பிச்சை எடுப்பதை ஒழிக்க சட்டத்தை ஆயுதமாக்குதல் -ஸ்னேகா பிரியா யானப்பா

 போபால் மாவட்ட நிர்வாகம் பிச்சை எடுப்பதைத் தடைசெய்து தண்டிக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது, சில குழுக்களை வெறும் கூட்டாகக் குற்றவாளிகளாகக் கருதும் (criminalisation by association) காலனித்துவ கால மனநிலையை பிரதிபலிக்கிறது.


பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு எதிராக அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது என்ன நடக்கும்? சமீபத்தில், போபால் மாவட்ட ஆட்சியர் பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (Bharatiya Nagrik Suraksha Sanhita, 2023, (BNSS)) பிரிவு 163(2)-ன் கீழ் ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவு பொது இடங்களில் பிச்சை எடுப்பதைத் தடை செய்கிறது. பிச்சைக்காரர்கள் மற்றும் பிச்சை கொடுப்பவர்கள் இருவரும் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று அந்த உத்தரவில் எச்சரிக்கையாக குறிப்பிப்பட்டிருந்தது.


பிரிவு 163 (2) (முன்னர் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973-ன் பிரிவு 144) பொது அமைதியைக் காக்க அரசாங்கத்தை அனுமதிக்கிறது. இடையூறு அல்லது ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ள அவசர சூழ்நிலைகளில் (urgent cases of nuisance or apprehended danger) அதிகாரிகள் இதைப் பயன்படுத்தலாம். இந்தப் பிரிவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. சட்டம் மாநிலத்திற்கு தடுப்பு நடவடிக்கை எடுக்க அனுமதிப்பதால், அதை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இருப்பினும், இது அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் என்பதால், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க (to preserve law and order) மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். இது போன்ற சூழல்களில் பாதிக்கப்பட்ட நபர்களின் வாதங்களைக் கேட்காமல் இந்தப் பிரிவின் கீழ் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும். இந்தப் பிரிவின் கீழ் ஒரு "அவசரநிலை" திடீரென ஏற்பட வேண்டும் என்றும் கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும் நீதிமன்றங்கள் கூறியுள்ளன.


போக்குவரத்து சிக்னல்களில் பல பிச்சைக்காரர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று கூறுவது இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பிச்சைக்காரர்களை ஒரு குற்றவியல் குழுவாக சித்தரிக்கும் பலவீனமான மற்றும் தெளிவற்ற குற்றச்சாட்டாகும். இந்த உத்தரவு, 1871-ஆம் ஆண்டு குற்றவியல் பழங்குடியினர் சட்டம் (Criminal Tribes Act) போன்ற ஒரு காலனித்துவ மனநிலையை பிரதிபலிக்கிறது. இது கூட்டாண்மை அடிப்படையில் மக்களை தண்டித்தது. இது சட்ட அமலாக்கத்திற்கு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை அளிக்கிறது. பிச்சை எடுப்பதை நிறுத்துதல் என்ற பெயரில் தெருக்களில் இருந்து பிச்சைக்காரர்களை அகற்றுகிறது. தேவைக்காக பிச்சை எடுப்பவர்களுக்கும், பிச்சைக்காரர்களை சுரண்டும் குற்றவியல் குழுக்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இது காணத் தவறிவிட்டது.


இந்த உத்தரவு பிப்ரவரி 24-25 தேதிகளில் போபாலில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டிற்கு சில வாரங்களுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்டது, இது தற்செயல் நிகழ்வு அல்ல. குற்றங்களைத் தடுப்பதோ அல்லது பொது அமைதியைப் பேணுவதோ அல்ல, மாறாக பொது இடங்களில் இருந்து பிச்சைக்காரர்களை அகற்றுவதே இதன் நோக்கமாகும். நாக்பூரில் (2023) நடந்த G20 உச்சிமாநாடு மற்றும் ஹைதராபாத்தில் (2017) நடந்த உலகளாவிய தொழில்முனைவோர் உச்சிமாநாட்டிற்கு முன்பும் இதே போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  அங்கு மக்களுக்கும் போக்குவரத்திற்கும் சிரமம் இருப்பதாகக் கூறி பிச்சை எடுப்பது தடைசெய்யப்பட்டது.


பிச்சைக்காரர்களைத் தண்டிப்பது என்பது, அவர்களைப் பாதுகாத்தல், மறுவாழ்வு அளித்தல் மற்றும் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைத்தல் என்ற குறிக்கோளுக்கு எதிரானது. இந்த உத்தரவு பிச்சைக்காரர்களுக்கான தங்குமிடம் பற்றி குறிப்பிடுகிறது. ஆனால், வறுமை மற்றும் போதுமான அரசாங்க ஆதரவு இல்லாதது போன்ற ஆழமான பிரச்சினைகளை புறக்கணிக்கிறது, இவையே பிச்சை எடுப்பதற்கான உண்மையான காரணங்களாகும். 2018-ஆம் ஆண்டு ஹர்ஷ் மந்தர் VS இந்திய ஒன்றியம் வழக்கில், பிச்சை எடுப்பது ஆழமான சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகளால் ஏற்படுகிறது என்பதை உச்சநீதிமன்றம் அங்கீகரித்தது. பெரும்பாலான மக்கள் தங்கள் விருப்பப்படி அல்ல, உயிர்வாழ்வதற்காகவே பிச்சை எடுக்கிறார்கள் என்று கூறியது.


இந்த உத்தரவு ஒன்றிய அரசின் நலத்திட்டமான பிச்சை எடுக்கும் செயலில் ஈடுபடும் நபர்களுக்கான விரிவான மறுவாழ்வுக்கு எதிரானது. இந்த திட்டம் போபால் உட்பட 81 நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது. அதன் வழிகாட்டுதல்கள் பிச்சைக்காரர்களை தங்குமிடங்களுக்கு மாற்ற பரிந்துரைக்கின்றன. ஆனால், இதை அமல்படுத்த மாநில அதிகாரத்தை அதிகமாகப் பயன்படுத்துவதை இது நியாயப்படுத்தாது. பிச்சைக்காரர்களின் இருப்பு, அரசு தனது குடிமக்களை முறையாகக் கவனித்துக் கொள்ளத் தவறிவிட்டதைக் காட்டுகிறது. அவர்களைத் தண்டிப்பது, இந்தப் பிரச்சினையில் அரசின் குறுகிய அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. "யாரும் பிச்சை எடுக்கக் கூடாது" (nobody should beg) என்று சொல்வதற்குப் பதிலாக, "யாரும் பிச்சை எடுக்க வேண்டியதில்லை" (nobody should have to beg) என்பதை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.



Original article:

Share: