்திருப்பது, நில உரிமைகளைக் கொண்டிருப்பது மற்றும் பயிர்கள் மற்றும் உர பயன்பாடு போன்ற விஷயங்களைப் பற்றி முடிவெடுப்பது ஆகியவை அடங்கும்.
விவசாயத்தின் பெண்ணியமயமாக்கலுக்கு பல காரணிகள் பங்களிக்கின்றன. முதலாவதாக, இந்தியப் பொருளாதாரம் மாறிவிட்டது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு குறைவாகவும் சேவைத் துறையை நோக்கி மாறவும் வழிவகுத்தது. இரண்டாவதாக, கிராமப்புற சிரமங்கள் ஆண்கள் விவசாயத்திற்கு வெளியே வேலை தேடவேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் பெரும்பாலும் விவசாயம் அல்லாத துறைகளுக்கு இடம்பெயர வழிவகுத்துள்ளது.
கிராமப்புறங்களை விட்டு வேலைக்குச் செல்லும் ஆண்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பல காரணிகள் உள்ளன. விவசாய உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் குறைதல், விவசாய உள்ளீடுகளின் விலை உயர்வு, காலநிலை மாற்றத்தால் பயிர் சேதத்தால் ஏற்படும் அபாயம், குறைந்த வேலை வாய்ப்புகள் மற்றும் கிராமப்புறங்களில் இளம், புதிதாகப் படித்த மக்களின் வளர்ந்து வரும் ஆசைகள் ஆகியவை இதில் அடங்கும். இதன் விளைவாக, வேலையில் பின்தங்கிய பெண்கள் பல பணிகளை மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக, விவசாய வேலைகள் நிலத்தைப் பராமரித்தல் மற்றும் வேலைக்கு உதவுதல் போன்ற விவசாயப் பணிகளை அதிகமான பெண்கள் செய்வதாக தேசிய விவசாயிகள் ஆணையத்தின் 2005 அறிக்கை கண்டறிந்துள்ளது. இந்தியாவின் விவசாயப் பணிகளில் 80% பெண்கள் பணி செய்கிறார்கள் என்றும், விவசாயப் பணியாளர்களில் 42%-க்கும் அதிகமானோர் உள்ளனர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2023-24 காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) தரவுகளின்படி, கிராமப்புற பெண்களில் முக்கால்வாசிக்கும் மேற்பட்டோர் 76.95% விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பெண் விவசாயிகளின் பங்களிப்பு அதிகமாக இருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. 2015-16ஆம் ஆண்டு வேளாண் கணக்கெடுப்பின்படி, கிராமப்புறப் பெண்களில் 73% பேர் விவசாயத்தில் ஈடுபட்டாலும், இந்தியாவில் மொத்த விவசாய நிலங்களில் சுமார் 11.72% மட்டுமே பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது. இது நில உரிமை மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள பாலின இடைவெளியைக் காட்டுகிறது. மேலும், நீண்டகாலமாக நில விநியோகத்தில் நிலவும் சமமற்ற தன்மை காரணமாக, பெண்களின் நில உடைமைகள் பெரும்பாலும் சிறிய மற்றும் குறு நிலங்களை வைத்திருக்கின்றனர்.
இந்தியாவில், பெண்கள் பரம்பரை சொத்து, பரிசுகள், கொள்முதல் அல்லது அரசாங்க பரிமாற்றங்கள் மூலம் நிலத்தைப் பெறலாம். இருப்பினும், இந்த அமைப்புகள் பெரும்பாலும் பெண்கள் சமமாக பங்கேற்பதை கடினமாக்குகின்றன. உதாரணமாக, நிலம் வாங்கும் போது ஆண்களை விட பெண்கள் நிதி சவால்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, பரம்பரை சொத்து அவர்கள் நிலத்தை சொந்தமாக்குவதற்கான ஒரு முக்கிய வழியாகிறது. ஆனால், சமூக சார்புகள் மற்றும் விதிமுறைகள் பெண்கள் நிலத்தை மரபுரிமையாகப் பெறுவதையும் கட்டுப்படுத்துவதையும் கடினமாக்குகின்றன.
2017 ஆம் ஆண்டு உத்தரபிரதேச நில விநியோகத் திட்டத்தில், மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சிர்சி மற்றும் கர்காட் ஆகிய இரண்டு கிராமங்களில் 331 நிலமற்ற குடும்பங்களுக்கு நிலப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. சிர்சியில், 80 நிலப் பட்டாக்கள் வழங்கப்பட்டன, 8 ஒற்றைப் பெண்களுக்குச் சென்றன. கர்காட்டில், 251 பட்டாக்கள் வழங்கப்பட்டன, 16 ஒற்றைப் பெண்களுக்குச் சென்றன. இதன் பொருள் 7% நிலப் பட்டாக்கள் மட்டுமே ஒற்றைப் பெண்களுக்குச் சென்றன. பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் முடிவெடுக்கும் அதிகாரத்திற்கு நில உரிமைகள் முக்கியம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
ஊதியம் பெறும் வேலைகளில் பெண்கள் பங்கேற்பது எப்போதும் அவர்கள் அதிகாரம் பெற்றவர்கள் என்பதற்கு அர்த்தமல்ல என்று அடிக்கடி கூறப்படுகிறது. பெண்கள் பெரும்பாலும் "இரட்டை வேலைச் சுமையை" எதிர்கொள்கிறார்கள். அவர்கள் ஊதியம் பெறாத வீட்டு வேலைகள் மற்றும் பராமரிப்பு கடமைகளுடன் சமநிலைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதேபோல், விவசாயத்தில் பெண்கள் ஈடுபடுவது எப்போதும் அதிகாரமளிப்புக்கு வழிவகுக்காது.
இந்தியாவின் விவசாயப் பொருளாதாரம் (agrarian economy) குறைந்த வருமானத்துடன் போராடி வருகிறது. இதன் காரணமாக, விவசாயிகளாக வேலை செய்யும் பெண்கள் பொருளாதார அதிகாரம் பெறாமல் போகலாம். குறிப்பாக, போதுமான பண்ணை அல்லாத வேலை வாய்ப்புகள் இல்லாதபோது உரங்கள், வீட்டுச் சொத்துக்கள் அல்லது பணம் சம்பாதிப்பதற்கான பிற வழிகள் பற்றிய முடிவுகளில் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடு இல்லை என்பதையும் ஆராய்ச்சி காட்டுகிறது.
விவசாயத்தின் பெண்ணியமயமாக்கல் பெரும்பாலும் வறுமை அல்லது விவசாய துயரத்தின் பெண்ணியமயமாக்கலுடன் தொடர்புடையது. ஆண் குடும்ப உறுப்பினர்கள் சிறந்த வேலை வாய்ப்புகளுக்காக இடம்பெயரும்போது, பின்தங்கிய பெண்கள் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது பெரும்பாலும் குறைந்த லாபகரமான வாழ்வாதார விருப்பமாகக் கருதப்படுகிறது.
கூடுதலாக, சமமற்ற நில விநியோகம் மற்றும் பெண் விவசாயிகளிடையே நில உரிமை இல்லாதது கடன் மற்றும் நிதி ஆதாரங்களை அணுகுவதை கடினமாக்குகிறது. இது சில அரசாங்கத் திட்டங்களிலிருந்து பயனடையும் திறனையும் கட்டுப்படுத்துகிறது. கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card) போன்ற திட்டங்களிலிருந்து பெண்கள் கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) போன்ற திட்டங்களிலிருந்து உதவி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.
விவசாயி என்ற பிம்பம் பெரும்பாலும் ஆண்களுடன் தொடர்புடையது. இது மாறாவிட்டால், பெண் விவசாயிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவார்கள். வேளாண்மை என்பது நடவு மற்றும் அறுவடை செய்வதை விட அதிகமானவற்றை உள்ளடக்கியது. நிலத்தில் முதலீடு செய்வது மற்றும் முக்கியமான முடிவுகளை எடுப்பதும் இதில் அடங்கும். விவசாயத்தில் பாலின சமத்துவத்தை அடையவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், பெண்களை மையமாகக் கொண்ட கொள்கைகள், சமமான நில விநியோகம், விவசாய இயந்திரங்களுக்கு சமமான அணுகல் மற்றும் பாலினத்தைக் கருத்தில் கொண்ட காலநிலைக்கு ஏற்ற கொள்கை நமக்குத் தேவைப்படுகிறது.