ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் ஒதுக்கீட்டு முறைக்கு (quota system) எதிராக மாணவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து பதட்டங்களைக் காட்டுகின்றன. விடுதலைக் கதைகளுக்கும் சமத்துவக் கோரிக்கைகளுக்கும் இடையே இந்தப் பதட்டங்கள் நிலவுகின்றன.
வங்காளதேசத்தின் அரசியல் பெரும்பாலும் தெளிவான பிரிவைக் காட்டுகிறது. முற்றிலும் எதிர்மாறான இரண்டு விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்த உடனேயே இது தொடங்கியது. அதன் தலைவர்கள் போட்டியிடும் இலக்குகள் மற்றும் கொள்கைகளுக்கு இடையே தெளிவான கோடுகளை வரையத் தொடங்கினர். ஜனநாயகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி, அரசியல் பங்கேற்பு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு, சுதந்திரம் மற்றும் சமத்துவம், மற்றும் விடுதலைக்கு ஆதரவான மற்றும் விடுதலைக்கு எதிரான சக்திகள் ஆகியவை இதில் அடங்கும்.
ஒதுக்கீட்டிற்கு எதிரான தற்போதைய போராட்டங்களில், பிரதமர் ஷேக் ஹசீனா தனது கொள்கைக்கு எதிரானவர்களை வங்காளதேச விடுதலைப் போராட்டத்தின் போது பாகிஸ்தான் படைகளுடன் ஒத்துழைத்த "ரசாக்கர்களுக்கு" (razakars) ஒப்பிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய கொள்கைகள் பற்றிய சமீபத்திய விவாதங்களில் விடுதலைக்கு ஆதரவான மற்றும் எதிர்ப்பு என்ற இருவேறுபாடு அடிக்கடி வெளிப்படுகிறது. டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டம் (Digital Security Act), "போர்க் குற்றவாளிகளை" (war criminals) தூக்கிலிடுதல் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி (Jamaat-e-Islami) மீதான தடை ஆகியவை இதில் அடங்கும்.
தற்போதைய போராட்டங்கள் முக்கியமாக இடதுசாரி மற்றும் தாராளவாத மாணவர் குழுக்களால் நடத்தப்பட்டன. வங்காளதேச மாணவர் கூட்டமைப்பு (Student Federation of Bangladesh) மற்றும் வங்காளதேச ஜதியோதபாடி சத்ர தளம் (Bangladesh Jatiotabadi Chatra Dal) பிரச்சாரத்திற்கு ஆதரவளித்தன. பங்களாதேஷ் தொழிலாளர் கட்சியும் (Workers’ Party of Bangladesh (WPB)) எதிர்ப்புகளை ஆதரித்தது. முக்கிய எதிர்க்கட்சியான வங்காளதேச தேசிய கட்சியும் (Bangladesh National Party (BNP)) போராட்டங்களுக்கு ஆதரவு அளித்தது. சமீபத்திய தேர்தல்கள் ஜனநாயகத்திற்கு விரோதமானவை என்று கூறி வங்காளதேச தேசிய கட்சி அதை புறக்கணித்தது. இருப்பினும், வங்காளதேச தேசிய கட்சி அதன் சொந்த கடந்தகால செயல்களுக்காக விமர்சனங்களை எதிர்கொண்டது. மேலும், அதன் அரசியலின் புறக்கணிப்பு காரணமாக, அமைப்புக்கான பலம் குறைந்து வருகிறது.
வங்காளதேசத்தின், மாணவர் அரசியலுக்கு வளமான வரலாறு உண்டு. இந்த குழுக்கள் முக்கியமான நிகழ்வுகளில் மையமாக உள்ளன. 1948 முதல் 1952 வரை நடைபெற்ற மொழி இயக்கம் இதில் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. அப்போது பிரிக்கப்படாத பாகிஸ்தானில் உருதுவுடன் வங்காள மொழியை இணை அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று இயக்கம் வாதிட்டது. கிழக்கு பாக்கிஸ்தானின் வங்காள மொழி பேசும் மக்கள் மீது உருது கட்டாயப்படுத்தப்படுவதைத் தடுக்க இது இருந்தது. இந்த இயக்கம் இறுதியில் வங்காளதேசத்தை உருவாக்க வழிவகுத்தது. 1969 முதல் 1971 வரை பல முக்கிய இயக்கம் மற்றும் விடுதலைப் போராட்டத்தில் மாணவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். அவர்கள் 1989-ல் எர்ஷாத் ஆட்சிக்கு (Ershad regime) எதிராகவும் எதிர்ப்பு தெரிவித்தனர். 2007-ல், அவர்கள் இராணுவத் தலையீட்டை எதிர்த்தனர். 2013-ல், அவர்கள் விடுதலைப் போரின் போது குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கோரி ஷாபாக் (Shahbag Movement) இயக்கத்தில் பங்கேற்றனர்.
வங்காளதேச எல்லைக் காவலர் (Border Guard Bangladesh (BGB)) படையினர் மற்றும் காவல் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு இடையே உள்ள நீண்டகால சித்தாந்த வேறுபாடுகள், அரசியல் அமைப்புகளின் பலவீனம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இத்தகைய எதிர்ப்புகள் ஏன் பெரியதாக மாறுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது எளிது. காலப்போக்கில் மாணவர்களின் போராட்டங்கள் மாறிவிட்டன. அவர்கள் பொதுவான பிரச்சினைகள் மற்றும் சமூக மாற்றங்களில் கவனம் செலுத்தினர். இப்போது, அவர்களின் போராட்டம் கருத்தியல் அணிதிரட்டல் (ideological mobilization) பற்றியதாக உள்ளது.
டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்தின் "நேர்மறையான தலைகீழ் பாகுபாடு ஒதுக்கீடு முறை (positive reverse discrimination quota system) கொள்கைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போதைய இடஒதுக்கீடு கொள்கையானது சமத்துவம் மற்றும் சம வாய்ப்பு என்ற அரசியலமைப்பு மதிப்புகளுக்கு முரணானது என்று வாதிடுகின்றனர். வங்காளதேசத்தின் அரசியலமைப்பின் 29 (1) பிரிவை அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர். "குடியரசின் சேவையில் வேலை அல்லது அலுவலகம் தொடர்பாக அனைத்து குடிமக்களுக்கும் சமவாய்ப்பு இருக்க வேண்டும்" (equality of opportunity for all citizens in respect of employment or office in the service of the Republic) என்று இந்த பிரிவு கூறுகிறது. இதற்கு நேர்மாறாக, ஆளும் அவாமி லீக்கின் மாணவர் பிரிவு சமூக நீதி மற்றும் சமத்துவத்தை அடைவதற்கான வழிமுறையாகக் கருதி, ஒதுக்கீட்டுக் கொள்கையை ஆதரிக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் 29 (3) (a) பிரிவானது, எந்தப் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் அரசுப் பணியில் அவர்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய அனுமதிக்கிறது என்று மேற்கொள் காட்டப்பட்டது.
வங்காளதேசத்தின் இட ஒதுக்கீடு முறை 1972-ம் ஆண்டிலிருந்து அமலில் இருண்டு வருகிறது. தொடக்கத்தில், பொதுத்துறை வேலைகள் மற்றும் உயர்கல்வியில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காகவும், அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு 30% இடங்களை ஒதுக்கியது. பின்னர், பெண்களுக்கு கூடுதலாக 10சதவிகிதமும், பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த போராட்ட வீரர்களுக்கு மற்றொரு 10 சதவிகிதமும், பழங்குடியின சமூகங்களுக்கு 5% மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 1% என மொத்தம் 56% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதிக எண்ணிக்கையிலான ஒதுக்கப்பட்ட இடங்கள் தகுதியைக் கவனிக்காது என்று பலர் வாதிடுகின்றனர். இந்த முறையை மாற்ற வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2018-ம் ஆண்டில், அவர்கள் பெரிய போராட்டங்களை ஏற்பாடு செய்தனர் மற்றும் ஒதுக்கீட்டு முறையை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கத்தை சமாதானப்படுத்த முடிந்தது.
தற்போதைய பிரச்சனை ஜூன் 5-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம், வங்காளதேச உச்ச நீதிமன்றத்தின் உயர் நீதிமன்றப் பிரிவு, ஒதுக்கீட்டு முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் முடிவை ரத்து செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வழித்தோன்றல்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டை நீதிமன்றம் மீண்டும் வழங்கியது. இந்த முடிவு எதிர்க்கட்சிகளை, குறிப்பாக வாங்காளதேஷ தேசிய கட்சியை வருத்தமடையச் செய்தது. அவாமி லீக்கை ஆதரிக்கும் அரசு சார்பு குழுக்களின் குடும்பங்களுக்கு இந்தத் தீர்ப்பு உதவுகிறது என்று எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை "ரசாக்கர்களுடன்" (razakars) ஒப்பிட்டபோது ஏமாற்றமும் கோபமும் அடைந்தனர். நிலைமை வன்முறையாக மாறியது. அரசு சார்பு மாணவர் குழுக்களுக்கும், காவல்துறைக்கும், ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 2,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆளுங்கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவதையே போராட்டங்களின் நோக்கமாகக் கருதுதப்படுகிறது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கான விசாரணை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த அரசு இட ஒதுக்கீட்டு முறையை நீக்க ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இப்பிரச்னைக்கு உடனடியாக நாடாளுமன்றத்தில் தீர்வு காண வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கதேசத்தில் வேலையில்லா திண்டாட்டம் ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. இருப்பினும், அரசியல் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்த வன்முறையில் ஈடுபடுவது நாட்டின் நிலைத்தன்மையை கடுமையாக பாதிக்கும். பிரதமர் ஹசீனாவின் தொடர்ச்சியாக நான்காவது தேர்தல் வெற்றியானது அரசியல் நிலைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளதுடன், பொருளாதாரத்திற்கு நன்மையளிக்கிறது. வங்காளதேசம் 2026-ம் ஆண்டுக்குள் குறைந்த வளர்ச்சியடைந்த நாடு என்ற நிலையை அடையும் என்ற பாதையில் உள்ளது. வேலையின்மைக்கு தீர்வு காண நாடு முன்னேறும் போது கவனமாக கையாள வேண்டும். நியாயமான வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அதற்கான விருப்பங்களை சமநிலைப்படுத்துவது முக்கியமானது. சீர்திருத்தங்களை திறம்பட தொடர அதிக உரையாடல்களை வளர்ப்பதற்கு வங்காளதேசத்தின் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
எழுத்தாளர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் School of International Studies இல் கற்பிக்கிறார்.