இந்தியாவின் பாலின இடைவெளி அறிக்கை (Gender Gap Report) தரவரிசையை ஓர் எச்சரிக்கையாகப் பார்க்கவும். -பூனம் முத்ரேஜா, மார்டண்ட் கௌசிக்

 இந்தியா பாலின சமத்துவத்தை அதன் பொருளாதார மற்றும் மக்கள்தொகை முன்னேற்றத்தின் முக்கியப் பகுதியாகக் காணவேண்டும்.


இந்தியா இப்போது ஒரு பெரிய உலகளாவிய பொருளாதார சக்தியாகவும் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளிலும் முன்னணியிலும் உள்ளது. நாடு உலகிலேயே மிகப்பெரிய இளைஞர் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இருப்பினும், உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை (2025) ஒரு யதார்த்தமான சரிபார்ப்பை வழங்குகிறது. பாலின சமத்துவத்தை அடைவதில் இந்தியா இன்னும் மிகவும் பின்தங்கியிருப்பதை இது காட்டுகிறது.


கட்டமைப்பு சிக்கல்கள்


இந்தியா 148 நாடுகளில் 131-வது இடத்தில் உள்ளது. பொருளாதார பங்கேற்பு மற்றும் சுகாதாரம் மற்றும் உயிர்வாழ்வில் இது மிகவும் குறைவாக உள்ளது. உண்மையான பாலின சமத்துவத்திற்கு இந்தப் பகுதிகள் முக்கியமானவையாகும். இந்த மதிப்பெண்கள் வெறும் சமூகக் குறிகாட்டிகள் மட்டுமல்ல. அவை தேசிய முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தும் கட்டமைப்பு தோல்வியின் அறிகுறிகளாகும்.


கல்வி நிலைகள் மேம்பட்டிருந்தாலும், பெண்களின் ஆரோக்கியத்தையும் சுதந்திரத்தையும் உறுதி செய்வதில் இந்தியா இன்னும் போராடுகிறது. பிறக்கும்போது இந்தியாவின் பாலின விகிதமானது, உலகில் மிகவும் சமநிலையற்ற ஒன்றாக இருப்பதாக அறிக்கை காட்டுகிறது. இது ஆண் குழந்தைகளுக்கான வலுவான விருப்பத்தை பிரதிபலிக்கிறது. மேலும், இப்போது பெண்கள் ஆண்களைவிட குறைவான ஆரோக்கியமான ஆயுட்காலத்தைக் கொண்டுள்ளனர்.


இத்தகைய விளைவுகள், குறிப்பாக குறைந்த வருமானம் மற்றும் கிராமப்புற பின்னணியில் உள்ள பெண்களுக்கு, மகப்பேறு ஆரோக்கியம், தடுப்பு பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் நீண்டகால புறக்கணிப்பை சுட்டிக்காட்டுகின்றன. சுகாதாரத்திற்கான பட்ஜெட்டின் ஒதுக்கீடுகள், குறிப்பாக முதன்மையான பராமரிப்பு மட்டத்தில், பெண்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற அடிப்படை சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கும் அவசியமாகும். நல்ல ஆரோக்கியம் இல்லாமல், பொருளாதார சேர்க்கை சாத்தியமற்றது. 15 முதல் 49 வயதுக்குட்பட்ட இந்தியப் பெண்களில் கிட்டத்தட்ட 57% பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (National Family Health Survey (NFHS))-5 அறிக்கையின்படி, இது அவர்களின் கற்றல், வேலை அல்லது கர்ப்பத்தை பாதுகாப்பாக சுமக்கும் திறனைக் குறைக்கிறது. இந்த பொதுவான மற்றும் சரிசெய்யக்கூடிய பிரச்சனை, பெண்களின் ஆரோக்கியம் தேசிய வளர்ச்சிக்கு முன்னுரிமையாகக் கருதப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.


பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு துணைக் குறியீட்டில் (Economic Participation and Opportunity subindex) இந்தியா 143-வது இடத்தில் உள்ளது. பெண்கள் இன்னும் ஆண்கள் சம்பாதிப்பதைவிட மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். பெண் தொழிலாளர் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. 2015-ம் ஆண்டில், பாலின இடைவெளிகளை குறைப்பது 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 770 பில்லியன் டாலர்களைச் சேர்க்கும் என்று மெக்கின்சி குளோபல் நிறுவனம் கணித்துள்ளது. இருப்பினும், 2025-ம் ஆண்டில், இந்தியா இந்த வாய்ப்பை தவறவிட்டதாகத் தெரிகிறது. தற்போதைய நிலையில், உலகளாவிய பொருளாதார பாலின இடைவெளியைக் குறைக்க ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஆகலாம். இந்த மெதுவான முன்னேற்றத்திலும் இந்தியா பின்தங்கியுள்ளது.


ஒரு புறக்கணிப்பு


இந்தப் பிரச்சினை வேலைகளின் எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல. பெண்கள் பெரும்பாலும் முறைசாரா மற்றும் வாழ்வாதார வேலைகளில் வேலை செய்கிறார்கள். முடிவெடுக்கும் பகுதிகளிலும் (decision-making spaces) அவர்கள் மிகவும் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள். இவற்றில் வாரிய அறைகள் (boardrooms) மற்றும் பட்ஜெட் குழுக்கள் (budget committees) போன்ற இடங்களும் அடங்கும். இதன் காரணமாக, கொள்கைகள் பெரும்பாலும் பெண்களின் உண்மையான அனுபவங்களைப் புறக்கணிக்கின்றன. ஊதியம் பெறாத பராமரிப்பு வேலை என்பது பெண்களின் நேரத்தையும், சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு பெரிய சுமையாகும். நேரப் பயன்பாட்டு கணக்கெடுப்பின்படி, இந்தியப் பெண்கள் ஆண்களைவிட கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகமாக ஊதியம் பெறாத வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள். இதுபோன்ற போதிலும், இந்த முக்கியமான பணி தேசிய புள்ளிவிவரங்களில் கணக்கிடப்படவில்லை. பொதுக் கொள்கைகளிலும் இது சிறிய நிதியைப் பெறுகிறது.


