புதுப்பிக்கப்பட்டது : - வாக்கெடுப்பு தரவு விடுபட்டுள்ள சிக்கலைச் சரி செய்வது எளிது. தேர்தல் ஆணையம் (Election Commission (EC)) முந்தைய நடைமுறைக்கு திரும்ப வேண்டும். தேர்தல் முடிந்தவுடன் செய்தியாளர் சந்திப்பு நடத்துவது வழக்கம். தேர்தல் நாளில் இல்லையென்றாலும், குறைந்தபட்சம் அடுத்த நாளாவது செய்தியாளர் சந்திப்பு நடத்துவது வழக்கம். இந்த சந்திப்புகள் அனைத்து சந்தேகத்தையும் தீர்த்துவிடும்.
வாக்குப்பதிவு சதவீத புள்ளி விவரங்களை வெளியிடுவதில் தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறையில் இருந்து மாறுபட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய தேர்தல்களில், தேர்தல் ஆணையம் வழக்கமாக ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகும் இரவு 7 மணிக்குள் தற்காலிக வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடும். இறுதி எண்ணிக்கை சில நாட்களுக்குள் உறுதிப்படுத்தப்படும். ஆனால், அண்மையில் நடந்த மக்களவை தேர்தலின் போது, தேர்தல் ஆணையம் இந்த நடைமுறையை மாற்றியது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் முதல் இரண்டு கட்டங்களுக்குப் பிறகு இரவு 9 மணியளவில் தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பை வெளியிட்டது. ஏப்ரல் 19 அன்று, முதல் கட்ட வாக்குப்பதிவின் முடிவில், மாலை 7 மணி அளவில் 60% வாக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் தோராயமான வாக்குப்பதிவு சதவீதத்தை காட்டுகிறது. ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் இரவு 8.49 மணிக்கு மற்றொரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. மாலை 7 மணி நிலவரப்படி 60.96% வாக்குகள் பதிவாகியிருந்தன, ஆனால் மாநில வாரியாக வெளியிடவில்லை.
இறுதி வாக்காளர் எண்ணிக்கை விவரம் மிகவும் தாமதமாக வெளியிடப்பட்டது. முதல் கட்டம் முடிந்து 10 நாட்கள் மற்றும் இரண்டாம் கட்டம் முடிந்து மூன்று நாட்கள் வரை அவை கிடைக்கவில்லை. ஏப்ரல் 30 அன்று, இந்த செய்தித்தாள், தேர்தல் ஆணையம் இன்னும் இறுதி வாக்காளர் வாக்கு எண்ணிக்கையை வெளியிடவில்லை என்று தெரிவித்தது. அறிக்கையைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் இறுதிப் புள்ளி விவரங்களை வெளியிட்டது. முதல் கட்ட தேர்தலில் 66.14% மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலில் 66.71% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் 60% மற்றும் 60.96% ஆரம்ப அறிக்கைகளை விட ஆறு சதவீத புள்ளிகள் அதிகம்.
இந்த தாமதங்கள் தேவையற்ற விமர்சனங்களுக்கு வழிவகுக்குகிறது. இவை வாக்குப்பதிவு செயல்பாட்டில் வாக்காளர்களின் நம்பிக்கையை குறைக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு மரியாதைக்குரிய அரசியலமைப்பு அதிகாரமாகும். தேர்தல் ஆணையம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்தி வருகிறது. இருப்பினும், தரவு வெளியீட்டின் நேரத்தை மதிப்பிடும்போது விமர்சகர்கள் இந்த நற்பெயரை நினைவில் கொள்ள வேண்டும். இருந்தபோதிலும், தேர்தல் ஆணையம் அதன் நடவடிக்கைகள் தீவிர ஆய்வுக்கு உட்பட்டுள்ளது என்பதை அறிந்திருக்க வேண்டும். அது நிறுவப்பட்ட நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
வாக்கெடுப்பு தரவு காணாமல் போன சிக்கலை சரி செய்வது எளிது. தேர்தல் ஆணையம் அதன் பழைய முறைக்குத் திரும்பி, தேர்தல் நாளிலோ அல்லது அதற்கு அடுத்த நாளோ, எந்தவொரு சந்தேகத்தையும் தெளிவுபடுத்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தலாம். தேர்தல் ஆணையம் வாக்காளர் அளவு மற்றும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை பற்றிய தெளிவான தரவுகளையும் வழங்க வேண்டும். இந்தத் தரவை எவ்வாறு சேகரித்து சரிபார்க்கிறது என்பதை தேர்தல் ஆணையம் பகிர்ந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும். மின்னணு வாக்குப்பதிவு முறை (electronic voting system (EVM)) பாதுகாப்பானது என்பதை எப்படி உறுதி செய்வது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் ஏற்கனவே விளக்கியுள்ளது.