அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பிளவுபட்ட உலகப் பொருளாதாரம் ஆகியவை தாராளவாத சர்வதேச ஒழுங்கிற்கு (liberal international order) ஆபத்தை விளைவிக்கிறது.
மே மாதம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன இறக்குமதிகள் மீது புதிய சுங்கவரி விகிதங்களை (tariffs) அறிவித்தார். இது உலகளாவிய பொருளாதாரப் பிளவு பற்றிய அச்சத்தை புதுப்பித்துள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பு பொருளாதார நடவடிக்கைகளை எதிர்கொள்ள ஐரோப்பிய கொள்கை வகுப்பாளர்களும் வாஷிங்டனுடன் இணைவது குறித்து பரிசீலித்து வருகின்றனர். ஐக்கிய முன்னணி ('united front’) அமைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்
இது சீனா-அமெரிக்க உறவின் பாதையை வரையறுக்கலாம். நீண்டகால செலவுகள் என்னவாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேற்கு நாடுகள், சீனாவுடனான வர்த்தக உறவை இப்போது தேசியப் பாதுகாப்பு பிரச்சினையாக பார்க்கின்றன. வாஷிங்டனில், புதிய அரசியல் வாதங்கள், சீனாவும் அமெரிக்காவும் பொருளாதார உறவுகளிலிருந்து சமமாகப் பயனடையாததால், பெய்ஜிங் பலவீனங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தக்கூடும் என்று கூறுகின்றன. சீன இறக்குமதிகள் மீது புதிய சுங்கவரி (tariffs) விகிதங்களை அதிகரிப்பது தொடர்பாக பைடன் நிர்வாகத்தின் முடிவு, அரசியல் காரணிகள், பொருளாதாரக் காரணிகள் அல்ல. எந்தெந்த பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்பதைத் தீர்மானிப்பதில் அரசியல் காரணிகள் முக்கியமானவை.
சுங்கக் கட்டணங்களின் கதை
சீன மின்சார வாகனங்கள் (electric vehicles (EV))-கள் மீதான புதிய சுங்க வரி இந்தப் புள்ளியை விளக்குகிறது. அமெரிக்கா சீனாவில் இருந்து சில EVகளை இறக்குமதி செய்வதால், இந்த முடிவு பைடனின் தொழிற்சங்க சார்பு நிலைப்பாட்டையும் உள்நாட்டில் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க ஐக்கிய கார் தொழிலாளர்கள் (United Auto Workers (UAW)) மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கான ஆதரவையும் வலுப்படுத்துகிறது. இந்த கட்டணங்களை 25%-ஆக உயர்த்தியது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். வளர்ந்து வரும் பிரச்சனைகளைத் தடுக்கும் வகையில் 25% முதல் நான்கு மடங்கு கட்டணங்களை உயர்த்துவதற்கான முடிவு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. சீனாவின் வேகமாக வளர்ந்து வரும் கார் மற்றும் பேட்டரி தொழில் குறித்து அமெரிக்க ஆட்டோ தொழிற்சங்கத்தின் கவலையை இது காட்டுகிறது. இது விரைவில் பாரம்பரிய அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
நீண்டகால விளைவுகள்
சீனாவின் ஆக்கிரமிப்பை நிவர்த்தி செய்ய டிரம்ப் ஆட்சி காலத்தில் கட்டணங்களைத் உயர்த்தியது கடினமான நடவடிக்கையாக தோன்றலாம். ஆனால், அது உலகப் பொருளரங்களுடன் முரண்படுகிறது. சுங்க வரிகளின் அதிகரிப்பு நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது மற்ற நாடுகளும் இது போன்ற நடவடிக்கை எடுக்க இந்த வரி உயர்வு தூண்டுகிறது. சீன சுத்தமான எரிசக்தி பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் உலகளாவிய பசுமை இலக்குகளையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியையும் தாமதப்படுத்தலாம். சீனாவின் வளர்ச்சி குறைந்து, வீட்டுக் கடன்கள் உயரும்போது, சீனாவின் பெரிய நுகர்வோர் சந்தையை நம்பியிருக்கும் பல மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வருவாய் குறைவதைக் காண்பார்கள்.
மெதுவான சீனப் பொருளாதாரம் ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் போன்ற வளங்கள் நிறைந்த நாடுகளின் பொருட்களின் ஏற்றுமதியைப் பாதிக்கும். இது இரும்பு தாது விலையையும் குறைக்கும். இந்த நாடுகள் ஏற்றுமதிக்காக சீனாவை பெரிதும் நம்பியுள்ளன. எனவே புதிய சந்தைகளைக் கண்டறிவது சவாலானது. மருத்துவ சாதனங்களுக்கான புதிய சுங்ககட்டணங்கள் சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஒரு எளிய வழியாகும். கடந்த பத்தண்டுகளில், அமெரிக்காவிற்கு மருத்துவ உபகரணங்களின் முக்கிய விநியோகிப்பாளராக சீனா உள்ளது. 2023-ல் இறக்குமதிகள் $640 மில்லியனை எட்டியது.
பல அமெரிக்க சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்கள் சீனாவில் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்களைக் கொண்டுள்ளன. முதியோருக்கான சீனாவின் வளர்ந்து வரும் சுகாதாரப் பராமரிப்பு தேவைகள் மற்றும் தரமான சேவைகளுக்கான தேவை காரணமாக அவர்கள் தங்கள் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இருப்பினும், சீனாவிற்கும் அமெரிக்கத் தலைவர்களுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் தனியார் துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது மற்றும் இரு நாடுகளிலும் உள்ள நோயாளிகளுக்கு உடல்நலப் பாதுகாப்புச் செலவுகளை அதிகரிக்கும். பாதுகாப்புக் கொள்கைகள் நுகர்வோருக்கு அதிக செலவுக்கு வழிவகுக்கும்.
இதேபோல், சீனாவுடனான முக்கியமான மூல தாதுக்களின் வர்த்தகத்தை குறைப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அணுகுமுறை பெய்ஜிங் விநியோகச் சங்கிலியில் அதன் கட்டுப்பாட்டை இறுக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். அரிதான பூமி கனிமங்களுக்கான போட்டி வளரும்போது, எதிர்காலத்தில் பசுமை வர்த்தக (green trade) விதிமுறைகளை கட்டுப்படுத்த கனிம வளம் கொண்ட நாடுகளின் குழுவை சீனா வழி நடத்தலாம்.
தென்கிழக்கு ஆசியாவும் பாதுகாப்புவாதம் மற்றும் வல்லரசு போட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து உற்பத்தி மற்றும் முதலீட்டில் இருந்து இப்பகுதி பயன்பெறும் அதே வேளையில், தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டிற்கு சீனாவையே இப்பகுதி பெரிதும் சார்ந்துள்ளது. வாஷிங்டன் கடுமையான விதிகளை அமல்படுத்தினால், தென்கிழக்கு ஆசியாவின் உதிரிபாகங்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களின் முக்கிய சப்ளையாராக சீனாவை மாற்றுவதற்கான வாய்ப்புகள் குறையும். இந்த விதிகள் அந்த நாடுகளில் உள்ள சீன நிறுவனங்களின் சீன நிறுவனங்களின் பாகங்கள் அல்லது பாகங்களைப் பயன்படுத்தும் மூன்றாம் நாடுகள் பொருட்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும்.
இந்தியா, அதன் வளர்ந்து வரும் நுகர்வோர் சந்தையுடன், உலகப் பொருளாதாரத் துண்டிப்பிலிருந்து (decoupling dynamics) பயனடையும் என்று நம்புகிறது. இருப்பினும், இந்த ஆதாயங்களின் அளவு மற்றும் இந்த மாற்றத்திற்கு இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை. அரசின் முயற்ச்சியை தாண்டியும் இந்தியாவின் உற்பத்தித் துறை இன்னும் வளர்ச்சியடைந்து வருகிறது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளில் இருந்து குறைந்த விலை உற்பத்தியில் இது வலுவான போட்டியை எதிர்கொள்கிறது. கூடுதலாக, இந்தியா சீனாவுடன் வலுவான பொருளாதார உறவைக் கொண்டுள்ளது.
சாத்தியமான நெருக்கடி
எனவே, இந்த விரிவாக்க சுழற்சி தொடர்ந்தால் பார்வையில் முடிவே இருக்காது. உலகளாவிய முதலீட்டாளர்கள் மீதான உளவியல் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். இது துண்டிப்பின் (decoupling) உண்மையான விளைவுகளை விடவும் அதிகமாக இருக்கும். உலக வர்த்தக அமைப்பிலிருந்து (World Trade Organization (WTO)) விலகியதன் மூலம் இந்த உத்தி மோசமாக உள்ளது. ஒரு காலத்தில் உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் வலுவான ஆதரவாளராக இருந்த வாஷிங்டன், இப்போது உலக வர்த்தக அமைப்பிற்கு நீதிபதிகளை நியமிப்பதைத் தடுக்கிறது. இது பிரச்சனைகளைத் தீர்க்கும் நடவடிக்கைகளுக்கு தடையாக உள்ளது. ஒரு நேரடி மோதல் சாத்தியமில்லை என்றாலும், வளர்ந்து வரும் புவிசார் அரசியல் போட்டி மற்றும் மோசமான உலகப் பொருளாதாரம் தாராளவாத சர்வதேச ஒழுங்கின் எதிர்காலத்தை அச்சுறுத்துகிறது. இந்தச் சூழல் அமெரிக்காவுக்கோ, சீனாவிற்கோ அல்லது உலகின் பிற நாடுகளுக்கோ பயனளிக்காது.
பிரியங்கா பண்டிட், உதவி பேராசிரியர், சர்வதேச உறவுகள் மற்றும் ஆளுமை ஆய்வுகள் துறை, மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பள்ளி (School of Humanities and Social Sciences (SHSS)), ஷிவ் நாடார் பல்கலைக்கழகம், டெல்லி.
Original link : https://www.thehindu.com/opinion/op-ed/the-high-cost-of-a-global-economic-decoupling/article68304697.ece