காசா மீது குண்டு வீசுவதை நிறுத்துமாறு இஸ்ரேலை கூறும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தவேண்டும்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கியது. ஒரு பெரிய மோதலாக பரவாமல் தடுப்பதே அமெரிக்கா அதிபர் ஜோ பைடனனின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. அவர் இரண்டு விஷயங்களைச் செய்தார்: காசாவிற்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளை அவர் முழுமையாக ஆதரித்தார். அக்டோபர் 7 ஆம் தேதி, சுமார் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் டெல் அவிவ் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டது. ஆனால் பல மாதங்களாக போர் தொடர்ந்ததால், காசாவில் அதிகமான மக்கள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்தனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடனனின் சமாதன முயற்சி தோல்வியடையத் தொடங்கியது.
ஏழு மாதமாக நீடிக்கும் போரின் காரணமாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார். இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காஸாவில் 34,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். திரு.பைடனின் எச்சரிக்கையையும் மீறி, 1.4 மில்லியன் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காஸாவில் உள்ள ரஃபா நகரத்தை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
கூடுதலாக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் கப்பல்களைத் தாக்கியுள்ளனர். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. இருப்பினும், முழு அளவிலான பிராந்திய போர் இன்னும் வெடிக்கவில்லை என்றாலும், நிலைமை மோசமாக உள்ளது. இஸ்ரேல் மீதான தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு பைடனை வலியுறுத்தி, அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்கா அதிகாரிகள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தத்தை அடைய கடுமையாக உழைத்து வருகின்றனர். இஸ்ரேல் மீது ஈரான் வீசிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவதற்கு பைடன் நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் பதிலடியை அமெரிக்கா ஆதரிக்காது என்றும் அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எச்சரித்தார். இது பிராந்தியங்களுக்கு இடையே ஏறபட்டுள்ள போர் பதற்றத்தைக் குறைக்கும். பைடனின் அணுகுமுறைகள் பல்வேறு குறைபாடுகளை கொண்டு இருந்தது. காசா மீதான போருக்கு இஸ்ரேலின் அணுகுமுறை, போர்கள் மற்றும் மனித உரிமைகள் பற்றிய அமெரிக்காவின் கருத்துகளுக்கு எதிரானது.
இஸ்ரேல், காஸா மீது குண்டு வீசுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும், அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி வந்தது. நெதன்யாகுவின் பிடிவாதத்தால் பைடன் விரக்தியடைந்தாலும், இஸ்ரேலுக்கு $17 பில்லியன் பாதுகாப்பு உதவி வழங்கும் மசோதாவில் கையெழுத்திட்டார். பைடனின் இராஜதந்திர முயற்சிகள் மற்றும் போர்நிறுத்தம் குறித்த பொது அறிக்கைகள் இஸ்ரேலின் நடத்தையில் செல்வாக்கு செலுத்தும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளுடன் ஒத்துப்போகவில்லை. காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு ஆயுதங்களையும் நிதிகளையும் தொடர்ந்து வழங்குவதன் மூலம், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வெளியுறவுக் கொள்கைக் குறித்த தனது சொந்த கொள்கைகளை பலவீனப்படுத்துகிறார்.
இஸ்ரேலின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பைடன் தவறியிருப்பது மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் நற்பெயரை சேதப்படுத்துகிறது. இது வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலிலும் அவரது வெற்றி வாய்ப்புகளை பாதிக்கும். 81 வயதான அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்த விரும்பினால், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் தொடர்பான தனது கொள்கையில் உள்ள சிக்கல்களை அவர் சரிசெய்ய வேண்டும். கடந்த காலங்களில், மற்ற முந்தைய அமெரிக்க அதிபர்கள் சமாதானத்தை ஏற்படுத்துமாறு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தனர். காஸாவில் நிரந்தர போர் நிறுத்தம் கோரும் தைரியம் அமெரிக்க அதிபர் பைடனுக்கு இருக்க வேண்டும். இந்த இலக்கை ஆதரிப்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்துவது போன்ற கொள்கைகளையும் அவர் பரிசீலிக்க வேண்டும்.