வரவு செலவு அறிக்கை 2025, இந்திய நகரங்களை பொருளாதார வளர்ச்சி எந்திரங்களாக எவ்வாறு மேம்படுத்துகிறது? -ஜேக்கப் பேபி

 2025-26 ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கை, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சியை அதிகரிக்க நகரங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. நகர்ப்புறங்களில் உட்கட்டமைப்பு முதலீட்டை அதிகரிக்க வரவு செலவு அறிக்கை என்ன நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது?


2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நகர்ப்புற மேம்பாடு (urban development) மாற்றத்தை ஏற்படுத்தும் ஆறு சீர்திருத்தங்களில் ஒன்றாக வலியுறுத்தினார். நகர்ப்புறங்கள் மீதான வரவு செலவு அறிக்கையின் கவனம், இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் ஒரு முக்கிய அங்கமாக நகரங்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டுகிறது.


நகர்புறங்களுக்கான வரவு செலவு அறிக்கை என்றால் என்ன, இந்திய நகரங்களில் நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (urban local bodies (ULBs)) எவ்வாறு நிதியளிக்கின்றன என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.


2025-26 வரவு செலவு அறிக்கை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான ஒன்றிய அரசின் முதன்மை அமைச்சகமான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு (Ministry of Housing and Urban Affairs (MoHUA)) ரூ. 96,777 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த மதிப்பிடப்பட்ட செலவினத்தில் 1.91% ஆகும்.


கடந்த சில ஆண்டுகளாக, நகர்ப்புற மேம்பாட்டுக்கான ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை ஒதுக்கீடு நிலையான உயர்வைக் கண்டுள்ளது. 2021-ல் 50,000 கோடியிலிருந்து 2024-ல் 79,000 கோடியாகவும், 2025-ல் 96,777 கோடியாகவும் அதிகரித்துள்ளது. வரவு செலவு அறிக்கை ஒதுக்கீட்டில் இந்த நிலையான அதிகரிப்பு குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இது நகர்ப்புற வளர்ச்சிக்கு அதிக உத்வேகத்தை அளிக்கிறது.


மலிவு விலை நகர்ப்புற வீட்டுவசதிகளில் கவனம் செலுத்தும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறம் (Pradhan Mantri Awas Yojana (PMAY-Urban)) சீர்மிகு நகரங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் சீர்மிகு நகரங்கள் திட்டம் மற்றும் நீர் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தும் அடல் புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான  திட்டம் (Atal Mission for Rejuvenation and Urban Transformation (AMRUT)) போன்ற பல முக்கிய திட்டங்கள் இந்த வரவு செலவு அறிக்கை ஒதுக்கீடுகளைப் பெறுகின்றன.


கடந்த சில ஆண்டுகளாக, நிலையான இயக்கத்திற்கு மாறுவதை நோக்கமாகக் கொண்டு, நகர்ப்புற போக்குவரத்துத் திட்டங்களுக்கும், குறிப்பாக மெட்ரோ ரயில் மற்றும் மாஸ் ரேபிட் டிரான்சிட் திட்டங்களுக்கும் ஒதுக்கீடுகள் சென்றுள்ளன. மேலும், நகர்ப்புற ஏழைகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில், குறைந்த விலை கடன்கள் மற்றும் வட்டி மானியங்களை வழங்குவதன் மூலம் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகள் ஆத்மநிர்பர் நிதி (Prime Minister Street Vendors Atma Nirbhar Nidhi (PM SVANidhi)) திட்டத்தை மறுசீரமைக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது.


நகரங்களை மாற்றுவதற்காக ரூ. 1 லட்சம் கோடி நிதி திரட்டும் "நகர்ப்புற சவால் நிதி" (“Urban Challenge Fund”) ஒன்றை அமைப்பது குறித்தும் ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிதி நகரங்களை வளர்ச்சி மையங்களாக, மறுமேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் நீர் மற்றும் சுகாதார மேம்பாடுகளை ஆதரிக்கும். இது ஒரு திட்டத்தின் செலவில் 25% வரை ஈடுகட்டும். மீதமுள்ள, 50% அல்லது அதற்கு மேற்பட்ட பத்திரங்கள், வங்கிக் கடன்கள் அல்லது பொது-தனியார் கூட்டாண்மை (Public-Private Partnerships (PPPs)) மூலம் வர வேண்டும்.


சீர்மிகு நகரங்கள் திட்டம் மற்றும் அடல் புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான  திட்டம் (Atal Mission for Rejuvenation and Urban Transformation (AMRUT)) போன்ற முக்கிய அரசின் முன்னெடுப்புகளை இந்த நிதி ஆதரிக்கிறது. இது நகர்ப்புற மறுமேம்பாடு மற்றும் நகர உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.


நகர்ப்புற சவால் நிதி நகர மேம்பாட்டிற்காக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இடையே கூட்டாண்மைகளை ஊக்குவிக்கிறது. சீர்மிகு நகரங்கள் திட்டம் இது போன்ற அணுகுமுறையைப் பயன்படுத்தியது. அந்த திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் நகரம் முழுவதும் அல்லது பகுதி சார்ந்த திட்டங்களுக்கு ஓரளவு நிதியளிக்க அழைக்கப்பட்டன.


நகர்ப்புற சவால் நிதி என்பது தனியார் நிறுவனங்களை நகரத் திட்டங்களில் சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதி சுதந்திரத்தை வழங்குவதன் மூலம் அதை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நகர்ப்புற மேம்பாட்டிற்காக தங்கள் சொந்த நிதியை திரட்ட உதவுகிறது. PRS சட்டமன்ற ஆராய்ச்சி, பெரும்பாலான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் வருவாய்க்காக ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்களின் மானியங்களைச் சார்ந்துள்ளதாக கூறுகிறது.


நகர்ப்புற நிர்வாகத்தில் (முழுமையான சுயாட்சி மற்றும் மாநில அரசாங்கங்களிடமிருந்து பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தல் போன்றவை) பல வரம்புகள் இருப்பதால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் சொந்த வருவாயை ஈட்டுவதற்கான வளங்களையும் திறனையும் கொண்டிருக்கவில்லை. இதன் பொருள் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பணம் செலுத்தவும் தற்போதுள்ள உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றிய மற்றும் மாநில அரசு நிதியை அதிகம் சார்ந்துள்ளன.


நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய வருவாய் ஆதாரங்களை முதன்மையாக வரி மற்றும் வரி அல்லாத வருவாய்கள் என வகைப்படுத்தலாம். வரி வருவாயில் முக்கியமாக சொத்து வரி, தொழில்முறை வரி மற்றும் பொழுதுபோக்கு வரி ஆகியவை அடங்கும். அதே, நேரத்தில் வரி அல்லாத வருவாயில் வாகன நிறுத்த கட்டணம், குடிநீர் கட்டணம், உரிமக் கட்டணம் மற்றும் நகராட்சி சொத்துக்களிலிருந்து வாடகை வருமானம் போன்ற பயனர் கட்டணங்கள் அடங்கும்.


எடுத்துக்காட்டாக, 2021-22 நிதியாண்டில், பிரஹன்மும்பை நகராட்சி கழகம் (Brihanmumbai Municipal Corporation (BMC)) அதன் வருவாயில் 19% வரியிலிருந்தும், 54% கட்டணம் மற்றும் பயனர் கட்டணங்களிலிருந்தும், மீதமுள்ளவை பிற வருமான ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டன. ஒப்பிடுகையில், பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) அதன் வருமானத்தில் 80% வரி ஆதாரங்களிலிருந்தும் (tax sources), மீதமுள்ள 20% பிற வருமான ஆதாரங்களிலிருந்தும் (sources of income) பெற்றது.


சரியான நேரத்தில் மற்றும் திறமையான முறையில் வரிகளை வசூலிக்கும் திறன், நகர்ப்புற உட்கட்டமைப்பு சேவைகளுக்கு பகுத்தறிவுடன் விலை நிர்ணயம் செய்தல் (மேம்பட்ட சேவை வழங்கலை அடைவதற்கு ஈடாக) மற்றும் வாகன நிறுத்த கட்டணம், விளம்பரங்கள், வாடகை வருமானம் மற்றும் வட்டி வருமானம் போன்ற பிற ஆதாரங்களில் இருந்து வருமானத்தை ஈட்டும் திறன் போன்ற பல காரணிகளைப் பொறுத்து சதவீதம் நகரத்திற்கு நகரம் மாறுபடும்.


பெரிய நகரங்கள் பரந்த வரி அடிப்படை மற்றும் வருவாயை ஈட்டும் திறனைக் கொண்டிருந்தாலும், சிறிய நகரங்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மானியங்களை நம்பியிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, 2021-22 ஆம் ஆண்டில், கொச்சி மாநகராட்சியின் வருவாயில் 57% வருவாய் மானியங்கள், பங்களிப்புகள் மற்றும் மானியங்களிலிருந்து வந்தது. 2022-23ஆம் ஆண்டில் கொச்சி மாநகராட்சி பெற்ற மானியத்திற்கு ஒன்றிய நிதி ஆணையத்தின் (Central Finance Commission (CFC)) செயல்திறன் நிதி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் நிதி திரட்ட பல சந்தை வழிமுறைகள் உள்ளன. இதற்கு, மிக முக்கியமான உதாரணம் நகராட்சி பத்திரங்கள் ஆகும். அங்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்க பத்திரங்களை வெளியிடுகின்றன. இந்தியாவில் நகராட்சி பத்திரத்தை வெளியிட்ட முதல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (Urban Local Bodies (ULBs)) அகமதாபாத் மாநகராட்சியும் ஒன்றாகும். இந்தப் பத்திரம் நீர் மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டது.


பல நகரங்கள் இந்த அணுகுமுறையைப் பின்பற்றி இது போன்ற நகராட்சி பத்திரங்களை வெளியிட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, இந்தூர், புனே, ராஜ்கோட், பெருநகர ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் லக்னோவில் உள்ள நகராட்சிகள் தங்கள் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்க பத்திரங்களைப் பயன்படுத்தியுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் நிதி நிறுவனங்களிடமிருந்தும் கடன்களைப் பெறலாம். இவற்றில் HUDCO மற்றும் உலக வங்கி ஆகியவை அடங்கும். இந்த கடன்கள் குறிப்பிட்ட மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.


நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கான ஒரு வழியாக, நகர்ப்புற சவால் நிதி, பொது-தனியார் கூட்டாண்மைகளை (public-private partnerships (PPPs)) ஊக்குவிக்கிறது. இந்தியாவில், நகர்ப்புற வளர்ச்சியில் PPP திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அனைத்து PPP திட்டங்களிலும் குறைந்தது 5-10% நீர், சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்ற நகர்ப்புறத் துறைகளில் கவனம் செலுத்துகின்றன. இந்தத் திட்டங்கள் தனியார் முதலீட்டை ஈர்க்கின்றன. அரசாங்கத்தின் மீதான நிதிச் சுமையைக் குறைக்கின்றன. அவை தனியார் துறை நிபுணத்துவத்தையும் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் கொண்டு வருகின்றன. இது உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் நகரங்களில் சேவை வழங்கலை மேம்படுத்தவும் உதவுகிறது.


2025-26-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை நகர்ப்புற மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. இந்தியாவின் நகரங்களை பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தின் மையங்களாக வலுப்படுத்துவதில் இது ஒரு முக்கிய படியாகும். உட்கட்டமைப்பு முதலீட்டிற்கு முன்னுரிமை அளித்தல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் வருவாய் வழிகளைப் பன்முகப்படுத்த ஊக்குவித்தல் மற்றும் பொது-தனியார் கூட்டாண்மைகளை வளர்ப்பதன் மூலம், வரவு செலவு அறிக்கை அதிக நிதி சுயாட்சி மற்றும் நிலையான நகர்ப்புற மேம்பாட்டிற்கான அடித்தளத்தை அமைக்கிறது. இந்தியாவின் நகரங்கள் வேகமாக வளர்ந்து வருவதால், இந்த நடவடிக்கைகள் முக்கியமானதாக இருக்கும். அவை நகரங்களை வாழக்கூடியதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அவற்றின் குடியிருப்பாளர்களுக்கு துடிப்பானதாகவும் மாற்ற உதவும்.




Original article:

Share: