சரக்கு மற்றும் சேவை வரி ரசீதுகள் மற்றும் பிற சமீபத்திய நுகர்வு குறிகாட்டிகள் இன்னும் கவலையாக இருக்கின்றன.
2024-25ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், குறிப்பாக அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் வளர்ச்சி மீண்டு வரும் என்று நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு சமீபத்திய பொருளாதாரத் தகவல்கள் நல்ல செய்தி அல்ல. இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 5.4% ஆகக் குறைவது ஒரு தற்காலிக பிரச்சினையாக காணப்பட்டாலும், கொள்கை வகுப்பாளர்கள், குறிப்பாக நகர்ப்புற இந்தியாவில் நுகர்வு குறைவது ஒரு முக்கிய காரணியாக உள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
நகரங்களில் பண்டிகைக் காலம் மற்றும் வலுவான கிராமப்புற தேவை ஆகியவை பொருளாதாரத்தை உயர்த்த உதவும் என்று கொள்கை வகுப்பாளர்கள் நம்புகின்றனர். சமீபத்திய தரவு நிதி அமைச்சகத்திற்கு முக்கியமானது. ஏனெனில், இது 2025-26ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத் திட்டத்தை வடிவமைக்க உதவும், இது பிப்ரவரி 1 அன்று ஒன்றிய அரசு தாக்கல் செய்யவிருக்கும் வரவு செலவு அறிக்கையில் இறுதி செய்யப்படும்.
நவம்பர் மாதத்தில் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக வங்கிக் கடன் வளர்ச்சி குறைந்துள்ளது. இருப்பினும், தொழில்துறை உற்பத்தியில் 40% இருக்கும் முக்கிய உட்கட்டமைப்புத் துறைகள், நான்கு மாதங்களில் அதிகபட்சமாக 4.3% ஆக வளர்ந்தன. உற்பத்தி நிலைகள் அக்டோபரில் இருந்ததை விட 3.3% குறைவாக இருந்தது. மேலும், 8 துறைகளில் 6 துறைகள் முழு திறனுக்கும் குறைவாகவே இயங்கின. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தொழிற்சாலை செயல்பாடுகள் 2024-ல் மிகவும் பலவீனமாக இருந்ததாக கொள்முதல் மேலாளர்களின் குறியீடு (Purchasing Managers’ Index) காட்டுகிறது. இதற்கிடையில், அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகள் விலை உயர்வுக்கு வழிவகுத்தது. இது காலப்போக்கில் தேவையை குறைக்கலாம்.
நவம்பரில் முடிவடைந்த பரிவர்த்தனைகளின் அடிப்படையில், டிசம்பருக்கான சரக்கு மற்றும் சேவை வரி ரசீதுகள், பொருளாதார நுகர்விற்கு தேவையான உதவியை வழங்கவில்லை. டிசம்பரின் மொத்த வருவாய் கிட்டத்தட்ட ₹1.77 லட்சம் கோடி, இது மூன்று மாதங்களில் இல்லாத அளவாகும். அவை கடந்த ஆண்டைவிட 7.3% மட்டுமே அதிகமாகும். இது கடந்த மூன்றரை ஆண்டுகளில் இரண்டாவது மெதுவான வளர்ச்சியாகும். டிசம்பரின் வருவாய்கள் தொடர்ந்து நான்காவது மாதமாக 10%க்கும் குறைவான வளர்ச்சியைக் குறிக்கின்றன.
ஒவ்வொரு மாதமும் வளர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு இதுவரை, வருவாய் வளர்ச்சி 8.6% மட்டுமே, ஆண்டு இறுதிக்குள் வரவு செலவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 11% வளர்ச்சி இலக்கை எட்டுவது கடினமாக இருக்கும். பணத்தைத் திரும்பப் பெற்ற பிறகு நிகர வருவாய் வெறும் 3.3% மட்டுமே அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு நிகர வருவாய் மிகக் குறைவாக உள்ளது. டிசம்பரில் அதிக பணத்தைத் திரும்பப் பெறுவது இதற்குக் காரணமாக இருக்கலாம். உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய் வளர்ச்சி 8.4% ஆக குறைந்தது. இறக்குமதி வருவாய் 3.9% மட்டுமே அதிகரித்தது.
உள்நாட்டு வருவாயில் மந்தமான சில்லறை கடன் மற்றும் தீபாவளிக்குப் பிறகு குறைந்த செலவினங்கள் காரணமாக இருக்கலாம். இருப்பினும், இறக்குமதி வருவாயில் குறைந்த வளர்ச்சி ஆச்சரியமளிக்கிறது. ஏனெனில், நவம்பர் சரக்கு இறக்குமதி 27% அதிகரித்து $70 பில்லியனை எட்டியது. முக்கிய நுகர்வோர் மாநிலங்களான உத்தரப் பிரதேசம் (1%) மற்றும் குஜராத் (4%) ஆகியவற்றின் மோசமான வருவாய் வளர்ச்சியும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் உட்பட சில வடகிழக்கு மாநிலங்களில் காணப்படும் தொடர் சரிவுகளில் கூடுதல் கவனம் தேவை. வரவு செலவு அறிக்கை உருவாக்கத்தில், அதிக பணவீக்கம் போன்ற நுகர்வைப் பாதிக்கும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அதற்கு தீர்வு காண்பதில் ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும்.