இந்தியாவின் சுகாதார அமைப்பிற்கு நற்செய்தி -வினோத் கே.பால்

 சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் அதிக பணம் செலவழித்து வருகிறது. அதே நேரத்தில் மக்கள் சுகாதாரத்திற்காக குறைவாக  பணம் செலவழிக்கிறார்கள்.


2017 ஆம் ஆண்டின் தேசிய சுகாதாரக் கொள்கையானது (National Health Policy (NHP)) நியாயமான விலையில் நல்ல சுகாதாரத்தை அனைவரும் எளிதாகப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய சுகாதாரக் கணக்குகள் (National Health Accounts (NHA)) போன்ற சமீபத்திய தரவு, சுகாதாரத்திற்காக அரசாங்கம் அதிக செலவு (government health expenditure (GHE)) செய்து வருகிறது என்பதை எடுத்துக்  காட்டுகிறது. 2014-15 மற்றும் 2021-22 க்கு இடையில், நாட்டின் மொத்த செல்வத்தின் ஒரு பகுதியாக சுகாதார சேவைக்கான அரசாங்கச் செலவு 63% அதிகரித்துள்ளது. இது 2014-15 இல் 1.13% ஆக இருந்தது. 2019-20 இல் 1.35% ஆகவும், பின்னர் 2020-21 இல் 1.60% ஆகவும், இறுதியாக 2021-22 இல் 1.84% ஆகவும் உயர்ந்தது.


ஒரு நபருக்கு மருத்துவ சேவைக்கான அரசு செலவினம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. உதாரணமாக, 2014-15 மற்றும் 2019-20 க்கு இடையில், ஒரு நபருக்கு ரூ.1,108 லிருந்து ரூ.2,014 ஆக உயர்ந்தது. 2020-21ல் ஒரு நபருக்கு அரசு செலவினம் ரூ.2,322 ஆகவும், 2021-22ல் ரூ.3,156 ஆகவும் உயர்ந்து கொண்டு இருக்கிறது. இது 2014-15 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் அரசு செலவினம்  மூன்று மடங்கு  உயர்ந்துள்ளது .


சமீப ஆண்டுகளில், அரசு நிதியுதவி பெறும் காப்பீட்டுக்கான செலவினம் அதிகரித்துள்ளது. இது 2013-14ல் ரூ.4,757 கோடியிலிருந்து 2021-22ல் ரூ.20,771 கோடியாக 4.4 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (AB PMJAY)) மற்றும் மாநில சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதிலிருந்து உருவாகிறது. சுகாதாரத்துக்கான சமூகப் பாதுகாப்பு செலவினங்களின் பகுதியும் அதிகரித்துள்ளது. இதில் அரசாங்க நிதியுதவி பெற்ற சுகாதார காப்பீடு, அரசு ஊழியர்களுக்கு மருத்துவச் செலவு திருப்பிச் செலுத்துதல் மற்றும் சமூக சுகாதார காப்பீட்டு திட்டங்கள் ஆகியவை அடங்கும். இந்த பங்கு 2014-15 ஆம் ஆண்டில் 5.7 சதவீதத்திலிருந்து 2019-20 ஆம் ஆண்டில் மொத்த சுகாதார செலவினங்களில் 9.3 சதவீதமாக அதிகரித்தது.


ஈடுசெய்யும் செலவு (Out-of-Pocket Expenditure (OOPE)) படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2014-15 மற்றும் 2019-20 க்கு இடையில், இந்த செலவினம் மொத்த சுகாதார செலவினங்களில் 62.6% லிருந்து 47.1% ஆக குறைந்துள்ளது. இது 2020-21ல் 44.4% ஆகவும், 2021-22ல் 39.4% ஆகவும் குறைந்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய்களின் போது கூட, சுகாதாரத் தேவைகள் அதிகமாக இருந்தபோதும், வெளி செலவுகள் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதற்குக் காரணம், (AB-PMJAY) போன்ற திட்டங்கள். குறிப்பாக, புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கு, கடன் வாங்காமலோ அல்லது பொருட்களை விற்காமலோ மருத்துவ சிகிச்சைகளை  பெற மக்களுக்கு  உதவி புரிந்து வருகிறது.

 

தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி (National Sample Survey) 2017-18, உள்நோயாளிகள் பராமரிப்பு மற்றும் பிரசவங்களுக்கு அதிகமான மக்கள் அரசு வசதிகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த அதிகரிப்பு இலவச ஆம்புலன்ஸ் சேவைகள், மேம்படுத்தப்பட்ட அரசு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சேவைகள் மற்றும் பிரதான் மந்திரி தேசிய டயாலிசிஸ் திட்டங்களினால்  (Pradhan Mantri National Dialysis Programme) இந்த அதிகரிப்பு ஏற்பட்டது. 2016 முதல், இந்த திட்டம் 2.59 கோடி இலவச சிறுநீரக சுத்திகரிப்புகளை செய்துள்ளது. இந்த திட்டங்கள் ஈடுசெய்யும் செலவை  குறைக்க உதவுகிறது. 


மருந்துகள் மற்றும் நோயறிதல் செலவுகள் அதிகம். ஆனால் இப்போது, ​​ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கிய மையங்களான ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர்களில் (Ayushman Arogya Mandirs) இப்போது இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால், பல குடும்பங்கள் பணத்தை மிச்சப்படுத்துகின்றனர். துணை மையங்களில் (sub centre AAMs), 105 மருந்துகள் மற்றும் 14 பரிசோதனைகளையும் இலவசமாக பெறலாம். ஆரம்ப சுகாதார நிலைய ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர்களில் (primary health centre AAMs) 172 மருந்துகள் மற்றும் 63 பரிசோதனைகள் வரை இலவசமாகப் பெறலாம். ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர்கள் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து இலவசமாக சிகிச்சையளிக்க உதவுகின்றன. இது மக்கள் ஆரோக்கியமாக இருக்கவும், கடுமையான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அதிக பணம் செலவழிப்பதைத் தவிர்க்கவும் உதவும்.


இன்று, 10,000 க்கும் மேற்பட்ட ஜன் ஔஷதி கேந்திராக்களில் (Jan Aushadhi Kendras), 1,900 க்கும் மேற்பட்ட தரமான பொதுவான மருந்தகங்கள் (generic medicines) கிட்டத்தட்ட 300 அறுவை சிகிச்சை பொருட்களை குறைந்த விலையில் அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை செய்துவருகின்றனர். 2014 முதல், இந்த திட்டம் நுகர்வோர்களுக்கு ரூ.28,000 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது. மேலும், கரோனரி உறை குழாய்கள் (coronary stents), எலும்பு மூட்டு மாற்று சிகிச்சைகள், புற்றுநோய் மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய மருந்துகளின் விலை கட்டுப்பாடு மூலம் மக்களுக்கு ஆண்டுக்கு 27,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்திற்கான அரசு செலவினம் அதிகரித்து வருவதாக பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2020-21 நிதியாண்டில், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (gross domestic product (G.D.P)) 1.6% ஆகவும், 2021-22 நிதியாண்டில் திருத்தப்பட்ட மதிப்பீடு 2.2% ஆகவும் இருந்தது. இந்த கணக்கெடுப்புகளில், நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் போன்ற, சுகாதாரத்தின் முக்கியமான சமூக நிர்ணயம் செய்யும் செலவுகளும் அடங்கும்.


பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 2019 ஆம் ஆண்டில் ஜல் ஜீவன் மிஷன் தொடங்கியபோது, கிராமப்புற வீடுகளில் 17 சதவீத வீடுகளுக்கு மட்டுமே குழாய் நீர் விநியோகம் இருந்தது. இப்போது, 76 சதவீத வீடுகளில் குழாய் நீர் உள்ளது. ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குழாய் நீரை வழங்குவதன் மூலம் ஐந்து ஆண்டுகளில் நான்கு லட்சம் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் (world health organisation (WHO)) அறிக்கை கூறுகிறது. மேலும்,  தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission (SBM)) 2014 மற்றும் அக்டோபர் 2019 க்கு இடையில், வயிற்றுப்போக்கு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 300,000 இறப்பைத் தடுத்து, கிராமப்புற திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நாடக இந்தியாவை (open defecation free (ODF)) மாற்றியுள்ளது. 


பொது சுகாதார செலவினம் அதிகரித்து வருகிறது, மேலும் ஈடுசெய்யும் செலவு (OOPE) சீராக குறைந்து வருகிறது. சுகாதாரப் பராமரிப்பில் அரசாங்க சுகாதார செலவினங்கள் (government health expenditure (GHE)) மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் பங்கும் அதிகரித்து வருகிறது. இது மிகவும் மேம்பட்ட சுகாதார அமைப்பை நோக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் நிதி அளிக்கப்படுகிறது. 


மருத்துவக் கல்லூரிகள் மற்றும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்கும் பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா (Pradhan Mantri Swasthya Suraksha Yojana), பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் (Pradhan Mantri Ayushman Bharat) உள்கட்டமைப்பு பணி, மற்றும் அவசரகால சிகிச்சை மற்றும் சுகாதார அமைப்பு முன்தயாரிப்புத் தொகுப்பு போன்ற பல்வேறு திட்டங்கள் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துகின்றன. ஆரம்ப சுகாதாரத்திற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15வது நிதி ஆணையம் (Finance Commission) ரூ.70,000 கோடி வழங்குகிறது.


அனைவருக்கும் சுகாதார காப்பீடு (Universal Health Coverage)  என்ற இலக்கை விரைவில் அடைய இந்தியாவின் சுகாதார அமைப்பு உழைத்து கொண்டு இருக்கிறது. சுகாதாரத்துறைக்கான நிதியை அரசு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், ஈடுசெய்யும் செலவு (Out-of-Pocket Expenditure (OOPE)) குறைந்துள்ளது. இந்த மாற்றங்கள் சரியான பாதையில் நாடு சென்று கொண்டு இருப்பதை காட்டுகிறது.

 

கட்டுரையாளர் நிதி ஆயோக்கின் சுகாதாரத்துறை உறுப்பினர். கருத்துக்கள் தனிப்பட்டவை




Original article:

Share: