53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் பதவியேற்றார். தலைமை நீதிபதி எவ்வாறு நியமிக்கப்படுகிறார்? -ரோஷ்னி யாதவ்

 தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, நீதிபதி சூர்யகாந்த் இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

தற்போதைய செய்தி?


நவம்பர் 24 அன்று தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்ய காந்த் பதவியேற்றார். மேலும், பிப்ரவரி 9, 2027 வரை தலைமை நீதிபதி பதவியில் நீடிப்பார். குறிப்பாக, மற்ற நிதிபதிகளுடன் ஒப்பிடும் போது சூர்யகாந்தின் பதவி காலம்  நீண்டதாக இருக்கும். இது அவரது அமர்வுக்கு பல உயர்மட்ட அரசியலமைப்பு மற்றும் சமூக வழக்குகளை தீர்ப்பதற்கான நீட்டிக்கப்பட்ட வாய்ப்பை வழங்கும். இந்த சூழலில், இந்தியாவின் உச்ச நீதிபதி எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார், நீதித்துறையில் நீதிபதிகள் நியமனம் குறித்த முக்கியமான அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. பிரிவு 124(1) இந்தியாவில் ஒரு உச்ச நீதிமன்றம் இருக்க வேண்டும் என்றும் அதில் ஒரு தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகிறது.



2.  ஒவ்வொரு உச்ச நீதிமன்ற நீதிபதியையும் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அவர்களை நியமிப்பதற்கு முன், குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை அவசியம் என்று கருதி அவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். தலைமை நீதிபதி அல்லாத வேறு ஒரு நீதிபதியை நியமிக்கும் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நிதிபதியுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று பிரிவு 124(2) கூறுகிறது.



3. குடியரசுத் தலைவர் நீதிபதிகளை நியமிக்கிறார். இதைச் செய்வதற்கு முன், அவர் அவசியம் என்று கருதினால், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் சில நீதிபதிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். இருப்பினும், இந்த நியமனங்கள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதற்கான சரியான நடைமுறையை அரசியலமைப்பு விளக்கவோ அல்லது குறிப்பிடவோ இல்லை.




4. மரபுப்படி, உச்ச நீதிமன்றத்தில் மிக நீண்ட காலம் பணியாற்றிய நீதிபதியே அனுபவத்தின் அடிப்படையில்  தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். இந்த செயல்முறை இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான 'நடைமுறை குறிப்பாணை' (Memorandum of Procedure (MoP)) எனப்படும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் எழுதப்பட்டுள்ளது.


5. இந்திய தலைமை நீதிபதி பதவிக்கு உச்ச நீதிமன்றத்தின் மிகவும் மூத்த நீதிபதியில் இருந்து, அந்தப் பதவிக்குப் பொருத்தமானவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நடைமுறை குறிப்பாணை (MoP) கூறுகிறது. 1999ஆம் ஆண்டு இந்த விதி இறுதி செய்யப்படுவதற்கு முன்பே, தற்போதைய தலைமை நீதிபதிக்குப் பிறகு மூத்த நீதிபதி அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என்பது ஏற்கனவே ஒரு மரபாக இருந்தது.


6. இந்திய தலைமை நீதிபதி நியமன செயல்முறை, சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகாரத் துறை (Union Minister of Law, Justice and Company Affairs) அமைச்சர், தற்போதைய தலைமை நீதிபதியிடம் அடுத்த தலைமை நீதிபதியாக யார் நியமிக்கப்பட வேண்டும் என்பது குறித்து பரிந்துரை கேட்கும்போது செயல்முறை தொடங்குகிறது என்று அமைச்சகம் கூறுகிறது. இது வழக்கமாக தற்போதைய தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நடக்கும். எனவே, அக்டோபர் 27 அன்று, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி சூர்யகாந்தை அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்து அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினார்.


7. இந்திய தலைமை நீதிபதியின் பரிந்துரையைப் பெற்ற பிறகு, ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அந்தப் பரிந்துரையை பிரதமரிடம் சமர்ப்பிப்பார்; பிரதமர் அதன்படி அடுத்த தலைமை நீதிபதியை நியமிப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவார். மரபுப்படி, அடுத்த தலைமை நீதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் ஒன்றிய அரசாங்கமே இறுதி முடிவை எடுக்கும். இருந்தபோதிலும், அவர்கள் வழக்கமாக தற்போதைய தலைமை நீதிபதியின் பரிந்துரையைப் பின்பற்றுவார்கள்.





மூன்று நீதிபதிகள் வழக்குகள் (Three Judges Cases)


கொலீஜியம் என்பது உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமிக்கும் முறைமையாகும். இது உச்ச நீதிமன்றத்தின் தொடர்ச்சியான தீர்ப்புகளால் உருவானது. இவை “நீதிபதிகள் வழக்குகள்” என அழைக்கப்படுகின்றன.


முதல் நீதிபதிகள் வழக்கு: 'எஸ்.பி. குப்தா Vs. யூனியன் ஆஃப் இந்தியா' (SP Gupta Vs Union of India), 1981ஆம் ஆண்டு வழக்கில், ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதிபதிகள் நியமனம் குறித்த இறுதி முடிவை நிர்வாகக் குழுவிற்கு வழங்கியது. உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான முன்மொழிவு பிரிவு 217-ல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு அரசியலமைப்புச் அதிகாரம் வழங்கிய எந்த ஒரு நபரிடமும் இருந்தும் (constitutional functionaries) வரலாம், உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடமிருந்து பரிந்துரை பெற வேண்டிய தேவையில்லை என்று தீர்ப்பளித்தது.


— பிரிவுகள் 124 மற்றும் 217-ல் பயன்படுத்தப்படும் "ஆலோசனை" (consultation) என்ற சொல் "ஒப்புதல்" (concurrence) என்று அர்த்தமல்ல என்றும் கூறியது. எனவே, குடியரசுத்தலைவர் அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பார் என்றாலும், அவரது முடிவு அவர்கள் அனைவருடனும் உடன்படுவதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று அரசியலமைப்பு அமர்வு கூறியது.


— முதல் நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் அதிகார சமநிலையை நிர்வாகத்திற்கு சாதகமாக மாற்றியது. இந்த நிலை அடுத்த 12 ஆண்டுகளுக்கு நீடித்தது..


இரண்டாவது நீதிபதிகள் வழக்கு: 1993ஆம் ஆண்டு 'உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்-பதிவு சங்கம் Vs இந்திய ஒன்றியம்' (‘The Supreme Court Advocates-on-Record Association Vs Union of India’) வழக்கில், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு 'எஸ்.பி. குப்தா' வழக்கில் தீர்ப்பை ரத்து செய்து, உயர் நீதித்துறையில் நீதிபதிகளை நியமிப்பதற்கும் இடமாற்றம் செய்வதற்கும் 'கொலீஜியம் அமைப்பு' (Collegium System) என்ற ஒரு குறிப்பிட்ட நடைமுறையை வகுத்தது. மேலும், தலைமை நீதிபதி, நீதிமன்றத்தின் இரண்டு மூத்த நீதிபதிகளுடன் சேர்ந்து முடிவுகளை எடுப்பார் என்றும், அவர்கள் கொலீஜியம் அமைப்பை உருவாக்குவார்கள் என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்ததுது.




மூன்றாவது நீதிபதிகள் வழக்கு: 1998ஆம் ஆண்டு, அப்போதைய குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணன், "ஆலோசனை" என்ற வார்த்தையின் பொருள் குறித்து அரசியலமைப்பின் 143வது பிரிவின் கீழ் (ஆலோசனை அதிகார வரம்பு) உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு தனது குறிப்பை வழங்கினார். தலைமை நீதிபதியின் கருத்தை உருவாக்குவதில் "ஆலோசனை" என்பது பல நீதிபதிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டுமா அல்லது தலைமை நீதிபதியின் ஒரே கருத்து மட்டுமே "ஆலோசனையாக” இருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.


- இதற்கு பதிலளிக்கும் விதமாக, இரண்டாவது நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இரண்டு நீதிபதிகளுக்குப் பதிலாக, தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகளால் பரிந்துரை செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. முன்மொழியப்பட்ட பெயர் வந்த உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம்  கூறியது.


நீதிபதிகள் நியமனம் செய்யப்படும் முறை பெரும்பாலும் தெளிவாக இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது. 

அதிகாரப்பூர்வ அமைப்பு அல்லது செயலகம் எதுவும் இல்லை. மேலும், தகுதி அல்லது தேர்வுக்கான தெளிவான விதிகள் இல்லாமல் மறைமுகமாக இந்த செயல்முறை செய்யப்படுகிறது.


தேசிய நீதித்துறை நியமன ஆணையம் (National Judicial Appointments Commission (NJAC) Act)) சட்டம்


1. 2000ஆம் ஆண்டு பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயால் நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.என். வெங்கடாச்சலியா ஆணையம், கொலீஜியத்திற்கு பதிலாக ஒரு தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை உருவாக்க பரிந்துரைத்தது.


2. ஆகஸ்ட் 2014-ல், இந்திய நாடாளுமன்றம் அரசியலமைப்பு சட்டத்தின் 99வது திருத்தத்தின் மூலம், தேசிய நீதித்துறை நியமன ஆணைய (National Judicial Appointments Commission (NJAC)) சட்டத்தை நிறைவேற்றியது. இந்தச் சட்டங்கள் தேசிய நீதித்துறை நியமன ஆணையம் என்ற தன்னிச்சையாக முடிவெடுக்கும் ஒரு (independent commission) அமைப்பை உருவாக்கியது. இது உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் பணியை ஏற்கனவே இருந்த கொலீஜியம் அமைப்பிலிருந்து எடுத்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.


3. தேசிய நீதித்துறை நியமன ஆணையமானது இந்திய தலைமை நீதிபதியை அதிகாரபூர்வத் தலைவராகவும், இரண்டு மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அதிகாரபூர்வ உறுப்பினர்களாகவும், ஒன்றியசட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அதிகாரபூர்வ உறுப்பினராகவும், குடிமை சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பிரபல நபர்களையும் உள்ளடக்கி இருந்தது. அவர்களில் ஒருவர் தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவால் பரிந்துரைக்கப்படுவார். பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்ககுடியினர் அல்லது இதர பிற்படுத்தப்பட்ட அல்லது சிறுபான்மை சமூகங்கள் அல்லது பெண்களிடமிருந்து பரிந்துரைக்கப்படுவார்.


4. உச்ச நீதிமன்றம் இது போன்ற சட்டங்கள் செல்லாது என்று அறிவித்த பிறகு, அந்தச் சட்டங்கள் 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரத்து செய்யப்பட்டன.


Original Article: Justice Surya Kant takes oath as 53rd CJI. How is CJI appointed? 


Share: