வழங்குநர்களுக்கு ஏன் இழப்பீடு வழங்கப்படுகிறது? அணுசக்தி பாதிப்புகளுக்கான குடிமையியல் பொறுப்புச் சட்டத்தில் (Civil Liability for Nuclear Damage Act (CLNDA) இந்தச் சட்டம் எதை மாற்றுகிறது? பொறுப்பு வரம்பை நிர்ணயிப்பது தார்மீக அபாயத்தை' உருவாக்குமா? கடந்தகால அணுசக்தி இலக்குகள் ஏன் தவறவிடப்பட்டன?
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட சாந்தி சட்டம் (அணு ஆற்றல் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாட்டுச் சட்டம்) (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India Act (SHANTI Act)), அணுசக்தித் துறையைத் தனியார் நிறுவனங்களுக்கும் திறந்து விடுகிறது. மேலும், இது அணுசக்தி பாதிப்புகளுக்கான குடிமையியல் பொறுப்புச் சட்டத்தின்கீழ் (CLNDA) உள்ள இழப்பீட்டு கட்டமைப்பிலும் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. குறிப்பாக, வழங்குநர் பாதுகாப்பு மற்றும் இழப்பீட்டு உச்சவரம்பு ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த சிக்கல்களை எழுப்பியுள்ளன.
சாந்தி சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?
இந்தச் சட்டம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
முதலாவதாக, இது தனியார் நிறுவனங்கள் அணு மின் நிலையங்களை நடத்த அனுமதிக்கிறது. இதன் மூலம் இந்தத் துறையில் ஒன்றிய அரசுக்கு இருந்த தனிப்பட்ட அதிகாரம் முடிவுக்கு வருகிறது. இரண்டாவதாக, விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் மின் நிலையத்தை நடத்துபவரே ஏற்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அணுசக்தி உபகரணங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பழுதடைந்த உபகரணங்களால் விபத்து ஏற்பட்டால் விநியோககர்கள் மீது வழக்கு தொடர மின் நிலைய நடத்துனர்களுக்கு இருந்த "மீட்பு உரிமை" இப்போது நீக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான இழப்பீட்டுத் தொகை சிறிய மின் நிலையங்களுக்கு ₹100 கோடி எனவும், பெரிய மின் நிலையங்களுக்கு ₹3,000 கோடி எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பங்கையும் சேர்த்து, ஒரு விபத்துக்கான மொத்த இழப்பீட்டு வரம்பு 300 மில்லியன் (சுமார் ₹3,900 கோடி) சிறப்பு வரைதல் உரிமைகள் (Special Drawing Rights) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் அணு ஆற்றல் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தின் (CLNDA) பிரிவு 46-ஐ நீக்கியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவியல் சட்டம் உள்ளிட்ட பிற சட்டங்களின்கீழ் தீர்வு காண்பதற்கான வழிமுறை தடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, இது அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திற்கான (Atomic Energy Regulatory Board) ஒரு சட்ட கட்டமைப்பை உருவாக்குகிறது; ஆனால், அதன் உறுப்பினர்கள் அணுசக்தி ஆணையத்தால் (Atomic Energy Commission) அமைக்கப்பட்ட ஒரு குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறுவதன் மூலம், அந்த வாரியத்தின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது.
சட்டம் ஏன் வழங்குநர்களுக்கு இழப்பீடு வழங்குகிறது?
அனைத்து பெரிய விபத்துகளிலும் வடிவமைப்பு குறைபாடுகள் முக்கியப் பங்கு வகித்துள்ளன.
ஃபுகுஷிமா அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட GE (General Electric) நிறுவனத்தின் 'மார்க்-1' (Mark-1) பாதுகாப்பு வடிவமைப்பில் உள்ள பலவீனம், 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரிடரை மேலும் மோசமாக்கியதாக பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். 1986-ஆம் ஆண்டு நிகழ்ந்த செர்னோபில் விபத்திற்கு, அந்த அணு உலையின் "நேர்மறை மின் திறன் குணகம்'" (positive power coefficient) மற்றும் அதன் "குறைபாடுள்ள அவசரகால நிறுத்த அமைப்பு" (deficient emergency shutdown system) ஆகியவையே இரண்டு முக்கிய காரணங்கள் என்று சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு ஆலோசனை குழுவின் அறிக்கை தெரிவித்தது. அதேபோல், 1979-ஆம் ஆண்டு நிகழ்ந்த த்ரீ மைல் தீவு (Three Mile Island) விபத்து குறித்து ஆய்வு செய்த அமெரிக்க அதிபர் ஆணையம், அணு உலையின் கட்டுப்பாட்டு அறை வடிவமைப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்தது. மேலும், அந்த உலையை வழங்கிய நிறுவனம், அதில் இருந்த ஆபத்துகள் பற்றி இயக்குநருக்குத் தெரிவிக்காததைக் கடுமையாக விமர்சித்தது. எனவே, சாந்தி (SHANTI) சட்டத்தின்கீழ் அணு உலை விநியோகஸ்தர்களுக்கு (Suppliers) வழங்கப்படும் இழப்பீட்டுப் பொறுப்பிலிருந்து விலக்கு அளிப்பதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையுமில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இருப்பினும், பன்னாட்டு நிறுவனங்கள், குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள், இந்தியாவில் ஏற்படக்கூடிய இழப்பீடு பொறுப்புகள் குறித்து கடுமையாகப் புகார் அளித்தனர்.
2026-ஆம் ஆண்டின் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டம் (U.S. National Defense Authorization Act), இந்தியாவின் உள்நாட்டு அணுசக்தி பொறுப்பு விதிகளை சர்வதேச நெறிமுறைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என்று தெளிவாகக் கோருகிறது; இந்த சர்வதேச நெறிமுறைகள் அணுசக்தி விநியோகஸ்தர்களுக்கு சாதகமாக உள்ளன.
சாந்தி (SHANTI) சட்டத்தின்படி, வழங்கப்பட்ட உபகரணங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்து அதனால் விபத்துக்கள் ஏற்பட்டாலும், அந்த உபகரணங்களை வழங்கிய விநியோகஸ்தர்கள் இந்தியாவில் எந்தவிதமான குடிமையியல் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக மாட்டார்கள் என்பதை இச்சட்டம் உறுதி செய்கிறது.
ஏற்படக்கூடிய சேதத்தின் மதிப்போடு ஒப்பிடும்போது பொறுப்பு வரம்பு எந்த அளவில் உள்ளது?"
ஜப்பான் பொருளாதார ஆராய்ச்சி மையம் (The Japan Centre for Economic Research), புகுஷிமா அணு உலை விபத்தினால் சுமார் 80 டிரில்லியன் யென் (₹46 லட்சம் கோடி) வரை இழப்பு ஏற்படலாம் என்று மதிப்பிட்டுள்ளது. அதேபோல், செர்னோபில் விபத்து குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட கூட்டு அறிக்கையில், பெலாரஸ் நாடு மட்டுமே தனக்கு ஏற்பட்ட இழப்பு 235 பில்லியன் டாலர் (₹21 லட்சம் கோடி) என மதிப்பிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கோவா மாநிலத்தின் பரப்பளவிற்கு இணையான “செர்னோபில் தவிர்ப்பு மண்டலம்” (Chernobyl Exclusion Zone) எனப்படும் இடம், கடந்த 40 ஆண்டுகளாக மக்கள் யாரும் வசிக்க முடியாத இடமாகவே இருந்து வருகிறது.
இதற்கு நேர்மாறாக, சாந்தி (SHANTI) சட்டம் நிர்ணயித்துள்ள இழப்பீட்டு வரம்பு, இந்தத் தொகைகளில் சுமார் ஆயிரத்தில் ஒரு பங்கு மட்டுமே ஆகும். இந்தியா சர்வதேச துணை இழப்பீட்டு ஒப்பந்தத்தின் (Convention on Supplementary Compensation) நிதியைப் பயன்படுத்தினாலும்கூட, ஒரு பெரிய விபத்தினால் ஏற்படும் சேதத்தில் 1 சதவீத அளவைக் கூட நெருங்க முடியாது என்று தெரிவிக்கின்றனர். இதனால், இந்தியாவில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வரம்பிற்கு மேல் இழப்பீடு கோர சட்டப்பூர்வ உரிமை இருக்காது. மேலும், அவர்கள் தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் ஏற்படும் இழப்புகளைத் தாங்களே சுமக்க வேண்டியிருக்கும். இத்தகைய வரம்பு இல்லையென்றால், தனியார் அணுசக்தி நிறுவனங்கள் கடுமையான நிதி அபாயங்களைச் சந்திக்க நேரிடும் என்கின்றனர். எனவே, ஒருவேளை அணுசக்தி விபத்து ஏற்பட்டால், அந்த நிறுவனங்களின் நலனைப் பாதுகாப்பதற்கே இந்த சாந்தி (SHANTI) சட்டம் வழிவகை செய்வதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு விளைவுகள் என்ன?
முகவர்களின் செயல்களின் விளைவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது ஒரு "தார்மீக அபாயத்தை" உருவாக்குகிறது. பொறுப்பு வரம்புடன் கூடுதலாக, இந்தச் சட்டம் "கடுமையான இயற்கை பேரழிவால்" ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்குகிறது. இது அபாயகரமான தொழில்களுக்கான இந்தியாவின் "முழுமையான பொறுப்பு" கட்டமைப்பை மாற்றியமைக்கிறது. ஃபுகுஷிமா (Fukushima) பேரழிவு ஒரு சுனாமியால் ஏற்பட்டது என்ற உண்மையைப் புறக்கணிக்கிறது. இது நெகிழ்வுத்தன்மை கொண்ட மற்றும் பாதுகாப்பான ஆலைகளை நிறுவுவதற்கான தொழில்துறையின் ஆர்வத்தைக் குறைக்கிறது.
இந்தியாவில் அணுசக்தி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?
இந்தியாவின் மின்சார உற்பத்தியில் அணுசக்தி பல ஆண்டுகளாக சுமார் 3 சதவீதம் மட்டுமே பங்களித்து வருகிறது. 1980-ஆம் ஆண்டுகளில், 2000-ஆம் ஆண்டிற்குள் 10 கிகாவாட் (Giga Watt (GW)) இலக்கை எட்ட அரசாங்கம் திட்டமிட்டது. அதேபோல் 2006-ஆம் ஆண்டில், 2020-ஆம் ஆண்டிற்குள் 20 கிகாவாட் இலக்கை அடைய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், உண்மையான உற்பத்தித்திறன் 2000-ஆம் ஆண்டில் 2.86 கிகாவாட் மற்றும் 2020-ஆம் ஆண்டில் 6.78 கிகாவாட் என்ற அளவிலேயே இருந்தது. அதிக செலவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களே இந்த பின்னடைவுக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. அரசாங்கம் குறிப்பிடும் சிறிய மட்டு அணு உலைகள்(Small Modular Reactors) இன்னும் சோதிக்கப்படாத நிலையில் உள்ளன. மேலும், அவை ஒரு யூனிட் மின்சாரத்திற்கு அதிக செலவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 2047-ஆம் ஆண்டுக்குள் 100 கிகாவாட் என்ற புதிய இலக்கு சாத்தியமற்றதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சட்டத்தின் பொருளாதார முக்கியத்துவம் என்ன?
குறைந்த அளவிலான உற்பத்தித் திறன் கொண்டவை என்ற போதிலும், அணு உலைகள் இன்றும் பெரிய வணிக வாய்ப்புகளை வழங்குகின்றன. உதாரணமாக, அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்தால் (Westinghouse Electric Company) இரண்டு AP1000 அணு உலைகள் தலா சுமார் 18 பில்லியன் டாலர் செலவில் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டன. இந்தியாவின் சாந்தி சட்டம் (SHANTI Act), தனியார் நிறுவனங்களும் சர்வதேச விநியோகஸ்தர்களும் இத்தகைய திட்டங்கள் மூலம் கடுமையான கட்டுப்பாடுகள் அல்லது விபத்துகளுக்கான பொறுப்புகள் ஏதுமின்றி லாபம் ஈட்ட அனுமதிப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
சுவ்ரத் ராஜு, அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அமைதிக்கான கூட்டமைப்புடன் (Coalition for Nuclear Disarmament and Peace) தொடர்புடைய ஒரு இயற்பியல் ஆய்வாளர் ஆவார்.
Original article : A case against the SHANTI Act -Suvrat Raju