ஏன் நல்ல வானிலைச் சூழலில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்? - ராம்நாத் கோவிந்த்

 காலநிலை மாற்றம் என்பது ஒரு தீவிரமான பிரச்சினையாகும். இதற்கு நாம் கவனமாகச் சிந்தித்து அதைத் தீர்க்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஜனநாயகத்தின் நலனுக்காக இந்த பிரச்சினையை சமாளிக்க சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


தற்போது, இந்தியா அதன் பொதுத் தேர்தல்களை நடத்துகிறது. இது பல காரணங்களுக்காக ஒரு முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ள நிலையில், இந்த தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளரை மட்டும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தை மையமாகக் கொண்டு இந்த தேர்தலை ஆதரிக்கிறது. பல நாடுகளில் தற்போது தேர்தல்கள் நடைபெறுகின்றன. இந்தத் தேர்தல்களின் முடிவுகள் உலகளாவிய நிகழ்வுகளை வித்தியாசமாக பாதிக்கும். ஆனால், இந்தியத் தேர்தல்தான் ஜனநாயகத்தை கணிசமாக மேம்படுத்தும்.


காலத்தின் தேவையின் அடிப்படையில், வெளிப்படையாக, தேர்தல்களை முடிந்தவரை தகுதியுடைய அனைத்து மக்களையும் பங்கேற்பதாக மாற்ற வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தேர்தல் பற்றிய விழிப்புணர்வானது, வாக்காளர்களைச் சென்றடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதற்கும், தொலைதூர இடங்களில் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்ததற்கும் பாராட்டப்பட வேண்டும். இதில், சிவில் சமூக அமைப்புகளும், செய்தி ஊடகங்களும் வாக்களிக்கும் உரிமை பற்றியும் மற்றும் கடமை பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சாரங்களை உருவாக்கியுள்ளன.


முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவில் வாக்காளர்கள் மிகுந்த உற்சாகம் காட்டியுள்ளனர். இந்த பங்கேற்பு மிகுந்த திருப்திகரமானதாக உள்ளது. இருப்பினும், வாக்குப்பதிவு பற்றிய புள்ளிவிவரங்கள் குறித்து விவாதிக்கும்போது வெப்பமான வானிலையை பார்வையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஒரு பெரிய சவாலாகக்  குறிப்பிடுகின்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்தனர். குளிர்ந்த காலநிலையில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், ஜனநாயக செயல்பாட்டில் இன்னும் அதிகமான மக்கள் பங்கேற்றிருப்பார்கள்.


இப்போது வானிலையானது ஒரு பெரிய விஷயமாக உள்ளது. 17வது மக்களவையின் பதவிக்காலம் முடிவடையும் ஜூன் 16ம் தேதிக்கு முன்னதாகவே தேர்தல்கள் திட்டமிடப்பட வேண்டும். இதில், தளவாடங்கள் மற்றும் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு வாக்களிப்பு சில வாரங்களுக்குள் நடக்க வேண்டும். எனவே, தேர்தல் திட்டத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை தேர்தலானது நீண்டுள்ளது. இது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மிகவும் வெப்பமான பகுதியாக இருக்கும். தேர்தல் ஆணையம் தேர்தலை திட்டமிடும் போது வானிலையை கருத்தில் கொள்கிறது. ஆனால், அது ஜூன் 16 வரையிலான காலக்கெடுவைப் பின்பற்ற வேண்டும்.


ஏப்ரல் மாதத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம் (Indian Meteorological Department (IMD)) பல மாவட்டங்களில் வெப்ப அலைகள் பற்றி எச்சரித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையமானது விரைந்து இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்  (National Disaster Management Authority (NDMA)) மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (Ministry of Health & Family Welfare (MoHFW)) அதிகாரிகளுடன் ஒரு பணிக்குழுவை உருவாக்கினர். ஒவ்வொரு வாக்குப்பதிவுக்கும் ஐந்து நாட்களுக்கு முன்பு வெப்ப அலைகள் மற்றும் ஈரப்பதத்தின் விளைவுகளைச் சரிபார்ப்பதுதான் இந்த பணிக்குழுவின் முக்கிய பணியாக உள்ளது. அவர்கள் பிரச்சினைகள் மற்றும் அவற்றைச் சமாளிப்பதற்கான வழிகளை ஆலோசித்து திட்டமிடுகிறார்கள். வாக்குப்பதிவின் போது வெப்ப அலைகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவுறுத்துகிறது. வாக்குச்சாவடிகளில் நிழற்குடை, குடிநீர், மின்விசிறி உள்ளிட்ட வசதிகளை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.


இந்த நடவடிக்கைகள் வாக்காளர்களுக்கு சற்று நம்பிக்கையை அளிதுள்ளன. ஆனால், அவை தேர்தலின் ஒரு பகுதியை மட்டுமே கையாள்கின்றன. வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் வெப்பத்தையும் தூசியையும் தாங்கிக் கொண்டு வெளியில் பிரச்சாரம் செய்கிறார்கள். பொதுக்கூட்டங்களில் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் மயங்கி விழுவதைப் பற்றி கேள்விப்பட்டது திடுக்கிடும் செய்தியானாலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த வெளிப்படையான ‘வாக்காளர் ஆர்வமின்மை’ பிரச்சாரத்தின் போது தொடங்கலாம். வாக்குச் சாவடி அமைப்புகள் பாராட்டுக்குரியவை என்றாலும், கிராமப்புற வாக்காளர்கள் கொளுத்தும் வெயிலில் நீண்ட தூரம் பயணிக்கத் தயக்கம் காட்டலாம்.


இந்தியாவில் கோடைக்காலங்களில் வடக்கு மற்றும் தெற்கில் பெரும்பாலும் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை காணப்படுகிறது. சில இடங்களில், இது 45 டிகிரி செல்சியஸைத் தாண்டக்கூடும். மே மற்றும் ஜூன் மாதங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் போது இந்த தீவிர வானிலையானது பொதுவானதாக பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் புவி வெப்பமடைதல் காரணமாக, இந்த நிலைமைகள் எதிர்காலத்தில் இன்னும் மோசமடையக்கூடும்.


எனவே, வாக்காளர்கள், பிரச்சாரகர்கள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோரை கருத்தில் கொண்டு, தேர்தல் நேரம் குறித்து விவாதிக்க வேண்டும். இது ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.


வானிலையைக் கருத்தில் கொண்டு தேர்தலுக்கான அட்டவணையை பரிந்துரைக்க வேண்டிய நேரம் இது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நான் (இராம்நாத் கோவிந்த்) தலைமை வகிக்கும் குழுவிற்கு வழங்கப்பட்ட பணிகளில் இந்தத் தலைப்பு ஒரு பகுதியாக இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தேர்தல் கால அட்டவணையைப் பற்றி என்னிடம் ஒரு ஆலோசனை உள்ளது, ஆனால் அது கமிட்டி பரிந்துரைத்ததில் இருந்து வேறுபட்டது. நான் எனக்காகவே பேசுகிறேன், கமிட்டியின் ஒரு பகுதியாக அல்ல. காலநிலை மாற்றம் என்பது அனைவரின் கவனம் தேவைப்படும் ஒரு தீவிரமான பிரச்சினை என்று நான் நம்புகிறேன். அதைத் தீர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், குறிப்பாக ஜனநாயகத்திற்காக. வானிலை நன்றாக இருக்கும் போது அதிக மக்கள் பங்கேற்கும் வகையில் தேர்தலை நடத்துவதை இலக்காகக் கொள்ள வேண்டும், இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஜனநாயகத்திற்கு உதவும்.


கட்டுரையாளர் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார்.




Original article:

Share: