ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத்திற்கு உறுப்பினர்கள் எப்படி பரிந்துரைக்கப்பட வேண்டும்? புதுச்சேரி சட்டமன்றத்திற்கான நியமனங்கள் தொடர்பாக 1963ஆம் ஆண்டு யூனியன் பிரதேச அரசுச் சட்டம் என்ன கூறுகிறது? 2023ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் கூறிய ‘மூன்று கட்டளை சங்கிலி’ (triple chain of command) என்றால் என்ன?
தற்போதைய செய்தி:
ஒன்றிய உள்துறை அமைச்சகம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்கும் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநரின் அதிகாரத்தை, மாநில அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனை இல்லாமல் அவரால் பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?
இந்திய அரசியலமைப்பு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு வழிவகை செய்கிறது. மக்களவையில் இரண்டு ஆங்கிலோ-இந்திய உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்றங்களில் ஒரு ஆங்கிலோ-இந்திய உறுப்பினரை நியமிக்கும் ஏற்பாடு 2020-ஆம் ஆண்டில் நிறுத்து வைக்கப்பட்டது. மாநிலங்கவையில் 12 நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்த உறுப்பினர்கள் ஒன்றிய அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். சட்டமன்ற மேலவைகளைக் கொண்ட ஆறு மாநிலங்களில், ஏறக்குறைய ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்படுகிறார்கள். இந்த உறுப்பினர்கள் மாநில அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில் ஆளுநர்களால் நியமிக்கப்படுகிறார்கள்.
யூனியன் பிரதேசங்களைப் பற்றி?
மூன்று யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களின் அமைப்பு நாடாளுமன்றச் சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறது. 1991ஆம் ஆண்டு தேசிய தலைநகர் பிரதேச அரசுச் சட்டத்தின் பிரிவு 3, டெல்லி சட்டமன்றத்தில் 70 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை நியமிக்க வழங்குகிறது. டெல்லி சட்டமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. 1963ஆம் ஆண்டு யூனியன் பிரதேச அரசுச் சட்டத்தின் பிரிவு 3, புதுச்சேரி சட்டமன்றத்தில் 30 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை நியமிக்க அதிகாரம் வழங்குகிறது. மேலும், ஒன்றிய அரசு புதுச்சேரி சட்டமன்றத்திற்கு மூன்று உறுப்பினர்களை நியமிப்பதற்கு இந்த சட்டம் அதிகாரம் வழங்குகிறது.
2019-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் பிரிவு 14, 2023-ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத்தில் 90 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருப்பதாக சட்டம் கூறுகிறது. கூடுதலாக, 15, 15A மற்றும் 15B பிரிவுகள், இரண்டு பெண்கள், இரண்டு காஷ்மீர் குடியேறியவர்கள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்த ஒருவர் என மொத்தம் ஐந்து உறுப்பினர்களை துணை ஆளுநர் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு நியமிக்கலாம் என்று கூறுகின்றன.
நீதிமன்றங்கள் என்ன தீர்ப்பளித்தன?
புதுச்சேரி சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடைமுறை 2018-ஆம் ஆண்டு K. லக்ஷ்மிநாராயணன் vs யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் வந்தது. நீதிமன்றம் சட்டமன்றத்திற்கு மூன்று உறுப்பினர்களை நியமிக்கும் ஒன்றிய அரசின் அதிகாரத்தை உறுதி செய்தது மற்றும் அது யூனியன் பிரதேசங்களின் அமைச்சரவையின் ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியது. இருப்பினும், இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்காக சில பரிந்துரைகளை வழங்கியது. சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனத்திற்கான தெளிவான மற்றும் தெளிவில்லாத நடைமுறையை நிறுவ சட்டப்பூர்வ திருத்தங்களை இந்த சட்டம் பரிந்துரைத்தது. அத்தகைய நியமனம் எங்கிருந்து வரவேண்டும் மற்றும் யார்/எந்த அலுவலகம் நியமன அதிகாரங்களைப் பயன்படுத்தும் என்பது குறித்து தெளிவு வழங்க வேண்டும். இருப்பினும், மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பில் உள்ள பரிந்துரைகளை ரத்து செய்தது.
2023ஆம் ஆண்டு டெல்லி NCT அரசு vs இந்திய ஒன்றியம் வழக்கில், ஜனநாயக பொறுப்புணர்வை உறுதி செய்யும் 'மூன்று கட்டளைச் சங்கிலி' என்ற கருத்தை உச்சநீதிமன்றம் ஆராய்ந்தது. அரசு ஊழியர்கள் அமைச்சர்களுக்குப் பதிலளிக்க வேண்டும். அமைச்சர்கள் சட்டமன்றத்திற்குப் பதிலளிக்க வேண்டும். சட்டமன்றம் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. எனவே, டெல்லி சட்டமன்றத்திற்கு சட்டமன்ற அதிகாரங்கள் இல்லாத இடங்களைத் தவிர, மற்ற அனைத்து விவகாரங்களிலும் துணை ஆளுநர் அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனைக்குக் கட்டுப்பட்டவர் என்று நீதிமன்றம் கூறியது. இந்த வழக்கு டெல்லி அரசில் சேவைகளுக்கு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பானதாக இருந்தாலும், இந்தத் தீர்ப்பில் உள்ள பகுத்தறிவு சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
என்ன செய்ய வேண்டும்?
நமது கூட்டாட்சி அமைப்பில் ஒரு யூனியன் பிரதேசம் ஒரு முழுமையான மாநிலத்தின் அங்கீகாரத்தை அனுபவிப்பதில்லை. இருப்பினும், சட்டமன்றங்களைக் கொண்ட யூனியன் பிரதேசங்கள் தங்கள் மக்களுக்கு பொறுப்புடைய தங்கள் சொந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கொண்டுள்ளன. ஒன்றிய அளவிலும், யூனியன் பிரதேசத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருக்கும் போது சட்டமன்ற உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக எந்தப் பிரச்சினையையும் உருவாக்காது. இருப்பினும், ஒன்றிய அரசுக்கும் யூனியன் பிரதேச அரசுக்கும் இடையிலான அரசியல் வேறுபாடுகள் யூனியன் பிரதேசங்களில் ஜனநாயக செயல்முறையில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரி போன்ற சிறிய சட்டமன்றங்களில், பரிந்துரைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை மாற்ற முடியும். இது தேர்தலில் வாக்களித்த மக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செல்லக்கூடும்.
ஜம்மு காஷ்மீர் ஒரு சிறப்பு வாய்ந்த மாநிலமாகும், ஏனெனில் அது 2019 வரை ஒரு மாநிலமாக இருந்தது மற்றும் பிற மாநிலங்களைவிட அதிக சுதந்திரத்தைக் கொண்டிருந்தது. உச்சநீதிமன்றம் அதை யூனியன் பிரதேசமாக மாற்ற அனுமதித்த போதிலும், ஒன்றிய அரசு விரைவில் மாநில அங்கீகாரதை மீண்டும் கொண்டுவருவதாகக் கூறியுள்ளது. இதன் காரணமாக, ஜம்மு காஷ்மீர் அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை துணை நிலை ஆளுநர் பரிந்துரைப்பது சரியானதாக இருக்கும். இது ஜனநாயகக் கொள்கையை (democratic principle) நிலைநிறுத்தும்.
R. ரங்கராஜன் ஒரு முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மற்றும் ‘Courseware on Polity Simplified’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.