மெக்காலேயின் கல்வி குறித்த குறிப்பு நிச்சயமாக வரலாற்றை மாற்றியது. ஆனால், அது இந்தியாவை அழிக்கவில்லை அல்லது அதன் கலாச்சாரத்தை அழிக்கவில்லை. மாறாக, மெக்காலே திட்டமிட்டபடி, ஆங்கிலம் ஒரு புதிய இந்திய வர்க்கத்தை உருவாக்கியது.
19-ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் சட்டமன்ற உறுப்பினர் தாமஸ் பாபிங்டன் மெக்காலே குறித்து பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஆறாவது ராம்நாத் கோயங்கா விரிவுரையின்போது தெரிவித்த கருத்துக்கள் பலவிதமான விமர்சனங்களைத் தூண்டியுள்ளன.
மோடி, இந்தியாவில் ஆங்கிலக் கல்விக்கு ஊக்கமளித்த 1835-ஆம் ஆண்டின் மெக்காலேவின் கல்வி அறிக்கையானது ("Macaulay's 1835 Minute on Education") ஒரு கலாச்சார "அடிமைத்தனத்தின்" மனநிலையை உருவாக்கியதாகக் கூறினார். மேலும், அது இந்தியாவின் கலாச்சார வேர்களிலிருந்து இந்தியாவைத் துண்டித்து, ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதன் மூலம் அதன் தன்னம்பிக்கையைச் சேதப்படுத்தியது என்றும் அவர் மேலும் கூறினார்.
பிரதமர் நரேந்திரா மோடி அவர்களின் கருத்துக்கள் பலரை வியக்க வைத்தன. குறிப்பாக, இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி, திறமையான பணியாளர்கள் மற்றும் உலகளாவிய எழுச்சி ஆகியவை பெரும்பாலும் ஆங்கிலத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், 19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு ஆங்கிலத்துடன் ஏற்பட்ட தற்செயலான தொடர்பு அதன் முன்னேற்றத்திற்கு உதவியது என்று பலர் நம்புகின்றனர்.
ஆனால், மோடி அவர்கள் தனது அரசு ஆங்கில மொழிக்கு எதிரானதல்ல என்றும் மாறாக இந்திய மொழிகளுக்கு வலுவாக ஆதரவளிக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தினார். ஜப்பான், தென் கொரியா, மற்றும் சீனா ஆகிய நாடுகள் மேற்கத்திய நடைமுறைகளை ஏற்றுக்கொண்டாலும், தங்கள் தாய்மொழிகளைக் கைவிடாத நாடுகளை உதாரணமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இந்தியாவின் வரலாறு வேறுபட்டிருந்தால் அதன் வளர்ச்சி வேறுபட்டு இருக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆனால், கடந்தகாலம் மாற்றமுடியாத ஒன்று என்பதால், இது ஒரு "என்னவாக இருந்திருக்கும்" என்ற கேள்வியாகவே உள்ளது. இத்தகைய கற்பனையான கேள்விகள் உண்மையான நிகழ்வுகளைவிட அரசியல் மற்றும் தேசியவாதத்தை அடிக்கடி வடிவமைக்கின்றன.
மேலும், ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனாவின் வரலாறுகள் இந்தியாவின் வரலாற்றிலிருந்து மிகவும் வேறுபட்டவை என்றும் குறிப்பிட்டார். அவற்றின் மொழி மற்றும் கலாச்சாரக் கொள்கைகள் பெரிய வெற்றியையும் தீவிரமான பிரச்சினைகளையும் கொண்டுள்ளன. எனவே, அவற்றை இந்தியாவிற்கு ஒரு சரியான முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்
இந்தியாவில் ஆங்கிலம் குறித்த விவாதங்கள் ஒருபோதும் எளிமையாக இருந்ததில்லை, அது சுதந்திரப் போராட்டத்தின் போதும் சரி, சுதந்திரத்திற்குப் பின்னரும் சரி. ஜனநாயகம், தாராளமயம் மற்றும் நவீன தேசம் பற்றிய கருத்துக்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தின் மூலமாகவே வந்தன, பின்னர் அவை பிராந்திய மொழிகளுடன் கலந்து, நாடு முழுவதும் ஒரு கலாச்சார மறுமலர்ச்சியைத் தூண்டியதாகத் தெரிவிக்கின்றனர்.
மிக முக்கியமாக, இந்தியா போன்ற அதிகபட்ச பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில், குறிப்பாக துணைத் தேசியவாதங்கள் அல்லது சாதி மோதல்கள் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் விடுத்தபோது, ஆங்கில மொழியானது பதட்டங்களைத் தணிக்க உதவியுள்ளது. பல ஆண்டுகளாக, கூட்டாட்சி தத்துவம் ஆங்கிலத்தை நம்பியுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்தியா போன்ற மொழியியல் ரீதியாக சிக்கலான ஒரு நாட்டில் ஆங்கிலம் ஒரு நிலைப்படுத்தும் மொழியாகக் கருதப்படுகிறது.
தென் இந்தியா “இந்தி ஆதிக்கத்தை” எதிர்த்தபோதெல்லாம், ஆங்கில மொழியானது ஜனநாயகத்தை சமநிலைப்படுத்தும் ஒரு கருவியாகச் செயல்பட்டு, மிகவும் வேறுபட்ட கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளுக்கு இடையே தொடர்பை சாத்தியமாக்கியது. ஒடுக்கப்பட்டவர்கள், குறிப்பாக தலித்துகள், ஆங்கிலத்தை சாதிப் பாகுபாட்டில் இருந்து தப்பிக்கும் ஒரு வழியாகப் பார்த்தனர். காங்கிரஸின் தலைவர்கள் மேற்கத்திய உடைகளை எரித்தபோதுகூட, அவற்றை அணியத் தேர்ந்தெடுத்து அம்பேத்கர் இதனைப் பிரபலமாக வலியுறுத்தினார். பிராந்திய மொழிகள் வளமானவைதான், ஆனால் தலித்துகளைப் பொறுத்தவரை, அவற்றில் சாதி அடையாளங்களும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன — இந்த அம்சம் ஆங்கிலத்தில் இல்லை என்றும் கூறப்படுகிறது.
மெக்காலேயின் காலத்திலும்கூட, ஆங்கில மொழியை இந்தியாவிற்குள் கொண்டு வருவது ஒரு சுலபமான தெரிவாக இருக்கவில்லை. அதை இந்தியர்கள் எதிர்க்கவில்லை என்றாலும் கிழக்கத்தியவாதிகளான பிரிட்டிஷ் அறிஞர்களுக்கும், மக்காலே மற்றும் கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங்க் போன்ற ஆங்கில ஆதரவாளர்களுக்கும் இடையில்தான் மோதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு குழுக்களுமே காலனி ஆதிக்கத்தை ஆதரித்தன. ஆனால், இந்தியர்களை அணுகுவது மற்றும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவது எப்படி என்பதில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது என்றும் தெரிவிக்கின்றனர்
மெக்காலேயின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜரீர் மசானி குறிப்பிடுகையில், தத்துவஞானி ஜான் ஸ்டூவர்ட் மில், கிழக்கிந்திய கம்பெனியின் தலைவர்களால் ஆதரிக்கப்பட்டு (1835-ஆம் ஆண்டில் இந்தியா இன்னும் பிரிட்டிஷ் ஆளுகையின்கீழ் வரவில்லை), புதிய ஆங்கிலக் கொள்கையை விமர்சித்து ஏகாதிபத்திய அரசாங்கத்திற்கு எழுதினார். இந்தியர்கள் ஆங்கிலத்தை தங்கள் மதத்திற்கு ஒரு அச்சுறுத்தலாகக் கருதக்கூடும் என்று மில் எச்சரித்தார். மேலும், ஆங்கிலத்தைத் தழுவிய இந்தியர்கள் அரசாங்க வேலைகளைப் பெறுவதற்குத் தேவையான அளவு மட்டுமே கற்றுக்கொள்வார்கள், ஆழமான அறிவிற்காக அல்ல என்றும் அவர் வாதிட்டார்.
மக்கள் தங்கள் தாய்மொழிகளில் சிறப்பாகக் கற்கிறார்கள் என்று அவர் வாதிட்டார். இந்திய மொழிகள், சமஸ்கிருதம் மற்றும் அரபு மொழிகளிலிருந்து சொற்களைப் பயன்படுத்தி வளர வேண்டும் என்றார். எனவே, அவருடைய கூற்றுப்படி, சாதாரண இந்தியர்களிடையே அறிவைப் பரப்புவதற்கு கிழக்கத்தியவாதிகளே, மேற்கத்தியவாதிகளைவிட மிகவும் பொருத்தமானவர்கள் என்றும் குறிப்பிட்டார். மேலும், சொந்தமாக ஆங்கிலம் கற்க வசதி உள்ளவர்களுக்கு அடிப்படை ஆங்கிலம் கற்பிப்பதற்காக பொதுப்பணம் செலவிடப்படக் கூடாது என்றும் அவர் கூறினார். இதை மில்லின் கருத்து என்று மசானி விளக்கினார். ஆனால், இந்தியர்களிடையே ஆங்கிலம் கற்க ஏற்கனவே ஒரு வலுவான விருப்பம் உள்ளது என்று மெக்காலே அதற்குப் பதிலளித்தார்.
மெக்காலேயின் குறிப்பின் வரலாற்றையும் அது எவ்வாறு கொள்கையானது என்பதையும் பார்க்கும்போது, மெக்காலே இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே, 1834-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் லார்ட் பென்டிங்க் ஏற்கனவே ஆங்கிலக் கல்வியை சமூக சீர்திருத்தத்துடன் இணைத்திருந்தார் என்பது தெளிவாகிறது. அவர் ராஜா ராம்மோகன் ராய் போன்ற சீர்திருத்தவாதிகளுடன் நெருக்கமாகவும் இருந்தார்.
தொடக்கத்தில், இந்தியாவில் ஆங்கிலக் கல்வி என்பது கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கான ஒரு கருவியாகக் கருதப்பட்டது. ஆனால், மெக்காலேவின் கைகளில், அது ஒருவிதமான “தாராளவாத ஏகாதிபத்தியமாக” மாறியது. ஒரு விக் கட்சி (Whig party) அரசியல்வாதியான மெக்காலே, ஆங்கிலக் கல்வி ஒரு சமத்துவ நோக்கத்திற்கு சேவை செய்ய முடியும் என்று நம்பினார். மசானி குறிப்பிட்டதாவது, ரோமானிய குடிமக்கள் ஒருகாலத்தில் தங்கள் ஆட்சியாளர்களுடன் சமமானவர்களாக இருந்தது போல, இந்தியர்களும் இறுதியில் ஆங்கிலேயருக்குச் சமமானவர்களாக மாற வேண்டும் என்று மெக்காலே விரும்பினார். அவருக்கு கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதில் ஆர்வம் இல்லை என்றும் மாறாக அவரது நோக்கம் அதிக மதச்சார்பற்ற, கலாச்சார மற்றும் அரசியல் செல்வாக்கு செலுத்துவதாக மட்டுமே இருந்தது என்றும் கூறப்படுகிறது.
மெக்காலே இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே, வங்காள மறுமலர்ச்சி (Bengali renaissance) ஏற்கனவே தொடங்கிவிட்டது. பிரம்ம சமாஜம் (Brahmo Samaj) ஐரோப்பிய அறிவொளி சிந்தனைகளை உபநிடதங்களுடன் (Upanishads) இணைக்க முயன்றது. கிழக்கு மற்றும் மேற்கு சிந்தனைகளை இணைக்கும் ஒரு கலாச்சார இயக்கம் இருந்தது. கல்கத்தாவில் இருந்த இந்து கல்லூரியில் (Hindu College) (1817) ஏற்கனவே ஆங்கிலம், அறிவியல் மற்றும் ஐரோப்பிய இலக்கியங்கள் கற்பிக்கப்பட்டது. புதிய சமஸ்கிருதக் கல்லூரி அறிவை முன்னேற்றுவதற்குப் பதிலாக மக்களை அறியாமையிலேயே வைத்திருக்கும் என்று ராஜா ராம் மோகன் ராய் அதனைக் கடுமையாக எதிர்த்தார் என்றும் கூறுகின்றனர்
மெக்காலே, கல்கத்தாவுக்கு வருவதற்கு முன்பே, மெட்ராஸ் மற்றும் மைசூரில் ஓய்வுபெற்ற அரசர்களுடனான சந்திப்புகள், கல்வியைப் பற்றிய அவரது கருத்துக்களை வடிவமைத்தன. மெட்ராஸ் நவாப், ஒரு முறையான கல்வி பெற்றிருந்தால், கர்நாடகத்தை மேம்படுத்துவதில் அவர் ஒரு சிறந்த சொத்தாக இருந்திருக்க முடியும் என்று நவாப் குறித்து எழுதினார். மைசூர் உடையார் அரசனைப் பொறுத்தவரை, கல்வி இல்லாமல் ஒருவருக்கு அதிகாரத்தைக் கொடுத்து, பின்னர் தோல்வியடைந்ததற்காக அவர்களைத் தண்டிப்பது கொடுமையானது மற்றும் முட்டாள்தனமானது என்று அவர் கூறினார். எதிர்காலத்தில் அத்தகைய தவறுகளைத் தடுக்க அவர் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த அனுபவங்களிலிருந்தும் கருத்துக்களிலிருந்தும் மெக்காலேயின் குறிப்பு (Macaulay’s Minute) வந்தது, இது மறுக்கமுடியாமல் வரலாற்றை மாற்றியது. அது இந்தியாவை அழிக்கவோ அதன் கலாச்சாரத்தை அழிக்கவோ இல்லை. ஆங்கிலம் இன்றும் இருப்பது போலவே, பெரும்பாலும் ஒரு உயர் வர்க்கத்தினரின் மொழியாகவே நீடித்தது. மெக்காலே நோக்கம் கொண்டபடி, அது ஆங்கிலக் கல்வி கற்ற இந்தியர்களின் ஒரு புதிய வர்க்கத்தை உருவாக்கியது.
ஸ்ரீனிவாசராஜு, சமீபத்திய நூலான "The Conscience Network: A Chronicle of Resistance to a Dictatorship" -ன் ஆசிரியர் ஆவார்.
original link:
Cultural slavery or equal citizens? The liberal imperialism of Macaulay