உதவிக்கான அழுகுரல் : பிரதிபலிப்பு மற்றும் செயல்பாட்டை வலியுறுத்துதல் -சுமந்த் குமார்

 பல இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பில் வெற்றிபெற நிறைய முயற்சி செய்கிறார்கள். இந்த தீவிரமான  முயற்சி  அவர்களை சில நேரங்களில் சோர்வடைய செய்கிறது.

 

இந்தியாவின் கல்வி மற்றும் சமூகத்தின் தற்போதைய நிலை, குறிப்பாக மாணவர்களை ஆதரிப்பதில் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் இளைஞர்களை நம்பிக்கையற்றவர்களாக ஆக்குகின்றது. இதனால் அவர்களின் பள்ளி வாழ்க்கையும் மன உளைச்சலுக்கு ஆளாகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த மன அழுத்தம் சில நேரங்களில் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வழிவகுக்கிறது.


உதாரணமாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் படித்து வந்த பீகாரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இறப்பதற்கு முன் ஒரு குறிப்பு எழுதினார். கூட்டு நுழைவுத் தேர்விற்குத் தயாராகும் (Joint Entrance Examination (JEE)) இளைஞர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம், அவரது தற்கொலைக் குறிப்பிலிருந்து தெளிவாகத் தெரிந்தது. 2023 ஆம் ஆண்டில், கோட்டாவில் பல இளைஞர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி, தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதாக அறிக்கையில்  குறிப்பிடப்பட்டு இருந்தது. காவல் துறையின் பதிவுகளின்படி, 2022 இல் 15 மாணவர்களும், 2019 இல் 18 பேரும், 2018 இல் 20 மாணவர்களும் உயிரிழந்துள்ளனர். 2020-21 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, பயிற்சி மையங்கள் பெரும்பாலும்  மூடப்பட்டு இருந்தன. இங்குள்ள மையங்கள் ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்றன.


கோட்டாவில் பயிற்சி மற்றும் மாணவர் நலன்


ஒவ்வொரு ஆண்டும், இந்தியா முழுவதிலுமிருந்து 200,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவப் பள்ளிகளில் சேருவதற்கு மிகவும் முக்கியமான  கூட்டு நுழைவுத் தேர்வின் மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility-cum-Entrance Test (NEET)) போன்ற தேர்வுகளுக்கு படிக்க கோட்டாவுக்கு வருகிறார்கள். அவர்கள் நகரத்தின் பயிற்சி மையங்களில் தங்கியுள்ளனர். இது கோட்டாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது, ஒவ்வொரு ஆண்டும் சுமார் ₹ 10,000 கோடி சம்பாதிக்கிறது. 


மாணவர்கள் தங்கள் இலக்குகளை நோக்கி உழைக்கும் அதே வேளையில், தற்கொலைகளைத் தடுக்க நிறுவனங்கள் சில தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளன. குழந்தைகள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வதைத் தடுக்க அவர்கள் சீலிங் ஃபேன்களில் சிறப்பு சாதனங்களை வைத்துள்ளனர். மேலும் கோட்டாவில் உள்ள விடுதிகளில் இப்போது 'தற்கொலை எதிர்ப்பு அம்சங்கள்' (‘anti-suicide features’) ஏற்படுத்தப்பட்டுள்ளன. விடுதிகளில் மாடிமுகப்பு மற்றும் கூடங்களில் இரும்பு கிரில்களை அமைத்துள்ளனர். ஆனால் கோட்டாவில் உள்ள சுமார் 25,000 விருந்தினர் தங்குமிடங்கள் அனைத்தும் இந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவது கடினம்.   


கோட்டாவில் உள்ள உள்ளூர் அரசாங்கம் மாணவர் தற்கொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக பயிற்சி நிறுவனங்களில் வழக்கமான சோதனையை அவர்கள் நிறுத்திவிட்டனர். மாணவர்களை சிறப்பாக கவனித்துக் கொள்ள விடுதி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உணவை நிர்வகிப்பது, உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குவது, ஆலோசனை வழங்குவது மற்றும் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக நன்றாக இருப்பதை உறுதி செய்வது பற்றி அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். மாணவர்களைக் கவனிப்பதில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்குமாறு விடுதிக்காப்பாளர்களை போலீசார் ஊக்குவிக்கின்றனர். அவர்கள் "தர்வாசே பே தஸ்தக்" (darwaze pe dastak) / கதவைத் தட்டுங்கள் (knock on door) போன்ற பிரச்சாரங்களை ஆதரிக்கிறார்கள். சமையலறை ஊழியர்கள் மாணவர்கள் சாப்பிடவில்லை அல்லது உணவை தவிர்த்துவிட்டு வெளியேறுவதை கவனித்தால் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


2022 ஆம் ஆண்டில், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau (NCRB)) "இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் 2022" (“Accidental Deaths and Suicides in India 2022”) அறிக்கையின்படி, 13,044 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இது அந்த ஆண்டின் தற்கொலைகளில் 7.6% ஆகும். 2019-ல் 10,335ஆக இருந்த மாணவர்களின் தற்கொலைகள் 2020-ல் 12,526 ஆகவும். 2021-ல் 13,089 ஆகவும் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2007 முதல்  2018 க்கு இடையில் கிட்டத்தட்ட 95,000 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதாக 2018 இல் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின் மற்றொரு புள்ளிவிவரம் வெளிப்படுத்துகிறது.


மற்றொரு உண்மை என்னவென்றால், இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், குறிப்பாக 53.7% பேர், 25 வயதிற்குட்பட்டவர்கள். இருப்பினும், அத்தியாவசியத் திறன்கள் இல்லாததால், பல இளைஞர்கள் வேலை சந்தையில் நுழைவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில், தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் எணிக்கை அதிகரித்து வருகின்றது. வேலைவாய்ப்பு பற்றக்குறியே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது 


கல்வி முறை


இன்று, இந்தியாவில் போதுமான நல்ல வேலைகள் வாய்ப்புகள் இல்லை. அரசு கல்லூரிகளில் குறைந்த இடங்களே உள்ளன மற்றும் தனியார் பள்ளிகள் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன. இது போட்டியை மிகவும் கடினமாக்குகிறது. மேலும் இது சரிசெய்யப்பட வேண்டிய ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. வெற்றி பெறுவதற்கான அழுத்தம் மாணவர்களை பெரிதும் பாதிக்கிறது.  சிலர் கல்வியில் சிறந்து விளங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மற்றவர்கள் குறிப்பிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர அழுத்தம் கொடுக்கப்படுகிறார்கள். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாவிட்டால் பலர் விமர்சனங்களை எதிர்கொள்கின்றனர். அழுத்தம் அதிகமாக இருக்கும்போது, சிலர் சோகமாக அதிலிருந்து தப்பிக்க தேர்வு செய்கிறார்கள்.  பெற்றோரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாதது இளைஞர்களை சங்கடமாகவும், சோகமாகவும், நம்பிக்கையற்றவராகவும் உணர வைக்கும். இந்த எதிர்மறை உணர்வுகளைத் தவிர்க்க நம் இளைய தலைமுறையினருக்கு உதவ ஒரு புரிதல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்குவது முக்கியம்.  

 

மாணவர்கள் பெரும்பாலும் பள்ளியில் சிறப்பாகச் செயல்படுவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள், தங்கள் சமூக வாழ்க்கையை மறந்துவிடுகிறார்கள், முக்கியமான உறவுகள் மற்றும் செயல்பாடுகளை இழக்கிறார்கள். இளம் மாணவர்கள் தங்கள் போராட்டங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வதைப் பார்ப்பது கவலையளிக்கிறது. பள்ளிகள் கூட எப்போதும் மாணவர்களுக்குத் தேவையான உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குவதில்லை. ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த மாணவர்களைப் பொறுத்த வரையில், அவர்கள் பாகுபாட்டையும் எதிர்கொள்ள வேண்டும். இது விஷயங்களை இன்னும் கடினமாக்குகிறது. இந்த இளைஞர்களுக்கு உதவ நம் சமூகத்தை அதிக ஆதரவாகவும், புரிதல் கொண்டதாகவும் மாற்ற வேண்டும். துன்பத்தில் உள்ளவர்கள் தொழில்முறை ஆலோசனைக்கான அணுகலைப் பெற வேண்டும். அதன் மூலம், அவர்கள் மனநல ஆலோசகர்களை எளிதாகப் பார்க்கலாம் அல்லது உதவி எண்களுக்கு  (help line) அழைக்க முடியும்.  


சுமந்த் குமார், அலையன்ஸ் பல்கலைக்கழகத்தின், அலையன்ஸ் ஸ்கூல் ஆஃப் லிபரல் ஆர்ட்ஸில் (Alliance School of Liberal Arts) உதவி பேராசிரியராகப் பணியாற்றுகிறார். 




Original article:

Share: