சுங்கச்சாவடி வசூல் நடைமுறைகள் எவ்வாறு சீர்திருத்தப்பட வேண்டும்? -ஜக்ரிதி சந்திரா

 நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு என்ன பரிந்துரை செய்துள்ளது? FASTags பற்றி அதில் என்ன சொல்லப்பட்டது?


தற்போதைய செய்தி: நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee (PAC)) தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை பரிந்துரைத்துள்ளது. இந்த அறிக்கை ஆகஸ்ட் 12-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.


முக்கிய பரிந்துரைகள் என்ன?


காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.வேணுகோபால் தலைமையிலான பொதுக் கணக்குக் குழு, மூலதனச் செலவுகள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் முழுமையாக மீட்கப்பட்டவுடன் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை நிறுத்த வேண்டும் அல்லது கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று வாதிட்டது. தற்போதைய, சுங்கச்சாவடி நடைமுறைகள், சாலையின் தரம், போக்குவரத்து அளவு அல்லது பயனரின் மலிவு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் காலவரையின்றி வசூலிக்க அனுமதிக்கின்றன என்று குழு கவலை தெரிவித்தது. செலவு வசூலைத் தாண்டி சுங்க வசூலைத் தொடர, முன்மொழியப்பட்ட தன்னிச்சையான மேற்பார்வை அலுவலரின் தெளிவான நியாயப்படுத்தல் மற்றும் ஒப்புதலுடன் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று குழு வலியுறுத்தியது. சுங்கச்சாவடி நிர்ணயம், வசூல் மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்வதற்காக ஒரு சிறப்பு ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவதற்கு குழு முன்மொழிந்தது. சுங்கச்சாவடி கட்டணங்கள் தற்போது ஆண்டுதோறும் நிலையான 3% அதிகரிப்பு மற்றும் மொத்த விலைக் குறியீட்டின் பகுதி குறியீட்டுடன் அதிகரிக்கும் அதே வேளையில், உண்மையான செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவுகள் அல்லது எதிர்கால சேவைத் தேவைகளுக்கு ஏற்ப இந்தக் கட்டணங்கள் நியாயமானதா என்பதை தன்னிச்சையாக மதிப்பீடு செய்ய எந்த நிறுவன வழிமுறையும் இல்லை என்று நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு குறிப்பிட்டது. சாலை கட்டுமானப் பணி நடைபெற்று, அதை முறையாகப் பயன்படுத்த முடியாவிட்டால், மக்கள் சுங்கக் கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று குழு வலியுறுத்தியுள்ளது.


கூடுதலாக, தேவைப்படும்போது தானாகவே கட்டணங்களைத் திரும்பப் பெற அல்லது தள்ளுபடி செய்ய, தற்போதுள்ள டிஜிட்டல் FASTag முறையைப் பயன்படுத்தி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமும் (Ministry of Road Transport and Highways) தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் (National Highways Authority of India (NHAI)) தெளிவான, தொழில்நுட்ப அடிப்படையிலான அமைப்பை அமைக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது. FASTags அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், வருடி கருவிகள் (scanner) சில நேரங்களில் சரியாக வேலை செய்யாததால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன என்று குழு கூறியது. 


ஓட்டுநர்கள் FASTags வாங்க, ரீசார்ஜ் செய்ய அல்லது பரிமாறிக்கொள்ளக்கூடிய சுங்கச்சாவடிகளில் சேவைகளை வழங்க அவர்கள் பரிந்துரைத்தனர். திறமையான சுங்கச்சாவடி நிர்வாகம் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சான்றுகள் அடிப்படையிலான முடிவெடுப்பதை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும், இதன் விளைவாக, நிகழ்நேர போக்குவரத்து இயக்கம், காத்திருப்பு வரிசை நீளம், தனிப்பட்ட பாதை பயன்பாடு மற்றும் திட்டமிடப்பட்ட தாமத காலங்களை ஒருங்கிணைக்கும் ஒரு நேரடி சுங்கச்சாவடி கண்காணிப்பு அமைப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உருவாக்க வேண்டும் என்றும் குழு  கூறுகிறது.


சுங்கச்சாவடி கட்டணம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?


தேசிய நெடுஞ்சாலைச் சட்டம், 1956-ன் பிரிவு 7, தேசிய நெடுஞ்சாலைகளில் வழங்கப்படும் சேவைகள் அல்லது சலுகைகளுக்கு கட்டணம் வசூலிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.  அதே நேரத்தில் பிரிவு 9, இது தொடர்பாக விதிகளை உருவாக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. அதன்படி, பயனர் கட்டணத்தை வசூலிப்பதற்கான கொள்கை, தேசிய நெடுஞ்சாலை கட்டணம் விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம் விதிகள், 2008ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது. நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் அமைச்சக கட்டண விதிகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விகிதங்களை அடிப்படையாகக் கொண்டு பயனர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், இது கட்டுமான செலவு அல்லது அதன் மீட்புடன் தொடர்புடையது அல்ல.


ஏப்ரல் 1, 2008 முதல், ஒவ்வொரு ஆண்டும் கட்டணங்கள் 3% அதிகரித்து வருகின்றன. நெடுஞ்சாலைகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் மாறிவரும் செலவுகளை ஈடுகட்ட, வருடாந்திர மொத்த விலை குறியீட்டில் (Wholesale Price Index (WPI)) கட்டணங்களும் 40% அதிகரிக்கின்றன. ஒரு நெடுஞ்சாலை பொது நிதியுதவி பெற்றால் ஒன்றிய அரசால் அல்லது கட்டமைத்தல்-செயல்படுத்துதல்-பரிமாற்றம் (Build Operate Transfer (BoT)), சுங்கச்சாவடி பரிமாற்றம் (Toll-Operate-Transfer (ToT)) அல்லது உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளையின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த மாதிரிகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றினால் சலுகையாளரால் (concessionaire) கட்டணம் வசூலிக்கப்படும்.


2008-ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு திருத்தம் பயனர் கட்டணங்களை நிரந்தரமாக வசூலிக்க அனுமதித்தது. எனவே, சலுகைக் காலம் முடிந்தால், நெடுஞ்சாலை NHAI-யிடம் ஒப்படைக்கப்படும். மேலும், வசூலிக்கப்படும் கட்டணம் நேரடியாக இந்திய ஒருங்கிணைந்த நிதியத்திற்குச் (Consolidated Fund of India) செல்லும். 2005-06ஆம் ஆண்டில் ரூ.1,046 கோடியாக இருந்த சுங்க வசூல் 2023-24-ஆம்  நிதியாண்டில் ரூ.55,000 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் ரூ.25,000 கோடி இந்திய ஒருங்கிணைந்த நிதியத்திற்கும், மீதமுள்ள தொகை சலுகை பெற்ற சுங்கச்சாவடிக்கும் செல்லும்.


சுங்கச்சாவடியிலிருந்து 20 கிலோமீட்டருக்குள் வசிக்கும் பயனர்களுக்கு அவர்களின் ஆதார் அட்டை அல்லது வேறு ஏதேனும் சான்றுகள் இருந்தால் தள்ளுபடிகள் கிடைக்கும், அதன்பிறகு அவர்கள் மாதாந்திர பாஸ் ரூ.340 பெறுவார்கள். குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர், ஆளுநர்கள், இந்திய தலைமை நீதிபதி, பாதுகாப்பு அமைச்சக பணியாளர்கள், சீருடையில் உள்ள ஒன்றிய மற்றும் மாநில ஆயுதப்படைகள், துணை ராணுவப் படைகள் மற்றும் காவல்துறை, அவசர கால வாகனங்கள், இறுதிச் சடங்கு வேன்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட 23 வெவ்வேறு பிரிவுகளுக்கும் விதிகளின் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது.


அமைச்சகம் எவ்வாறு பதிலளித்தது?


சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக (Ministry of Road Transport and Highways) குழுவின் கவலைகளை ஒப்புக்கொண்டது மற்றும் பயனர் கட்டண நிர்ணய கட்டமைப்பை திருத்துவதற்காக நிதி ஆயோக் உடன் ஒரு விரிவான ஆய்வைத் தொடங்கியுள்ளதாக பொது கணக்குக் குழுவிடம் தெரிவித்தது. அமைச்சக பிரதிநிதிகள் இந்த ஆய்வின் எல்லை இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அது வாகன இயக்க செலவு, வாகன பயன்பாட்டினால் நெடுஞ்சாலைக்கு ஏற்படும் சேதம் மற்றும் பயனரின் பணம் செலுத்தும் விருப்பம் போன்ற அளவுருகளை உள்ளடக்கும் என்றும் சுட்டிக்காட்டினர். மலிவு விலை கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக, அரசு ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வந்த வருடாந்திர FASTag pass-ஐ அறிமுகப்படுத்தியது. இது வணிக நோக்கற்ற வாகனங்களுக்கு ரூ.3,000 விலையில் கிடைக்கிறது. இது 12 மாதங்களில் 200 சுங்க சாவடி கடப்புகளுக்கு அணுகலை வழங்குகிறது — இது ஒரு சுங்க சாவடிக்கு ரூ.15 என செலவைக் குறைக்கிறது.


சுங்கச் சாவடிகளில் சீரான போக்குவரத்து ஓட்டம் தொடர்பாக, மிகச்சிறந்த FASTag வாசிப்பு கருவிகளை தானியங்கி வாகன எண் பதிவு கண்டறியும் காமிராக்களுடன் (ANPR) இணைக்கும் தடையில்லா சுதந்திரமான சுங்கக் கட்டண அமைப்பை உருவாக்கி வருவதாகவும் இது வாகனங்கள் டோல் மையங்களை நிறுத்தாமல் கடந்து செல்வதற்கு உதவுகிறது என்றும் அமைச்சகம் தெரிவித்தது.



Original article:

Share: