அமெரிக்கா தனது சொந்த நலனுக்காக உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைய வேண்டும்.
உலக சுகாதார அமைப்பிலிருந்து (World Health Organization (WHO)) அமெரிக்கா விலகிக்கொள்வதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். WHO ஒரு சார்புடையது என்று குற்றம் சாட்டி இந்த முடிவை அவர் நியாயப்படுத்தினார். இந்த முடிவு குறுகிய பார்வை கொண்டதாக கருதப்படுகிறது மற்றும் உலக சுகாதார சமூகத்தை கவலையடையச் செய்துள்ளது. இந்த முடிவு திரும்பப் பெறப்படாவிட்டால் அல்லது மறுபரிசீலனை செய்யப்படாவிட்டால், அது "பட்டாம்பூச்சி விளைவை" (butterfly effect) ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். பட்டாம்பூச்சி விளைவு என்பது அமைப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட கணிக்கமுடியாத விளைவுகளை ஏற்படுத்தும். தனது பதவியேற்புக்குப் பிறகு, முதல் செயலாக்க ஆணைகளில் கையெழுத்திடும் போது, அதிபர் டொனால்ட் டிரம்ப், "உலக சுகாதார அமைப்பு எங்களை ஏமாற்றிவிட்டது" என்று அறிவித்தார். 12 மாதங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்று அவர் அறிவித்தார். உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா வழங்கும் அனைத்து நிதி பங்களிப்புகளையும் நிறுத்தும் என்றும் அவர் கூறினார்.
COVID-19 தொற்றுநோயை WHO தவறாகக் கையாண்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார். சீனாவைவிட அமெரிக்கா அதிக நிதியை வழங்கிய போதிலும், அந்த அமைப்பு சீனாவை நோக்கி ஒரு சார்புடையதாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த நடவடிக்கை முற்றிலும் ஆச்சரியமல்ல. தனது முந்தைய பதவிக் காலத்தில், டிரம்ப் WHO-வை தொடர்ந்து விமர்சித்தார். அதன் செயல்பாடு மெதுவாக இருப்பதாகவும், "சீனாவால் கட்டுப்படுத்தப்படுவதாகவும்" அவர் குற்றம் சாட்டினார். 2020ஆம் ஆண்டில், WHO-க்கு அமெரிக்க நிதியுதவியை நிறுத்த அவர் முயன்றார். இருப்பினும், அவரது பதவிக்காலம் முடிந்ததும் இந்த முயற்சி தோல்வியடைந்தது.
அமெரிக்கா வெளியேறுவது ஏன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது? தொடக்கத்தில், உலக சுகாதார அமைப்பின் நிறுவன உறுப்பினர் அமெரிக்கா என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் சொல்வது சரிதான். உலக சுகாதார அமைப்பின் மொத்த நிதியில் சுமார் 18% வழங்கும் அமெரிக்கா அந்த அமைப்பின் மிகப்பெரிய நிதி பங்களிப்பாளராகவும் உள்ளது. இந்த நிதியை திரும்பப் பெறுவது உலகளாவிய சுகாதாரத் திட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் HIV/AIDS, காசநோய் மற்றும் சில தொற்று நோய்களை ஒழிப்பதற்கான முயற்சிகள் அடங்கும். உலக சுகாதார அமைப்பு உலகளவில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு நியாயமான அணுகலை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது. இது வலுவான சுகாதார அமைப்புகளை உருவாக்கவும், நோய் தாக்குதல்களைக் கண்டறிந்து தடுக்கவும் செயல்படுகிறது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது குறைகளைத் தாண்டிப் பார்க்க முடிந்தால், உலகளாவிய சுகாதாரப் பிரச்சினைகளை தனியாக தீர்க்க முடியாது என்பதை அவர் காண்பார். நோய்கள் எல்லைகளில் நிற்காது, கடுமையான நடவடிக்கைகள் அல்லது எல்லைகள் அவை பரவுவதைத் தடுக்க முடியாது. கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து வரும் முக்கிய பாடம் என்னவென்றால், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு நாடுகள் முழுவதும் தரவு மற்றும் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொண்டு நாம் ஒன்றாகச் செயல்படும்போது அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள். உலக சுகாதார அமைப்பு அமெரிக்காவைத் தொடர்புகொண்டு, அதன் முடிவை மறுபரிசீலனை செய்து மீண்டும் இணையுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மருத்துவம் அறிவியல் பல அற்புதங்களைக் கண்டிருக்கிறது. சுகாதார சமூகம் இன்னும் ஒரு நம்பிக்கையுடன் உள்ளது. இது போன்ற காரணிகள் அமெரிக்காவை மீண்டும் உலக சுகாதார அமைப்புக்கு கொண்டு வரும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.