பெங்களூருவில் தண்ணீருக்கான போராட்டம் -அலங்க்ரிதா கேரா, சாலி ரானே

 சமீபகாலமாக பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது உள்நாட்டில் செய்திகளிலும், மக்கள் மத்தியிலும் நிறைய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் விநியோகம் தடைபடுவதாலும், தண்ணீர் லாரிகள் தண்ணீரின் விலையை 80 சதவீதம் உயர்த்தியுள்ளது. குடியிருப்புவாசிகள் தண்ணீருக்காக சிரமப்படுகின்றனர். அவர்கள் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கடுமையான விதிகள் உள்ளன.


பெங்களூருவில் தண்ணீர் பிரச்சினை மோசமான நிர்வாகத்தால் மட்டும் ஏற்படவில்லை. புவியியல் சிக்கல்கள் மற்றும் விரைவான நகரமயமாக்கலும் இதற்குக் காரணம்.


இயற்கை நன்னீர் ஆதாரங்கள் இல்லாமல் கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பெங்களூரு வரலாற்று ரீதியாக அதன் நீர்த் தேவைகளை பூர்த்தி செய்ய ஏரிகள் மற்றும் குளங்களை நம்பியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, நீர்நிலைகளில் ஒரு பகுதி மட்டுமே இன்று எஞ்சியுள்ளது. மிக முக்கியமாக நிலத்தடி நீர் மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது, ஏனெனில் அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது, நிலத்தடி நீர் எடுக்கும் அளவிற்கு மழை நீரானது நிலத்திற்குள் செல்வதில்லை. காவிரியில் இருந்து வரும் தண்ணீர் பெங்களூருவின் தண்ணீர் தேவையை 50% மட்டுமே பூர்த்தி செய்கிறது. மீதமுள்ளவை 50% நீரானது நிலத்தடி நீரையே நம்பியுள்ளன, ஆனால் நிலத்தடி நீரானது வேகமாக குறைந்து வருகிறது. நகரத்தில் உள்ள 11,000 ஆழ்துளை கிணறுகளில் 800 ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை, மேலும் தொடர்ந்து செயல்படும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக சீரற்ற மழைப்பொழிவு நகரின் நீர் ஆதாரங்களை மேலும் மோசமாக்கியுள்ளது.


பெங்களூருவில் நடப்பது விரைவில் மற்ற இந்திய நகரங்களிலும் நடக்கலாம். எனவே, 2030-ஆம் ஆண்டுக்குள் இது ஒரு பெரிய பிரச்சினையாக மாறுவதைத் தடுக்க, நாம் இப்போது நிறைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மக்கள் தண்ணீரைக் குறைவாக பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. உள்ளாட்சி அமைப்பானது தண்ணீரைச் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரங்களை ஏற்பாடுசெய்யலாம், ஸ்மார்ட் மீட்டர் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் பொதுமக்கள் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம். நீர் மேலான்மையை சிறப்பாக நிர்வகிக்க பொறியியல் தீர்வுகளும், வீட்டில் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்த மக்களுக்கு உதவும் நீர் காற்றூட்டக் கருவிகள் (water aerators) பயன்படுத்துவதையும் ஊக்குவிக்கலாம்.


மழைநீர் சேகரிப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற தற்கால தீர்வுகள் பரவலாக செயல்படுத்தப்பட வேண்டும். மழைநீரை சேகரித்து கசிவுநீர் குழிகள் மற்றும் புதுமையான தொழில்நுட்பம் போன்ற சிறப்பு நுட்பங்களைப் பயன்படுத்தி முறையாக நிர்வகிக்கும்போது, நீர் தட்டுப்பாட்டை குறைக்க உதவும்.


கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீரின் மறுபயன்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவை நன்னீர் ஆதாரங்களுக்கான தேவையைக் குறைக்கும். தற்போது, பெங்களூருவின் கழிவுநீரில் சுமார் 77% சுத்திகரிக்கப்படுகிறது, ஆனால் அதில் பெரும்பாலானவை மீண்டும் பயன்படுத்தப்படவில்லை. முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட நீரின் பயன்பாட்டை ஊக்குவிப்பது ஒரு நல்ல செயலாகும். கழிவுநீரை மூலத்திலேயே சுத்திகரிக்கும் இந்திரா வாட்டர் போன்ற புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம், சுத்திகரிக்கப்பட்ட நீரின் பயன்பாட்டை அதிகப்படுத்தலாம். முறையான கழிவு நீர் குழாய் மேலாண்மை மற்றும் பராமரிப்பும் அவசியம். சோலினாஸ் இன்டகிரிட்டி (Solinas Integrity) ரோபோ போன்ற தொழில்நுட்பம், நீர் மற்றும் கழிவுநீர் குழாய் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கிறது.


நகரங்கள் தொலைதூர நீர் ஆதாரங்களை குறைவாக நம்பியிருக்க வேண்டும். உதாரணத்திற்கு பெங்களூருவை எடுத்துக் கொள்ளுங்கள். இது 90 கி.மீ தூரத்திலும், 300 மீட்டர் உயரத்திலும் உள்ள காவிரி நீர்த்தேக்கத்திலிருந்து நீரைப் பெறுகிறது. இந்த தண்ணீரை வெளியேற்றவே தினமும் மின்சாரத்திற்காக மட்டும் ரூ.3 கோடி செலவிடப்படுகிறது. நிலையான நகர்ப்புற திட்டமிடல், ஏரி பாதுகாப்பு, ஆழ்துளை கிணறு மேலாண்மைக்கான நடவடிக்கைகள், நிலத்தடி நீரை நிரப்புதல் மற்றும் ஏரிகளைப் பாதுகாப்பதற்கான முன்முயற்சிகள் ஆகியவை மீண்டுவர இன்றியமையாதவை.


பெங்களூருவின் நிலைமையை அனைத்து இந்திய நகரங்களும் கவனிக்க வேண்டும். பல நகரங்கள் இதேபோன்ற தண்ணீர் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். இதைச் சமாளிக்க, நகர நிர்வாகங்கள், தொடக்கநிலை நிறுவனங்கள் (startups), ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் சமூக குழுக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


சைலி ரானே ஃபெலோ, ஏ.சி.டி ஃபார் என்விரான்மென்ட். அலங்க்ரிதா கேரா, ACT ஃபார் என்விரான்மென்ட், இயக்குநர்.




Original article:

Share: