கார்பன் உமிழ்வு எப்போது உச்சத்தை எட்டும் என்பதற்கான தேதியை அறிவிப்பது, கார்பனைக் குறைப்பதற்கான நமது வாக்குறுதியை வலுவாகவும் நம்பகத்தன்மையுடனும் மாற்றும். இந்தியா மூன்றாவது பெரிய உமிழ்ப்பான் என்றும் அதன் உமிழ்வு இன்னும் அதிகரித்து வருகிறது என்றும் உள்ள விமர்சனத்திற்கு பதிலளிக்கவும் இது உதவும்.
2035 வரையிலான காலத்திற்கு பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் புதிய தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை (Nationally Determined Contributions (NDCs)) நாம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விரைவில் இதைச் செய்வோம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். வெறுமனே, இந்தப் புதிய தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDCs) முழுப் பொருளாதாரத்திற்கும் ஒரு பரந்த மாற்றத் திட்டத்திற்குள் பொருந்த வேண்டும். ஆனால், தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDCs) அந்தப் பெரிய திட்டத்தின் ஒவ்வொரு பகுதியையும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
இந்தக் கட்டுரையில், நமது எரிசக்தி நிலைமாற்ற (energy transition) உத்திக்கான ஏழு கூறுகளை அடையாளம் காண்கிறோம். இது அடுத்த 10 ஆண்டுகளில் முக்கியமானதாக இருக்கும். மேலும், அது நமது புதிய தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளில் பிரதிபலிக்க வேண்டும்.
முதலாவதாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product (GDP)) கார்பன் வெளியேற்ற தீவிரத்தைக் (emissions intensity) குறைப்பதற்கான இலக்கை நாம் உயர்த்த வேண்டும். 2005-ஆம் ஆண்டின் அளவை ஒப்பிடும்போது, 2030-ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கார்பன் வெளியேற்ற தீவிரத்தை 45 சதவீதம் குறைப்பதற்கான முந்தைய இலக்கை நாம் அடைவோம். 2035-ஆம் ஆண்டுக்கான இலக்கு இதை 65 சதவீதம் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் எதிர்பார்க்கப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.6 சதவீதம் ஆகும். இதன் பொருள், இந்தியாவின் மொத்த கார்பன் வெளியேற்றங்களின் அளவு தொடர்ந்து உயரும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் குறைந்துவரும் விகிதத்தில், சுமார் 2035-ஆம் ஆண்டில் உச்சத்தை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கார்பன் வெளியேற்றங்களின் அளவு உச்சத்தை அடையும் தேதியை அறிவிப்பது, கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான (decarbonise) நமது உறுதிப்பாட்டிற்கு நம்பகத்தன்மையை அளிக்கும். இந்தியா மூன்றாவது பெரிய கார்பன் வெளியேற்றுபவராக (emitter) உள்ளது மற்றும் அதன் வெளியேற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்ற விமர்சனத்தை எதிர்கொள்ளவும் இது உதவும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
இரண்டாவதாக, 2030-ஆம் ஆண்டுக்குள் புதைபடிவமற்ற எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தியின் திறன், மொத்தத் திறனில் 50 சதவீதம் என்ற முந்தைய இலக்கை நாம் அடைந்திருப்பதால், இப்போது 2035-ஆம் ஆண்டுக்குள் அதன் பங்கை 80 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும். பொருளாதாரம் வேகமாக வளரும் என்றும், மின்மயமாக்கல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், மொத்த மின்சாரத் தேவையின் விரைவான வளர்ச்சியை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். இதன் மூலம் மொத்த உற்பத்தித் திறனை 2035-ஆம் ஆண்டுக்குள் சுமார் 1,600 ஜிகாவாட் (Gigga watt (GW)) அளவிற்குக் கொண்டு செல்ல வேண்டும். இதில், சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திறன் சுமார் 1,200 ஜிகாவாட் (Gigga watt (GW)) அளவில் இருக்கும். எனவே, இந்த ஆதாரங்களில் இருந்து வரும் மின்சாரத்தின் பங்கு தற்போதுள்ள 13.5 சதவீதத்திலிருந்து 2035-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இன்று 1 ஜிகாவாட்டுக்கும் (Gigga watt (GW)) குறைவாக இருக்கும் ஆற்றல் சேமிப்புத் திறன், 2035-ஆம் ஆண்டுக்குள் 170 ஜிகாவாட்டாக (GW) உயர வேண்டும். புதிய சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திறன்களுக்கும் மின்கட்டமைப்பு உள்கட்டமைப்பை விரிவாக்குவது அவசியமாகும்.
மூன்றாவதாக, நமது புதிய தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDCs) கட்டுப்படுத்தப்படாத நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியைக் கட்டம் கட்டமாகக் குறைப்பதற்கான ஒரு தெளிவான இலக்கை உள்ளடக்க வேண்டும். இது சர்வதேச பேச்சுவார்த்தைகளில் ஒரு சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்துள்ளது. ஆனால், 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியத்தை (Net Zero) அடைவது என்றால், நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களை படிப்படியாக அகற்ற வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். மொத்த கார்பன் வெளியேற்ற அளவு சுமார் 2035-ஆம் ஆண்டை ஒட்டிய உச்சத்தை எட்டுவதை உறுதி செய்ய, 2030-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய, கட்டுப்படுத்தப்படாத நிலக்கரி மின் நிலையங்கள் எதுவும் தொடங்கப்படக் கூடாது என்று மாதிரி முடிவுகள் பரிந்துரைக்கின்றன. தற்போதுள்ள 255 ஜிகாவாட் (GW) நிலக்கரி உற்பத்தித் திறன் சுமார் 2030-ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு 293 ஜிகாவாட்டாக உயர்ந்து, பின்னர் 2040-ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக 230 ஜிகாவாட்டாகக் குறையலாம் என்று கணக்கிடப்படுகிறது. கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு அமைப்புகள் (carbon capture and storage systems) செலவு-போட்டித்தன்மை கொண்டதாக மாறுவதைப் பொறுத்து, சில நிலக்கரித் திறனை 2070-ஆம் ஆண்டு வரை தக்கவைத்துக் கொள்ளலாம். உள்நாட்டு நிலக்கரிக்கான தேவை 2040-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் குறையத் தொடங்கும் என்பதால், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் போன்ற நிலக்கரி உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு, இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான மறுபயிற்சித் திட்டங்கள், பொருளாதார பல்வகைப்படுத்தல் உத்திகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நிலக்கரிச் சுரங்கத் தொழிலில் குறைந்து வரும் வேலைவாய்ப்புக்கு ஏற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளப் போதுமான கால அவகாசம் உள்ளது.
நான்காவதாக, முக்கிய துறைகளை மின்மயமாக்குவது கார்பன் நீக்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். மேலும், இதில் போக்குவரத்துத் துறை மிக முக்கியமானதாக இருக்கும். நாம் 99 சதவீதத்திற்கும் அதிகமான ரயில் பாதைகளை மின்மயமாக்கியுள்ளோம். ஆனால், தற்போது 90 சதவீதத்திற்கும் குறைவான போக்குவரத்து மட்டுமே மின்சாரத்தால் இயக்கப்படுகிறது. ரயில்வே துறை
2035-ஆம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 100 சதவீத மின்சார இழுவைத் திறனை அடைவதை இலக்காகக் கொள்ள வேண்டும். அதாவது, டீசல் என்ஜின்களை படிப்படியாக நீக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள நகர பேருந்து போக்குவரத்துகளில் 50 சதவீதம் மின்சார பேருந்துகளை அடைவதை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும். மின்சார ஆட்டோக்கள் (மூன்று சக்கர வாகனங்கள்) விற்பனை ஏற்கனவே மொத்த ஆட்டோக்கள் விற்பனையில் பாதியைத் தாண்டிவிட்டது. இதை அடுத்த சில ஆண்டுகளுக்குள் 100 சதவீதமாக உயர்த்த முடியும். வாகன உற்பத்தியாளர்களுடன் கலந்தாலோசித்து, பிற வாகன வகைகளுக்கும் மின்சார வாகன விற்பனை இலக்குகளை நிர்ணயிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஐந்தாவது, கார்பன் வரவு வர்த்தகத் திட்டமானது (Carbon Credit Trading Scheme (CCTS)) ஏப்ரல் 2026-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்குகிறது. இது ஒரு முக்கியமான முன்முயற்சியாகும். இந்தத் திட்டத்தை, அனுபவத்தின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகள் நிறைவில் மறுபரிசீலனை செய்யப்படும் என்பதைக் குறிப்பிட்டு, நமது தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளில் (NDCs) சேர்க்கலாம். காலப்போக்கில், இந்தத் திட்டம் தற்போது விலக்கப்பட்டுள்ள மின்சாரம் போன்ற துறைகளை உள்ளடக்கியவாறு விரிவுபடுத்தப்படலாம். மேலும், இதன் உள்ளடக்கத்தை மத்திய-அளவிலான அலகுகளை (medium-scale units) சேர்ப்பதற்கு வலியுறுத்த வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர். கட்டாய அலகுகளுக்கான (obligated units) உமிழ்வு செறிவூட்டல் இலக்குகள் ஆரம்பத்தில் தளர்வாகவே இருக்கும் என்கின்றனர். ஆனால், நாடு நிகர-பூஜ்யம் (net-zero) இலக்கை அடைய வேண்டும் என்பதற்கேற்ப காலப்போக்கில் அவை கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
ஆறாவதாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் அதிகப் பங்கு, மின்சார உற்பத்தியில் நாளுக்குள் மற்றும் பருவகால அளவில் மிகப் பெரிய ஏற்ற இறக்கங்களைக் குறிக்கும். இது மின்கட்டமைப்பை (grid) நிர்வகிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மின்கலன் மற்றும் நீரேற்று சேமிப்பு உதவும் என்றாலும், மின்சார விலையில் பெரிய மாற்றங்கள் தேவைப்படும். இப்போது நிலையான விலையில் மின்சாரம் வாங்கும் ஒப்பந்தங்களை விட்டுவிட்டு, மொத்த விற்பனை சந்தையில் விலை அதிகமாக ஏறவும் இறங்கவும் அனுமதிக்க வேண்டும். அதாவது, பங்குச் சந்தை போல மின்சாரத்தை நேரடியாக வாங்கவும் விற்கவும் செய்யும் மின்சார பரிவர்த்தனை முறைக்கு மாற வேண்டும். இதனால் வீடுகளிலும் கடைகளிலும் “நாளின் நேரப்படி கட்டணம்” (time-of-day tariff) வரும். அதாவது காலையும் மாலையும் விலை அதிகம் மற்றும் நள்ளிரவில் விலை குறைவு என்று மாறும் என்கின்றனர். இதை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், பெரிய விழிப்புணர்வு மற்றும் பொதுமக்கள் ஆதரவு தேவை என்றும் தெரிவிக்கின்றனர்.
ஏழாவதாக, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி மற்றும் சேமிப்புத் திறனில் முன்மொழியப்பட்ட விரிவாக்கம் மற்றும் அதற்கான கட்டமைப்பு வலையமைப்பின் விரிவாக்கம் கூடுதல் முதலீட்டைக் கோரும் என்கின்றனர். 2026-2035 ஆகிய காலகட்டத்தில் இது ஆண்டுதோறும் $62 பில்லியன் (அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டுக்கு சுமார் 0.84 சதவீதம்) தேவைப்படும் என்று மதிப்பிடுகிறது. இதன் சுமார் 80 சதவீதம் கூடுதல் உள்நாட்டு சேமிப்பு, கூடுதல் தனியார் முதலீடு போன்றவற்றின் மூலம் உள்நாட்டு ஆதாரங்களில் இருந்து வர வேண்டும். மீதமுள்ள 20 சதவீதம், அதாவது ஆண்டுதோறும் சுமார் $12.5 பில்லியன், கூடுதல் தனியார் கடன் மற்றும் பங்குப் பரிமாற்றங்கள் வடிவில் சர்வதேச ஆதாரங்களில் இருந்து வர வேண்டும். ஆபத்துகளைக் குறைப்பதற்கான (risk mitigation) பன்முக வளர்ச்சி வங்கிகளின் (Multilateral Development Banks (MDBs)) விரிவாக்கப்பட்ட கடனுதவியால் இதற்குப் பெரிதும் உதவ முடியும் என்றும் கூறப்படுகிறது. கட்டுரையின் பகுதி 1-ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, தேவையான ஆதரவு சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, இந்தியப் பொருளாதாரம் வளர்ந்த இந்தியா (விக்சித் பாரத்) பாதையை நோக்கிச் செல்வதாகக் கருதப்பட்டால், இந்தக் குறிக்கோளுக்கு ஆதரவளிக்கப் பெரிய அளவில் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்க முடியும் என்கின்றனர்.
மேலே கூறப்பட்டுள்ள ஏழு அம்ச செயல்திட்டத்தை ஒரு பொருளாதாரம் தழுவிய மாற்றத்திற்கான திட்டமாக விரிவுபடுத்தலாம். அத்தகைய ஒரு உத்தியைச் செயல்படுத்துவதற்கு, ஒன்றிய அரசு, மாநிலங்கள் மற்றும் தனியார் துறை ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கைகள் தேவைப்படும். பிரதம மந்திரியின் பருவநிலை மாற்றத்திற்கான கூட்டமைப்பை (Prime Minister’s Council on Climate Change) மீண்டும் செயல்படுத்தி, அதை தேசிய செயல் திட்டத்தை அனுமதிக்கும், பல்வேறு பங்குதாரர்களுடன் அதன் செயல்பாட்டை ஒருங்கிணைக்கும் அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும். அதன் முன்னேற்றத்தை காலமுறையில் ஆய்வு செய்யும், வகையில் அமைக்கப்பட வேண்டும். மேலும், அனுபவம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளின் வெளிச்சத்தில் அதை மாற்றி அமைக்கும் மத்திய அமைப்பாக உருவாக்குவதற்கு வலுவான அடிப்படை உள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்தக் கூறுகளில் சில, பொருத்தமான வடிவில், நமது புதிய தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளாக (Nationally Determined Contributions (NDCs)) சமர்ப்பிக்கப்படலாம். இது கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் (decarbonisation) இந்தியா தொடர்ந்து உறுதியுடன் இருக்கிறது என்ற வலுவான அறிகுறியை உண்டாக்கும். நிதியளிப்புப் பிரச்சினைக்குத் திருப்திகரமான தீர்வு காணப்பட்டால், இந்தக் கூறுகள் சமர்ப்பிப்புக்கு உட்பட்டு உருவாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அலுவாலியா முன்னாள் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவராகவும், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மையத்தின் (Centre for Social & Economic Progress (CSEP)) புகழ்பெற்ற ஆராய்ச்சியாளராகவும் இருக்கிறார். படேல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மையத்தில் (CSEP) ஆராய்ச்சியாளராக இருக்கிறார்.
Original link:
A seven-point plan to scale up our climate ambition.