சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா தனது ஆரம்பகால வெளியுறவுக் கொள்கையில் தேர்ந்தெடுக்காத விருப்பங்களை 'Why Bharat Matter?’ புத்தகத்தில் பார்ப்பது அரசியல் விவாதங்களை உருவாக்கும். இருப்பினும், இது முக்கியமானது, ஏனென்றால் கடந்த காலத்தில் நாம் செய்த அனைத்தும் அந்த நேரத்தில் சரியான முடிவு என்ற கண்ணோட்டத்தில் இருந்து பிரிந்து செல்ல உதவுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்திய வெளியுறவுக் கொள்கையில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்தியாவின் சர்வதேச உறவுகள் பற்றிய விவாதங்கள் இன்னும் பழைய கட்டமைப்பில் வேரூன்றியுள்ளன. வெளிவிவகார அமைச்சர் (External Affairs Minister) எஸ் ஜெய்சங்கரின் புதிய புத்தகம் ’Why Bharat Matter?’ இன்று வெளியிடப்பட்டது. இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நடவடிக்கைகளுக்கும் அவை பற்றிய விவாதங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் நோக்கம் கொண்டது ஆகும்.
ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை பற்றி வெளியுறவு அமைச்சர் புத்தகம் எழுதுவது பெரும்பாலும் இல்லை. ஆனால், மோடியின் ஆட்சி ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்களை பகுப்பாய்வு சமூகமும் (analytical community), அரசியல் வர்க்கமும் (political class) முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்று ஜெய்சங்கர் நம்புகிறார். அதனால் தான், தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் அவர், நடந்துள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களை விளக்கி, இந்நூலை எழுதியுள்ளார்.
இந்திய இராஜதந்திரத்தின் மூன்று மிக முக்கியமான அம்சங்களான பாகிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்காவைக் கையாள்வதில் இந்தியா ஏன் இராஜதந்திர சவால்களை எதிர்கொண்டது என்பதைப் புரிந்துகொள்வதே இந்த புத்தகத்தின் முக்கிய கவனமாகப் பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சினைகள் பல ஆண்டுகளாக இந்திய வெளியுறவுக் கொள்கை சமூகத்தில் மிகவும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் விவாதிக்கப்படுகின்றன. 1950களில் இந்தியா மேற்கொண்ட தேர்வுகளின் நோக்கம் மற்றும் திட்டமிடப்படாத விளைவுகள் பற்றிய தெளிவான மதிப்பீட்டை ஜெய்சங்கர் இப்போது வழங்குகிறார்.
பாகிஸ்தான் மற்றும் சீனா மீதான ஜவஹர்லால் நேருவின் "அப்பாவித்தனம்" (naivete) மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான அவரது "சித்தாந்த முன்கணிப்புகள்" (ideological predilections) பற்றிய முடிவை ஜெய்சங்கர் விமர்சிக்கிறார். 1950களில் நேருவின் தேர்வுகள் செய்யப்பட்டபோது அவற்றைக் கேள்வி எழுப்பிய வல்லபாய் படேல், சியாமா பிரசாத் முகர்ஜி, பி ஆர் அம்பேத்கர் மற்றும் மினூ மசானி ஆகியோரின் முன்னோக்கை அவர் வரைந்துள்ளார். ஆரம்பகால வெளியுறவுக் கொள்கை சவால்களில் இந்தியா எடுத்திருக்கக்கூடிய மாற்றுப் பாதைகள் பற்றிய அவரது மதிப்பீடு அரசியல் விவாதங்களுக்கு வழிவகுக்கும், ஆனால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு இது அவசியம். கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவும் அதன் காலத்திற்கு சரியானது என்ற எண்ணத்திலிருந்து விலகிச் செல்ல இந்த முன்னோக்கு பார்வை உதவுகிறது. நேரு நிராகரித்த சில வழிகளை இந்தியா இப்போது எவ்வாறு பின்பற்றுகிறது என்ற ஜெய்சங்கரின் கணக்கு, இஸ்லாமாபாத், பெய்ஜிங் மற்றும் வாஷிங்டனை இந்தியா எவ்வாறு கையாள்கிறது என்பதற்கான மதிப்புமிக்க நுண்ணறிவை வழங்குகிறது. இந்தியாவிற்குள் காஷ்மீரின் நிலையை தெளிவுபடுத்துதல், சீனாவை நோக்கி மிகவும் யதார்த்தமான அணுகுமுறையை பின்பற்றுதல் மற்றும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய உலகத்துடன் சாதகமாக ஈடுபடுதல் ஆகியவை இதில் அடங்கும்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் உள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மற்றும் நேருவின் பார்வையில் இருந்து தெளிவான விலகல்: வெளிப்படையான ஒன்றை ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியிருப்பதை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, சமூகத்தில் உள்ள யதார்த்தவாதிகளின் ஒரு சிறிய குழு கவனிக்கும். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பற்றி வரலாற்றாசிரியர்கள் தங்கள் கருத்தைக் கூறுவார்கள் என்றாலும், அது எவ்வாறு உருவானது என்பது பற்றிய ஜெய்சங்கரின் தனிப்பட்ட கணக்கு மோடி காலகட்டத்தில் இந்தியாவின் சர்வதேச உறவுகளைப் பற்றி சிந்திக்க ஆரம்ப புள்ளியாக இருக்கும்.
பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் பனிப்போரின் முடிவு போன்ற குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காரணமாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் மறுசீரமைப்பு 1991 இல் தொடங்கியது. இந்த மாற்றங்கள் இந்தியாவிற்கு புதிய இராஜதந்திரத்திற்கான தேவைகளை கொண்டு வந்தன. இருப்பினும், கடந்த காலத்திலிருந்து நீடித்து வரும் பழைய விதிமுறைகள் மற்றும் கவலைகள் காரணமாக இந்தியா மாற்றியமைக்க இருந்தது. இது இந்தியாவின் சர்வதேச ஈடுபாட்டை எச்சரிக்கையாக மாற்றியது மற்றும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கான அதன் திறனைத் தடுக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் வெளிவிவகாரக் கொள்கையில் ஏற்பட்ட தெளிவான மற்றும் துணிச்சலான மாற்றங்களைப் பற்றிய ஜெய்சங்கரின் விளக்கம், உலகைக் கையாள்வதில் இந்தியாவின் வரலாற்றுச் சோதனைகளைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தையும், பிராந்திய மற்றும் சர்வதேச அரசியலில் அதன் அதிகரித்த பங்கையும் பிரதிபலிக்கும் வகையில் இந்தப் புத்தகம் பரந்த ஆர்வத்தை ஏற்படுத்தும். மோடியின் கீழ் இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கையின் "என்ன" மற்றும் "எப்படி" என்பதை தாண்டி ஜெய்சங்கரின் கணக்கு உள்ளது. மோடியின் மாறுபட்ட கண்ணோட்டம், அதிகரித்த தன்னம்பிக்கை மற்றும் இந்தியாவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வெளியுறவுக் கொள்கையில் கவனம் செலுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கிய இந்த மாற்றம் ஏன் ஏற்பட்டது என்பதையும் அவர் ஆராய்கிறார். இந்த மாற்றத்தின் இன்றியமையாத அம்சம், யதார்த்தமான வெளியுறவுக் கொள்கைக்கான புதிய அடித்தளத்தை உருவாக்க இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மரபுகளை ஆராய்வதற்கான முயற்சியாகும்.
ஜெய்சங்கர் தனது முதல் புத்தகமான "The India Way” -இல் மகாபாரதத்தைப் பற்றி குறிப்பிட்டார். இரண்டாவதாக அவர் ராமாயணத்திலிருந்து குறிப்பிட்டிருந்தார். ’Why Bharat Matter?’ என்ற புத்தகத்தின் தலைப்பு, சர்ச்சைக்குரிய "காலனித்துவ நீக்கம்" மற்றும் "உள்நாட்டுமயமாக்கல்" (indigenisation) ஆகியவற்றில் மோடி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. "இந்தியா முக்கியம், ஏனென்றால் அது பாரதம்" என்ற ஜெய்சங்கரின் கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இருப்பினும், ஜெய்சங்கரின் புத்தகத்தில் உள்ள அந்த முன்மொழிவு மற்றும் பல வழக்கத்திற்கு மாறானவற்றை விவாதிப்பது, ஒருமித்த கருத்து மற்றும் உடன்படிக்கைக்கான விருப்பத்தால் நீண்ட காலமாக மட்டுப்படுத்தப்பட்ட இந்திய வெளியுறவுக் கொள்கை விவாதங்களுக்கு புத்துயிர் கொடுக்க முடியும்.
எழுத்தாளர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் சர்வதேச விவகாரங்களில் ஆசிரியராகப் பங்களித்து வருகிறார்