இந்திய அரசியலமைப்பின் விரிவான தன்மையைக் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பின் சாரத்தை வெளிக்காட்டுவதில் முகவுரை முக்கியப் பங்காற்றுகிறது.
"ஸ்வர்ணிம் பாரத்: விராசத் அவுர் விகாஸ்" (தங்க இந்தியா: மரபு மற்றும் முன்னேற்றம்) என்ற கருப்பொருளுடன் இந்தியா தனது 76-வது குடியரசு தினத்தைக் கொண்டாடத் தயாராகி வருகிறது. ஜனவரி 26, 1950 அன்று தொடங்கிய இந்திய அரசியலமைப்பின் முக்கிய மதிப்புகளைப் பற்றி சிந்திக்க இந்த நாள் ஒரு முக்கிய தருணமாகும்.
இந்த நாளில், முகவுரையில் உள்ள முக்கிய மதிப்புகளான இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் குடியரசு ஆகியவற்றைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இந்த மதிப்புகள் இந்திய ஜனநாயகத்திற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குகின்றன. இந்த மதிப்புகள் அனைத்து குடிமக்களிடையேயும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கிறது
முகவுரை "இந்திய மக்களாகிய நாம்" (We, the people of India) என்ற சக்திவாய்ந்த வார்த்தைகளுடன் தொடங்குகிறது. இந்த வார்த்தை முக்கியமானது ஏனெனில், இது உலகெங்கிலும் உள்ள சில மக்கள் இயக்கங்கள் "மக்கள்" என்ற கருத்தை கட்டுப்படுத்தப்படாத, உணர்ச்சிபூர்வமான வழிகளில் எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதிலிருந்து வேறுபடுகிறது. முகவுரையில், மக்கள் அரசியலமைப்பால் வழிநடத்தப்படும் ஒரு பொறுப்பான குழுவாகக் காணப்படுகிறார்கள். இது மக்களின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க உதவுகிறது மற்றும் அது கொடுங்கோன்மையாக மாறுவதைத் தடுக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, இந்திய மக்கள் குடியரசை வடிவமைக்கத் தேர்ந்தெடுத்த முக்கியக் கருத்துகளை முகவுரை அறிமுகப்படுத்துகிறது: இறையாண்மை, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் குடியரசு. இந்த ஒவ்வொரு சொற்களையும் பார்த்து அவற்றின் ஆழமான அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்வோம்.
இறையாண்மை (Sovereign): "இறையாண்மை" என்பது அரசியல் அறிவியல் மற்றும் அரசியலமைப்புவாதத்தில் ஒரு முக்கிய கருத்தாகும். இதற்கு மூன்று முக்கிய அர்த்தங்கள் உள்ளன: இறையாண்மை என்பது அரசுக்கு உச்ச அதிகாரம் உள்ளது மற்றும் எந்த உயர் அதிகாரத்தையும் ஏற்றுக்கொள்ளாது என்பதாகும். இரண்டாவதாக, மாநிலத்தின் ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் கிளர்ச்சி அல்லது புறக்கணிப்பு அச்சுறுத்தல் இல்லை. மூன்றாவதாக, இறையாண்மை நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதித்துவம் மூலம் வெளிக்காட்டப்படுகிறது. மக்களின் விருப்பம் அனைவருக்குமான வயதுவந்தோர் வாக்குரிமை (universal adult franchise) மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.
சமூகவுடைமை (Socialist) : முகவுரையின் அசல் பதிப்பில் "சமூகவுடைமை" என்ற வார்த்தை இல்லை. இது 1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் "மதச்சார்பற்ற" (secular) என்ற வார்த்தையுடன் சேர்க்கப்பட்டது. "சமூகவுடைமை" என்ற வார்த்தையைச் சேர்ப்பது சர்ச்சைக்குரியதாக உள்ளது. உதாரணமாக, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சமூகவுடைமை என்ற வார்த்தையை சேர்ப்பதை எதிர்த்தார். ஏனெனில், அது எதிர்கால அரசாங்கங்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் என்று அவர் கருதினார்.
"சமூகவுடைமை" என்ற வார்த்தையும் சமீபத்தில் சவால் செய்யப்பட்டது. நவம்பர் 2024–ல், உச்ச நீதிமன்றம் இந்த வார்த்தை ஒரு தெளிவான பொருளைப் பெற்றுள்ளதால் அது நீடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. பல விமர்சகர்கள், 1990-களில் இருந்து இந்தியா தாராளமயமாக்கல் கொள்கைகளைத் தொடங்கியுள்ளது. இந்தக் கொள்கைகள் சுதந்திர சந்தைகளில் கவனம் செலுத்துகின்றன. விமர்சகர்கள் சுதந்திர சந்தைகளை சமூகவுடைமைக்கு எதிரானதாகக் கருதுகின்றனர்.
மதச்சார்பற்ற (Secular): “மதச்சார்பற்ற" என்ற சொல் வெவ்வேறு காலங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஆனால், முகவுரையில் அதன் இருப்பு அதற்கு ஒரு தெளிவான அர்த்தத்தை அளித்துள்ளது. இந்தியாவில், "மதச்சார்பற்ற" என்பது மேற்கத்திய நாடுகளில் புரிந்து கொள்ளப்படுவது போல் மதமின்மையைக் குறிக்காது. மதச்சார்பற்ற என்ற வார்த்தை, மேற்கில் புரிந்து கொள்ளப்பட்ட விதம் போல் இல்லாமல், மதத்தில் உள்ள குறைபடுகள் அல்லது மறுப்பைக் குறிக்கவில்லை. மாறாக, இந்தியாவின் பல மதங்கள் மற்றும் நம்பிக்கை உள்ள அமைப்புகளிடையே மதநல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கும், மத விஷயங்களில் அரசு நடுநிலை வகிக்கும் என்பதே இதன் பொருளாகும். மதம் மக்களின் வாழ்வில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் ஒரு சமூகத்தில் இது ஒரு மேம்பட்ட அணுகுமுறையாகும்.
ஜனநாயகம் (Democratic): இந்தியாவில் ஜனநாயகம் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதன் காரணமாக "ஜனநாயகம்" என்ற சொல் ஒரு சிறப்பு அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 1951ஆம் ஆண்டு முதல் தேர்தல்கள் அனைவருக்குமான வயதுவந்தோர் வாக்குரிமையின் (universal adult franchise) அடிப்படையில் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து பெரியவர்களும் வாக்களிக்கலாம் என்பதை அதன் பொருளாகும். இந்தியாவில் ஜனநாயகம் செயல்படுமா என்று சிலர் சந்தேகித்தனர், அதிக வறுமை மற்றும் கல்வியறிவின்மை சவால்களாக இருப்பதை சுட்டிக்காட்டினர். பொதுவாக பணக்கார சமூகங்களில் ஜனநாயகம் சிறப்பாக செயல்படுகிறது என்று அவர்கள் வாதிட்டனர்.
எவ்வாறாயினும், ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று பிறகு பல ஆண்டுகளான பிறகு, இந்திய ஜனநாயகத்தின் வெற்றி உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன் வீரியம் மற்றும் உயிர்ச்சக்தி ஆகியவை நிலையான மேற்கத்திய தாராளவாத ஜனநாயகங்களுக்கு ஒரு மாறுபட்ட குறிப்பை எடுத்துக்காட்டுகின்றன.
குடியரசு (Republic): ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்றில் முகவுரையில் உள்ள "குடியரசு" என்ற சொல் முக்கியமானது. ஆகஸ்ட் 1947-ல், இந்தியா ஆங்கிலேய சாம்ராஜ்யத்திற்குள் தன்னாட்சி நாடு (dominion status) என்ற அந்தஸ்தைப் பெற்றது. இது தேசிய இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்தது மற்றும் பூர்ண ஸ்வராஜ் (முழு சுதந்திரம்) கோரிக்கைக்கு வழிவகுத்தது. இது முதலில் 1921-ல் செய்யப்பட்டு 1930-ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா ஜனவரி 26, 1950 அன்று ஒரு குடியரசாக மாறியது. இது தன்னாட்சி நாடு என்ற அந்தஸ்தால் வழங்கப்பட்ட வரையறுக்கப்பட்ட சுதந்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அரசியலமைப்பின் முகவுரையில், "குடியரசு" என்ற வார்த்தையின் அர்த்தம், குடியரசுத் தலைவர் (head of the state) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பரம்பரை மன்னர் என்ற நடைமுறையில் அல்ல. இந்த நடைமுறை இன்றும் ஐக்கிய இராச்சியத்தில் (United Kingdom) தொடர்ந்து வருகிறது.
1990களில் ஜெர்மன் கோட்பாட்டாளர் ஜூர்கன் ஹேபர்மாஸ் முதன்முதலில் அறிமுகப்படுத்திய அரசியலமைப்பு தேசபக்தி என்ற கருத்து, இந்தியாவில் ஒரு தனித்துவமான மற்றும் வலுவான அர்த்தத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின் வலுவான தேசபக்தி உணர்வு, இந்திய அரசியலமைப்பின் முகவுரையின் சிறப்பு முக்கியத்துவத்தால் பாதிக்கப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பின் முக்கிய கருத்துக்களையும் நோக்கத்தையும் முகவுரை எவ்வாறு தெளிவுபடுத்துகிறது என்பதை விளக்க உதவும் முக்கியமான முக்கிய நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளன.
கேசவானந்த பாரதி வழக்கில் (Keshavananda Bharati case, 1973), அரசியலமைப்பின் மற்ற பகுதிகளைப் புரிந்துகொள்ள முகவுரை உதவுவதால், முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும் என்று நீதிமன்றம் முடிவு செய்தது. இந்தத் தீர்ப்பு "அடிப்படைக் கட்டமைப்பு" (basic structure) கோட்பாட்டையும் அறிமுகப்படுத்தியது. அதில் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக முகவுரையும் சேர்க்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு பெருபாரி யூனியன் வழக்கிலிருந்து (Berubari Union Case (1960) ஒரு மாற்றத்தைக் குறித்தது. அதில் முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியாகக் கருதப்படவில்லை. இருப்பினும், அது அரசியலமைப்பை உருவாக்கியவர்களைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோலாகக் (key) கருதப்பட்டது.
நவீன அரசியலமைப்புகள் (modern Constitutions) ஒரு நாடு எவ்வாறு நியாயமாகவும் சட்டப்பூர்வமாகவும் நிர்வகிக்கப்படுகிறது என்பதற்கான விதிகளை அமைக்கும் முக்கியமான ஆவணங்கள். இந்திய அரசியலமைப்பு உலகிலேயே மிக நீண்டதாக எழுதப்பட்ட (longest-written Constitution) அரசியலமைப்பாகும். அதன் விரிவான தன்மை காரணமாக, அரசியலமைப்பின் முக்கிய கருத்துக்களைக் வெளிக்காட்டுவதில் முகவுரை முக்கிய பங்கு வகிக்கிறது.