குழந்தை பராமரிப்பு மையங்கள், முதியோர் பராமரிப்பு சேவைகள் மற்றும் மகப்பேறு சலுகைகள் போன்ற பராமரிப்பு உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது பெண்கள் மீதான சுமையைக் குறைக்கும். இது மில்லியன் கணக்கான பெண்கள் பணியிடத்தில் சேர்வதற்கு அல்லது மீண்டும் திரும்புவதற்கு உதவும். இந்த சேவைகள் இல்லாதது பாலின மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் இடைவெளியைக் காட்டுகிறது.


மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளில் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளைச் சேர்க்கத் தொடங்க வேண்டும். நேரத்தைப் பயன்படுத்தும் ஆய்வுகள், பாலின பட்ஜெட் மற்றும் பராமரிப்பு உள்கட்டமைப்பில் நேரடியாக முதலீடு செய்வதன் மூலம் அவர்கள் இதைச் செய்யலாம். உருகுவே மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளிலிருந்து இந்தியா கற்றுக்கொள்ளலாம். இந்த நாடுகள் தங்கள் வளர்ச்சித் திட்டங்களில் பராமரிப்புப் பொருளாதாரங்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளன, மேலும் நல்ல பலன்களைக் கண்டுள்ளன.


மூத்த குடிமக்களை ஆதரித்தல்


இந்தியா அதன் மக்கள்தொகை மாற்றங்களில் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. அதாவது, இந்தியாவானது இன்னும் பல இளைஞர்களைக் கொண்டிருப்பதால் அது பயனடைகிறது. ஆனால், மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2050-ம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மக்கள்தொகையில் சுமார் 20% பேர் முதியவர்களாக இருப்பார்கள். இந்த முதியவர்களில் பெரும்பாலோர் மிகவும் வயதான பெண்களாக இருப்பார்கள். அவர்களில் பலர் ஆதரவிற்காக மற்றவர்களைச் சார்ந்திருக்கும் கைம்பெண்களாக இருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.


அதே நேரத்தில், NFHS-5 அறிக்கையில் காட்டப்பட்டுள்ளபடி, கருவுறுதல் விகிதங்கள் மாற்று நிலைக்குக் (replacement level) கீழே குறைந்துவிட்டன. இதன் பொருள் குறைவான குழந்தைகள் பிறக்கின்றன. இதன் விளைவாக, வேலை செய்யும் வயதுடைய மக்கள் குறைந்துவிடும். இதற்கிடையில், முதியவர்களைப் பராமரிக்க வேண்டிய தேவைகள் அதிகரிக்கும்.


பொருளாதாரம் தொடர்ந்து வளர, பெண்கள் மீது கவனம் செலுத்துவது முக்கியம். பெண்கள் மக்கள்தொகையில் பாதியாக உள்ளனர். அவர்கள் ஆரோக்கியமாகவும், ஆதரவுடனும், வேலை செய்யக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். பாலின சமத்துவம் (Gender equality) என்பது இனி உரிமைகள் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை நிர்வகிப்பதற்கும் இது அவசியம்.


பெண்கள் பணியிடத்திலிருந்து தொடர்ந்து வெளியேறினால் அல்லது சேர அனுமதிக்கப்படாவிட்டால், சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும். இது ஒரு சிறிய குழு தொழிலாளர்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இது நாட்டின் நிதி நிலைத்தன்மையையும் பலவீனப்படுத்தும். இது நடப்பதைத் தடுக்க, நமக்கு ஒருங்கிணைந்த கொள்கைகள் தேவை. இந்தக் கொள்கைகள் சுகாதாரம், வேலைகள் மற்றும் சமூக ஆதரவு அமைப்புகளை இணைக்க வேண்டும்.


இந்தியாவிற்கு போதுமான கட்டமைப்புகள் மற்றும் லட்சியங்கள், முழக்கங்கள் உள்ளன. இதற்கு உண்மையான முதலீடு தேவை. இதில் பெண்களின் தேவைகளில் கவனம் செலுத்தும், பொது சுகாதார அமைப்புகளும் அடங்கும். ஊதியம் பெறாத வேலையை மிகவும் நியாயமாகப் பகிர்ந்து கொள்ளும் பராமரிப்பு சேவைகளில் முதலீடு செய்வது இதில் அடங்கும். இதற்கான கொள்கைகள் பெண்களை பயனாளிகளாக மட்டுமல்ல, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்களிப்பாளர்களாகவும் நடத்த வேண்டும்.


உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையானது வெறும் தரவரிசை அல்ல. இது ஒரு எச்சரிக்கையான தரநிலை. இந்தியா பாலின சமத்துவத்தை அதன் பொருளாதார மற்றும் மக்கள்தொகை எதிர்காலத்தின் மையப் பகுதியாக மாற்றவில்லை என்றால், அது அடைய கடினமாக உழைத்த முன்னேற்றத்தை இழக்க நேரிடும்.


பூனம் முத்ரேஜா இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநராக உள்ளார். மார்தண்ட் கௌஷிக் அதே அமைப்பில் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புக்கான மூத்த நிபுணர் ஆவார்.



Original article:

Share: