பொதுவான சவால்கள் மற்றும் பகிரப்பட்ட இராஜதந்திர நோக்கங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட கூட்டாண்மை இதுவாகும்.
கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2022 ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பிறகு, வட கொரியா ரஷ்யாவுடன் உறவை பலப்படுத்தி வருகிறது. பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு (Sergei Shoigu) தலைமையிலான ரஷ்ய தூதுக்குழு ஜூலை 2023 இல் பியோங்யாங்கிற்கு (Pyongyang) பயனம் செய்தபோது இந்த உறவு வலுவடைந்தது. அதைத் தொடர்ந்து, கிம் ஜாங்-உன் (Kim Jong-un’s) செப்டம்பர் 2023 இல் மாஸ்கோவுக்கு விஜயம் செய்தார்.
இப்போது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 2024 இல் மீண்டும் பியோங்யாங்கிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இரு நாடுகளும் ஒரு உச்சிமாநாட்டிற்கு தயாராகி வருகின்றன, அதில் "மிகச் சிறந்த" ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம் என்று எதிர்பார்கப்படுகிறது. வட கொரியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் மட்செகோரா, 2024 ஒரு திருப்புமுனை ஆண்டாக இருக்கும் என்று கூறுகிறார். கடந்த மாதம் தான், திரு. புடின் வட கொரிய தலைவருக்கு ரஷ்ய தயாரிப்பான சொகுசு காரை பரிசாக வழங்கினார்.
உறவுகளை மேம்படுத்துதல், மற்றும் அதிக ஒத்துழைப்பு
பனிப்போரின் போது, ரஷ்யாவும் வட கொரியாவும் தங்கள் பகிரப்பட்ட கம்யூனிச சித்தாந்தங்கள் காரணமாக இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருந்தன. இருப்பினும், உலகளாவிய அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இந்த உறவுகள் காலப்போக்கில் ஏற்ற இறக்கமாக இருந்தன. சமீபத்திய ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நெருக்கடியின் போது ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் மற்றும் பிற இராணுவ உபகரணங்களை வழங்குவதில் வட கொரியா குறிப்பிடத்தக்க விநியோகிப்பாளராக மாறியுள்ளது.
உளவு செயற்கைக்கோள் உருவாக்கத்திற்க்கான தொழில்நுட்ப ஆதரவு உட்பட முக்கிய பகுதிகளில் ஒத்துழைப்பு குறித்து ரஷ்யாவும் வட கொரியாவும் விவாதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இதை வட கொரியா சில காலமாக பின்பற்றி வருகிறது. பெய்ஜிங் சம்பந்தப்பட்ட கடற்படை பயிற்சிகள் பற்றிய பேச்சுவார்த்தைகளும் உள்ளன, ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை. பிப்ரவரி 2024 இல், வட கொரியா கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து வந்த தனது முதல் சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது.
உலக அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், அணு ஆயுதத்தில் வல்லரசாக இருக்கும் ரஷ்யாவைப் பொறுத்தவரை, வட கொரியா போன்ற நட்பு அண்டை நாடுகள் இருப்பது நன்மை பயக்கும். பொருளாதார சவால்கள் மற்றும் சர்வதேச பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும் வட கொரியாவைப் பொறுத்தவரை, எரிசக்தி, போக்குவரத்து மற்றும் உணவு பற்றாக்குறை நிவர்த்தி போன்ற துறைகளில் வளர்ச்சிக்கு ரஷ்யா சாத்தியமான ஆதரவை வழங்குகிறது. முன்னதாக, ரஷ்யாவை வட கொரியாவின் ரஜின் துறைமுகத்துடன் இணைக்கும் ரஜின்-கசான் (Rajin-Khasan) ரயில்வே போன்ற திட்டங்கள், பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உறுதியான முயற்சிகளைக் காட்டின.
ஆற்றல் இணைப்பு
ரஷ்யா மற்றும் வட கொரியா இடையேயான கூட்டாண்மையில் எரிசக்தி ஒத்துழைப்பு முக்கியமானது. ரஷ்யா வட கொரியாவுக்கு எரிபொருளை வழங்கியுள்ளது. மேலும், அவர்கள் எரிசக்தி துறையில் மேலும் ஒத்துழைப்பது குறித்து விவாதித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், அவர்களின் ஒத்துழைப்பின் முக்கிய கவனம் ஆயுதங்கள் மற்றும் உணவுக்கான ஒப்பந்தம் ஆகும். இருப்பினும், எந்த நாடும் அதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இந்த ஒப்பந்தம் ஆகஸ்ட் 2023 இல் வெளிவந்தது. இருப்பினும், இரு நாடுகளும் அத்தகைய ஒப்பந்தம் இருப்பதை உறுதிப்படுத்தவில்லை. ஏனென்றால் உக்ரேனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. அதேவேளையில், வட கொரியாவிற்கு உணவுப் பொருட்களும் தேவைப்படுகின்றன. அக்டோபர் 2023 முதல் செயற்கைக்கோள் படங்கள், வட கொரியா-ரஷ்யா எல்லைக்கு அருகிலுள்ள துமங்காங் ரயில் வசதியில் சரக்கு ரயில் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியது. இது வட கொரியா ரஷ்யாவுக்கு வெடிமருந்துகளை மாற்றிதைக் குறிக்கிறது.
அமெரிக்க காரணி
வட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மேம்பட்ட உறவுக்கு ஒரு காரணம், அமெரிக்கா மற்றும் பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு நாடுகள் குறித்து அவர்கள் பகிர்ந்து கொண்ட கவலைகளாகும். இரு நாடுகளும் மேற்கத்திய நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அவை தங்கள் வெளியுறவுக் கொள்கைகளை சரிசெய்து வருகின்றன. வடகிழக்கு ஆசியாவில் பாதுகாப்பில் செல்வாக்கு செலுத்துவதற்கான ஒரு வழியாக வட கொரியாவை ரஷ்யா பார்க்கிறது.
ரஷ்யா, சில சமயங்களில் சீனாவுடன், மேற்கு நாடுகளை நம்பாமல் பிராந்திய பாதுகாப்பை வடிவமைக்க இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்கிறது. வட கொரியாவின் வெளியுறவு மந்திரி சோ சன்-ஹுய் (Choe Son-hui), அக்டோபர் 2023 இல், மாஸ்கோவிற்கும் பியோங்யாங்கிற்கும் இடையிலான வலுவான உறவுகள், வாஷிங்டன், டோக்கியோ மற்றும் சியோல் ஆகிய அமெரிக்க தலைமையிலான கூட்டணியை சமநிலைப்படுத்த முடியும் என்றார்.
2023 ஆம் ஆண்டிலும் 2024 ஆம் ஆண்டிலும் ரஷ்யா மற்றும் வட கொரியாவின் உறவுகள் வலுப்பெற்று வருகின்றன என்பது தெளிவாகி வருகிறது. பொதுவான சவால்கள் மற்றும் பகிரப்பட்ட ராஜதந்திர நோக்கங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இந்த கூட்டாண்மை, பிராந்திய உறுதித்தன்மை மற்றும் உலகளாவிய புவிசார் அரசியலுக்கான நீண்டகால தாக்கங்களைக் கொண்டுள்ளது. இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் தங்கள் ஈடுபாட்டையும் ஒத்துழைப்பையும் ஆழப்படுத்துவதால், அவர்களின் உறவு கொரிய தீபகற்பம் மற்றும் பரந்த வடகிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்கவியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான உறவு புவிசார் அரசியலில் முக்கியமானது விளைவுகள் சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்கு அப்பாற்பட்டவை..
ஹர்ஷ் வி.பந்த், புது தில்லியில் உள்ள அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையில் (Observer Research Foundation) ஆய்வுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கான துணைத் தலைவர், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் (King’s College London) சர்வதேச உறவுகள் பேராசிரியர். பிரத்னாஸ்ரீ பாசு, அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையில் இந்தோ-பசிபிக் இணை ஆய்வாளராக உள்ளார்.