அமலாக்க துறையினால் மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கைகள், 'ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறை' (healthy democratic practice) விதிமுறைகளை மீறுகிறதா என்பதை மதிப்பீடு செய்யுமாறு தேர்தல் ஆணையம் வலியுறுத்தப்படுகிறது.
2024 பொதுத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நாளில் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, ஒரு ஊக்கமளிக்கும் அம்சம், ஒரு சமநிலையான போட்டிகளத்தை (level playing field (LPF)) உறுதி செய்வதில் இருந்தது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் விநியோகித்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி தங்களது நட்சத்திர பிரச்சாரகர்களிடம் (star campaigners) தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். சமநிலையான போட்டிகளத்தை அச்சுறுத்தும் புகார்களைக் கையாள்வதில் தேர்தல் ஆணையம் கடுமையாக இருக்கும் என்று கூறியது.
சமமான போட்டி களம் (level playing field (LPF)) என்ற கருத்து விளையாட்டு அல்லது போரில் பொதுவானதல்ல. கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில், உள்நாட்டு அணிகள் சில நேரங்களில் தங்களுக்கு நன்மை பயக்கும் வகையில் ஆடுகளத்தை தயார் செய்கின்றன. இந்த நடைமுறை தயக்கத்துடன் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. போரில், ஒரு வலுவான இராணுவம் பலவீனமான ஒன்றை வெல்வது நியாயமற்றதாக பார்க்கப்படவில்லை. "Fair is foul, Foul is Fair” என்ற பழமொழி, உண்மையாகத் தோன்றுவது எதிர்மாறாக இருக்கலாம் என்று அறிவுறுத்துகிறது. இது நியாயத்தின் சிக்கலான தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
எனினும், ஜனநாயகத் தேர்தல்களின் பின்னணியில், சமமான போட்டி களம் (level playing field (LPF)) கொள்கை முக்கியமானது. தேர்தல் என்பது ஒரு போர் அல்லது காதல் சவால் அல்ல; அவை ஜனநாயகத்தின் முக்கிய நிகழ்வுகள். தேர்தல்களின் போது, பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த வாக்காளர்களின் அங்கீகாரத்திற்காகப் போட்டியிடுகிறார்கள். வாக்களிப்பது நம்பிக்கை மற்றும் உண்மைகளின் அடிப்படையில் ஒரு சமூக ஒப்பந்தத்தை பிரதிபலிக்கிறது. இது நியாயத்தை அவசியமாக்குகிறது.
தேர்தல்கள் நியாயமாக இருக்க, போட்டியாளர்கள் மற்ற விஷயங்களில் சமமாக இல்லாவிட்டாலும், ஒரு சமமான போட்டி களம் இருப்பது அவசியம். அரசியல் கட்சிகளோ அல்லது வேட்பாளர்களோ தங்கள் எதிரிகளை எதிர்த்து நின்று நியாயத்தை உறுதி செய்ய முடியாது. உள்ளார்ந்த ஏற்றத்தாழ்வுகளை உணர்ந்து, தேர்தல் காலத்தில் சமமான போட்டி களத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. கட்சிகள் வாக்காளர்களை தங்களுக்கு ஆதரவாக திசைதிருப்ப முயற்சிக்கும்போது இது முக்கியமானது.
சமமான போட்டி களம் கோட்பாடு முக்கியமாக எதிர்க்கட்சியை விட ஆளும் கட்சிக்கு இருக்கக்கூடிய நன்மைகளை நிவர்த்தி செய்கிறது. தேர்தல்களில் நியாயம் பற்றிய விவாதங்களில் இந்த ஏற்றத்தாழ்வு ஒரு மைய கவலையாக உள்ளது. விளையாட்டுகளில், பலவீனமான அணிகள் அல்லது தரப்படுத்தப்படாத வீரர்கள் வலுவான எதிரிகளை எதிர்கொள்வது பொதுவானது. மேலும், முடிவுகள் நியாயத்தை கேள்விக்குள்ளாக்காமல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஏனெனில் விளையாட்டு போட்டிகள் ஜனநாயகத்தை நோக்கமாகக் கொண்டவை அல்ல. ஆனால், உண்மையான ஜனநாயகத்தில் தேர்தல்கள் வெவ்வேறு எதிர்பார்ப்புகளின் கீழ் இயங்குகின்றன. எந்தவொரு தரப்புக்கும் தேவையற்ற அனுகூலம் இல்லாமல், அனைத்து வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கு தங்கள் தேவைகளை முன்வைக்க சமமான வாய்ப்பு இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
தேர்தலின் போது, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த விதிகள் எப்போதும் சட்டத்தில் கண்டிப்பாக எழுதப்படவில்லை. ஆனால், அவை தானாக முன்வந்து ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவர்கள் நல்ல பொது நடத்தைக்கான அர்ப்பணிப்பைக் காட்டுகிறார்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் நியாயமான அணுகுமுறையை நிரூபிக்கிறார்கள். தேர்தல்களின் போது தேர்தல் ஆணையம் அமல்படுத்தும் தேர்தல் நடத்தை விதிகளின் (Model Code of Conduct (MCC)) அடிப்படை இதுதான்.
தேர்தல் நடத்தை விதிகள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், ஆளும் கட்சி மற்றும் அதிகாரத்துவம் ஆகிய நான்கு முக்கிய குழுக்களுக்கு பொருந்தும். ஆளும் கட்சியும் அதிகாரத்துவமும் ஆளும் அமைப்பில் ஒரு பகுதியாக இருந்தாலும், அவர்களுக்கும் தனித்தனியாக விதிகள் பொருந்தும். தேர்தல் நடத்தை விதிகளில் முக்கியமாக பல்வேறு குழுக்களிடையே மோதல்களைத் தூண்டாமல் இருப்பது, சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்ப்பது, சாதி அல்லது வகுப்புவாத உணர்வுகளைப் பயன்படுத்தி வாக்குகளைப் பெறுவதைத் தவிர்ப்பது மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடாதது போன்ற சட்டங்களால் ஏற்கனவே உள்ளடக்கப்பட்ட செயல்களில் கவனம் செலுத்துகிறது. கட்சிகளும் அவற்றின் உறுப்பினர்களும் போட்டிக் களத்தில் செயல்பாடுகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பிரச்சார நிகழ்வுகள், பேரணிகள், வாக்குச் சாவடிகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளுக்கான வழிகாட்டுதல்களை தேர்தல் நடத்தை விதிகள் கொண்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் (MCC) தேசிய அல்லது மாநில அளவில் ஆட்சியில் இருக்கும் கட்சி பற்றி ஒரு குறிப்பிட்ட பிரிவு உள்ளது. தேர்தல் பிரசாரத்திற்கு தங்களின் அதிகாரபூர்வ பதவியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விருந்தினர் இல்லங்கள் அல்லது போக்குவரத்து போன்ற அரசாங்க வசதிகளை தவறாகப் பயன்படுத்தாதது மற்றும் விளம்பரங்கள் அல்லது அவர்களின் பிரச்சாரத்திற்க்கு பொது நிதியைப் பயன்படுத்தாதது ஆகியவை இதில் அடங்கும். தேர்தல் நடத்தை விதிகள் இவற்றைத் தாண்டி வேறு எந்தப் பிரச்சினைகளையும் கையாளவில்லை.
தற்போதைய தேர்தல் நடத்தை விதிகளானது மாநில அரசு மற்றும் சட்ட அமைப்பின் வழக்கமான செயல்பாடுகளை கட்டுப்படுத்தவில்லை. நீதிமன்ற வழக்குகளில் அல்லது சட்ட அமலாக்க அமைப்புகளின் விசாரணைகளில் தேர்தல் ஆனையம் தலையிடுவது நல்லதா என்பது விவாதத்திற்குரியது. இத்தகைய குறுக்கீடு விஷயங்களை மேலும் சிக்கலாக்கும். தேர்தல் நடத்தை விதிகள் முதன்முதலில் வரைவு செய்யப்பட்டபோது, சம்பந்தப்பட்டவர்கள் அரச நிறுவனங்கள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் பற்றி யோசித்திருக்க மாட்டார்கள்.
எவ்வாறாயினும், தேர்தல் நடத்தை விதிகள் (MCC) என்பது மனித நடத்தையைப் போலவே ஒரு பரிணாம ஆவணமாகும்.
தேர்தல் நடத்தை விதிகளை சுற்றியுள்ள சிக்கல்களை அறிந்த தேர்தல் ஆணையம் 2009 பொதுத் தேர்தலுக்குப் பிறகு அதன் நோக்கத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுத்தது. மார்ச் 19, 2009 அன்று, தேர்தல் ஆணையம் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் போன்ற அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தும் என்று கூறியது. அவை தன்னாட்சி பெற்றவை, ஆனால் சட்டமன்ற சட்டங்களின் கீழ் செயல்படுகின்றன. இந்த தெளிவுபடுத்தல் தேர்தல் நடத்தை விதிகளின் வீச்சை நேரடி அரசியல் நிறுவனங்களுக்கு அப்பால் குறிப்பிடத்தக்க அதிகாரம் கொண்ட சட்டரீதியான அமைப்புகளையும் உள்ளடக்கியது.
சமமான போட்டி களத்தின் நிலைமை குறித்த சமீபத்திய புகார்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டியிருக்கலாம். 2019 ஆம் ஆண்டில், இதேபோன்ற சூழ்நிலையில் இது வருவாய்த் துறைக்கு ஒரு ஆலோசனையை வழங்கியது. அமலாக்க முகமைகளின் நடவடிக்கைகள் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக இருந்தால் தேர்தல் ஆணையம் மதிப்பீடு செய்ய வேண்டும்.
நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்காக விதிகளை கடைபிடிக்க வேண்டுமா அல்லது அவற்றை மாற்ற வேண்டுமா? என்ற ஒரு கடினமான தேர்வை தேர்தல் ஆணையம் எதிர்கொள்கிறது. "சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்" (free and fair elections) என்ற கருத்து, அரசியலமைப்பில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், தேர்தல் ஆணையத்தின் பங்கிற்கு முக்கியமானது. தேர்தல் நடத்தை விதியும் குறிப்பிடத்தக்கது; இது ஒரு விதிகளின் தொகுப்பை விட அதிகமாக உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் என்பவை முழுமையாக புரிந்து கொள்ளப்பட வேண்டியவை மற்றும் திறம்பட செயல்படுத்தப்பட வேண்டிய நியாயமான கொள்கையை உள்ளடக்கிவையாக உள்ளன.