இந்தியாவின் உலகளாவிய எழுச்சி மற்றும் பிராந்திய அளவிலான வீழ்ச்சி எனும் இந்த முரண்பாடு புது டெல்லியின் உலகளாவிய இலக்குகளில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
இந்தியாவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையில் ஒரு பெரிய முரண்பாடு என்னவென்றால், இந்தியா உலகளவில் வலுவடைந்து வருகிறது. ஆனால், அதன் பிராந்தியத்தில் செல்வாக்கை இழந்து வருகிறது. உலக அரங்கில் இந்தியாவின் உயர்வு, அதன் ஒட்டுமொத்த வளர்ச்சி, பிற வல்லரசு நாடுகளுடனான நல்ல உறவுகள் மற்றும் குழப்பமான சர்வதேச சூழல் (chaotic international situation) ஆகியவற்றிலிருந்து வருகிறது. எவ்வாறாயினும், சீனாவுடன் ஒப்பிடும்போது அதன் குறைந்து வரும் சக்தி, தெற்காசியாவில் குறைந்து வரும் மேலாதிக்கம் மற்றும் தெற்காசியாவின் புவிசார் அரசியல் சார்ந்த நிலப்பரப்பில் ஏற்பட்ட பெரிய மாற்றங்கள் காரணமாக பிராந்தியத்தில் அதன் செல்வாக்கு குறைந்து வருகிறது.
கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியா மிகவும் சக்திவாய்ந்ததாக மாறியுள்ளது. இதன் வலுவான பொருளாதாரம், இராணுவ வலிமை (military capabilities) மற்றும் அதிக அளவிலான இளையோர் மக்கள் தொகையில் (largely young demography) காணப்படுகிறது. இது G-20 போன்ற முக்கிய உலகளாவிய நிறுவனங்களில், G-7 கூட்டங்களில் அழைப்பாளராக சேர்த்துக் கொள்வதும், Quad, BRICS மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற பலதரப்பு குழுக்களில் செயலில் பங்கேற்பதும், அதன் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தையும், உலகளவில் அதன் சக்திவாய்ந்த நிலைமையையும் மேலும் எடுத்துக்காட்டுகிறது. ஐக்கிய நாடு பாதுகாப்பு கவுன்சிலில் (United Nations Security Council) இந்தியா இல்லாவிட்டாலும், உலக அளவில் இந்தியாவின் முக்கியத்துவம் அங்கீகரித்துள்ளது. சீனாவைத் தவிர மேலும் பல நாடுகள் இந்தியாவின் உலகளாவிய முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்டுள்ளன. புவியியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உலகளாவிய கவனம் செலுத்துவதன் மூலம் இந்தியாவின் எழுச்சிக்கு உதவுகிறது.
வெளிப்புற காரணிகள்
உலகளாவிய எழுச்சி இருந்தபோதிலும், தெற்காசியாவில் இந்தியாவின் செல்வாக்கு குறைந்து வருகிறது. பனிப்போரின் போது இப்பகுதியில் இந்தியாவின் செல்வாக்குடன் ஒப்பிடும் போது அல்லது இன்று இப்பகுதியில் சீனாவின் செல்வாக்குடன் ஒப்பிடுகையில், பிராந்தியத்தில் இந்தியாவின் சக்தி மற்றும் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது. இந்த வீழ்ச்சி ஒப்பீட்டளவிலானது, முழுமையானது அல்ல. இதில், பல வெளிப்புற காரணிகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. காலப்போக்கில் இந்தியாவின் உலகளாவிய நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நமது பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கு குறைவாக இருப்பதற்கு காரணமான சில விஷயங்கள், இந்தியா உலகளவில் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணங்களாகும். உதாரணமாக, அமெரிக்கா இப்பகுதியை விட்டு வெளியேறியபோது, சீனாவானது அதிக அதிகாரத்தைப் பெற்றது. இது இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது. ஆனால், இதன் காரணமாக, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சீனாவை எதிர்ப்பது போன்ற இந்தியாவின் உலகளாவிய நலன்களை ஆதரிக்க விரும்புகின்றன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகார சமநிலையில் இந்தியாவின் கவனம் செலுத்துகிறது. இந்த கவனம் இந்தியாவுக்கு அதன் அருகிலுள்ள நாடுகளுடன் அதன் நட்புறவுகளை நிர்வகிப்பதை கடினமாக்கலாம்.
இந்தியாவின் உலகளாவிய உயர்வுக்கு காரணம் அது மிகவும் சக்திவாய்ந்ததாகி வருவதும், மற்ற பெரிய நாடுகளுடன் நல்ல உறவுகளை மேற்கொள்வதும் ஆகும். ஆனால், அதன் சொந்த பிராந்தியத்தில், அது சிறப்பாக செயல்படவில்லை. ஏனென்றால், அருகிலுள்ள சிறிய நாடுகள் மிகவும் சக்திவாய்ந்ததாகி தங்கள் சொந்த தேர்வுகளை செய்கின்றன. பொதுவாக, பெரிய நாடுகள் அதிகாரத்தை எவ்வாறு சமநிலைப்படுத்துகின்றன என்பதில் மட்டும் நாம் கவனம் செலுத்தி, சிறிய நாடுகள் என்ன செய்கின்றன என்பதைப் புறக்கணித்தால், அது இறுதியில் நமக்கு உதவாது.
சீனாவின் எழுச்சியும் இந்தியா செய்ய வேண்டியதும்
சீனாவின் வளர்ச்சியானது பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கு வீழ்ச்சியடைய காரணமாகிறது. ஏறக்குறைய 200 ஆண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தபோதிலும், சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியா இப்போது முன்பை விட பலவீனமாக உள்ளது. ஏனென்றால், சீனாவின் எழுச்சி தெற்காசியாவில் இந்தியாவின் நிலைக்கு சவாலாக உள்ளது. சீனா வலிமையடைந்து வருவதால், தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா இனி முதலிடத்தை பிடிக்க முடியாமல் போகலாம்.
தெற்காசியாவில் சீனாவின் நுழைவு, அமெரிக்கா பிராந்தியத்தை விட்டு வெளியேறுதல், இந்தோ-பசிபிக் மீது இந்தியா அதிக கவனம் செலுத்துதல் ஆகியவை பெய்ஜிங்கிற்கு ஆதரவாக அதிகாரத்தை மாற்றியுள்ளன. இந்தியாவின் அண்டை நாடுகளைப் போலவே தெற்காசிய நாடுகளும் சமநிலைப்படுத்துதல் (balancing), பேரம் பேசுதல் (bargaining), நட்டத்தை தடுத்தல் (hedging) மற்றும் அலைக்கழித்தல் (bandwagoning) என வெவ்வேறு வழிகளில் எதிர்வினையாற்றுகின்றன. இந்தியாவின் சில சிறிய அண்டை நாடுகள் இந்தியாவுடன் ஒப்பிடும்போது சீனாவை குறைந்தபட்சம் இப்போதைக்கு ஒரு பயனுள்ள விருப்பமாக பார்க்கின்றன. இந்த பிராந்தியத்திற்கான சமநிலை மாற்றத்தின் பெரும்பகுதி அதிகார மாற்றங்களால் ஏற்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தியாவானது அதன் அண்டை நாடுகளுக்கு போதுமான அளவு சென்றடையவில்லை.
தெற்காசியாவில் புதிய வல்லரசான சீனா, அதிக செல்வாக்கு பெற்று வருவதால் இந்தியா ஒரு சிக்கலான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. உலகளாவிய அரசியலில் ஒட்டுமொத்தமாக தெற்காசியாவின் முக்கியத்துவம் குறைந்து வரும் நிலையில் இது நடக்கிறது. இதை இந்தியா சரியாகக் கையாளவில்லை என்றால், பிராந்தியத்தில் முக்கிய சக்தி என்ற நிலையை அது இழக்க நேரிடும்.
எனவே, இந்தியா என்ன செய்ய முடியும்? முதலாவதாக, அது தெற்காசியாவை எவ்வாறு பார்க்கிறது என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் அதன் அணுகுமுறையை புதுப்பிக்க வேண்டும். பின்னர், இப்பகுதியில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கை சமாளிக்க புத்திசாலித்தனமான திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
முதலாவதாக, கடந்த பதினைந்து ஆண்டுகளில் இந்தப்பகுதியும், அதன் அண்டை நாடுகளும், புவிசார் அரசியலும் கணிசமாக மாறியுள்ளன என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். ஒரு பிரச்சனையை அலட்சியம் செய்வது அதை மேலும் மோசமாக்கும்.
இரண்டாவது, எல்லாவற்றிலும் சீனாவுடன் போட்டி போடுவதற்குப் பதிலாக இந்தியாவானது எது நல்லது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதைச் செய்ய முயற்சிப்பது புத்திசாலித்தனமான நடவடிக்கை அல்ல. இந்தியாவின் பலம் மற்றும் பிராந்தியத்தின் மாற்றங்களை ஒப்புக் கொள்ளும் பிராந்தியத்துடன் புதிய தொடர்பை உருவாக்குவது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதில், நமது பௌத்த பாரம்பரியத்தை எடுத்துரைப்பது ஒரு முதன்மையான வழியாக உள்ளது.
மூன்றாவதாக, இந்தியா நிலத்தில் பல சவால்களை எதிர்கொள்கிறது, ஆனால் அது கடலில் நிறைய வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. இது வர்த்தகத்தை அதிகரிக்கவும், சிறு குழுக்களில் சேரவும், சிக்கல்களின் அடிப்படையில் புதிய கூட்டணிகளை உருவாக்கவும் முடியும். எனவே, நிலத்தில் உள்ள சவால்களை சமாளிக்க இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா அதன் நன்மைகளில் கவனம் செலுத்த வேண்டும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இராஜதந்திர விவாதங்களில் இந்தியாவின் சிறிய தெற்காசிய அண்டை நாடுகளைச் சேர்ப்பது உதவியாக இருக்கும். இந்த நாடுகள் கடல்சார் நாடுகளாக இருந்தாலும், இந்தோ-பசிபிக் திட்டத்தில் அவை முக்கிய பங்கு வகிக்கவில்லை. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற உறுப்பு நாடுகளுடன் இணைந்து, இலங்கை, மாலத்தீவு மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளை அவர்களின் பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள இராஜதந்திரரீதியாக எவ்வாறு ஈடுபடுத்துவது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
நான்காவதாக, இன்று, இந்தியா பனிப்போர் காலத்தில் இருந்ததைப் போல அருகிலுள்ள பிற சக்திவாய்ந்த நாடுகளைப் பற்றி கவலைப்படவில்லை. இதன் விளைவாக, பொதுவான பிரச்சினைகளை சமாளிக்க இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்காசியாவில் உள்ள நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளது. இந்தியாவில் உள்ள இந்த வெளிப்படைத்தன்மையையும், பிராந்தியத்தில் இந்தியாவின் வீழ்ச்சியுடன் வரும் சவால்களைச் சமாளிக்க மற்ற நாடுகளின் ஆர்வத்தையும் நாம் பயன்படுத்த வேண்டும்.
மென்மையான ஆற்றலைப் பயன்படுத்தவும்
இறுதியாக, இந்தியா தனது சாதகமான அதிகாரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி பிராந்தியத்தில் தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் போன்ற பிற தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் சாதகமான உறவை மேம்படுத்துவதற்கு இந்தியாவைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கவும். நாடுகளுக்கிடையேயான மோதல்களைத் தீர்ப்பதற்கான முறைசாரா வழிகளை ஊக்குவிப்பது முக்கியம். குறிப்பாக, இந்தியா நேரடியாக மோதுவதில் தலையிட விரும்பவில்லை. மியான்மர் போன்ற பிராந்தியங்கள் இதற்கு உதாரணமாக இருக்கும்.
இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய முக்கியத்துவம் இந்த பிராந்தியத்தில் அதன் செல்வாக்கு குறைந்து வருவதுடன் முரண்படுகிறது. இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: அருகிலுள்ள கட்டுப்பாட்டை பராமரிக்க முடியாத ஒரு நாடு உலக அரங்கில் ஒரு முக்கிய தலைமை வகிக்க முடியுமா?
ஹேப்பிமோன் ஜேக்கப் புது தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் பள்ளியில் கற்பிக்கிறார் மற்றும் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சிலின் நிறுவனர் ஆவார்.