உலகளாவிய பட்டினியை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியாவின் பங்கு -மாக்சிமோ டோரெரோ கல்லன்

 உலகப் பட்டினிக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் வலுவானப் பங்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தில் அதன் கொள்கை முதலீடுகளின் விளைவாகும்.


உலகளாவிய நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு இப்போது சரிவைக் காட்டுவதால், பசிக்கு எதிரான போராட்டத்தில் உலகம் முன்னேற்றம் அடையத் தொடங்கியுள்ளது என்பதை இது காட்டுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் புதிதாக வெளியிடப்பட்ட ”உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை 2025” (The State of Food Security and Nutrition in the World 2025) அறிக்கையின்படி, 2024-ல் 673 மில்லியன் மக்கள் (உலக மக்கள் தொகையில் 8.2%) ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் உள்ளனர். 


2023-ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 688 மில்லியனாக இருந்தது. எனவே, நிலைமை மேம்பட்டுள்ளது. இருப்பினும், நாம் இன்னும் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்குத் திரும்பவில்லை. 2018-ம் ஆண்டில், 7.3% மக்கள் மட்டுமே ஊட்டச்சத்து குறைபாடுடன் இருந்தனர். இருப்பினும், COVID-19-ன் போது ஏற்பட்ட கூர்மையான அதிகரிப்புடன் ஒப்பிடும்போது இந்தப் புதிய போக்கு ஒரு நேர்மறையான மாற்றமாகும்.


இந்த உலகளாவிய முன்னேற்றத்தில் இந்தியா முக்கியப் பங்காற்றியுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம், சிறந்த நிர்வாகம் மற்றும் மேம்பட்ட சேவை வழங்கல் ஆகியவற்றால் பெருகிய முறையில் இயக்கப்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான கொள்கை முதலீடுகளின் விளைவாக இந்த ஆதாயங்கள் உள்ளன.


வீட்டு நுகர்வு குறித்த சமீபத்திய தேசிய மாதிரி ஆய்வுத் தரவைப் (National Sample Survey data) பயன்படுத்தி திருத்தப்பட்ட மதிப்பீடுகள், இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு 2020-22-ல் 14.3%-ல் இருந்து 2022-24-ல் 12%-ஆகக் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. 

உண்மையில், இதன் பொருள் 30 மில்லியன் குறைவான மக்கள் பசியுடன் வாழ்கிறார்கள். மக்கள்தொகையின் அளவு மற்றும் COVID-19 தொற்றுநோயால் ஏற்படும் கடுமையான இடையூறுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகப் பார்க்கப்படுகிறது.


பொது விநியோக முறையின் (PDS) மாற்றம்


பொது விநியோக முறை (Public Distribution System (PDS)) இந்த முன்னேற்றத்தின் மையமாக உள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் ஒரு பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது. டிஜிட்டல் மயமாக்கல், ஆதார் அடிப்படையிலான இலக்கு, நிகழ்நேர சரக்கு கண்காணிப்பு மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் இந்த அமைப்பு புத்துயிர் பெற்றுள்ளது. 


மின்னணு விற்பனை புள்ளி இயந்திரங்கள் (Electronic point-of-sale machines) மற்றும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை இயங்குதளம் (One Nation One Ration Card platform) ஆகியவை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த சீர்திருத்தங்கள் இந்தியா முழுவதும் குடிமைப் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடியதாக மாற்றியுள்ளன. இது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு மிகவும் முக்கியமானது.


இந்த கண்டுபிடிப்புகள் தொற்றுநோய் காலத்தில் இந்தியாவானது உணவுக்கான ஆதரவை விரைவாக விரிவுபடுத்த உதவியது. 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொடர்ந்து மானிய விலையில் உணவுப் பொருட்களைப் பெறுவதையும் அவர்கள் உறுதி செய்தனர்.


இப்போது, கலோரிகளின் முன்னேற்றம் ஊட்டச்சத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும். இந்தியாவில், 60%-க்கும் அதிகமான மக்களுக்கு ஆரோக்கியமான உணவு இன்னும் போதுமான அளவில் பூர்த்தியடையவில்லை. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் விலை உயர்ந்தவையாகவும், குளிர்பதனச் சங்கிலிகள் பலவீனமாகவும் உள்ளன. மற்றும் சந்தை இணைப்புகள் திறமையற்றவை என்பதே இதற்கு முக்கிய காரணமாகும். 


கலோரிகளின் தரத்தை மேம்படுத்த இந்தியா முதலீடு செய்யத் தொடங்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, 2021-ல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மான் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM POSHAN)) பள்ளி-உணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் இப்போது உணவுப் பன்முகத்தன்மை மற்றும் ஊட்டச்சத்து உணர்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. இது குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் பொது சுகாதாரத்தில் நீண்டகால முன்னேற்றங்களுக்கு அடித்தளம் அமைக்கிறது.


ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் புதிய தரவு, உணவுப் பணவீக்கம் இருந்தபோதிலும் ஆரோக்கியமான உணவுகளை மிகவும் மலிவு விலையில் மாற்றுவதில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தைக் காட்டுகிறது.


என்ன நடக்கிறது என்பது குறித்து ஒரு தீவிரமான கட்டமைப்பு சவாலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதில் பட்டினியின் அளவு குறைந்து வந்தாலும், ஊட்டச்சத்து குறைபாடு, உடல் பருமன் மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் அதிகரித்து வருகின்றன. இந்த போக்கு பெரும்பாலும் ஏழை நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே காணப்படுகிறது.


வேளாண் உணவு முறையில் மாற்றம் தேவை


இந்தியா தனது வேளாண் உணவு முறையை மாற்றுவதன் மூலம் இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்ய முடியும். இதன் பொருள் பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் விலங்கு சார்ந்த மூலப் பொருட்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் உற்பத்தி மற்றும் மலிவு விலையில் வழங்கப்பட வேண்டும். இவை பெரும்பாலும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அணுகமுடியாததாக உள்ளது. 


இது அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்புகளான குளிர்ப்பதன சேமிப்பு மற்றும் டிஜிட்டல் தளவாட அமைப்புகள் போன்றவற்றில் முதலீடு செய்வதையும், வேளாண் மற்றும் சந்தைக்கு இடையே இழக்கப்படும் உணவில் 13% குறைக்கப்படுவதையும் குறிக்கிறது. இத்தகைய இழப்புகள் நேரடியாக உணவின் கிடைக்கும் தன்மை மற்றும் மலிவு விலை இரண்டையும் குறைக்கின்றன.


கூடுதலாக, பெண்கள் தலைமையிலான உணவு நிறுவனங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (Farmer Producer Organizations (FPO)) உள்ளிட்ட உள்ளூர் கூட்டுறவு நிறுவனங்களுக்கு இந்தியா மேலும் ஆதரவை வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக, காலநிலைக்கு ஏற்ற பயிர்களை பயிரிடுபவர்கள், இவை ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்.


இந்தியா அதன் வேளாண் உணவு முறைகளை மாற்றுவதற்கு அதன் டிஜிட்டல் பலன்களில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். AgriStack, e-NAM மற்றும் புவிசார் தரவுக் கருவிகள் போன்ற தளங்கள் சந்தை அணுகலை வலுப்படுத்தலாம், விவசாயத் திட்டமிடலை மேம்படுத்தலாம் மற்றும் ஊட்டச்சத்து-உணர்திறன் தலையீடுகளின் விநியோகத்தை மேம்படுத்தலாம்.


நம்பிக்கையின் சின்னம்


ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organization(FAO)) குறிப்பிடுகையில், வேளாண் உணவு முறை மாற்றத்தில் இந்தியாவின் முன்னேற்றம் என்பது தேசியத் தேவைகள் மட்டுமல்ல, அவை உலகளாவிய பங்களிப்புகள் ஆகும். வளரும் நாடுகளில் முன்னணியில் உள்ள இந்தியா, டிஜிட்டல் ஆளுகை, சமூகப் பாதுகாப்பு மற்றும் தரவு சார்ந்த விவசாயம் போன்றவற்றில் அதன் கண்டுபிடிப்புகளை உலகளாவிய தெற்கில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நல்ல நிலையில் உள்ளது. இந்தியாவின் அனுபவம் பசியைக் குறைப்பது சாத்தியம் மட்டுமல்ல, அரசியல் விருப்பம், புத்திசாலித்தனமான முதலீடு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும்போது அதை அளவிட முடியும் என்பதைக் காட்டுகிறது.


பசியை ஒழிப்பதில் நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals (SDG)) அடைய இன்னும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில், இந்தியாவின் சமீபத்திய முன்னேற்றம் நம்பிக்கையை அளிக்கிறது. இருப்பினும், இந்த முன்னேற்றத்தைத் தக்கவைக்க, ஊட்டச்சத்தை வழங்குதல், மீள்தன்மையை உருவாக்குதல் மற்றும் வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.


பசிக்கு எதிரான போராட்டத்தில் நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியா தனக்குத்தானே உணவளிக்கும் கட்டத்தை கடந்துவிட்டது. இப்போது, பசியை ஒழிக்கும் உலகளாவிய இலக்கு இந்தியாவின் பங்கைப் பெரிதும் சார்ந்துள்ளது. இந்த இலக்கை அடைவதில் அதன் தலைமை மிக முக்கியமானதாக இருக்கும்.


மாக்சிமோ டோரெரோ கல்லன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (FAO) தலைமைப் பொருளாதார நிபுணர் ஆவார்.



Original article:

Share: