மக்களின் தகவல் அறியும் உரிமையில் தடுமாற்றம் - அஞ்சலி பரத்வாஜ், அம்ரிதா ஜாஹ்ரி

 தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right to Information (RTI)) 20-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இருப்பினும், அதைப் பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 


  தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 இந்தியர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டங்களில் ஒன்றாகும். இது அடிப்படை சேவைகளில் ஊழலை அம்பலப்படுத்த உதவியது மற்றும் தெளிவற்ற தேர்தல் பத்திரங்கள் திட்டம் (electoral bonds scheme) பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தியது. குடிமக்கள் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது கேள்வி கேட்க முடிந்தது. 20-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு எதிராகவும், அதைப் பயன்படுத்தும் மக்களுக்கு எதிராகவும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 


காலிப் பணியிடங்கள் 


தகவல் ஆணையர்களை நியமிக்காமல் இருப்பதன் காரணமாக,  வழக்குகளின் தேக்கம் அதிகரித்து வருகிறது. இது போன்ற நடவடிக்கைகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சீர்குலைக்கின்றன. அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் குழுவான சதார்க் நாக்ரிக் சங்கதன்  குழு (Satark Nagrik Sangathan) 2023-24 அறிக்கையில், கடந்த ஆண்டு வெவ்வேறு காலகட்டங்களில் 29 தகவல் ஆணையங்களில், 7 செயல்படாமல் இருந்ததாக தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட் தகவல்  ஆணையம்  நான்கு ஆண்டுகளாக செயல்படவில்லை. திரிபுரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள ஆணையங்கள் முறையே மூன்று மற்றும் ஒன்றரை ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளன. 


பல தகவல் ஆணையங்கள் போதிய ஆணையர்கள் இல்லாமல் இயங்கி வருகின்றன. மகாராஷ்டிர தகவல் ஆணையத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மேல்முறையீடுகள் மற்றும் புகார்கள் நிலுவையில் உள்ளன. 11 ஆணையர் பதவிகளில் ஆறு காலியாக உள்ளன. மே 2015 முதல், குடிமக்கள் நீதிமன்றத்திற்குச் செல்லாமல் ஒன்றிய தகவல் ஆணையத்திற்கு எந்த ஒரு தகவல் ஆணையர்களையும் ஒன்றிய அரசு நியமிக்கவில்லை. உச்சநீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் ஒன்றிய தகவல் ஆணையத்தில் உள்ள 11 பதவிகளில் 8 இடங்கள் காலியாகவே உள்ளன.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல் ஆணையங்கள் மேல்முறையீடுகளுக்கான இறுதி அதிகாரம் மற்றும் மக்களின் தகவல் அறியும் உரிமையைப் பாதுகாக்கும் அமைப்பாகும். அரசாங்கத்திற்கு சிரமமாக இருக்கும் தகவலை வெளிப்படுத்தும் திறன் உட்பட குறிப்பிடத்தக்க அதிகாரங்கள் அவர்களுக்கு உள்ளன. போதுமான தகவல் ஆணையர்கள் நியமிக்கப்படாததால், இந்தியா முழுவதும் உள்ள தகவல் ஆணையங்களில் 400,000-க்கும் மேற்பட்ட முறையீடுகள் மற்றும் புகார்கள் நிலுவையில் உள்ளன. 


14 ஆணையங்களில் முறையீடுகள் அல்லது புகார்களைத் தீர்ப்பதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, சத்தீஸ்கர் அல்லது பீகாரில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மேல்முறையீடு 2029 வரை தீர்க்கப்படாமல் போகலாம். 2023-ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் உள்ள தகவல் ஆணையங்களில் காலியிடங்கள் தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், காலியிடங்களை நிரப்பத் தவறியதால், "நாடாளுமன்றத்தின் சட்டத்தால்  இயற்றப்பட்ட தகவல் அறியும் உரிமை ஒரு பயனற்றதாக மாறும்" சூழ்நிலைக்கு வழிவகுக்கிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. 


அதிகாரிகள் நியமனங்கள் செய்யப்பட்டாலும், பெரும்பாலான நியமனங்கள் ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரிகளாகவோ அல்லது அரசியல் நெருக்கமானவர்களாகவோ இருக்கின்றனர். இந்த நியமனம் பெற்றவர்கள் பெரும்பாலும் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறுகின்றனர். ஆணையத்தால் விசாரிக்கப்பட்ட 95% வழக்குகளில் அபராதம் விதிக்கவில்லை என்று அறிக்கை காட்டுகிறது. விளைவுகளை சந்திக்காமல் சட்டத்தை மீறலாம் என்று மக்கள் நினைக்கும் கலாச்சாரத்தை இது உருவாக்குகிறது. கடுமையான விதிகள் இல்லாததால், தகவல் அலுவலர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர். இது பல விண்ணப்பங்களுக்கு பதிலளிக்கப்படாமல் போவது மற்றும் தவறாக நிராகரிக்கின்ற வாய்ப்பை உருவாக்குகிறது. 


பிற்போக்குத்தனமான திருத்தங்கள் 


கடந்த ஐந்து ஆண்டுகளில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் எதிர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2019-ஆம் ஆண்டில், குடிமை சமூகம் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகள் இருந்தபோதிலும், அரசாங்கம் திருத்தங்களைச் செய்தது. இந்த மாற்றங்கள் தகவல் ஆணையங்களின் சுதந்திரத்தை பலவீனப்படுத்தியது. இந்தத் திருத்தங்கள் அனைத்து தகவல் ஆணையர்களின் பதவிக்காலம், சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்குப் பிந்தைய பலன்கள் ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கியது.


2023-ல் நிறைவேற்றப்பட்ட டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (Digital Personal Data Protection (DPDP) Act) சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை திருத்துவதற்கான ஒரு குறிப்பிட்ட விதியை உருவாக்கியது. இந்த விதிமுறை அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் வெளிப்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கிறது. 2005-ன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தனிநபர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் பிரிவு (8(1)(j))-ஐக் கொண்டிருந்தது. இந்த பிரிவின் கீழ் தனிப்பட்ட தகவலை மறுக்க, தகவல் அதிகாரி பின்வருவனவற்றில் ஒன்றையாவது நிரூபிக்க வேண்டும்:


1. கோரப்பட்ட தகவல் பொது செயல்பாடு அல்லது பொதுநலன் தொடர்பானது அல்ல.


2. தகவல் தனியுரிமை மீது தேவையற்ற படையெடுப்பை ஏற்படுத்தும், மேலும் அதன் வெளிப்பாட்டை நியாயப்படுத்த பெரிய பொது நலன் எதுவும் இல்லை.


டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் பிரிவு 8(1)(j)-ஐ அதன் நோக்கத்தை விரிவுபடுத்தவும், அனைத்து தனிப்பட்ட தகவல்களுக்கும் RTI சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கவும் மாற்றியது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் அதே மட்டத்தில் குடிமக்கள் தகவல்களை அணுக அனுமதிக்கும் ஒரு முக்கியமான விதியையும் இது நீக்கியது.


டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இந்தியாவின் (Transparency International India) தரவுகளின் படி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தியதற்காக 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் அச்சறுத்தல்கள் மற்றும் பொய் வழக்குகளையும் எதிர்கொண்டனர். 2014-ம் ஆண்டு இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம் (Whistleblowers Protection Act) நிறைவேற்றப்பட்டாலும், அதற்குத் தேவையான விதிகளை ஒன்றிய அரசு உருவாக்காததால், அது நடைமுறைக்கு வரவில்லை. 


ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் சுமார் 6 கோடி தகவல் அறியும் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. ஜனநாயக அமைப்பில் அதிகாரத்தை மாற்றுவதில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் முக்கியமானது என்பதை ஆதாரங்கள் காட்டுகின்றன. இது அரசாங்கத்திற்கும் குடிமக்களுக்கும் இடையிலான உறவை மாற்றியுள்ளது. இந்த அடிப்படை உரிமையை இழப்பது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும்.




Original article:

Share: