தமிழ்நாடு அரசு காவேரிபூம்பட்டினம் என்றும் அழைக்கப்படும் பூம்புகாருக்கும், தெற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினத்திற்கும் ஆழ்கடல் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் விரிவான குறிப்புகளைக் கொண்ட பூம்புகாரின் புகழ்பெற்ற கடந்த காலத்தைப் பற்றிய நுண்ணறிவுகளை இந்த அகழ்வாராய்ச்சிகள் வெளிக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பண்டைய தமிழர்களின் கடல்சார் வர்த்தகத் திறமையை வெளிக்காட்டும் முயற்சியாக, தமிழ்நாடு தொல்லியல் துறை மாநில கடற்கரையில் தொடர்ச்சியான ஆழ்கடல் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிக்கான திட்டத்தை வகுத்துள்ளது.
2025-26ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்யும்போது, நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, புதிய அகழ்வாராய்ச்சிகளை அறிவித்தார். இதில் பண்டைய சோழர்களின் தலைநகரான காவேரிபூம்பட்டினம் என்றும் அழைக்கப்படும் பூம்புகார் மற்றும் 50 கிலோமீட்டர் தெற்கே உள்ள ஒரு முக்கியமான துறைமுக நகரமான நாகப்பட்டினம் இடையேயான ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியின் முதல் கட்டமும் அடங்கும்.
இந்த ஆழ்கடல் அகழ்வாராய்ச்சிகள் புதையல்களைக் (treasures) கண்டுபிடித்து பூம்புகாரின் வளமான வரலாற்றைப் பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை வெளிக்கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி நதி வங்காள விரிகுடாவில் சந்திக்கும் இந்த பண்டைய நகரம், சங்க இலக்கியத்திலும் எரித்ரேயன் கடலின் பெரிப்ளஸிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரிப்ளஸ் (Periplus) என்பது துறைமுகங்கள் மற்றும் கடலோர அடையாளங்களை பட்டியலிட்ட ஒரு பண்டைய கையெழுத்துப் பிரதியாகும். இது ஒரு நில வரைபடம் மற்றும் பயண வழிகாட்டியாக செயல்படுகிறது. பூம்புகார் மற்றும் நாகப்பட்டினம் ஆகியவை முக்கிய வர்த்தக மற்றும் கலாச்சார பரிமாற்ற மையங்களாக இருந்தன. குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவுடன் ஒரு முக்கிய நுழைவாயிலாக செயல்பட்டன. பூம்புகார் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாகவும், பின்னர் கடல் அலைகளின் காரணமாக நீரில் மூழ்கியதாகவும் நம்பப்படுகிறது.
முந்தைய ஆய்வுகள்
பூம்புகார் கடற்கரையில் ஆழ்கடல் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் திட்டமிடப்படுவது இது முதல் முறை அல்ல. 1980-களில், தொல்பொருள் ஆய்வாளர் எஸ்.ஆர். ராவ் தலைமையிலான தமிழ்நாடு தொல்லியல் துறை மற்றும் தேசிய கடல்சார் நிறுவனம் (National Institute of Oceanography (NIO)) ஆகியவை கடல்தள ஆய்வுகளை மேற்கொண்டன. இந்த ஆய்வுகள் 20-30 மீட்டர் ஆழத்தில் உள்ள கட்டமைப்புகளைக் கண்டறிய பக்கவாட்டு ஸ்கேன் சோனார் (Side-scan sonar), எதிரொலி ஆழ அளப்பான்கள் மற்றும் காந்தமானிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தின. இது பூம்புகாரின் பண்டைய கடந்த காலத்தைப் பற்றிய முக்கியமான தடயங்களை வழங்கியது.
ஏப்ரல் 6, 1990 அன்று தி இந்துவில் வெளியான ஒரு செய்தி, பூம்புகாருக்கு அருகில் உள்ள வானகிரி அருகே 19.5 மீட்டர் ஆழத்தில் 4.5 கி.மீ தொலைவில் ஒரு கப்பல் விபத்து கண்டுபிடிக்கப்பட்டதை விவரித்ததாக தமிழ்நாடு தொல்லியல் துறை அப்போதைய இயக்குநரான நடன காசிநாதன் சுட்டிக்காட்டினார். இரும்பினால் ஆன அந்தக் கப்பல் இரண்டாக உடைந்து கடல்வாழ் உயிரினங்களால் மூடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதி கடற்பரப்பிற்கு மேலே தெரியும். அதே நேரத்தில் அதன் பெரும்பகுதி கடல் தளத்தின் கீழ் புதைந்துள்ளது. பூம்புகாரில் இருந்து 20 கி.மீ தெற்கே உள்ள தரங்கம்பாடியில் கோட்டை அருங்காட்சியகத்திற்கு அருகில், கடற்கரையில் சுமார் 500 மீட்டர் தொலைவில், 7 மீட்டர் ஆழத்தில் ஒரு மெகாலிதிக் அமைப்பு இருப்பதாக அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது. அகழ்வாராய்ச்சிகள் உள்புற மற்றும் வெளிப்புற கல் வட்டங்களையும், கூழாங்கல் கெய்ன் போன்ற உறையையும் வெளிப்படுத்தின. இது 10 மீட்டர் அகலமுள்ள மெகாலிதிக் அமைப்பை உருவாக்கியது.
மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள்
1991 முதல் 1993 வரை நீருக்கடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், கடலுக்கு அடியில் மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் மற்றும் செங்கல் அமைப்புகளைக் கண்டறிந்ததாக இந்து நாளிதழின் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த செங்கற்கள் கிமு 2ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 4ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை என்று நடனா காசிநாதன் மதிப்பிட்டார். நீரில் மூழ்கிய கட்டமைப்புகளுக்கு அருகில் கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்களும் காணப்பட்டன. 1997-ஆம் ஆண்டில், லேட்டரைட் கற்களால் ஆன ஒரு கட்டமைப்பின் எச்சங்களை டைவர்ஸ் கண்டுபிடித்தார்.
2004-ஆம் ஆண்டில், பூம்புகார் கடற்கரையில் கிழக்கு கடற்படை கட்டளையால் அனுப்பப்பட்ட ஹைட்ரோகிராஃபிக் ஆய்வுக் கப்பலான INS Darshak, 23 மீட்டர் ஆழத்தில் ஒரு U-வடிவ அமைப்பைக் கண்டுபிடித்தது. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்களால் மூழ்கடிக்கப்பட்டதாக நம்பப்படும் டச்சு கப்பலின் எச்சங்களையும் அந்தக் கப்பல் மீட்டது. மீட்கப்பட்ட கலைப்பொருட்களில் மூன்று ஈய இங்காட்கள் (lead ingots) இருந்தன. ஒவ்வொன்றும் சுமார் ஒரு மீட்டர் நீளமும் 80 கிலோ எடையும் கொண்டவை. இங்காட்களில் W. Blackett' என்ற குறி இருந்தது, இது பிரிட்டிஷ் உற்பத்தியாளரின் பெயராக இருக்கலாம். மற்றொரு குறி, 1792 என்றும் குறிக்கப்பட்டிருந்தது. ஒருவேளை உற்பத்தி ஆண்டாகவும் இருக்கலாம். அவற்றில் டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் சின்னமான வயர் என்ற இதய வடிவிலான கல்வெட்டும் இருந்தது. ஏப்ரல் 9, 2004 அன்று தி இந்து செய்தித்தாளில் செய்தி வெளியானது போல, கடல் தளத்தில் இரண்டு மீட்டர் நீளமுள்ள பீரங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சித் திட்டத்தை நிபுணர்கள் ஆதரிக்கின்றனர். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறைத் தலைவர் வி. செல்வகுமார், பூம்புகார் அருகே மேலும் ஆய்வுகள் நடத்தினால் தமிழ் கடல்சார் பாரம்பரியம் குறித்த புதிய விவரங்கள் வெளிப்படும் என்று கூறுகிறார்.
கடல்வழி சமூகம்
புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் கே. ராஜன் கூறுகையில், தமிழர்கள் தங்கள் சாகசப் பயணங்களுக்குப் பெயர் பெற்ற கடல்சார் சமூகமாக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர். குறிப்பாக, சிலப்பதிகாரம் மற்றும் பட்டினப்பாலை சங்க இலக்கியங்கள் பண்டைய துறைமுக நகரமான பூம்புகாரைப் பற்றி விரிவாக குறிப்பிடுகின்றன.
சங்க காலத்திற்குப் பிந்தைய இலக்கியங்கள் பூம்புகார் ஒரு முக்கிய துறைமுகமாக இருந்ததையும் பின்னர் நீரில் மூழ்கியதையும் உறுதிப்படுத்துகின்றன. பண்டைய பூம்புகார் ஒரு செழிப்பான வர்த்தக மையமாக இருந்ததை வெளிநாட்டு பயணிகளின் கணக்குகள் உறுதிப்படுத்துகின்றன. தொல்பொருள் ஆய்வுகள் நகரத்தின் அம்சங்கள் மற்றும் கடல்சார் வரலாறு பற்றிய கூடுதல் விவரங்களை வழங்கக்கூடும். பாண்டியர்களின் பண்டைய துறைமுகம் மற்றும் ஆரம்பகால தலைநகரான கொற்கையில் நீருக்கடியில் அகழ்வாராய்ச்சிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறது.