துபாயிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் “14 கிலோவுக்கு மேல் தங்கம் கடத்திய” வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. அவரது வழக்கு என்ன, இந்தியாவில் தங்கக் கடத்தல் தொடர்பாக சட்டங்கள் உள்ளன?
"சமீப காலங்களில் பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த மிகப்பெரிய தங்க பறிமுதல்களில் இதுவும் ஒன்று" என்று வருவாய் புலனாய்வு இயக்குனரக (Directorate of Revenue Intelligence (DRI)) அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராவ் அடிக்கடி துபாய்க்குப் பயணம் செய்ததால், இது ஒரு முறை நடந்த சம்பவமா அல்லது தங்கக் கடத்தல் வலையமைப்பின் ஒரு பகுதியாக இருந்ததா என்று வருவாய் புலனாய்வு இயக்குனரகம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு காவல்துறையின் ஈடுபாடு குறித்த கவலைகளையும் எழுப்புகிறது. ஏனெனில், உள்ளூர் அதிகாரிகள் ராவை அடிக்கடி துபாய் பயணங்களுக்குப் பிறகு விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.
இந்தியாவில் தங்கக் கடத்தல் எவ்வாறுகையாளப்படுகிறது? ராவ் மீதான வழக்கு என்ன?
இந்தியாவில் தங்கக் கடத்தல் தொடர்பான சட்டங்கள்
1990ஆம் ஆண்டு ரத்து செய்யப்படும் வரை, 1968ஆம் ஆண்டு தங்க (கட்டுப்பாட்டு) சட்டம், தங்க இறக்குமதியை கண்டிப்பாகக் கட்டுப்படுத்தியது மற்றும் இந்தியாவில் மக்கள் தங்கத்தை வாங்குவது, சொந்தமாக வைத்திருப்பது மற்றும் விற்பனை செய்வது ஆகியவற்றில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால், 1990-களில் பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு, அரசாங்கம் தனது அணுகுமுறையை மாற்றியது. 10 கிராமுக்கு ரூ.250 இறக்குமதி வரியை அறிமுகப்படுத்தியது. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் தங்க இறக்குமதியில் அதிகரிப்புக்கு வழிவகுத்தது.
இந்தியாவில் தங்க இறக்குமதிகள் இப்போது 1962-ஆம் ஆண்டு சுங்கச் சட்டம் (Customs Act) மற்றும் ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் (Central Board of Indirect Taxes and Customs (CBIC)) கட்டுப்படுத்தப்படுகின்றன. தங்கத்திற்கான சுங்க வரி, பயணி ஒருவர் எடுத்துச் செல்லும் தங்கத்தின் அளவு மற்றும் இந்தியாவுக்குத் திரும்புவதற்கு முன் வெளிநாட்டில் செலவழித்த கால அளவைப் பொறுத்து வேறுபடலாம். இந்த விதிகள் சுங்கச் சட்டத்தின் கீழ், 2016ஆம் ஆண்டு பயணப் படி விதிகளில் (Baggage Rules) கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
இந்த விதிகளின்படி, ஒரு வருடத்திற்கும் மேலாக வெளிநாட்டில் வசித்து வரும் ஒரு ஆண் 20 கிராம் வரை தங்க நகைகளை வரி இல்லாமல் கொண்டு வரலாம். ஆனால், அதன் மதிப்பு ரூ.50,000 விட அதிகமாக இருக்கக்கூடாது. ஒரு பெண் 40 கிராம் வரை கொண்டு வரலாம். அதன் மதிப்பு ரூ 1 லட்சம் வரை மட்டுமே இருக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கும் மேலாக துபாயில் வசித்துவிட்டு, அங்கிருந்து திரும்பும் இந்தியப் பயணிகள் 1 கிலோ தங்கம் வரை கொண்டு வரலாம். ஆனால் அவர்கள் தேவையான சுங்க வரியை செலுத்த வேண்டும் என்று ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் சிறப்பு விதிகளை கொண்டுள்ளது.
தங்கத்திற்கான சுங்க வரி:
ஆண்கள் 20-50 கிராமும் பெண்கள் 40-100 கிராமும் தங்கம் கொண்டு வந்தால் 3% சுங்க வரி விதிக்கப்படலாம்.
ஆண்கள் 50-100 கிராமும் பெண்கள் 100-200 கிராமும் தங்கம் கொண்டு வந்தால் 6% சுங்க வரி விதிக்கப்படலாம்.
10% சுங்க வரி: ஆண்கள் 100 கிராமுக்கு மேலும் பெண்கள் 200 கிராமுக்கு மேலும் தங்கம் கொண்டு வந்தால் 10% சுங்க வரி விதிக்கப்படலாம்.
2003ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம், தொடர்புடைய நிபந்தனைகள் அல்லது கட்டுப்பாடுகளைப் பின்பற்றாமல் இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு பொருளையும் "தடைசெய்யப்பட்ட பொருள்" என்று கருத வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அத்தகைய பொருட்கள் பிரிவு 111-ன் கீழ் பறிமுதல் செய்யப்படவும், பிரிவு 112-ன் கீழ் தண்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது. தண்டனையில் பொருட்களின் மதிப்பு வரை அபராதம் விதிக்கப்படலாம். கடத்தப்பட்ட பொருட்களின் சந்தை விலை ரூ. 1 லட்சத்தைத் தாண்டினால் பிரிவு 135, 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கிறது.
பாரதிய நியாய சன்ஹிதா, 2023-ன் பிரிவு 111-ன் கீழ் கடத்தல் தண்டனைக்குரியது. இது "சட்டவிரோத பொருட்களை கடத்துவதை" (trafficking in…illicit goods) குற்றமாகக் கருதுகிறது. குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், இது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம். சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டப் பிரிவு 15-ன் கீழ் இந்தியாவின் பண நிலைத்தன்மைக்கு தீங்கு விளைவித்தால், கடத்தல் ஒரு பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுகிறது. மற்ற பயங்கரவாதச் செயல்களைப் போலவே இதற்கும் அதே தண்டனை வழங்கப்படும்.
ரன்யா ராவ் கைது
மார்ச் 5ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், DRI, “உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், மார்ச் 3, 2025 அன்று எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாயிலிருந்து பெங்களூருக்கு வந்த சுமார் 33 வயதுடைய இந்தியப் பெண் பயணியை DRI அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். சோதனையில், 14.2 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளை அந்த நபர் புத்திசாலித்தனமாக மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது” என்று கூறியது.
ஆறு மாதங்களில் ராவ் 27 முறை துபாய்க்குப் பயணம் செய்ததாக DRI கூறுகிறது.
DRI ராவின் வீட்டை சோதனை செய்ததில், அவர்களின் அறிக்கையின்படி, “சோதனையில் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.2.67 கோடி மதிப்புள்ள இந்தியப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது”. இந்த வழக்கில் மொத்த பறிமுதல் தொகை ரூ.17.29 கோடி என்று கூறுகிறது.
பெங்களூரு விமான நிலையம் வரும்போதெல்லாம் ராவ் VIP சேனல்களைப் பயன்படுத்தி வெளியேறினார். ஒரு நெறிமுறை அதிகாரி அவளை வெளியேறும் இடத்திற்கு அழைத்துச் செல்வார், அங்கு உள்ளூர் காவல்துறையினர் அந்த பெண்ணை வரவேற்று வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள், வழக்கமான பயணிகளுக்கான விரிவான சோதனைகள் அந்த பெண்ணிடம் நடத்தப்படவில்லை.
மூத்த ஐபிஎஸ் அதிகாரியும், டிஜிபியுமான ராவின் மாற்றாந்தந்தை (stepfather), பத்தாண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்குச் சென்ற தங்கப் பொருட்களைக் கொள்ளையடித்ததில் தொடர்புடையவர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் மீது உத்தியோகபூர்வ நடவடிக்கை எடுக்கப்படாத போதிலும், பின்னர் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
மார்ச் 10 அன்று, கர்நாடகாவில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, ராவ் அதிகாரப்பூர்வ சலுகைகள் மற்றும் நெறிமுறை சலுகைகளை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் புகாரை விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலாளர் கௌரவ் குப்தாவுக்கு உத்தரவிட்டது. அவரது மாற்றாந்தந்தை விசாரணையின் முக்கிய புள்ளியாக இருந்தார்.