எகிப்தின் மன்னர்களின் பள்ளத்தாக்கில் (Valley of the Kings) கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள், பண்டையகால வணிகத் தொடர்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. -என். சாய் சரண்


 இந்தியப் பயணிகள் கல்லறைகளின் உட்புறத்தில் தங்கள் பெயர்களை எழுதும் பொதுவான வழக்கத்தைப் பின்பற்றியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


பண்டைய தமிழகம், இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் ரோமானியப் பேரரசு ஆகியவற்றிற்கு இடையே இருந்த வணிகத் தொடர்புகள் குறித்த புதிய விவரங்களை ஒரு முக்கிய கண்டுபிடிப்பு வெளிப்படுத்தியுள்ளது. எகிப்தின் 'மன்னர்களின் பள்ளத்தாக்கு' (Valley of the Kings) பகுதியில் உள்ள கல்லறைகளில், கி.பி. 1-ஆம் நூற்றாண்டு முதல் 3-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த தமிழ்-பிராமி, பிராகிருதம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பொறிக்கப்பட்ட சுமார் 30 கல்வெட்டுகளை இரண்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


பாரிஸில் உள்ள பிரெஞ்சு ஆசியக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த சார்லோட் ஷ்மிட் (Charlotte Schmid) மற்றும் சுவிட்சர்லாந்தின் லொசேன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இங்கோ ஸ்ட்ராச் (Ingo Strauch) ஆகியோர் மேற்கொண்ட 2024–25 ஆய்வின் போது இந்த கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. 1926-ஆம் ஆண்டு 'மன்னர்களின் பள்ளத்தாக்கில்' (Valley of the Kings) ஆய்வு செய்து, 2,000-க்கும் மேற்பட்ட கிரேக்கச் சுவர் எழுத்துக்களை (graffiti) ஆவணப்படுத்திய பிரெஞ்சு அறிஞர் ஜூல்ஸ் பெய்லெட் என்பவரின் முந்தைய பணியைத் தொடர்ந்து, இந்தக் குழுவினர் தீபன் நெக்ரோபோலிஸில் (Theban Necropolis) உள்ள ஆறு கல்லறைகளில் இவற்றை பதிவு செய்தனர்.


தற்போது நடைபெற்று வரும் சர்வதேச தமிழ் கல்வெட்டியல் மாநாட்டில், 'மன்னர்களின் பள்ளத்தாக்கிலிருந்து இந்தியா வரை: எகிப்தில் இந்தியக் கல்வெட்டுகள்' என்ற தலைப்பில் அறிஞர்கள் தங்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். அதில், இந்தக் கல்வெட்டுகளை உருவாக்கியவர்கள் இந்திய துணைக் கண்டத்தின் வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்றும், அவர்களில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக இருந்தனர் என்றும் அறிஞர்கள் தெரிவித்தனர்.


இந்தக் கல்லறைகளுக்குத் தாங்கள் வந்ததற்கான அடையாளமாக, அங்குள்ள அறைகள் மற்றும் நடைபாதைகளின் சுவர்களில் பார்வையாளர்கள் தங்கள் பெயர்களைச் செதுக்கிச் சிறிய கல்வெட்டுகளையும் கிறுக்கல்களையும் (graffiti) விட்டுச் சென்றுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்தக் கல்லறைகளின் உள்ளே மற்ற மொழிகளில், குறிப்பாகக் கிரேக்க மொழியில் ஏராளமான கிறுக்கல்கள் உள்ளன. அவற்றோடு சேர்த்தே இந்த இந்தியக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இத்தகைய சூழலில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த வழக்கத்தைப் பின்பற்றியே இந்தியப் பார்வையாளர்களும் கல்லறைகளின் உட்புறத்தில் தங்கள் பெயர்களைப் பொறித்துச் சென்றுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 


சிகை கொற்றன் (Cikai Koṟraṉ) என்ற பெயர் மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ளது. இது ஐந்து கல்லறைகளில் மொத்தம் எட்டு முறை பொறிக்கப்பட்டுள்ளது. நுழைவாயில்களுக்கு அருகிலும், உட்புறச் சுவர்களின் உயரமான இடங்களிலும் உள்ள பிற கிறுக்கல் அடையாளங்களுக்கு நடுவே இப்பெயர் காணப்பட்டது. ஒரு கல்லறையில், நுழைவாயிலில் சுமார் நான்கு மீட்டர் உயரத்தில் இப்பெயர் இடம்பெற்றுள்ளது என்று ஸ்ட்ராச்  தெரிவித்துள்ளார்.


சிகை கொற்றன் (Cikai Koṟṟaṉ) என்ற பெயர் பல தகவல்களை வெளிப்படுத்துகிறது. இதன் முதல் பகுதியான 'சிகை', சமஸ்கிருத சொல்லான 'ஷிகா' (śikhā) என்பதோடு தொடர்புடையதாக இருக்கலாம். இதற்கு 'குடுமி' அல்லது 'கிரீடம்' என்று பொருள் கூறப்படுகிறது. இது ஒரு பொதுவான பெயராக இல்லாவிட்டாலும், இதன் இரண்டாம் பகுதியான 'கொற்றன்' என்பது முற்றிலும் தனித்துவமான தமிழ்ச் சொல்லாகும். இதற்குப் போர்க்குணமிக்க வலுவான பின்னணி உண்டு என்கிறார். 'கொற்றம்' என்ற வேர்ச் சொல்லிலிருந்து இது உருவானது என்றும் இதற்கு 'வெற்றி' மற்றும் 'பகைவரை அழித்தல்' என்று பொருள் என்றும் சுட்டிக்காட்டுகிறார். சேரர்களின் வீரக் கடவுளான கொற்றவை மற்றும் அரசனைக் குறிக்கும் கொற்றவன் ஆகிய சொற்களிலும் இதே வேர்ச் சொல் எதிரொலிப்பதை நாம் காணலாம் என்று ஸ்மிட் தெரிவித்துள்ளார்.


'கொற்றன்' என்ற பெயர் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட மற்ற பொருட்களிலும் காணப்படுகிறது. 1995-ஆம் ஆண்டு செங்கடல் துறைமுகமான பெரெனிகேயில் (Berenike) கண்டெடுக்கப்பட்ட ஒரு மண்பாண்ட ஓட்டில் 'கொற்றபுமான்' (Koṟṟapumāṉ) என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெயர் சங்க இலக்கியங்களிலும் காணப்படுகிறது. புறநானூற்றில் புகழப்படும் சேர மன்னன் 'பிட்டாங்கொற்றன்', சில நேரங்களில் நேரடியாக 'கொற்றன்' என்றே அழைக்கப்படுகிறார். இதே போன்ற பெயர்கள் கி.பி. 2 அல்லது 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைய சேர தலைநகரான புகளூர் கல்வெட்டுகளிலும் காணப்படுவதாக அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இந்தக் கல்லறைகளில் மேலும் இரண்டு நபர்கள் தங்கள் பெயர்களைத் தமிழ் பிராமி எழுத்துக்களில் பொறித்துள்ளனர். அவற்றில் ஒரு கல்வெட்டு 'கோபன் வரத கண்டான்' (கோபன் வந்து பார்த்தான்) என்று வாசிக்கப்படுகிறது. 'கோபன்' என்ற பெயர் தமிழ்நாட்டின் அம்மன்கோவில்பட்டியிலும் கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர 'சாதன்' மற்றும் 'கிரன்' ஆகிய மற்ற தமிழ் பெயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. முதலில் இந்தக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தபோது, என்னால் அதை நம்பவே முடியவில்லை என்றும் பல ஆண்டுகளாகப் பலர் இந்தக் கல்லறைகளைப் பார்வையிட்டுள்ளனர், ஆனால் இதுவரை யாரும் இதில் இந்தியத் தொடர்பு இருப்பதை அடையாளம் காணவில்லை என்றும் ஒருவேளை தான் தவறாகப் புரிந்து கொண்டேனா என்று சார்லட்டிடமே கேட்டதாக ஸ்ட்ராச் கூறியுள்ளார். 


தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆலோசகரான கே. ராஜன் கூறுகையில், பண்டைய தமிழகத்தின் மலபார் கடற்கரைக்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையிலான வணிகத் தொடர்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதால் இந்தக் கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இதற்கு முன்பு எகிப்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் செங்கடல் துறைமுக நகரமான பெரெனிகேவை (Berenike) மையமாகக் கொண்டு பல ஆண்டுகளாக நடத்தப்பட்டன என்றும் ஆனால் தற்போது அந்த கவனம் நைல் நதிப் பள்ளத்தாக்கை நோக்கி நகர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Original article : Tamil Brahmi inscriptions found in Egypt’s Valley of the Kings shed light on ancient trade links. -N. Sai Charan

Share: