குறுகிய பார்வைகளைத் தாண்டி ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறித்து மறுமதிப்பீடு செய்ய வேண்டும் -ரா.சிவா, சபூர் அலி எம்.

 இந்திய மொழிகளுக்கு போட்டியாக இல்லாமல், தகவல் தொடர்புக்கான முக்கிய கருவியாக ஆங்கிலத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும்..


பல இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆங்கிலம் பேச வேண்டும் என்று விரும்புகிறார்கள், சிறந்த சமூக பொருளாதார வாய்ப்புகளுக்கு ஆங்கிலம்  அவசியம் என்று கருதுகிறார்கள். இருந்தபோதிலும், தேசிய கல்விக் கொள்கைகள் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில மொழி கற்பிப்பதை புறக்கணித்துள்ளன. 


இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, அரசியலின் தாக்கத்தால் 2020-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட  தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) போன்ற கல்விக் கொள்கைகள் ஆங்கிலத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி அதன் முக்கியத்துவத்தைக் குறைக்க முயற்சித்தன. இருப்பினும், இந்திய அரசியலமைப்பு ஆங்கிலத்தை சமத்துவத்திற்கான (equality) ஒரு கருவியாக அங்கீகரித்துள்ளது. கட்டுப்படுத்தும் கொள்கைகள் மற்றும் அரசியலமைப்பு ஆதரவு ஆகியவற்றுக்கு இடையேயான இந்த மோதல், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்கள் ஆங்கிலம் கற்பதை கடினமாக்கியுள்ளது. இதன் விளைவாக, இது அவர்களை கல்வி மற்றும் சமூக பொருளாதாரத்தில் பின் தங்கிய சூழலில் வைத்துருக்கிறது.

 

குறிப்பாக, இந்த புறக்கணிப்பு அரசுப் பள்ளிகளில் விளிம்புநிலை குழந்தைகளை பாதித்து, கல்வி சமத்துவமின்மையை அதிகரித்துள்ளது. இதற்கு நேர்மாறாக, அதிக வசதி குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஆங்கிலம் கற்பதற்கான வளங்களைப் பெற்றுள்ளனர். இது ஆங்கிலம் பேசக்கூடியவர்களுக்கும் பேச முடியாதவர்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 90% மக்கள் ஆங்கிலம் பேசுவதில்லை, இது தெளிவான மொழி ரீதியான வேறுபாட்டைக் காட்டுகிறது. இந்த பிரச்சினை கொள்கையில் குறிப்பிடப்படவில்லை அதை நிவர்த்தி செய்வதற்கான எந்த தீர்வையும் வழங்கவில்லை. 


2020-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை தொடர்ந்து ஆங்கிலத்தை குறைத்து மதிப்பிடுகிறது. உலகளவில் உள்ள ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை புறக்கணிக்கிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழுக்களுக்கு ஆங்கிலத்தை இன்னும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான எந்தவொரு திட்டத்தையும் இந்தக் கொள்கை கோடிட்டுக் காட்டவில்லை. இது இந்த கல்வி இடைவெளியைக் குறைப்பதற்கான சவாலை மோசமாக்குகிறது. 


“பன்முகத்தன்மை” (‘diversity’) என்ற போர்வையின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மையான குறிக்கோள்


தேசிய கல்விக் கொள்கை 2020-ன் மும்மொழி திட்டம்மொழியியல் பன்முகத்தன்மையை (linguistic diversity) ஊக்குவிப்பதாகக் கூறுகிறது. ஆனால், இது இந்தி-இந்தியா என்ற கருத்தை மறைக்கிறது. இந்தியாவில் ஆங்கிலத்தின் பங்கைக் குறைப்பதன் மூலம் இது செய்யப்படுகிறது. இந்த அணுகுமுறை ஆங்கிலத்தை தங்கள் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாகக் கருதும் கோடிக்கணக் கணக்கான மக்களின் நம்பிக்கையை குறைப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொருவரின் மீதும் ஒரு மொழியைத் திணிப்பதில் இருந்து பாதுகாக்கும் அரசியலமைப்பிற்கு எதிரானதாக இருக்கிறது.

 

அரசியலமைப்புச் சட்டத்தில், ஆங்கிலம் மற்றும் இந்தி இரண்டையும் அலுவல் மொழிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது பிராந்திய மொழிகளையும் பாதுகாக்கிறது மற்றும் சமநிலையை உறுதி செய்கிறது. கல்வி, சுகாதாரம், சட்டம், வர்த்தகம் மற்றும் உலகளாவிய தகவல் தொடர்பு ஆகியவற்றிற்கு ஆங்கிலம் முக்கியமானது. இது இந்தியாவின் பல்வேறு இனக்குழுக்களிடையே நடுநிலைமையை உறுதி செய்கிறது, அதே நேரத்தில் பிராந்திய மொழிகள் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. எவ்வாறாயினும், 2020-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை இந்த அரசியலமைப்பு பாதுகாப்புகளை புறக்கணிப்பதன் மூலம் சமநிலையை சீர்குலைக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த அணுகுமுறை தவறானது, குறைபாடுடையது மற்றும் நேரத்தையும் வளங்களையும் வீணடிக்கும். இது பிராந்திய மொழிகளுக்கு மதிப்பளிக்கும் அளவிற்கு ஆங்கிலத்தை உயர்த்துவதற்குப் பதிலாக பழைய மொழி விவாதங்கள் குறித்து பேசவேண்டிய சூழலை மீண்டும் ஏற்படுத்தும். இந்த அரசியலமைப்பு முரண்பாட்டைப் (constitutional discord) புரிந்துகொள்வது, இந்தியா கடந்த காலத் தவறுகளைத் தவிர்க்கவும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நடைமுறை மொழிக் கொள்கையை உருவாக்கவும் உதவும்.

 

1991-ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களுக்குப் பிறகு, ஆங்கிலத்தின் தேவை அதிகரித்தது. ஏனெனில், அது பொருளாதார வளர்ச்சிக்கும் உலகளாவிய வாய்ப்புகளுக்கும் முக்கியமானது. இருந்தபோதிலும், அடுத்தடுத்த அரசாங்கங்கள் இந்த மாற்றத்தை புறக்கணித்து, பிராந்திய மற்றும் தேசியவாத மொழிக் கொள்கைகளில் கவனம் செலுத்துகின்றன.

 

2020-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) தொடர்ந்து ஆங்கிலத்தை குறைத்து மதிப்பிடுகிறது. அதே நேரத்தில், பிராந்திய மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது, இது பிராந்திய அடையாள அரசியலை அதிகரிக்கலாம். பிராந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் இரண்டையும் ஆதரிப்பது சாத்தியம் என்பது புரியவில்லை. ஆங்கிலத்தின் பரவலுக்கு இடையூறாக இருக்கும் இந்தி மொழியை தேசிய மொழியாக்குவதற்கான முயற்சிதான் முக்கிய பிரச்சனை.


ஆங்கிலேய எதிர்ப்பு நிலைப்பாடு புதிதல்ல. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக மாற்றுவதற்கான வலுவான முயற்சி இருந்தது. இது ஆங்கிலம் ஒரு இணை அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தாலும் அதன் பங்கைக் குறைக்கும் முயற்சிகளுக்கு வழிவகுத்தது. ஆங்கிலத்தைப் போல் இல்லாமல் இந்தி இந்தியாவின் பன்முக கலாச்சாரங்களைக் கடந்து ஒரு நடுநிலை பாலமாக இருக்க முடியாது என்ற நம்பிக்கை இருந்தது. 


கடந்த காலத்துடனான தொடர்பு


சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா இந்தி பேசும் நாடாக இருக்க வேண்டும் என்று விரும்பிய இந்தி பேசும் தலைவர்களால் வழிநடத்தப்பட்ட சுதந்திரப் போராட்டத்திற்கு இந்த சார்பு செல்கிறது. உருதுவைத் தவிர்த்து பாகிஸ்தானுடனான பிரிவினை இந்தி மீதான கவனத்தை அதிகப்படுத்தியது. இருந்தபோதிலும், இந்தியாவின் பன்மொழி இயல்பு மற்றும் மொழிப் பன்முகத்தன்மைக்கான அரசியலமைப்பு ஆதரவு ஆகியவை இந்தியுடன் ஆங்கிலத்தையும் அதிகாரப்பூர்வ மொழியாக வைத்திருக்க உதவியது.


1968-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை தேசத்தை ஒருங்கிணைக்க இந்தி பேசாத பகுதிகளில் ஹிந்தியைப் பரப்புவதற்கு மும்மொழிக்கொள்கையை (three-language formula) அறிமுகப்படுத்தியது. ஆனால், தமிழ்நாடு இதை எதிர்த்தது, இது இந்தியைக் கட்டாயப்படுத்துவதாகவும், ஆங்கிலத்தின் பங்கைக் குறைப்பதாகவும் இருந்தது. 2020-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட  தேசிய கல்விக் கொள்கை, மொழித் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதாகக் கூறினாலும், பழைய கொள்கையை  இன்னும் நுட்பமாக ஊக்குவிக்கிறது மற்றும் மொழித் திணிப்பு பிரச்சினையை முழுமையாக தீர்க்கவில்லை.

 

நடைமுறையில், கொள்கையில் சிக்கல்கள் உள்ளன. இது மொழி விருப்பங்களை மக்களுக்கு வழங்குவதாகக் கூறினாலும், வளங்களும் உள்கட்டமைப்பும் இந்திக்கு ஆதரவாக உள்ளது. இது உண்மையான தேர்வை குறைக்கிறது மற்றும் பன்மொழித்தன்மையை ஊக்குவிக்கத் தவறுகிறது. கலாச்சார மற்றும் அரசியல் காரணங்களால் இயக்கப்படும் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் கவனம் செலுத்துவது, இந்தியாவில் தொழில்முறை, கல்வி மற்றும் சட்ட சூழல்களில் முக்கியமான ஆங்கிலத்தை புறக்கணிக்கிறது. 


 நடைமுறையில் (Be pragmatic) இருங்கள்   


சீனா போன்ற நாடுகள் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் அவர்களின் நடுத்தர வர்க்கத்தின் இலக்குகளுக்கு ஏற்ப ஆய்வு செய்கின்றன. இதற்கு நேர்மாறாக, இந்தியாவின் தெளிவான ஆங்கில மொழிக் கொள்கை இல்லாதது அதன் உலகளாவிய பொருளாதார தொடர்புகளையும் சமூக இயக்கத்தையும் பாதிக்கலாம்.

 

இந்தியா தனது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே நேரத்தில் அதன் கலாச்சார பன்முகத்தன்மையை மதிக்கும் ஒரு நடைமுறை மொழிக் கொள்கை தேவை. பிராந்திய மொழி மற்றும் ஆங்கிலத்தை உள்ளடக்கிய இருமொழிக் கொள்கை, இந்தியர்கள் தங்கள் கலாச்சார அடையாளங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், உலகளாவிய குடிமக்களாக இருக்க வேண்டும் என்ற தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யும். இத்தகைய கொள்கை உலகளாவிய பொருளாதார வாய்ப்புகளில் அதிக பங்கேற்பை சாத்தியமாக்கும் மற்றும் அனைத்து இந்தியர்களும் தொழில்முறை, கல்வி மற்றும் சட்டத் துறைகளில் திறம்பட ஈடுபடுவதை உறுதி செய்யும். 


இந்திய மொழிகளுக்குப் போட்டியாக இல்லாமல், இந்தியாவிற்குள்ளும், சர்வதேச அளவிலும் தகவல் தொடர்புக்கு இன்றியமையாத கருவியாக ஆங்கிலத்தை அரசு வளர்க்க வேண்டும். இந்த அணுகுமுறை சமத்துவம் மற்றும் தனிநபர் உரிமைகளுக்கான ஜனநாயகக் கொள்கைகளை ஆதரிக்கிறது. மொழி தடைகள் இல்லாமல் நாட்டின் சமூக பொருளாதார நடவடிக்கைகளில் அனைத்து குடிமக்களும் முழுமையாக பங்கேற்க முடியும் என்பதை இது உறுதி செய்யும். 


தாராளவாத ஜனநாயக (liberal democracy) நாடாக இருக்கும் இந்தியா தனது குடிமக்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப கொள்கைகளை உருவாக்க வேண்டும். அனைவரின் இலக்குகளையும் பூர்த்திசெய்யும் சமச்சீர் பன்மொழி அணுகுமுறையை ஆதரிக்க அதன் மொழிக் கொள்கைக்கான நேரம் இது. இந்தியாவின் மொழி தீர்வின் ஒரு பகுதியாக ஆங்கிலம் இருக்கலாம்.

 

ரா.ஷிவா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், குழந்தைகளுக்கான அறிவியல் கல்வியை வலுப்படுத்துவதற்கான ஆராய்ச்சியை மையமாகக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பான சட்டம் மற்றும் ஜனநாயகத்திற்கான குடிமக்கள் (Court and the founder of Citizens for Law and Democracy (CLAD)) நிறுவனராகவும்  உள்ளார்.



Original article:

Share: