அதிக ஆபத்துள்ள நபர்களுக்கு வழக்கமான பரிசோதனை தேவைப்படுகிறது. இந்த பரிசோதனைகள் தீவிரமான சுகாதார நிலைகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கலாம்.
இந்தியா வளர்ந்து வரும் சுகாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்தியர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பலர் முன்னதாகவே நோய்வாய்ப்படுகிறார்கள். இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற தொற்றுநோய் அல்லாத நோய்கள் (non-communicable diseases (NCDs)) நாட்டில் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தனிநபர்கள் மற்றும் சுகாதார அமைப்பு மீதான நிதிச்சுமை அதிகரித்து வருகிறது.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (National Family Health Survey)-5-ன் படி, 2010-13ல் 50% இருந்தது 2022ல் 65% இறப்புகளுக்கு தொற்றல்லாத நோய்கள் காரணமாகின்றன. இந்த நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் அதிகமாக உள்ளது. வயது வந்த ஆண்களில் நான்கில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது. எட்டில் ஒருவர் நீரிழிவு நோயாளியாக உள்ளர். கூடுதலாக, மார்பக, நுரையீரல் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், உலக சராசரியைவிட குறைந்த வயதில் மக்கள் நோய் வாய்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்த உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் கோடிக் கணக்கான மக்கள் முன்னதாகவே கண்டறியப்பட்டிருந்தால், குறைந்த செலவில் சிறப்பாக தேவையான சிகிச்சை பெற்றிருக்கலாம். எனவே, எதிர்வினை சிகிச்சையிலிருந்து முன்முயற்சி தடுப்புக்கு மாறுவது முக்கியமானது. இந்த அணுகுமுறை சுகாதார விளைவுகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அதிகரித்து வரும் சுகாதாரச் செலவுகளை செலவுகளை கட்டுப்படுத்த உதவும்.
வளர்ந்து வரும் பொருளாதாரச் சுமை
2024 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்திற்காக ₹87,657 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 13% அதிகமாகும். இது ஒரு முன்னேற்றமாக பார்க்கப்பட்டாலும், இந்தியாவின் சுகாதார சவால்களை எதிர்கொள்ள இந்த நிதி போதுமானதாக இல்லை என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
தேசிய சுகாதார கணக்குகள் 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த சுகாதாரச் செலவு ₹7.9 லட்சம் கோடியாக இருந்தது என்று மதிப்பிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த பணவீக்க விகிதத்தைவிட வேகமாக வளர்ந்து வருகிறது. காப்பீடு உட்பட குடும்ப நலச் செலவினங்களின் பங்கு குறைந்து வரும் நிலையில், மொத்தச் செலவில் 50%க்கும் அதிகமாக உள்ளது. இது உலக அளவில் மிக உயர்ந்த ஒன்றாக உள்ளது.
உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) இந்தியாவில் தொற்றுநோய் அல்லாத நோய்களின் (non-communicable diseases (NCDs)) காரணமாக பொருளாதாரச் சுமை 2030ஆம் ஆண்டளவில் ₹280 லட்சம் கோடியைத் தாண்டும் என்றும் ஒரு குடும்பத்திற்கு ₹2 லட்சம் செலவு ஆகும் என்று கணித்துள்ளது. அதிகரித்து வரும் சுகாதாரச் செலவுகள் மற்றும் உற்பத்தித்திறன் இழப்புகள் நிதி நிலைத்தன்மைக்கு, குறிப்பாக நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது.
வழக்கமான பரிசோதனைகள், குறிப்பாக அதிக ஆபத்துள்ள நபர்களுக்கு, தீவிரமான, உயிருக்கு ஆபத்தான மற்றும் பலவீனப்படுத்தும் நிலைமைகள் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் பொருளாதார மற்றும் சமூக விளைவுகளை கணிசமாகக் குறைக்கலாம். ஒரு பெரிய மருத்துவமனை வலையமைப்பில், ஒவ்வொரு 1,000 பேருக்கும் பரிசோதிக்கப்படும்போது, குறைந்தது மூன்று பேருக்கு இதய நோய் அல்லது புற்றுநோய்க்கான ஆரம்ப சிகிச்சை தேவைப்படுகிறது.
மார்பகப் புற்றுநோய்க்கான மேமோகிராம்கள் (mammograms), கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பேப் ஸ்மியர், நுரையீரல் புற்றுநோய்க்கான எக்ஸ்ரே அல்லது குறைந்த அளவிலான கம்ப்யூட்டட் டோமோகிராபி, கல்லீரல் நோய்க்கான அல்ட்ராசவுண்ட், எக்கோ கார்டியோகிராபி மற்றும் இதய நோய்க்கான டிரெட்மில் அழுத்தப் பரிசோதனை போன்ற தனிநபர்களுக்கான இலக்கு மற்றும் அவ்வப்போது செய்யப்படும் உயிர் மற்றும் இரத்த பரிசோதனைகள் ஆரம்பத்திலேயே நோய் பாதிப்பை கண்டறிய உதவுகின்றன. மேலும், ஆரம்ப கால சிகிச்சை மேற்கொள்ள அவை அனுமதிக்கின்றன.
துரதிர்ஷ்டவசமாக, விரிவான சுகாதாரப் பரிசோதனைகள் இன்று பெருநகர நகரங்களில் ₹8,000 முதல் ₹15,000 வரை செலவாகும். மேலும், அவை விலை உயர்ந்ததாகக் கருதப்படுகின்றன. தடுப்பு சுகாதார சேவைகளை அரசாங்கம் மேம்படுத்தினால், அது தனிநபர்கள் மற்றும் சுகாதார அமைப்பு ஆகியவற்றின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும்.
வரிச் சலுகைகள், மானியத்துடன் கூடிய பரிசோதனைகள் மற்றும் பொது விழிப்புணர்வு ஆகியவை இதை செயல்படுத்தும் முக்கிய கொள்கை கருவிகளாகும். 2013-ஆம் ஆண்டில், தடுப்பு சுகாதாரத்தை ஊக்குவிப்பதற்காக, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D-ன் கீழ் ₹5,000 வரி விலக்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், கடந்த பத்தாண்டுகளில், சுகாதாரச் செலவுகள் 12-14% உயர்ந்திருந்தாலும், இந்தத் தொகை அதிகரிக்கவில்லை. 2025-26-ல் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்தக் தொகையை குறைந்தபட்சம் ₹15,000 ஆக உயர்த்துவது கொள்கை வகுப்பாளர்களுக்கு நல்ல யோசனையாக இருக்கும்.
இது தடுப்பு சுகாதார சோதனைகளைப் பெறுவதற்கு அதிகமான மக்களை ஊக்குவிக்கும். இது நாட்டில் எதிர்கால சுகாதாரச் செலவினங்களில் ஏற்படும் கோடிக்கணக்கான செலவு தொகையை மிச்சப்படுத்தும். இந்த மாற்றத்தால் ஏற்படும் கூடுதல் வரி இழப்பு ₹5,000 கோடிக்கும் குறைவாக இருக்கும். இது நாட்டின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நல்ல முதலீடாக இருக்கும்.
முன்னோக்கி செல்லும் பாதை
நாள்பட்ட நோய்களின் அதிகரித்து வரும் பொருளாதாரச் சுமையைக் குறைக்க நாம் தடுப்பு கவனிப்பில் கவனம் செலுத்த வேண்டும். முப்பரிமாண அணுகுமுறை தடுப்பு சுகாதார சேவைகளின் பயன்பாட்டை அதிகரிக்க உதவும்.
முதலாவதாக, ஆயுஷ்மான் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் மூலம் ஆரம்பகால தலையீடு திறன்களை வலுப்படுத்த வேண்டும். இதில் நடவடிக்கைகளை திறம்பட கண்காணித்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்ட இமேஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். இது போன்ற நடவடிக்கைகளின் மூலம் பெரிய அளவில் குறைந்த விலை பரிசோதனைகளை வழங்க முடியும்.
இரண்டாவதாக, தனியார் மையங்களில் பரிசோதனை செய்வதற்கு அதிகமானவர்களை ஊக்குவிக்க வேண்டும். 40-60 வயதுடைய தனிநபர்களுக்கு மானிய விலையில் அடிப்படை பரிசோதன திட்டத்தை வழங்க காப்பீட்டாளர்கள் மற்றும் தனியார் சுகாதார வழங்குநர்களை வலியுறுத்துவதன் மூலம் இதைச் செய்யலாம்.
உதாரணமாக, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், அவர்களின் ஆபத்து காரணிகளைப் பொறுத்து ஒவ்வொரு வருடமும் அல்லது இரண்டு வருடமும் மேமோகிராம் செய்ய வேண்டும். புகையிலை மற்றும் சர்க்கரை பொருட்கள் மீதான சுகாதார செஸ் அல்லது முன்மொழியப்பட்ட 35% சரக்கு மற்றும் சேவை வரி மூலம் பெறப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் இதற்கு நிதியளிக்கலாம்.
இறுதியாக, வரி விலக்கு வரம்பை அதிகரிப்பதன் மூலம் அதிகமான மக்கள் முழு சுகாதாரப் பரிசோதனையை முடிக்க ஊக்குவிக்க முடியும்.
நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு பதிலாக தடுப்பு சிகிச்சையில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியா ஆரோக்கியமான மற்றும் நிதி ரீதியாக நிலையான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.