பூமியின் பழமையான சுற்றுச்சூழல் அமைப்புகளான மழைக்காடுகள், காலநிலை இலக்குகளுக்கு எவ்வாறு முக்கியமானவை? -அபினவ் ராய்

     வெப்பமண்டல காடுகள் (Tropical forests) வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தும், நீர்நிலைகளைப் பாதுகாக்கும், பிராந்திய காலநிலைகளை ஒழுங்குபடுத்தும் மற்றும் பல நூற்றாண்டுகளாக அதிக அளவு கார்பனைச் சேமிக்கும் முக்கிய பல்லுயிர் பகுதிகளாகும் (biodiversity regions). வெப்பமண்டல வனப்பாதுகாப்பு நிரந்தர மையம் (Tropical Forest Forever Facility (TFFF)) போன்ற முயற்சிகள் இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை எவ்வாறு பாதுகாக்க முயல்கின்றன?


இந்தியாவின் காற்று மாசுபாடு மிகப்பெரிய பொது சுகாதார அவசரநிலைகளில் (public health emergencies) ஒன்றாக மாறி வரும் நிலையில், சர்வதேச காலநிலை நிதி குறித்த கவலைகளும் அதிகரித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், வெப்பமண்டல வனப்பாதுகாப்பு நிரந்தர மையம் (Tropical Forest Forever Facility(TFFF)) என்ற யோசனை ஒரு அரிய மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சியாகத் தோன்றுகிறது.


ஆனால், வெப்பமண்டல (tropical) அல்லது துணை வெப்பமண்டல மழைக்காடுகள் (subtropical rainforests) என்றால் என்ன?, காடழிப்பு விகிதத்துடன் நிதி ஆதரவை இணைப்பதன் மூலம் வெப்பமண்டல வனப்பாதுகாப்பு நிரந்தர மையம் (TFFF) எவ்வாறு காலநிலை தணிப்பை ஆதரிக்கிறது? மேலும் பழங்குடி மக்களும் உள்ளூர் சமூகங்களும் வெப்பமண்டல வனப்பாதுகாப்பு நிரந்தர மையத்தை (TFFF) மிகவும் பயனுள்ளதாக்க முடியுமா? இந்தக் கேள்விகளை ஆராய்வோம்.


வெப்பமண்டல வனப்பாதுகாப்பு நிரந்தர மையம் (Tropical Forest Forever Facility(TFFF)) மற்றும் அதன் முக்கியத்துவம்


வெப்பமண்டல வனப்பாதுகாப்பு நிரந்தர மையத்தின் (TFFF) யோசனை முதன்முதலில் துபாயில் COP28  பிரேசில் மாநாட்டில் முன்மொழியப்பட்டது மற்றும் கடந்த மாதம் பெலெமில் COP30 மாநாட்டில் முறையாகத் தொடங்கப்பட்டது. இந்த முயற்சி 70-க்கும் மேற்பட்ட வெப்பமண்டல வன நாடுகளுக்கு (Tropical Forest Countries (TFC)) நீண்டகால, செயல்திறன் அடிப்படையிலான நிதி ஆதரவை வழங்கும். இதன் மூலம் 1 பில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் அவற்றின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல ஈரமான பரந்த இலைக் காடுகளை (tropical and subtropical moist broadleaf forest (TSMBF)) பராமரித்து மீட்டெடுப்பதற்கு உதவும்.


இருப்பினும், 0.5% அல்லது அதற்கும் குறைவான காடழிப்பு விகிதத்தைக் கொண்ட வெப்பமண்டல வன நாடுகளுக்கு (TFC) மட்டுமே இந்த நிதி உதவி வழங்கப்படும். இந்த முயற்சி 125 பில்லியன் டாலர் மூலதனத் தளத்தை அடைய நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், காடழிப்பு மற்றும் பேரழிவுக்கு சரி செய்த பிறகு, வெப்பமண்டல வன நாடுகள் (TFC) ஏற்கனவே உள்ள காடுகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு $4 என்ற நிலையான வருடாந்திர கட்டணத்தைப் பெறும்.

பெறப்பட்ட மொத்த நிதியளவும் குறைந்தது 20 சதவீதம் இந்தக் காடுகளைப் பாதுகாத்து மீட்டெடுக்கும் பழங்குடி மக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு (Indigenous Peoples and Local Communities (IPLC)) செலவிடப்படும். இந்த சமூகங்கள் உலகின் மீதமுள்ள அப்படியே உள்ள காடுகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றை (54 சதவீதம்) வைத்திருக்கின்றன. அவர்கள் உலகின் 28 சதவீத நிலத்தை நிர்வகிக்கிறார்கள் அல்லது சட்டப்பூர்வ உரிமைகளைக் கொண்டுள்ளனர். இந்த நிலம் பூமியின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 40% ஐ உள்ளடக்கியது. மேலும், அவை நல்ல சுற்றுச்சூழல் நிலையில் உள்ளன.


கார்பன் உறிஞ்சும் வெப்பமண்டல காடுகள்


வெப்பமண்டல மழைக்காடுகள் 23.5°வடக்கு (கடகரேகை) மற்றும் 23.5°தெற்கு (மகரரேகை) அட்சகோடுகளுக்கு இடையில் அமைந்துள்ளன. உலகளவில், இவற்றின் பரப்பளவு மத்திய மற்றும் தென் அமெரிக்கா, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, நியூ கினியா தீவு மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன.

இந்தியாவில், வெப்பமண்டல மழைக்காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலைகள், லட்சத்தீவுகள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் குழுக்கள், அசாமின் மேல் பகுதிகள் மற்றும் தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகின்றன. இந்தக் காடுகளில் உள்ள மரங்கள் 60 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. சில சமயங்களில் இன்னும் உயரமாக வளரும். இந்தப் பகுதி வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருப்பதால், தாவரங்கள் மரங்கள், புதர்கள் மற்றும் கொடிகள் உள்ளிட்ட பல அடுக்கு அமைப்பைக் கொண்டுள்ளன.


குறிப்பாக, வெப்பமண்டல காடுகள் உலகின் முக்கிய பல்லுயிர் மண்டலப் பகுதிகளில் ஒன்றாகும். அவை மக்களின் வாழ்வாதாரத்தைத் தக்கவைக்கும் பல்வேறு சுற்றுச்சூழல் சேவைகளை வழங்குகின்றன. ஒளிச்சேர்க்கை, நீர்நிலைகளின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய காலநிலைகளை ஒழுங்குபடுத்துதல் மூலம் கார்பன் பிரித்தெடுப்பதற்கு அவை மிகவும் முக்கியமானவை. வெப்பமண்டல காடுகள் நீண்ட காலத்திற்கு கார்பனை சேமிக்கின்றன. அவை இந்த கார்பனை பல நூற்றாண்டுகளாக வைத்திருக்க முடியும்.


அமேசான் மழைக்காடுகள்


தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகள் (6.7 மில்லியன் சதுர கி.மீ) உலகின் அனைத்து வெப்பமண்டல மழைக்காடுகளிலும் சுமார் 40 சதவீதத்தையும், அதன் நிலப்பரப்பு பல்லுயிர் பெருக்கத்தில் 25 சதவீதத்தையும் கொண்டுள்ளது. இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 47 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் சுமார் 2.2 மில்லியன் பேர் சுமார் 300 வெவ்வேறு மொழிகளைப் பேசும் பழங்குடி மக்கள் ஆவர்.

மேலும், அமேசான் மழைக்காடுகளில் சுமார் 150-200 பில்லியன் டன் கார்பன் சேமிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள மரங்கள் நீராவிப்போக்கு மூலம் ஒவ்வொரு நாளும் 20 பில்லியன் டன் தண்ணீரை வளிமண்டலத்தில் வெளியிடுகின்றன. இந்த செயல்முறை பிராந்திய மற்றும் உலகளாவிய கார்பன் மற்றும் நீர் சுழற்சிகளை நிலைநிறுத்த உதவுகிறது.


காங்கோ படுகை (Congo Basin) அல்லது 'ஆப்பிரிக்காவின் நுரையீரல்' (lungs of Africa)


இதேபோல், காங்கோ படுகை உலகின் இரண்டாவது பெரிய வெப்பமண்டல மழைக்காடுகளைக் (tropical rainforest) கொண்டுள்ளது. இது 'ஆப்பிரிக்காவின் நுரையீரல்' (lungs of Africa) என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் படுகை உலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான இயற்கை கார்பன் மூழ்கியாகும். இது ஒவ்வொரு அமேசான் மழைக்காடுகளை விட அதிக கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சுகிறது.


காங்கோ படுகையின் காடுகள் 90.9 பில்லியன் டன்களுக்கு மேல் கார்பனை சேமித்து வைத்துள்ளன. இந்த அளவு எரிசக்தித் துறையிலிருந்து (energy sector) ஆண்டுதோறும் உலகளாவிய CO₂ வெளியேற்றத்தை விட பத்து மடங்கு அதிகம். 2020-ம் ஆண்டில், இந்தக் காடுகள் வழங்கும் சுற்றுச்சூழல் சேவைகள் ஆண்டுக்கு $1.15 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டன.


இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள்


இந்தியாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வெப்பமண்டல மழைக்காடுகள் உலகின் எட்டு பல்லுயிர் பெருக்க 'வெப்பமான முக்கிய இடங்களில்' (hottest hotspots) ஒன்றாகும். இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature (IUCN)) சிவப்பு தரவு பட்டியலில் உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளானவை என பட்டியலிடப்பட்டுள்ள குறைந்தது 325 உயிரினங்களுக்கு அவை தாயகமாக உள்ளன. அதன் உள்ளூர் தன்மை காரணமாக, அதாவது, பூமியில் வேறு எங்கும் காணப்படாத உயிரினங்களுக்கு தாயகமாக இருப்பதால், இப்பகுதி உலகளவில் முக்கியமானதாக உள்ளது.


மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கிட்டத்தட்ட 650 மர சிற்றினங்கள், இருப்பதாக யுனெஸ்கோ அறிக்கை காட்டுகிறது. இவற்றில், 352 சிற்றினங்களில் 54% உள்ளூர் இனங்கள் ஆகும். இப்பகுதியில், 179 நீர்நில வாழ்வன சிற்றினங்களில் 65% உள்ளூர் வாழ் உயிரினங்கள். 157 ஊர்வன சிற்றினங்களில் 62% உள்ளூர் வாழ் உயிரினங்கள், மற்றும் 219 மீன் சிற்றினங்களில் 53% உள்ளூர் வாழ் உயிரினங்கள் அடங்கும்.


மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் கிட்டத்தட்ட 650 மர இனங்களில், 352 (54%) உள்ளூர், நீர்வீழ்ச்சிகள் (179 இனங்கள் வரை, 65% உள்ளூர்), ஊர்வன (157 இனங்கள், 62% உள்ளூர்) மற்றும் மீன்கள் (219 இனங்கள், 53% உள்ளூர்) என்று யுனெஸ்கோ அறிக்கை தெரிவிக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் இந்திய பருவமழையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைகள் இந்திய பருவக்காற்றை பாதிக்கின்றன. அவை ஒரு தடையாகச் செயல்பட்டு மழை பெய்யும் தென்மேற்குப் பருவக்காற்றை இடைமறிப்பதன் மூலம் மழைப்பொழிவைப் பாதிக்கின்றன.


பல சமூகங்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இவற்றைச் சார்ந்திருப்பதால், இந்தக் காடுகள் நாட்டின் பொருளாதாரத்தையும் ஆதரிக்கின்றன. சுற்றுச்சூழல் செயல்பாடுகளைத் தவிர, அவை எரிபொருள் விறகு, மரக்கட்டைகளை வழங்குகின்றன, மண் வளத்தை மேம்படுத்துகின்றன மற்றும் மண் அரிப்பைத் தடுக்கின்றன.


பழங்குடி மக்கள் நிலத்தைப் பாதுகாக்கும் இடங்களில் காடழிப்பு முறையானது கடுமையாகக் குறைகிறது. அமேசான் பிராந்தியத்தில் சுமார் 23 சதவீதம் பூர்வீக பிரதேசமாகும். இதில் பெரும்பகுதி பழைய மழைக்காடுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த காடுகள் கணிசமான அளவு கார்பன்-டை-ஆக்சைடை சேமித்து வைக்கின்றன. பிரேசிலிய அமேசான் காடுகள் ஒவ்வொரு ஆண்டும் பெரும்பாலும் கட்டுப்பாடற்ற காடழிப்பு காரணமாக அதன் பரப்பளவில் 5,000 சதுர கி.மீ.க்கும் அதிகமாக இழந்து வருகிறது. இருப்பினும், பழங்குடி மக்களால் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் காடழிப்பானது பாதுகாப்பற்ற பகுதிகளை விட 80 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.


எடுத்துக்காட்டாக, அஷானின்கா பழங்குடியினரின் (Ashaninka tribe) அமோனியா பிரதேசத்தில், சுமார் 0.03 சதவீத பரப்பளவு நிலம் மட்டுமே காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதி மற்ற பிராந்தியங்களுக்கு ஒரு முன்மாதிரியாகச் செயல்படுகிறது. கயாபோ மற்றும் யனோமாமி போன்ற பழங்குடியினர் சட்டவிரோதமாக மரம் வெட்டுபவர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நில அபகரிப்பாளர்களுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் அரசாங்கங்களிடமிருந்து தங்கள் நிலங்களின் மீது சட்டப்பூர்வ உரிமைகளைப் பெற்றனர். செயற்கைக்கோள் படங்களைப் பார்க்கும்போது, ​​இந்த பூர்வீக நிலங்கள் பச்சைத் தீவுகள் போலத் தெரிகின்றன. ஏனெனில், அவை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் பெரிய அளவிலான காடழிப்புக்கு எதிராக அவை வலுவான தடைகளாகச் செயல்படுகின்றன.


கோண்ட் சமூகம் (Gond community) 12 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரியப் பழங்குடி மக்களில் ஒன்றாகும். முக்கியமாக மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் வசிக்கின்றனர். அவர்கள் தங்கள் உயிர் வாழ்விற்காக காடுகளை நம்பியுள்ளனர். சமீபத்தில், தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படும் தங்கள் இறந்தவர்களை தகனம் செய்வதை நிறுத்த முடிவு செய்தனர். அதற்கு பதிலாக மரங்களைக் காப்பாற்றவும், அவற்றின் புனித சூழலைப் பாதுகாக்கவும் தங்கள் இறந்தவர்களை புதைக்கும் முறையை  தேர்ந்தெடுத்துள்ளனர்.


காலநிலை பேச்சுவார்த்தைகள் தகவமைப்பு உத்திகளை வலியுறுத்துவதால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட பழங்குடி மக்களின் வெற்றிகரமான பாதுகாப்பு நடைமுறைகள், வேறு இடங்களில் பிரதிபலிக்கக்கூடிய மதிப்புமிக்க மாதிரிகளை வழங்குகின்றன.


வன இழப்பைக் கட்டுப்படுத்துதல்


குளோபல் வன ஆய்வு அறிக்கை-2024 (Global Forest Watch (GFW)), மொத்த வெப்பமண்டல காடுகளின் இழப்பில் சுமார் 50 சதவீதத்தை காட்டுத்-தீ ஏற்படுத்தியதாகவும், 6.7 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டதாகவும் கூறுகிறது. 2024-ம் ஆண்டானது உலகளவில் பதிவான வெப்பமான ஆண்டாகவும் இருந்தது. மேலும், எல்-நினோவின் இருப்பு இந்த காட்டுத் தீயை மேலும் தீவிரப்படுத்தியது.  இதனால், இதை கட்டுப்படுத்துவது இன்னும் கடினமாகிவிட்டது.


வன இழப்புக்கான பிற முக்கிய காரணங்கள், வணிக ரீதியான மற்றும் மாற்று சாகுபடி ஆகிய இரண்டும் கொண்ட விவசாய நடைமுறைகளாகும். கிளாஸ்கோவில் நடந்த COP26 (2021) மாநாட்டில், 140-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் 2030-ம் ஆண்டுக்குள் வனஇழப்பை (forest loss) நிறுத்தி, மாற்றியமைக்க உறுதியளித்தனர். இருப்பினும், சமீபத்திய மதிப்பீடுகள் உலகம் இந்த இலக்கை சரியான நேரத்தில் அடையத் தவறிவிட்டதாகக் குறிப்பிடுகின்றன.


எனவே, காலநிலை மாற்ற தாக்கங்களைத் தணிப்பதிலும், நமக்கு முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை வழங்குவதிலும் அவற்றின் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, இந்தக் காடுகளைப் பாதுகாப்பதற்கு பகிரப்பட்ட உலகளாவிய முயற்சிகள் தேவை. வெப்பமண்டல வனப்பாதுகாப்பு நிரந்தர மையம் (Tropical Forest Forever Facility(TFFF)) போன்ற முயற்சிகளை வலுப்படுத்துவது உலகளாவிய வன வளங்களைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காக இருக்கும்.


மேலும், எதிர்கால விவசாயக் கொள்கைகளை மறுவடிவமைப்பு செய்தல், நிலையான வேளாண் காடுகளை ஊக்குவித்தல், மனிதனால் ஏற்படும் காட்டுத் தீயைக் குறைத்தல் மற்றும் பாதுகாப்பு முயற்சிகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாக இருக்கும்.


அபினவ் ராய் டெல்லி பல்கலைக்கழகத்தின் டெல்லி பொருளாதாரப் பள்ளியில் புவியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.


Original link:

How rainforests, Earth’s oldest ecosystems, are critical to climate goals?


Share: