பெண் தொழிலாளர் பங்கேற்பை அதிகரிப்பது பாலின சமத்துவத்தைப் பற்றியது மட்டுமல்ல. இது பொருளாதாரத்திற்கும் முக்கியமானது.
இந்தியாவின் அதிக பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான இலக்கு ஒரு முக்கியமானதாகப் பார்க்கப்படும் வேளையில், பெரும்பாலும் பெண்களுக்கான வேலைத்திறன் கவனிக்கப்படாத காரணியைச் சார்ந்துள்ளது. இதில் குறிப்பாக, கல்வி மற்றும் சுகாதாரத்தில் முன்னேற்றம் இருந்தபோதிலும், பெண்களின் பொருளாதார பங்களிப்பை அதிகரிக்க நாடு இன்னும் போராடி வருகிறது. இந்தியாவில் பணிபுரியும் வயதுடைய பெண்களில் சுமார் 60% பேர் தொழிலாளர்களின் ஒரு பகுதியாக இல்லை, இது பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான திறனைக் குறைக்கிறது.
"இந்தியாவில் பெண்களின் பணியாளர் திறனைத் திறப்பது: ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளில் பகுதிநேர வேலைவாய்ப்பு மற்றும் பாலின சமத்துவத்தை முறைப்படுத்துவதன் தொழிலாளர் சந்தை தாக்கத்தை அளவிடுதல்" (Unlocking Women’s Workforce Potential in India: Quantifying the Labour Market Impact of Formalising Part-time Employment and Gender Equality in Unpaid Care Work) என்ற தலைப்பில் ஆசிரியர்களின் புதிய ஆய்வு, தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலால் (National Council of Applied Economic Research (NCAER)) வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு பெண்கள் தொழிலாளர் பணிகளில் சேருவதற்கான இரண்டு முக்கிய தடைகளை ஆராய்கிறது. அது, ஊதியம் பெறாத பராமரிப்புப் பணியின் சமமற்ற சுமை (unequal burden of unpaid care work) மற்றும் முறையான பகுதிநேர வேலை வாய்ப்புகள் (formal part-time job opportunities) இல்லாதது. இந்தியாவின் பயன்படுத்தப்படாத தொழிலாளர் திறனைப் பயன்படுத்திக் கொள்வதற்கான நடைமுறை பரிந்துரைகளை கொள்கை வகுப்பாளர்களுக்கு இந்த ஆய்வுகள் வழங்குகின்றன.
இந்தியாவின் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (labour force participation rate (LFPR)) 37% ஆக உள்ளது. இது உலக சராசரியான 47% மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (Organisation for Economic Co-operation and Development (OECD)) சராசரி அளவு 67%-ஐ விட மிகவும் குறைவாக உள்ளது. இந்த இடைவெளிக்கு பல காரணங்கள் உள்ளன. பெண்கள் பணியிடத்தில் எதிர்கொள்ளும் தடைகள் ஒரு முக்கிய காரணம் ஆகும். ஊதியம் பெறாத வீட்டு வேலை ஒரு முக்கிய தடையாகும். குழந்தைகளை வளர்ப்பது, பெரியவர்களைப் பராமரிப்பது மற்றும் வீட்டு வேலைகளைச் செய்வது போன்ற வீட்டில் பெண்கள் அதிக பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார்கள்.
”இந்தியாவில் நேரப் பயன்பாடு அறிக்கை 2019” (Time Use in India Report 2019), ஆண்களுடன் ஒப்பிடும்போது இந்தியப் பெண்கள் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளில் இரண்டு மடங்கு அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பதை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இது அவர்களுக்கு ஊதியம் பெறும் வேலைகளுக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.
குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் இரண்டாவது தடை, முறையான பகுதிநேர வேலை வாய்ப்புகள் இல்லாதது. முன்னேறிய பொருளாதாரங்களில், பகுதிநேர வேலை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டு, சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் பகுதிநேர வேலைகளுக்கு முறையான விதிகள் இல்லை. வேலை மற்றும் வீட்டுப் பொறுப்புகள் இரண்டையும் நிர்வகிக்க நெகிழ்வான வேலை தேவைப்படும் பெண்களின் தேடல் பெரும்பாலும் நிலையற்ற, முறைசாரா வேலைகளில் முடிவடைகிறார்கள். இந்த வேலைகள் எந்த வேலைப் பாதுகாப்பையும் அல்லது சமூக நன்மைகளையும் வழங்குவதில்லை. ஊதியம் மற்றும் ஊதியம் பெறாத வேலையை சமநிலைப்படுத்தும் இந்தப் போராட்டம் பெண்களின் தொழில் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. இது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு முழுமையாகப் பங்களிக்கும் அவர்களின் திறனையும் குறைக்கிறது.
ஆய்வு மற்றும் அதன் கண்டுபிடிப்புகள்
இரண்டு முக்கியத் தடைகள் நீக்கப்படும்போது பெண் தொழிலாளர் பங்களிப்பு (labour force participation (LFPR)) எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை அளவிட எழுத்தாளர்கள் ஒரு ஆய்வை நடத்தினர். இந்தப் பகுப்பாய்விற்கு அவர்கள் மெக்கால்-மோர்டென்சன் வேலைதேடல் மாதிரியைப் பயன்படுத்தினர். முதலாவதாக, பகுதிநேர வேலைகளை முறைப்படுத்துவதன் தாக்கத்தை அவர்கள் ஆய்வு செய்தனர். இரண்டாவதாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் ஊதியம் இல்லாத பராமரிப்புப் பணிகளை மறுபகிர்வு செய்வது பெண் தொழிலாளர் பங்களிப்பை (LFPR) எவ்வாறு பாதிக்கிறது என்பதை அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த இரண்டு தடைகளையும் சமாளிப்பது பெண் LFPR-ஐ ஆறு சதவீத புள்ளிகளால் உயர்த்தி, அதை 37%-லிருந்து 43%ஆக அதிகரிக்கக்கூடும் என்று அவர்களின் ஆய்வுகள் காட்டுகின்றன.
இந்த ஆய்வு இரண்டு முக்கிய தீர்வுகளை எடுத்துக்காட்டுகிறது. முதலாவதாக, பகுதிநேர வேலைகளை முறைப்படுத்துதல். நியாயமான ஊதியங்கள் மற்றும் சலுகைகளுடன் அதிகாரப்பூர்வ பகுதிநேர வேலை ஒப்பந்தங்களை அறிமுகப்படுத்துவது பெண்களுக்குத் தேவையான நெகிழ்வுத்தன்மையை வழங்கும். உலகெங்கிலும், பகுதிநேர வேலைகளில் உள்ள 57% பெண்கள் நெகிழ்வுத்தன்மை முக்கியம் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவில், பகுதிநேர வேலை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. இது பெண்களுக்கு சுரண்டல் மற்றும் வேலை பாதுகாப்பின்மைக்கு வழிவகுக்கிறது.
இரண்டாவதாக, ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளைப் பகிர்ந்து கொள்வது. பெண்கள் பணியிடத்தில் சேர பராமரிப்பில் சமமான ஆதரவு தேவை. இதற்கு கொள்கைகள் மற்றும் கலாச்சார மாற்றங்கள் இரண்டும் தேவை. ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு மற்றும் சிறந்த குழந்தை பராமரிப்பு வசதிகள் போன்ற கொள்கைகள் உதவக்கூடும். அதே நேரத்தில், சமூகம் பாரம்பரிய பாலினத் தன்மையிலிருந்து விலகிச் செல்ல வேண்டும்.
இந்தியா மாற்றியமைக்கக்கூடிய மேம்பட்ட பொருளாதாரங்களின் சிறந்த நடைமுறைகளை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, ஸ்காண்டிநேவிய நாடுகள் பகுதிநேர வேலை, பெற்றோர் விடுப்பு மற்றும் மானிய விலையில் குழந்தை பராமரிப்பு ஆகியவற்றிற்கான வலுவான கொள்கைகளைக் கொண்டுள்ளன. இந்தக் கொள்கைகள் பெண் தொழிலாளர் பங்களிப்பை பெரிதும் அதிகரித்துள்ளன. பிரான்சில், பகுதிநேர தொழிலாளர்கள் முழுநேர ஊழியர்களைப் போலவே அதே பாதுகாப்புகளையும் சலுகைகளையும் பெறுகிறார்கள். இது சமமான சிகிச்சையை உறுதி செய்கிறது. 1990-ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பகுதிநேர வேலை உத்தரவுகள், பகுதிநேர ஊழியர்களுக்கு சம ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. மறுபுறம், இந்தியாவின் தொழிலாளர் சட்டங்கள் இந்தப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யவில்லை, இது தொடர்ந்து முறையான ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது.
கொள்கை பரிந்துரைகள்
இந்த ஆய்வறிக்கையின் கண்டுபிடிப்புகள் பன்முகக் கொள்கை அணுகுமுறையின் (multi-pronged policy approach) அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன. முதலில், இந்தியா பகுதிநேர வேலையை வரையறுத்து முறைப்படுத்த வேண்டும். தற்போதைய குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு அல்ல, ஒரு நாளைக்கு வரையறுக்கப்படுவதால், மணிநேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதும் இதில் அடங்கும். இது வேலைப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் சமூகப் பாதுகாப்பு சலுகைகளை அணுகுவதையும் உள்ளடக்கியது. பகுதிநேர வேலையை முறைப்படுத்துவது, பெண்கள் பராமரிப்புப் பொறுப்புகளை நிர்வகிக்கும் அதே வேளையில் பணியிடத்தில் சேர ஒரு தெளிவான பாதையை உருவாக்கும்.
இரண்டாவது, பராமரிப்பு உள்கட்டமைப்பில் (care infrastructure) முதலீடு செய்தல் ஆகும். சர்வதேச ஆய்வுகள் காட்டியுள்ளபடி, மலிவு விலையில் குழந்தை பராமரிப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு வசதிகளில் பொது மற்றும் தனியார் முதலீடு தனியார் நிறுவனங்கள் மற்றும் பேரியல் பொருளாதாரத்திற்கு பல நன்மைகளை அளிக்கிறது என்று அமெரிக்க பொருளாதார ஆலோசகர்கள் கவுன்சில், கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தன. இத்தகைய நடவடிக்கைகள் பெண்களின் பராமரிப்புச் சுமையைக் குறைப்பது மட்டுமல்லாமல், பராமரிப்புப் பொருளாதாரத்தில் புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.
மூன்றாவதாக, பராமரிப்பில் பாலின சமத்துவத்தை (gender equality in caregiving) ஊக்குவித்தல் ஆகும். பெற்றோர் இருவருக்கும் ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு மற்றும் பகிரப்பட்ட பராமரிப்பிற்கான வரிச் சலுகைகள் போன்ற கொள்கைகள் ஊதியமின்றி பராமரிப்புப் பணியை சமநிலைப்படுத்த உதவும். சமூக விதிமுறைகளை சவால் செய்வதற்கும் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் விழிப்புணர்வு பரப்புரைகளும் முக்கியமானவை.
நான்காவது, நெகிழ்வான பணிக் கொள்கைகள் (flexible work policies) ஆகும். தொலைதூர வேலை மற்றும் சரிசெய்யக்கூடிய அட்டவணைகள் போன்ற நெகிழ்வான பணி ஏற்பாடுகளை முதலாளிகள் அனுமதிக்க வேண்டும். இது பராமரிப்பு கடமைகளைக் கொண்ட ஊழியர்களுக்கு உதவும். இது நிறுவனங்களுக்கும் நன்மை பயக்கும். ஊழியர்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும்போது, அவர்களின் அவர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
பெண் தொழிலாளர் பங்களிப்பை அதிகரிப்பது பாலின சமத்துவத்திற்கு மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமானது. தொழிலாளர் பங்களிப்பில் பாலின இடைவெளியை நீக்குவது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 27% அதிகரிக்கக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆராய்ச்சி காட்டுகிறது. பணியிடத்தில் அதிகமான பெண்கள் இருப்பது அதிக வீட்டு வருமானம், சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார உற்பத்தித்திறனை அதிகரிக்கும்.
பொருளாதாரத்திற்கு அப்பால் நன்மைகள் நீண்டுள்ளன. பெண்கள் பணியிடத்தில் சேரும்போது, சமூகம் பாலினத் தன்மைகளை எவ்வாறு பார்க்கிறது என்பதை இது மாற்றுகிறது. இது இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் மற்றும் சமத்துவ கலாச்சாரத்தை ஊக்குவிக்கும். கூடுதலாக, பெண்களின் நிதி சுதந்திரம் அவர்களின் குடும்பங்களுக்கு சுகாதாரம் மற்றும் கல்வி விளைவுகளை மேம்படுத்துகிறது, நேர்மறையான வளர்ச்சியின் சுழற்சியை உருவாக்குகிறது.
செயல்படுத்துவதில் உள்ள சவால்கள்
இதை செயல்படுத்துவதில் தெளிவான நன்மைகள் உள்ளன. இருப்பினும், அவற்றை செயல்படுத்துவது சவாலானது. ஆழமாக வேரூன்றிய கலாச்சார விதிமுறைகள் மாற்றத்தை எதிர்க்கின்றன. இது பராமரிப்புப் பொறுப்புகளை மாற்றுவதை கடினமாக்குகிறது. அரசாங்க ஒழுங்குமுறை இல்லாமல் நெகிழ்வான பணிக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முதலாளிகள் தயங்கக்கூடும். மேலும், இந்தியாவின் தொழிலாளர் சந்தை பெரும்பாலும் முறைசாரா முறையில் உள்ளது. 80%-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முறைசாரா வேலைகளில் உள்ளனர். இது பகுதிநேர வேலையை முறைப்படுத்துவதை கடினமாக்குகிறது.
இந்த சவால்களை எதிர்கொள்ள, கொள்கை வகுப்பாளர்கள், முதலாளிகள் மற்றும் சிவில் சமூகம் இணைந்து செயல்பட வேண்டும். அரசாங்கம் தொழிலாளர் சீர்திருத்தங்களை முறைப்படுத்துவதன் மூலம் வழிநடத்த வேண்டும். பல முன்னேறிய பொருளாதாரங்களைப் போலவே, பராமரிப்பு உள்கட்டமைப்பிலும் முதலீடு செய்ய வேண்டும். முதலாளிகள் பன்முகத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மையின் மதிப்பை அங்கீகரிக்க வேண்டும். பணியாளர் தக்கவைப்பு மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த இந்த காரணிகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. சிவில் சமூக அமைப்புகள் (Civil society organisations) தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பாலின சமத்துவத்திற்காக வாதிட வேண்டும்.
இந்தியா 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதை அடைய, அதன் பெண் பணியாளர்களின் வேலைத் திறனைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். பகுதிநேர வேலைவாய்ப்பை முறைப்படுத்துதல், ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளை மறுபகிர்வு செய்தல் மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதன் மூலம் இதைச் செய்யலாம். இந்த நடவடிக்கைகள், தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு பிரகாசமான, உள்ளடக்கிய எதிர்காலத்தை உருவாக்க இந்தியாவுக்கு உதவும். செயல்பட வேண்டிய நேரம் இது.
ஆகாஷ் தேவ், இந்தியாவின் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலில் (NCAER) பாலினம் மற்றும் பேரியல் பொருளாதார மையத்தில் (CGM) இணை உறுப்பினராக உள்ளார். ரத்னா சஹாய், NCAER இல் பேராசிரியராகவும், வாஷிங்டன் டிசியில் உள்ள வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் ஒரு வெளிநாட்டு உறுப்பினராகவும் உள்ளார்.