நாட்டில் சமத்துவமின்மை குறித்த விவாதங்களில் சாதி ஏன் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும்? - ஜோதி தாகூர், பிரபீர் குமார் கோஷ்

    வெவ்வேறு சமூகப் பொருளாதார குழுக்களிடையே நுகர்வு அடிப்படையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் வருமானம், வளங்களை அணுகுதல் அல்லது வாங்கும் திறன் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளை பிரதிபலிக்கின்றன. அடித்தட்டு மக்களிடையே வருவாய் ஈட்டும் திறனை அதிகரிப்பதில் முயற்சிகள் கவனம் செலுத்த வேண்டும்.


உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் (World Inequality Lab) சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே விரிவடைந்து வரும் வருவாய், சமுக இடைவெளி குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. இந்தியாவில் சமத்துவமின்மை சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளையும் உள்ளடக்கியது. இது நாட்டின் சமூகப் பொருளாதார கட்டமைப்பின் முக்கிய அம்சமாகும். ஜினி குணகம் (Gini coefficient) மற்றும் சதவீத விகிதம் (percentile ratio) போன்ற அளவீடுகள் பொருளாதார சமத்துவமின்மையை மதிப்பிட உதவுகின்றன. 2017-18 மற்றும் 2022-23 காலகட்டங்களுக்கான இந்த அளவீடுகளை காலமுறை தொழிலாளர் படைத் தரவினைப் பயன்படுத்தி ஆராய்வதன் மூலம் பட்டியல் பழங்குடியினர் (ST), பட்டியல் வகுப்பினர் (SC), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் பொதுப் பிரிவினர் (General category) ஒட்டுமொத்தமாகவோ அவர்களுக்குள்ளாகவோ நுகவு சமத்துவமின்மையால் ஏற்படும் மாற்றங்களை வெளிக்கொணர்ந்தோம். 2022-23ஆம் ஆண்டில், பட்டியல் பழங்குடியினர்கள் (ST) மக்கள் தொகையில் 9% ஆக இருந்தனர். ஆனால், நுகர்வில் 7% பங்கு மட்டுமே இருந்தது. பட்டியல் வகுப்பினர்கள் (SC) மக்கள் தொகையில் 20% ஆக இருந்தனர், ஆனால் இவர்கள் 16% நுகர்வு பங்கைக் கொண்டிருந்தனர். மக்கள்தொகையில் 43% ஆக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் (OBC), அவர்களின் 41% நுகர்வு பங்குடன் நெருக்கமாக பொருந்துகின்றன. இருப்பினும், மக்கள் தொகையில் 28%ஆக இருக்கும் பொதுப் பிரிவினர் (General category), 36% அதிக நுகர்வுப் பங்கைக் கொண்டிருந்தனர். இந்த கணக்கெடுப்புகள் சமூகக் குழுக்களிடையே நுகர்வு விநியோகத்தில் நடந்து வரும் ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டுகின்றன. பட்டியல் வகுப்பினர்கள் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர்கள் (ST), பொதுப் பிரிவினர் (General category) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) பிரிவுகளை விட தொடர்ந்து பின்தங்கியுள்ளனர்.


ஒட்டுமொத்த ஜினி குணகம் 2017-18-ல் 0.359 இலிருந்து 2022-23-ல் 0.309 ஆகக் குறைந்துள்ளது. இது வருமான சமத்துவமின்மையில் குறைவைக் காட்டுகிறது. பட்டியல் பழங்குடியினர்களைப் (ST) பொறுத்தவரை, ஜினி குணகம் 0.322 இலிருந்து 0.268 ஆகவும், பட்டியல் வகுப்பினர்களைப் (SC) பொறுத்தவரை, இது 0.312 இலிருந்து 0.273 ஆகவும் குறைந்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் (OBC) 0.336 முதல் 0.288 ஆகவும், பொதுப் பிரிவினர் 0.379 முதல் 0.306 ஆகவும் குறைந்துள்ளனர். பொதுப் பிரிவில் இந்த குறைவு சமூக இயக்கம் மற்றும் பயனுள்ள கொள்கைகள் போன்ற சமூகப் பொருளாதார மாற்றங்களைக் குறிக்கலாம்.


இருப்பினும், ஆழமான பகுப்பாய்வு சமூகக் குழுக்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்துகிறது. பட்டியல் வகுப்பினர்கள் (SC), பட்டியல் பழங்குடியினர்கள் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) குழுக்கள் 2017-18 முதல் 2022-23 வரை கீழே உள்ள 20% டெசிலுக்கு [decile- 1/10 ஐக் குறிக்கிறது] நுகர்வு அளவுகளில் சிறிது குறைவைக் கண்டன. பொதுப் பிரிவினரைப் பொறுத்தவரை, இந்த குறைவு மிகவும் தெளிவாக இருந்தது. இது ஏழ்மையான பிரிவினரிடையே நுகர்வு ஒப்பீட்டளவில் சரிவைக் குறிக்கிறது.


மாறாக, முதல் 20% டெசிலில் உள்ள அனைத்து சமூகக் குழுக்களுக்கும் நுகர்வு சற்று அதிகரித்துள்ளது. பொதுப் பிரிவில் குறிப்பிடத்தக்க 10 சதவீத புள்ளி அதிகரிப்பு காணப்படுகிறது. பொதுப் பிரிவில் உள்ள அதிக வருவாய் ஈட்டுபவர்களிடையே இந்த உயர்வு உயர்வகுப்புக் குடியினரிடையே செல்வம் குவிந்திருப்பதைக் குறிக்கிறது. இவ்வாறு, பொது வகையினருக்கும் பிற சமூகக் குழுக்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இது நுகர்வு வடிவங்களில் நடந்து வரும் முரண்பாடுகளை எடுத்துக்காட்டுகிறது.


பல பரிமாண வறுமையைக் குறைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும் சாதி அடிப்படையிலான சமத்துவமின்மை நீடிக்கிறது. சாதிய பாகுபாடு மற்றும் உடன்பாட்டு நடவடிக்கை திட்டங்கள் அரசியலமைப்பு ஒழிக்கப்பட்ட போதிலும், சாதி இன்னும் பொருளாதார யதார்த்தங்களில் செல்வாக்கு செலுத்துகிறது.


இந்த ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய இடஒதுக்கீடு, கிராமப்புற மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் நேரடி பலன் பரிமாற்றம் போன்ற கொள்கைகளை ஒன்றிய அரசு இயற்றியுள்ளது. முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், கணிசமான சவால்கள் உள்ளன.


வெவ்வேறு சமூகப் பொருளாதார குழுக்களிடையே நுகர்வு வடிவங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் வருமானம், வளங்களை அணுகுதல் அல்லது வாங்கும் திறன் ஆகியவற்றில் சாத்தியமான வேறுபாடுகளைக் குறிக்கின்றன. அடித்தட்டு மக்களிடையே, குறிப்பாக பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் சமூகங்களிடையே வருவாய் உருவாக்கம் மற்றும் நுகர்வுத் திறன்களை அதிகரிப்பதில் முயற்சிகள் கவனம் செலுத்த வேண்டும். சமூக நல்லிணக்கம் மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு இது அவசியம். பெரும் பொருளாதார சமத்துவத்தை நோக்கிய நிலையான முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கு இதற்கான போக்குகளின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் இலக்குக்கான தலையீடுகள் அவசியம்.


தாக்கூர், ஒரு இணை ஆய்வாளர்; கோஷ் புது தில்லியில் உள்ள தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலில் மூத்த உறுப்பினராக உள்ளார்.


Share: