இந்தியாவின் உறுப்பு மாற்று முறை, மூளைத்தண்டு இறப்புச் சான்றிதழ் தெளிவாக இல்லாததால், தானம் செய்வதற்குத் தடையாக இருப்பதால் சவால்களை எதிர்கொள்கிறது. நாட்டின் குறைந்த உறுப்பு தான விகிதத்தை மேம்படுத்த, சட்டப்பூர்வ தெளிவு அவசியமாகிறது.
கடந்த நூற்றாண்டில் மருத்துவ அறிவியலில் ஏற்பட்ட மிகப் பெரிய முன்னேற்றங்களில் மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் ஒன்றாகும். இந்தியாவில் இது 1994-ஆம் ஆண்டின் மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டம் (Transplantation of Human Organs and Tissues Act, 1994) மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் இரண்டு வகைப்படும். அவை, முதலாவதாக, இறந்தவர்களிடமிருந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்; இதில் ஒரு நபரின் மூளைத்தண்டு நிரந்தரமாகச் செயலிழந்திருந்தாலும், அவருடைய முக்கிய உறுப்புகள் இயங்கிக் கொண்டிருக்கும் நபரிடமிருந்து உறுப்புகள் அகற்றப்பட வேண்டும். இந்தச் சட்டம் மூளைத்தண்டு இறப்பை (Brainstem Death (BSD)) சட்டபூர்வமான ஒன்றாக ஆக்குகிறது. மேலும், இத்தகைய இறப்புகளை அடையாளம் கண்டு சான்றளிப்பதற்கான சில நடைமுறைகளையும் வகுக்கிறது. மேலும் இந்தச் சட்டம் இரண்டையும் உள்ளடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது, உயிருள்ள தானங்கள், இதில் ஒரு ஆரோக்கியமான நபரிடமிருந்து செயல்படும் உறுப்பு அகற்றப்பட்டு மற்றொரு மனிதருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதற்கும் சட்டப்பூர்வ அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில், மருத்துவர்கள் தங்கள் பயிற்சி மற்றும் உறுதிமொழியினால், ஒரு சாதாரண நபரிடமிருந்து ஆரோக்கியமான உறுப்பை அகற்றுவதற்கு அதிகாரம் பெற்றவர்கள் இல்லை என்று கூறப்படுகிறது.
ஆனாலும், இந்தச் சட்டம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்தபோதிலும், இந்தியாவின் செயல்பாடு மிகமோசமாகவே உள்ளது. 2023-ஆம் ஆண்டின்படி, ஸ்பெயின் நாட்டில் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 49.38 சதவீதம் இறந்தவர்களிடமிருந்து தானங்கள் (deceased donations) பதிவு செய்யப்பட்டன. இந்தியாவிற்கு இது 0.77 சதவீதமாக இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் அரை மில்லியன் இந்தியர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டு இறக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
சட்டரீதியான நிச்சயமற்ற தன்மைகள்
இந்த மோசமான செயல்பாட்டிற்கான ஒரு முக்கியக் காரணம், மூளைத்தண்டு இறப்புச் (Brainstem Death (BSD)) சான்றிதழைச் சுற்றியுள்ள சட்டச்சிக்கல்கள் குறித்த தெளிவின்மை ஆகும்.
முதல் கேள்வி என்னவென்றால், மூளைத்தண்டு மரணம் என்பது சட்டப்படி இருதய மரணத்திற்கு இணையானதாகக் கருத முடியுமா? மூளைத்தண்டு இறப்புக்கான வரையறை 1994-ஆம் ஆண்டின் சட்டத்தில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால் இந்த சந்தேகம் எழுகிறது. மூளைத்தண்டு இறப்பு சான்றளிக்கப்பட்ட பின்னர், உறுப்புகளை தானம் செய்ய குடும்பம் சம்மதம் அளிக்காததால் ஏற்படும் சில சங்கடமான சூழ்நிலையில், இந்த வரையறையை பயன்படுத்த முடியுமா என்ற குழப்பம் நிலவுகிறது. இந்தச் சான்றிதழைப் புறக்கணித்து, இதயம் நின்று போகும் வரை உயிர் ஆதரவு தொடரப்பட வேண்டுமா? இது வெறும் கல்வி சார்ந்த கேள்வி மட்டுமல்ல. வென்டிலேட்டர்களின் தீவிர பற்றாக்குறை உள்ள ஒரு நாட்டில், குறிப்பாக அரசு மருத்துவமனைகளில், சான்றளிக்கப்பட்ட மூளைத்தண்டு மரணம் அடைந்த நபரை காலவரையின்றிப் பராமரிப்பது ஒரு விலைமதிப்பற்ற வளத்தை ஏற்க முடியாத அளவுக்கு வீணடிப்பதாகும் என்கின்றனர்.
மறுபுறம், மூளைத்தண்டு மரணம் அடைந்த நபரின் குடும்பத்தினர் உறுப்பு தானத்திற்குச் சம்மதித்தால், உறுப்புகளை எடுத்தபிறகு புதிய, வழக்கமான மரணச்சான்றிதழ் வழங்கப்பட வேண்டுமா? இதுவே பெரும்பாலான உறுப்பு மாற்று சிகிச்சை மையங்களில் தற்போது நடைமுறையில் உள்ளது. இது ஒரு தனி நபருக்கு இரண்டு மரணச் சான்றிதழ்கள் இருக்கும் விசித்திரமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என்கின்றனர்.
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் 1994-ஆம் ஆண்டு சட்டத்திலேயே கிடைக்கின்றன. மூளைத்தண்டு மரணம் என்பதை, மூளைத் தண்டின் அனைத்து செயல்பாடுகளும் நிரந்தரமாகவும் மீளமுடியாத வகையிலும் நின்றுபோகும் நிலை என்று சட்டம் வரையறுக்கிறது, மேலும் அது அவ்வாறே சான்றளிக்கப்படுகிறது.
பிறப்புக்குப் பிறகு எந்த நேரத்திலும், மூளைத்தண்டு மரணம் காரணமாகவோ அல்லது அவர்களின் இதயம் மற்றும் நுரையீரல் செயல்படுவது நின்றதன் காரணமாகவோ, வாழ்வின் அனைத்து அறிகுறிகளையும் நிரந்தரமாக இழந்த ஒருவரே "மரணமடைந்த நபர்" ஆவார். இதன் முக்கியக் கருத்து, “உயிரின் அனைத்து ஆதாரங்களும் நிரந்தரமாக மறைந்து போதல்” என்பதாகும்.
அதாவது, இந்த நிரந்தரமான உயிர் இழப்பு மூளைத்தண்டு மரணம் (brain-stem death) அல்லது இருதய-நுரையீரல் செயலிழப்பு (cardio-pulmonary failure) மூலம் நிகழலாம் என்பதை சட்டம் ஏற்றுக்கொள்கிறது, எனவே மூளைத்தண்டு மரணத்திற்கு சட்டப்பூர்வ அனுமதியை வழங்குகிறது.
இறப்பை உறுதி செய்தல்
மரணம் என்பது ஒரு இறுதி நிகழ்வு, எனவே அதற்கு வெவ்வேறு சட்டங்களில் வெவ்வேறு வரையறைகள் இருக்க முடியாது. மரணம் தொடர்பாக மூன்று படிகள் உள்ளன: அவை, அதைக் கண்டறிதல், சான்றளித்தல் மற்றும் அதைப் பதிவு செய்தல் ஆகியனவாகும். கண்டறிதல் என்பது மருத்துவ ரீதியானது. ஆனால், சான்றளித்தல் மற்றும் பதிவு செய்தல் ஆகியவை சட்டப்பூர்வ செயல்முறைகள் என்பதால் அவை ஒன்றுக்கொன்று பொருந்த வேண்டும் என்கின்றனர்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம், 1969-ன்படி (Registration of Birth and Death Act, 1969), மரணம் என்பது "உயிருடன் பிறந்தபின், வாழ்வின் அனைத்து ஆதாரங்களும் நிரந்தரமாக மறைந்து போவது" என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வரையறையே 1994-ஆம் ஆண்டு சட்டத்திலும் பயன்படுத்தப்படுகிறது. மூளைத்தண்டு மரணம் (Brain Stem Death - BSD) இந்த வரையறைக்கு உட்பட்டிருப்பதால், 1994-ஆம் ஆண்டு சட்டத்தின்கீழ் வழங்கப்படும் மூளைத்தண்டு இறப்புச் சான்றிதழ் சட்டப்படி செல்லுபடியாகும் என்கின்றனர். இந்தச் சான்றிதழைப் பயன்படுத்தி, 1969-ஆம் ஆண்டு சட்டத்தின்கீழ் இறப்பைப் பதிவு செய்யலாம். மூளைத்தண்டு மரணத்தை (BSD) சான்றளிக்கவும், இறப்பாகப் பதிவு செய்யவும் சட்டத்திலோ அல்லது விதிகளிலோ எந்த மாற்றங்களும் தேவையில்லை என்றும் கூறப்படுகிறது.
இறப்புப் பதிவுப் படிவம் (1969-ஆம் ஆண்டுச் சட்டத்தின் விதி 7-இன்கீழ் உள்ள படிவம் 4) இதைத் தெளிவுபடுத்துகிறது. இது “இறப்புக்கான காரணம்” என்பதை “இறப்பின் முறை”-யிலிருந்து வேறுபடுத்துகிறது என்கின்றனர். இறப்பின் முறை “இதயச் செயலிழப்பு, சுவாசச் செயலிழப்பு, போன்றவை” என இருக்கலாம். “போன்றவை” என்பது முக்கியமானது, ஏனெனில் இதில் மூளைத்தண்டு மரணம் (BSD) போன்ற பிறமுறைகளும் அடங்கும். மூளைத்தண்டு மரணம் என்பது அடிப்படையில், மூளைத்தண்டில் உள்ள சுவாச மையத்திற்கு நிரந்தர சேதம் ஏற்படுவதால் ஏற்படும் ஒரு வகை சுவாசச் செயலிழப்பு ஆகும்.
சம்மதம் தொடர்பான கேள்விகள்
ஒருவருக்கு மூளைத்தண்டு மரணம் (Brain-Stem Death - BSD) உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, உறுப்பு தானத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் சம்மதிக்கவில்லை என்றால், அவர்களுக்கு உயிர் ஆதரவு தொடர வேண்டுமா? சட்டம் மரணத்தை மட்டுமே வரையறுக்கிறது; அதற்குப் பிறகு மருத்துவர்கள் அல்லது மருத்துவமனைகள் என்ன செய்ய வேண்டும் என்று அது கூறவில்லை. இறந்தவரின் குடும்ப உறுப்பினர் உறுப்பு தானத்திற்கு சம்மதித்தால், அந்த உறுப்புகளைப் பிரித்தெடுக்கும்வரை அவற்றைச் செயல்பட வைக்க உயிர் ஆதரவு கட்டாயம் தொடரப்பட வேண்டும். அவ்வாறு சம்மதம் இல்லாதபோது, குடும்பத்தின் கோரிக்கைப்படி உயிர்காக்கும் சிகிச்சையைத் தொடரலாம்; ஆனால் இறப்புச் சான்றிதழ் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது என்பதையும், அந்த இறந்த தேதியும் நேரமும் இறுதியானது என்பதையும் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
உறுப்பு தானத்திற்கான சம்மதத்தை குடும்பத்தினரிடம் மூளைத்தண்டு மரணம் (BSD) உறுதிசெய்யப்படுவதற்கு முன்னரா அல்லது பின்னரா?, எப்போது கேட்பது என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது. 1994-ஆம் ஆண்டு சட்டம் மற்றும் விதிகள், மூளைத்தண்டு மரணம் ஏற்பட்டவுடன் அதைக் கண்டறிந்து சான்றளிக்கப்பட வேண்டும் என்றும், உறுப்பு தானத்திற்கான சம்மதத்திற்காகக் குடும்பத்தினரை அணுகுவதற்கு முன்னரே இந்தச் சான்றளிப்பு செயல்முறை முடிக்கப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்துகின்றன.
விதி 5(1) கூறுவது என்னவென்றால், தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) உள்ள மருத்துவமனையில் உள்ள பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பணியாளர், மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் (transplant coordinator) இருந்தால் அவருடன் சேர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு நோயாளி மூளைத்தண்டு மரணம் அடைந்ததாகச் சான்றளிக்கப்பட்ட பிறகு, அந்த நோயாளியின் நெருங்கிய உறவினருடன் கட்டாயம் கலந்தாலோசிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. விதி 5(2) மேலும் கூறுவது என்னவென்றால், இந்த விதிகள் அறிவிக்கப்பட்டவுடன், இந்தச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படாத மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்களுக்கும் இதே கடமைகள் பொருந்தும் என்றும் தெளிவுபடுத்துகிறது.
படிவம் 8, ‘அறிவிப்பு மற்றும் ஒப்புதல் படிவம்’ என்பது, இறந்தவரின் ஒரு நெருங்கிய உறவினர் அல்லது உடலுக்கு சட்டப்பூர்வமாகப் பொறுப்பான நபர் உறுப்பு தானத்திற்கு அளித்த ஒப்புதலைப் பதிவு செய்கிறது. புள்ளி 1 இவ்வாறு கூறுகிறது: “எனது உறவினர்... மூளைத் தண்டு இறப்பு/இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது,” புள்ளி 4 இவ்வாறு கூறுகிறது: “நான் இதன்மூலம் அவருடைய/அவளுடைய உடல் உறுப்பு(கள்) அகற்றப்படுவதற்கு அனுமதி அளிக்கிறேன்/அனுமதி மறுக்கிறேன்.” என்று ஒப்புதல் முறைமையைக் கொண்டுள்ளது. இந்த விதிகள், தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) வசதிகொண்ட ஒவ்வொரு மருத்துவமனையிலும் மூளைத்தண்டு மரணம் (Brainstem Death - BSD) அடையாளம் காணப்பட்டு சான்றளிக்கப்படுவதை உறுதி செய்கின்றன. மேலும், மூளைத்தண்டு இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே ஒப்புதல் பதிவு செய்யப்படும் நடைமுறை பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
திருத்தங்களுக்கான தேவை
தற்போது, மூளைத்தண்டு இறப்புச் சான்றளிப்பு மற்றும் உறுப்பு மீட்பு (organ retrieval) ஆகியவை பதிவுசெய்யப்பட்ட மாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனைகள் அல்லது மாற்று அறுவை சிகிச்சை இல்லாத உறுப்பு மீட்பு மையங்களில் (Non-Transplant Organ Retrieval Centres - மாற்று அறுவை சிகிச்சை திட்டங்கள் இல்லாமல், மூளைத்தண்டு இறப்புச் சான்றளித்து உறுப்பு மீட்புக்கு ஆதரவளிக்கும் மருத்துவமனைகள்) மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இவை இரண்டும் தகுந்த அதிகாரியிடம் (Appropriate Authority - AA) பதிவு செய்திருக்க வேண்டும். 1994-ஆம் ஆண்டின் சட்டத்தின் பிரிவு 14(1)-ஆனது, எந்த ஒரு மருத்துவமனையும், மனித உறுப்பு மீட்பு மையங்கள் உட்பட, சட்டத்தின்கீழ் பதிவு செய்யாமல் சிகிச்சை நோக்கங்களுக்காக மனித உறுப்புகள் அல்லது திசுக்களை அகற்றவோ, சேமிக்கவோ அல்லது மாற்று அறுவை சிகிச்சை செய்யவோ கூடாது என்று தெளிவுபடுத்துகிறது. இது விதி 5(1) மற்றும் (2)-உடன் முரண்படுகிறது, எனவே தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) வசதிகளுடன் கூடிய அனைத்து மருத்துவமனைகளிலும் மூளைத்தண்டு மரணம் அடையாளம் காணல், சான்றளிப்பு மற்றும் உறுப்பு மீட்பு ஆகியவற்றை அனுமதிக்க இந்தச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. உடல் உறுப்புதானக் கொடையாளர்களின் எண்ணிக்கையையும், உறுப்புகளின் இருப்பையும் அதிகரிக்க இதை விரிவுபடுத்துவது அவசியம் என்கின்றனர். இருப்பினும், மாற்று அறுவை சிகிச்சை மற்றும் உயிருள்ள கொடையாளரிடமிருந்து உறுப்பை அகற்றுவது ஆகியவை பதிவுசெய்யப்பட்ட மாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
உடற்காயம் அல்லது இரத்தக்கசிவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மூளைத்தண்டு மரணம் ஏற்படலாம். உறுப்பு தானத்திற்கோ அல்லது மருத்துவ கவனிப்பு முடிவிற்கோ வழிவகுக்கும் என்பதால், மற்ற மரண முறைகளைப் போலவே, இது உடனடியாகக் கண்டறியப்பட்டு சான்றளிக்கப்பட வேண்டும் என்கின்றனர். இருப்பினும், இரண்டு சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக, 1994-ஆம் ஆண்டு சட்டத்தின் படிவம் 10-இன்கீழ் மூளைத்தண்டு இறப்புக்குச் சான்றளிக்கும் நான்கு மருத்துவர்களில் இரண்டு பேர் அங்கீகரிக்கும் அதிகாரியால் அங்கீகரிக்கப்பட வேண்டும், இது நடைமுறைச் சிக்கல்களை உருவாக்குகிறது. இது சிரமமானது மற்றும் அரிதாகவே தேவைப்படுகிறது என்பதால் மருத்துவர்கள் இந்த ஒப்புதலைப் பெறுவதற்கு முன்வருவதில்லை. மேலும், இதை அங்கீகரிக்கும் அதிகாரிக்கான தெளிவான தகுதிக்கான அளவுகோல்களை நிர்ணயிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தத் தேவையைக் நீக்கிவிட்டு, சான்றளிக்கும் மருத்துவர்கள் பதிவுசெய்யப்பட்ட நிபுணர்களாக இருக்க வேண்டும் என்று கோருவது சிறந்தது. இரண்டாவதாக, படிவம்-10 மரண நேரத்தைக் கேட்பதில்லை, இதனால் மரணச் சான்றிதழ் முழுமையற்றதாகிறது என்கின்றனர். கேரள அரசு 2020-ஆம் ஆண்டில் "இறப்பு நேரம் என்பது இரண்டாவது அப்னியா சோதனையின்போது தமனி pCO₂ இலக்கு மதிப்பை அடைந்த நேரமாகும்" (time of death is the time the arterial pCO2 reached the target value in the second apnoea test) என்று தெளிவுபடுத்துவதன் மூலம் இதை நிவர்த்தி செய்தது போலவே மற்ற மாநிலங்களும் இதேபோன்ற வழிகாட்டுதலை வெளியிடலாம் என்றும் வலியுறுத்துகின்றனர்.
இத்தகைய குழப்பங்கள் முடிவுக்கு வர வேண்டும். மருத்துவர்கள் எங்கு மூளைத்தண்டு மரணம் (Brain Stem Death) ஏற்பட்டாலும் அதைச் சான்றளிக்க உதவவும், உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கையை (donor pool) அதிகரிக்கவும் தெளிவான வழிகாட்டுதல்கள் அவசியமாகிறது.
ஜே. அமலோர்பவநாதன், தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர்-செயலர் ஆவார்.
original link:
What are the legalities involved in organ transplants?