பெரிய நிகோபார் திட்டத்தில் தவிர்க்கமுடியாத இராஜதந்திரம் மற்றும் சுற்றுச்சூழல் அக்கறை - நிகில் கானேகர்

    பெரிய நிகோபார் தீவில் (Great Nicobar Island) முன்மொழியப்பட்ட ரூ.72,000 கோடி உள்கட்டமைப்பு மேம்பாடு சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொள்கிறது. இந்தியா ஏன் தீவை மேம்பாடு செய்ய விரும்புகிறது. இதற்கு முன்மொழியப்பட்ட திட்டம் என்ன?


பெரிய நிகோபார் தீவில் முன்மொழியப்பட்ட ரூ.72,000 கோடி உள்கட்டமைப்பு மேம்பாடு தீவின் பூர்வீக மக்களுக்கும் பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்புக்கும் "கடுமையான அச்சுறுத்தல்" (grave threat) என்று காங்கிரஸ் கட்சி விவரித்துள்ளது. "அனைத்து அனுமதிகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்" மற்றும் "சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற குழுக்கள் உட்பட முன்மொழியப்பட்ட திட்டத்தை முழுமையான, பக்கச்சார்பற்ற மறுஆய்வு செய்ய வேண்டும்" என்று அவர்கள் கோரியுள்ளனர்.


பெரிய நிக்கோபார் தீவுகளின் தெற்குப் பகுதி மிகப்பெரியது. இது தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் முக்கியமாக வெப்பமண்டல மழைக்காடுகளின் 910 சதுர கி.மீ பரப்பளவில் உள்ளது. இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தின் மிகப்பெரிய தீவான சுமத்ராவின் வடக்கு முனையில் உள்ள சபாங்கிலிருந்து 90 கடல் மைல் (170 கி.மீ.க்கும் குறைவாக) தொலைவில் இந்தியாவின் தெற்கு முனையான இந்திரா முனை (Indira Point) உள்ளது.


பெரிய நிகோபாரில் இரண்டு தேசிய பூங்காக்கள் (two national parks), ஒரு உயிர்க்கோளக் காப்பகம் (biosphere reserve), ஷோம்பென் மற்றும் நிக்கோபாரஸ் பழங்குடி மக்களின் சிறிய மக்கள்தொகை (small populations of the Shompen and Nicobarese tribal peoples) மற்றும் சில ஆயிரம் பழங்குடியினர் அல்லாத குடியேறிகள் உள்ளனர். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் 836 தீவுகளின் தொகுப்பாகும். வடக்கே அந்தமான் தீவுகள் மற்றும் தெற்கே நிக்கோபார் தீவுகள், என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, 150 கிமீ அகலமுள்ள பத்து டிகிரி கால்வாயால் பிரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த தீவுக்கூட்டத்திற்கு பயணம் செய்து அதன் பழங்குடி மக்கள் சிலருடன் உரையாடினார்.


பெரிய நிகோபாரை உருவாக்க இந்தியா ஏன் விரும்புகிறது?. முன்மொழியப்பட்ட மூன்று கட்ட, 30 ஆண்டு திட்டம் ஏன் பாதுகாவலர்கள், வனவிலங்கு உயிரியலாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சில உள்ளூர் பழங்குடி குழுக்களிடமிருந்து தொடர்ச்சியான விமர்சனங்களை எதிர்கொண்டது?


உள்கட்டமைப்புத் திட்டம்


அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக் கழகத்தால் (Andaman and Nicobar Islands Integrated Development Corporation (ANIIDCO)) செயல்படுத்தப்பட்ட மெகா உள்கட்டமைப்புத் திட்டத்தில், சர்வதேச கொள்கலன் மாற்று முனையம் (International Container Transshipment Terminal (ICTT)), 4,000 பயணிகளைக் கையாளும் உச்ச நேர திறன் கொண்ட கிரீன்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையம் (greenfield international airport), கொண்ட ஒரு நகரம் மற்றும் 16,610 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு எரிவாயு மற்றும் சூரிய அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையம் ஆகியவை அடங்கும்.


நிதி ஆயோக்கின் (NITI Aayog) அறிக்கைக்குப் பிறகு பெரிய நிக்கோபார் தீவின் "முழுமையான வளர்ச்சி" (holistic development) திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான ஒரு முன் சாத்தியக்கூறு அறிக்கையானது இந்த  தீவின் இராஜதந்திர ரீதியான அமைவிடத்தை எடுத்துக்காட்டுகிறது. இது தென்மேற்கில் இலங்கையின் கொழும்பு மற்றும் தென்கிழக்கில் போர்ட் கிள்ளான் (மலேசியா) மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றிலிருந்து தோராயமாக சமதூரத்தில் உள்ளது.


இந்த தீவு இந்தியப் பெருங்கடலை பசிபிக் பெருங்கடலுடன் இணைக்கும் முக்கிய நீர்வழியான மலாக்கா நீரிணைக்கு (Malacca Strait) அருகில் உள்ளது. சர்வதேச கொள்கலன் மாற்று முனையம் (ICTT) "சரக்கு பரிமாற்றத்தில் ஒரு முக்கிய சக்தியாக மாறுவதன் மூலம் பெரிய நிகோபாரை பிராந்திய மற்றும் உலகளாவிய கடல்சார் பொருளாதாரத்தில் பங்கேற்க அனுமதிக்கும்" என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்மொழியப்பட்ட "கிரீன்ஃபீல்ட் நகரம்" (greenfield city) தீவின் கடல் மற்றும் சுற்றுலாத் திறன் இரண்டையும் பயன்படுத்திக் கொள்ளும்.


முன்மொழியப்பட்ட சர்வதேச கொள்கலன் மாற்று முனையம் (ICTT) மற்றும் மின் நிலையத்திற்கான இடம் பெரிய நிகோபார் தீவின் தென்கிழக்கு மூலையில் உள்ள கலதியா விரிகுடா ஆகும். அங்கு மனித வசிப்பிடம் இல்லை. இந்த திட்டத்திற்கு அக்டோபர் 2022-ல் கொள்கை அளவில் வன அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தது. விரிவான திட்ட அறிக்கை (detailed project report (DPR) தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் மாதங்களில் இந்த முனையத்தின் கட்டுமானத்தின் ஆரம்ப கட்டத்திற்கான ஏலங்களுக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளது.


சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படை (Chinese People’s Liberation Army Navy) பிராந்தியத்தில் தனது இருப்பை விரிவுபடுத்த விரும்புவதால், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் இந்தியாவுக்கு முக்கிய இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு நலன்களாக உள்ளன. இந்தோ-பசிபிக் சாக் முனைகளில் சீனக் கடற்படைகள் குவிக்கப்படுவது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. இதில் மலாக்கா, சுந்தா மற்றும் லோம்போக் ஜலசந்திகளும் அடங்கும். இப்பகுதியில் சீனா தனது இருப்பை விரிவுபடுத்த முயற்சிக்கிறது. மியான்மரில் உள்ள கோகோ தீவுகளில் ராணுவ தளம் கட்டுவதும் இதில் அடங்கும். கோகோ தீவுகள், அந்தமான் & நிக்கோபார் தீவுகளுக்கு வடக்கே 55 கிமீ தொலைவில் உள்ளன.


ஏப்ரல் மாதத்தில், அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் ஒரு பெரிய இராணுவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. விமானத் தளங்கள் மற்றும் ஜெட்டி நகரை (jetties) சீரமைத்தல், கூடுதல் தளவாடங்கள் மற்றும் சேமிப்பு வசதிகளை உருவாக்குதல், இராணுவ வீரர்களுக்கான தளம் மற்றும் வலுவான கண்காணிப்பு உள்கட்டமைப்பு ஆகியவை இதில் அடங்கும். இந்த மேம்படுத்தல் கூடுதல் இராணுவப் படைகள், பெரிய போர்க்கப்பல்கள், விமானங்கள், ஏவுகணை பேட்டரிகள் மற்றும் துருப்புகளை (troops) நிலைநிறுத்துவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


troops- துருப்பு என்பது ஒரு இராணுவ துணைக்குழு. இது ஒரு படைப்பிரிவுக்கு அடிபணிந்துள்ளது.


தீவுக்கூட்டத்தைச் சுற்றியுள்ள முழுப் பகுதியையும் நெருக்கமாகக் கண்காணிப்பதும், பெரிய நிகோபாரில் ஒரு வலுவான இராணுவத் தடுப்பை உருவாக்குவதும் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு இன்றியமையாதவை.


சுற்றுச்சூழல் மீதான அக்கறைகள்


முன்மொழியப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாடு தீவுகளின் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் எதிர்க்கப்படுகிறது. வனவிலங்கு பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், மானுடவியலாளர்கள், அறிஞர்கள், குடிமைச் சமூகம் மற்றும் காங்கிரஸ் கட்சியிடமிருந்து எதிர்ப்பு வருகிறது. தீவில் ஒரு பழங்குடி குடியிருப்பில் வாழும் சில நூறு தனிநபர்களைக் கொண்ட வேட்டையாடுபவர்களின் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடிக் குழுவான (particularly vulnerable tribal group (PVTG)) ஷோம்பென் மீது பேரழிவு தரக்கூடிய தாக்கத்தில் அவை கவனம் செலுத்துகின்றன.


இந்தத் திட்டம் பழங்குடி மக்களின் உரிமைகளை மீறுவதாகவும், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மரங்களை வெட்டுவதன் மூலம் தீவின் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. துறைமுகத் திட்டத்தால், பவளப்பாறைகளை அழியும், உள்ளூர் கடல் சுற்றுச்சூழல் அமைப்பை பாதிக்கும் மற்றும் கலதியா விரிகுடா பகுதியில் கூடு கட்டும் நிலப்பரப்பு நிக்கோபார் மெகாபோட் பறவை (Nicobar Megapode bird) மற்றும் லெதர்பேக் ஆமைகளை (leatherback turtles) பாதிக்கும் என்ற அச்சங்கள் உள்ளன.


மூத்த தலைவரும் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள காங்கிரஸ் அறிக்கை, ‘முன்மொழியப்பட்ட துறைமுகம் நில அதிர்வு கொந்தளிப்பான மண்டலத்தில் உள்ளது. இது 2004 சுனாமியின் போது சுமார் 15 அடி நிரந்தரமாக மூழ்கியது. பெரிய மற்றும் சிறிய நிக்கோபார் தீவுகளின் பழங்குடி குழுக்களின் சட்டத் தேவைகளின்படி உள்ளூர் நிர்வாகம் போதுமான அளவு கலந்தாலோசிக்கவில்லை’ என்று குற்றம் சாட்டுகிறது. நவம்பர் 2022-ல், பழங்குடியினர் குழு சுமார் 160 சதுர கி.மீ வன நிலத்தை திசைதிருப்பியதற்காக தடையில்லா சான்றிதழை ரத்து செய்தது. மேலும், அவர்களுக்கு முழுமையாக தெரிவிக்கப்படவில்லை என்று கூறியது.


ஏப்ரல் 2023-ல், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (National Green Tribunal (NGT)) கொல்கத்தா அமர்வு திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் வன அனுமதியில் தலையிட மறுத்துவிட்டது. ஆனால், அனுமதிகளை மறுபரிசீலனை செய்ய உயர்மட்டக் குழுவுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. முக்கியமாக அரசாங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதா என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை.


தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு 2023-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.


Share: