இந்தியாவில் பிச்சைக்காரர்களை குற்றவயப்படுத்துதல்: ஒரு காலனித்துவ மரபின் தொடர்ச்சி -மனஸ் ரதுரி

 ஸ்மைல் திட்டம் (SMILE scheme) நகர்ப்புற வறுமையை ஆக்கப்பூர்வமாக நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், 'பிச்சைக்காரர்கள்' மற்றும் 'வீடற்றவர்கள்' ஆகியோரின் சட்ட மற்றும் நீதித்துறை கட்டுமானத்தை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. எவ்வாறாயினும், காலாவதியான வரையறைகள் மற்றும் தண்டனை அடிப்படையிலான அணுகுமுறைகளைப் பயன்படுத்துவது, இந்தத் திட்டம் எவ்வளவு நியாயமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகத்தை எழுப்புகிறது.


டிசம்பர் 16 அன்று, இந்தூர் மாவட்ட ஆட்சியர் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) பிரிவு 163-ன் கீழ் "பிச்சைக்காரர்களுக்கு" பிச்சை வழங்குவதைத் தடைசெய்து தடை உத்தரவுகளை பிறப்பித்தார். இந்த முயற்சியானது, "பிச்சைக்காரர்களுக்கு" மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்துடன், அவர்களுக்கு மருத்துவம், கல்வி மற்றும் திறன் பயிற்சிகளை வழங்குவதன் மூலம், 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்ட, விளிம்புநிலை தனிநபர்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் நிறுவனங்களுக்கான (Support for Marginalised Individuals for Livelihood and Enterprise (SMILE)) திட்டத்தின் ஒரு பகுதியாகும். 2026-ஆம் ஆண்டுக்குள் "பிச்சைக்காரர்கள் இல்லாத" நகரங்களை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


"பிச்சைக்காரர் இல்லாத நகரம்" (“beggar-free” city) என்ற கருத்து, 2010-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான டெல்லியின் முன்தயாரிப்புகளைச் சுற்றியுள்ள நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறது. தில்லி இயற்கையான பொது இடங்கள் மற்றும் ஆடம்பரமான உள்கட்டமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டதால், தலைநகரை "உலகத் தரம் வாய்ந்த நகரமாக" மாற்றுவதற்கு "பிச்சைக்காரன்" என்ற "தொல்லையை" அகற்றுவதற்கு அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்தார். 


 இதன் விளைவாக, டெல்லி அரசாங்கம் "பிச்சைக்காரர்கள் குறித்த"  "சகிப்புத்தன்மையற்ற மண்டலங்களை" (“zero-tolerance zones”) உருவாக்கியது. பின்பு, மொபைல் நீதிமன்றங்கள் மற்றும் அமலாக்க வேன்கள் ஏழை மற்றும் வீடற்ற மக்களைக் கைது செய்யத் தொடங்கின. அதே போல் குடிசைவாசிகள் மற்றும் தெரு வியாபாரிகள், "உலகத் தரம் வாய்ந்த நகரம்" என்ற பிம்பத்தில் அவர்கள் அனைவரும் இடமில்லாமல் ஆக்கப்பட்டனர்.


தில்லியில் நடைபெற்ற நிகழ்வுகள் ஸ்மைல் திட்டத்திற்கு முக்கியமான படிப்பினைகளை வழங்குகின்றன. ஒரு நகரத்தை "பிச்சைக்காரர்கள் இல்லாததாக" மாற்றுவதற்கான முயற்சிகள் அதன் ஏழைகளுக்கு எவ்வாறு தொந்தரவான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை எடுத்துக்காட்டுகிறது. "பிச்சைக்காரர்கள்" மீதான அரசின் தண்டனை அணுகுமுறையை நன்கு புரிந்து கொள்ள, காலனித்துவத்துடன் அதன் வேரூன்றிய வரலாற்றைப் பார்ப்பது அவசியம். நாம் ஒரு அடிப்படை கேள்வியுடன் தொடங்க வேண்டும்: "பிச்சைக்காரர்" யார்?


இந்திய அரசியலமைப்பு, ஒருங்கிணைந்த பட்டியலின் கீழ், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இரண்டிற்கும் நாடோடி மற்றும் புலம்பெயர்ந்த பழங்குடியினர்" (பட்டியல் III, நுழைவு 15) தொடர்பான சட்டங்களை இயற்ற அதிகாரம் அளிக்கிறது.  செப்டம்பர் 1, 1949 அன்று இந்திய அரசியலமைப்பின் வரைவு மீதான அரசியல் நிர்ணய சபை விவாதத்தின் போது, ​​உறுப்பினர் ராஜ் பகதூர் யூனியன் பட்டியலில் "பிச்சையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழித்தல்" ஆகியவற்றை மேலும் சேர்ப்பதற்காக வாதிட்டார். 


மேலும், அவர் "சிலர் வேலை செய்ய மிகவும் சோம்பேறியாக இருப்பதால் மட்டுமே பிச்சைக்காரர்களாக மாறுகிறார்கள். நேர்மையான வேலை செய்து பிழைப்பு நடத்தாமல் வயிற்றை நிரப்புகிறார்கள். அவர்கள் வெறுமனே பிச்சையில் வாழ்கிறார்கள், அவர்கள் வேலை செய்ய மாட்டார்கள். அவர்கள் சமூகத்திற்கு ஒரு சுமையாக இருக்கிறார்கள். இதற்குப் பதிலளித்த பி.ஆர்.அம்பேத்கர், "பிச்சைக்காரன்" என்பது ஏற்கனவே மத்திய மற்றும் மாநிலங்கள் இரண்டிற்கும் "அலைந்து திரிபவர்கள் / வீடற்றவர்கள்"(vagrancy) என்பதன் கீழ் பொதுப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தனித்தனியாக சேர்க்க தேவையில்லை என்று வாதிட்டார்.


இந்த விவாதம் இரண்டு முக்கியமான விஷயங்களை முன்வைக்கிறது. முதலாவதாக, நாடோடி பழங்குடியினருக்கும் அலைந்து திரிபவர்களுக்கும் இடையிலான தொடர்பு காலனித்துவ கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. 1871-ஆம் ஆண்டு குற்ற பழங்குடியினர் (‘Criminal Tribes’) சட்டத்தின் மூலம் ஆங்கிலேயர்கள் நாடோடி பழங்குடியினரை குற்றவாளிகளாக்கினர் என்பதை மீனா ராதாகிருஷ்ணா தனது ‘குற்றப் பழங்குடிகள்’  (‘Criminal Tribes’) மற்றும் ‘பிரிட்டிஷ் காலனித்துவ கொள்கை‘ (British Colonial Policy) என்ற புத்தகத்தில் விளக்குகிறார்.  


நில வருவாயை அதிகரிப்பது மற்றும் தனியார் வணிகங்களைப் பாதுகாப்பது போன்ற பாரபட்சம் மற்றும் பொருளாதார காரணங்களால் காலனித்துவ அரசாங்கம் இதைச் செய்தது. அவர்கள் இந்த அலைந்து திரிந்த சமூகங்களை "சீர்திருத்தம்" செய்ய முயன்றனர். எனினும், அவர்களை குடியேறவும் கூலி வேலை செய்யவும் கட்டாயப்படுத்தினர்.


இரண்டாவதாக, பிச்சைக்காரர்களை சோம்பேறிகள் மற்றும் தகுதியற்றவர்கள் என்று பகதூர் வடிவமைத்திருப்பது இடைக்கால இங்கிலாந்தின் பிற்பகுதியில் இருந்து இதேபோன்ற அணுகுமுறைகளை எதிரொலிக்கிறது. வில்லியம் சாம்ப்லிஸ் தனது ஆய்வறிக்கையில், 'அலைந்து திரிபவர்கள் சட்டத்தின் சமூகவியல் பகுப்பாய்வு' (‘A Sociological Analysis of the Law of Vagrancy’) 1349-ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் முதல் முறையான அவர்களுக்கான சட்டம் இயற்றப்பட்டது என்பதைக் காட்டினார். 


ஆங்கிலப் பொருளாதாரம் வேலையாட்களின் ஆயத்த விநியோகத்தை பெரிதும் நம்பியிருந்தது. தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட தொழிலாளர்களின் பற்றாக்குறை, நிலப்பிரபுத்துவ பிரபுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட உபரியைக் குறைத்தது. அதே நேரத்தில், பல வேலையாட்கள் வளர்ந்து வரும் நகரங்களில் சிறந்த ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளை நாடத் தொடங்கினர்.


 இந்த மாற்றத்தை எதிர்ப்பதற்கும் நிலப்பிரபுக்களின் உபரியைப் பாதுகாப்பதற்கும், உழைக்காத ஏழைகளை சோம்பேறிகளாகவும் பாவமுள்ளவர்களாகவும் சித்தரித்து, பொது இடங்களில் அவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியது. 


மேரி-ஈவ் சில்வெஸ்ட்ரே, 'குற்றம் மற்றும் சமூக வகுப்புகள்: பொது ஒழுங்கை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்துதல்' (Crime and Social Classes: Regulating and Representing Public Order) என்ற கட்டுரையில், ஆங்கிலோ-சாக்சன் நாடுகளில் ஏழைகளை "தார்மீக ரீதியாக தாழ்ந்தவர்கள், சோம்பேறிகள் மற்றும் நேர்மையற்றவர்கள்" என்று முத்திரை குத்துவதற்கான சட்டங்களின் தொடக்கத்தைக் குறித்தது என்று விளக்குகிறார். இந்தச் சட்டங்கள் ஏழைகளின் துரதிர்ஷ்டங்களுக்குக் குற்றம் சாட்டி, அவர்களை குற்றவாளிகளாகக் கருதின.


இந்திய சட்டத்தில் உள்ள காலனித்துவ மனநிலை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிச்சை எடுப்பதற்கு எதிரான சட்டங்களை உருவாக்க அனுமதித்துள்ளது. 1959-ஆம் ஆண்டின் பம்பாய் பிச்சை எடுப்பதைத் தடுக்கும் சட்டம் அத்தகைய ஒரு சட்டமாகும். இது SMILE திட்டத்தின் அடிப்படையாகும். இந்த சட்டம் "பிச்சை எடுப்பது" என்பதை பரந்த அளவில் வரையறுக்கிறது. இதில் பிச்சை கேட்பது மட்டுமல்லாமல், தெரு நிகழ்ச்சிகள், பொருட்களை விற்பது போன்ற செயல்களும் அடங்கும்.


இந்த வரையறை இந்தியாவில் உள்ள ஏழைகள் மற்றும் பல நாடோடி சமூகங்களுக்கு எதிரான காலனித்துவ சார்புகளை பிரதிபலிக்கிறது. இது காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு இந்தக் குழுக்களை குறிவைக்கும் அதிகாரத்தை அளிக்கிறது, பெரும்பாலும் டெல்லி விஷயத்தில் நாம் பார்த்தது போல், பொது இடங்களை "அழகுப்படுத்த" இந்த குழுக்களை அகற்ற காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு இசைவை வழங்குகிறது.


நீதித்துறையில் மாற்றமா?


சமீபத்திய ஆண்டுகளில் சில சாதகமான முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. 2018-ஆம் ஆண்டில், தில்லி உயர்நீதிமன்றம் பம்பாய் சட்டத்தின் பல விதிகளை "வெளிப்படையாக தன்னிச்சையானது" என்றும், கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கும் பிரிவு 21-ஐ மீறுவதாகவும் கூறி நீக்கியது. அடிப்படைத் தேவைகளை வழங்கத் தவறிய அரசு பிச்சை எடுப்பதை எப்படி குற்றமாக்க முடியும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 


மேலும், ஜூலை 2021-ஆம் ஆண்டில், பொது இடங்களில் இருந்து பிச்சை எடுப்பவர்களை அகற்றக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. சமூக-பொருளாதாரப் பிரச்சனையான பிச்சை எடுப்பதைத் தடை செய்வதற்கான "உயர்ந்த பார்வையை" ஏற்க மாட்டோம் என்று கூறியது.


ஸ்மைல் திட்டம் நகர்ப்புற வறுமையை ஆக்கப்பூர்வமாக நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், "பிச்சைக்காரர்களுக்கு"  சட்ட மற்றும் சட்டரீதியான கட்டுமானத்தை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. எவ்வாறாயினும், காலாவதியான வரையறைகள் மற்றும் தண்டனை அடிப்படையிலான அணுகுமுறைகளைப் பயன்படுத்துவது, இந்தத் திட்டம் எவ்வளவு நியாயமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகத்தை எழுப்புகிறது.


மனஸ் ரதுரி கட்டுரையாளர் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற  ஆராய்ச்சியாளர். 




Original article:

Share: