குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கான செயல்முறை என்ன? கடந்த காலத்தில் இந்த முறை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது? ஒன்றிய அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் ஏதேனும் உள்ளதா?
ஞாயிற்றுக்கிழமை மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் ராஜினாமா செய்ததை அடுத்து, பாஜக தலைமை அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகிறது. முதல்வர் வேட்பாளரை கட்சி கண்டுபிடிக்கத் தவறினால், மாநிலத்தை குடியரசுத்தலைவரின் கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். இது கொள்கையளவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு எதிரானது என்பதால், பாஜக இந்த சூழலை தவிர்க்க விரும்புகிறது என்று உயர்தர வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தன.
அரசியலமைப்பின் பிரிவு 356
பிரிவு 356-ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவது, அது அமலில் இருக்கும் காலத்தில் மாநில அரசின் அனைத்து செயல்பாடுகளையும் ஒன்றிய அரசிற்கும், மாநில சட்டமன்றத்தின் செயல்பாடுகளை நாடாளுமன்றத்திற்கும் மாற்றப்படும். இதற்கு ஒரே விதிவிலக்கு உயர் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மட்டுமே, அவை மாறாமல் தொடர்ந்து செயல்படுகிறன.
குடியரசுத்தலைவர், ஆளுநரிடமிருந்து அறிக்கையைப் பெற்றவுடன், "இந்த அரசியலமைப்பின் விதிகளின்படி மாநில அரசாங்கத்தை நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது" என்று முடிவு செய்தால், அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்குகிறது.
இந்த சூழ்நிலையில், குடியரசுத்தலைவர் ஒரு “பிரகடனத்தை” (Proclamation) வெளியிடுவார். இது இரண்டு மாதங்கள் வரை அமலில் இருக்கும் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஒரு தீர்மானத்தின் மூலம் அங்கீகரிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்டால், குடியரசுத் தலைவர் ஆட்சியின் பிரகடனம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு மேலும் ஆறு மாத நீட்டிப்புகளுக்கு நாடாளுமன்றம் அதை மேலும் நீட்டிக்க முடியும்.
ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டதிலிருந்து ஒரு வருடத்திற்குப் பிறகும் நாடாளுமன்றத்தால் புதுப்பிக்கப்படுவதற்கு முன், அது சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். நாட்டில் அல்லது குறிப்பிட்ட மாநிலத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டாலோ அல்லது மாநிலத் தேர்தல்களை நடத்துவதில் உள்ள சிரமங்கள் காரணமாக குடியரசுத் தலைவர் ஆட்சி அவசியம் என்று தேர்தல் ஆணையம் சான்றளித்தால் மட்டுமே கூடுதல் நீட்டிப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.
இந்தியாவில் பல ஆண்டுகளாக குடியரசுத் தலைவர் ஆட்சி
1950 முதல், அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததில் இருந்து, 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 134 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இது மணிப்பூர் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 10 முறை அடிக்கடி அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த மாநிலங்கள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அதிக நேரம் செலவழித்த மாநிலங்களாக (யூனியன் பிரதேசங்கள் உட்பட) இல்லை.
அந்த வேறுபாட்டை ஜம்மு & காஷ்மீர் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் புதுச்சேரி உள்ளன. 1950 முதல், ஜம்மு & காஷ்மீர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக (4,668 நாட்கள்) குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்தது. அதே காலகட்டத்தில் பஞ்சாப் 10 ஆண்டுகளுக்கும் மேலாக (3,878 நாட்கள்) ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இரு மாநிலங்களிலும், தீவிரவாத தாக்குதல்கள், பிரிவினைவாத இயக்கங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் காரணமாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
2021-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பிறகு, புதுச்சேரியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. புதுச்சேரி அதன் வரலாற்றில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக (2,739 நாட்கள்) குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்தது. உட்கட்சி மோதல்கள் அல்லது கட்சி தாவல்கள், அரசாங்கங்கள் சட்டமன்றத்தில் ஆதரவை இழந்ததற்கு முக்கிய காரணமாகும்.
குடியரசுத் தலைவர் ஆட்சி பற்றிய நீதிமன்றத்தின் கருத்து
1994-ஆம் ஆண்டு எஸ்.ஆர். பொம்மை Vs. இந்திய ஒன்றியம் வழக்கில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் அதிகாரத்தையும் ஒன்றிய-மாநில உறவுகளில் அதன் தாக்கத்தையும் உச்ச நீதிமன்றம் ஆழமாக ஆய்வு செய்தது. ஒன்றிய அரசு மாநில அரசுகளை கலைக்க குடியரசுத் தலைவர் ஆட்சியை அடிக்கடி பயன்படுத்திய பிறகு இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது.
ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக 356-வது பிரிவின் கீழ் பிரகடனத்தை வெளியிடும் குடியரசுத்தலைவரின் அதிகாரம் நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டது என்றும், அது சட்டவிரோதம், உண்மைக்கு புறம்பான கருத்துக்கள், அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது மோசடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை நீதிமன்றங்கள் சரிபார்க்கலாம் என்று கூறியது. குடியரசுத் தலைவர் ஆட்சியை சரியா தவறா என்பதை உச்ச நீதிமன்றத்தால் தீர்மானிக்க முடியாது என்றும் கூறியது. இருப்பினும், குடியரசுத்தலைவருக்கு வழங்கப்பட்ட தகவல் அந்த பிரகடனத்துடன் தொடர்புடையதா என்பதை நீதிமன்றத்தால் ஆராய முடியும்.
மாநில அரசுகளின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்களையும் நீதிமன்றம் உருவாக்கியுள்ளது.
சரியான பிரகடனத்திற்குப் பிறகு மட்டுமே, மாநில சட்டமன்றம் இடைநிறுத்தப்படும் என்றும், மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டு மாதங்களுக்குள் ஒப்புதல் அளிக்காவிட்டால், மாநில அரசாங்கத்தின் மற்ற அதிகாரங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் நீதிமன்றம் கூறியது. இரண்டு மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் ஆட்சியை நாடாளுமன்றம் அங்கீகரிக்கவில்லை என்றால், பதவி நீக்கம் செய்யப்பட்ட மாநில அரசாங்கம் தனது செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும்.
பெரும்பான்மை கருத்தின் ஒரு பகுதியாக நீதிபதி பி பி ஜீவன் ரெட்டி, அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி மாநிலங்களைவிட ஒன்றிய அரசிற்கு அதிக அதிகாரம் உள்ளது என்று கூறினார். இருப்பினும், மாநிலங்கள் ஒன்றிய அரசின் நீட்டிப்புகள் மட்டுமே என்று அதற்கு அர்த்தமில்லை என்று கூறினார். மாநிலங்களின் அதிகாரங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். மாநிலங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்களைக் குறைக்கும் அல்லது பலவீனப்படுத்தும் வகையில் நீதிமன்றங்கள் சட்டங்களை விளக்கக் கூடாது என்று நீதிபதி பி பி ஜீவன் ரெட்டி கூறினார்.
பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக, குடியரசுத்தலைவரின் ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிகழ்வுகள் குறைந்துள்ளன.