50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆணையர்கள் பதவிகள் காலியாக இருப்பதாக மனுவில் கூறப்பட்டுள்ளதால், தகவல் ஆணையங்கள் குறித்த நிலை அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்க அனுமதிக்கும் இந்தியாவின் ஒரே சட்டமான தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right To Information (RTI) Act) 2005, இந்த முக்கியமான சட்டத்தை அறிமுகப்படுத்திய காங்கிரஸ் கட்சியால் ஆளப்படும் சில மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில் பலவீனமடைந்துள்ளது.
பல மாநிலங்களில், தகவல் அறியும் உரிமை மேல்முறையீடுகளை விசாரிக்கும் தகவல் ஆணையர்கள் நியமிக்கப்படாததால், மாநில தகவல் ஆணையங்கள் (state information commissions (SICs)) பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளன. சில மாநிலங்களில் மாநில தகவல் ஆணையத்தை நிர்வகிக்கும் தலைமை தகவல் ஆணையர் (Chief Information Commissioner (CIC) ) கூட இல்லை.
அரசுத் துறைகளால் வழங்கப்பட்ட மறுப்பு அல்லது முழுமையற்ற தகவல்களின் பேரில் தகவல் ஆணையர்கள் தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யும் மேல்முறையீடுகளை விசாரிக்கின்றனர். போதுமான எண்ணிக்கையிலான தகவல் ஆணையர்கள் இல்லாததால், தகவல் கோருவதற்கான சட்டரீதியான மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் மறுக்கப்படும்போது மக்கள் விரைவாக கேட்கும் உரிமையைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
அண்மையில் உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தகவலின்படி, ஜார்க்கண்ட், தெலுங்கானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் புதிய நியமனங்கள் எதுவும் செய்யப்படாததால் மாநில தகவல் ஆணையங்கள் (SICs) செயலிழந்துவிட்டன.
ஜார்க்கண்டைப் பொறுத்தவரை, மாநில தகவல் ஆணையத்தைத் தீர்மானிப்பதற்கான தேர்வுக் குழு கூட்டத்தை "தேவையான எண்ணிக்கை இல்லாததால்" கூட்ட முடியாது என்று மாநில அரசு கூறியுள்ளது. ஏனெனில் மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லை. இந்த வாதம் முரணாக உள்ளது. ஏனென்றால், மாநில அரசுக்கு எப்போதும் முக்கிய எதிர்க்கட்சியின் தலைவரை கூட்டத்திற்கு அழைக்கும் நடைமுறை உள்ளது. இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. எனவே, தகவல் ஆணையர்களை அரசு நியமிக்காமல், பதவியில் இருந்த ஆணையர்கள் ஓய்வு பெற்ற பிறகும் தகவல் ஆணையத்தை செயல்படாமல் இருக்க அனுமதித்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன.
ஆளும் கட்சியாக காங்கிரஸ் உள்ள தெலுங்கானாவில், தகவல் ஆணையம் ஓராண்டுக்கும் மேலாக செயல்படவில்லை. தேர்வு செயல்முறை ஜூன் 2024-ல் தொடங்கப்பட்டதாகவும், விரைவில் நியமனங்கள் செய்யப்படும் என்றும் தெலுங்கானா அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது குறித்த நிலை அறிக்கையை நீதிமன்றம் கோரியுள்ளது. இதேபோல், திரிபுராவும் தேர்வு செயல்முறை நடந்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மகாராஷ்டிராவில், ஏழு ஆணையர்கள் பதவிகள் காலியாக உள்ளன. மேல்முறையீடுகள் மற்றும் புகார்களின் நிலுவை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. கர்நாடக மாநில தகவல் ஆணையத்தில், எட்டு ஆணையர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பீகார் மற்றும் சத்தீஸ்கர் தகவல் ஆணையங்கள் முறையே மூன்று மற்றும் இரண்டு ஆணையர்களுடன் செயல்படுகின்றன. இரண்டு ஆணையங்களிலும் 25,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆணையர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறினார். பின்பு உச்சநீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளும் தகவல் ஆணையங்களின் நிலை குறித்த அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம் 2019–ஆம் ஆண்டு வெளியிட்ட தீர்ப்பில் தகவல் ஆணையத்திற்கு சரியான நேரத்தில் மற்றும் வெளிப்படையான நியமனங்களை உறுதி செய்ய விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை திறம்பட அமல்படுத்துவதை உறுதி செய்வதற்கு போதுமான எண்ணிக்கையிலான ஆணையர்களுடன் தகவல் ஆணையங்களின் சரியான செயல்பாடு முக்கியமானது என்று நீதிமன்றம் அவதானித்தது. உச்ச நீதிமன்றத்தின் 2019–ஆம் ஆண்டு தீர்ப்பு செயல்படுத்தப்படவில்லை என்பதை தலைமை தகவல் ஆணையரின் (Chief Information Commissioner (CIC)) நிலை காட்டுகிறது. இதில் இரண்டு தகவல் ஆணையர்கள் மட்டுமே பணிபுரிவதாகவும் எட்டு பதவிகள் காலியாக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாக, சுமார் 22,000 மேல்முறையீடுகள் இதில் நிலுவையில் உள்ளன.
மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு எதிரான அனைத்து மேல்முறையீடுகளையும் CIC கேட்பது மட்டுமல்லாமல், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விழிப்புணர்வு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவது குறித்து மாநில தகவல் ஆணையங்களுடன் ஒருங்கிணைக்கிறது.
ஆட்சிக்கு வந்தவுடன் கேள்வி கேட்க விரும்பாத அரசுகளால் வெளிப்படைத் தன்மை சட்டம் எப்படி படிப்படியாக வலுவிழந்து வருகிறது என்பதை மேற்கண்ட உண்மைகள் தெளிவாகக் காட்டுகின்றன. தகவல் ஆணையர்களை நியமிக்காததால், குடிமக்களுக்கு விரைவாக தகவல்கள் கிடைக்காது. 2006 மற்றும் 2010–ஆம் ஆண்டுக்கு இடையில் மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்தில் விசாரிக்கப்பட்ட வழக்குகள், இப்போது மேல்முறையீடு வழக்குகளை விசாரிக்க குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும்.
மேல்முறையீடுகளை விசாரிக்க போதுமான ஆட்கள் இல்லை என்பதை நன்கு அறிந்திருந்தும், அரசாங்க அலுவலகங்களில் உள்ள தகவல் அதிகாரிகள், பல சந்தர்ப்பங்களில், கோரப்பட்ட முழுமையான தகவல்களை வழங்குவதில்லை. இது விண்ணப்பதாரர்களை மேல்முறையீடு செய்ய உந்துகிறது. தகவல் ஆணையத்திடமிருந்து தகவல்களைப் பெறுவது ஒரு நீண்ட கால செயல்முறையாக இருக்கும் என்பதை நன்கு அறிந்த விண்ணப்பதாரர்கள் அதிகளவில் விரக்தியடைகின்றனர். கடந்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படும் RTI-க்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்படுவது குறைந்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன.
விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் கோரிய தகவலைப் பெற்றால், அதற்குள் தகவல் தேவையற்றதாக இருக்கும். பலர் தகவல் அறியும் உரிமை மனுக்களை தாக்கல் செய்வதில்லை என்பதற்கு இதுவே முதன்மைக் காரணம்.
தகவல் ஆணையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி, புதிய தகவல் அறியும் உரிமை விழிப்புணர்வு இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று வெளிப்படைத்தன்மை மற்றும் தகவல் துறையில் பணிபுரிபவர்கள் மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டம் செயலிழந்தால், அது நாட்டு மக்களுக்கான இழப்புதானே தவிர, ஆட்சியில் இருப்பவர்களுக்கு அல்ல.