மக்களாட்சியின் முரண்பாடு : அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடிமக்கள். -வர்கீஸ் கே ஜார்ஜ்

 அரசானது மக்களால் உருவாக்கப்படுகிறது. ஆனால்,  குடிமக்கள் யார் யார் என்று அதுவே தீர்மானிக்கிறது. எந்த அமைப்போ அல்லது அமைச்சகமோ அதைக் கையாண்டாலும் இது ஒரு முரண்பாடே ஆகும். 


இந்திய கடவுச்சீட்டு இந்திய குடிமக்களுக்கு மட்டுமே உரித்தானது. மேலும், நாட்டின் வாக்காளர் பட்டியலில் குடிமக்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். ஆனால், கடவுச்சீட்டு வைத்திருப்பது அல்லது வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது குடியுரிமையை நிரூபிக்காது என்கின்றனர். ஏனெனில், போலி ஆவணங்கள் மூலம் மக்கள் இந்த ஆவணங்களைப் பெற்றுள்ளனர் மேலும் இது தொடர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆதாரம் என்று எது கருதப்படுகிறதோ, அதற்கும் உண்மைக்கும் இடையே முரண்பாட்டை உருவாக்குகிறது. குடியுரிமையை நிரூபிப்பதில் உள்ள இந்தப் பிரச்சினை, இந்திய தேர்தல் ஆணையத்தின் நாடுதழுவிய சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (Special Intensive Revision - SIR) நடவடிக்கையின்போது மீண்டும் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். 


சிறப்புத் தீவிர திருத்தம்  (Special Intensive Revision (SIR)) மீதான சட்டரீதியான சவாலானது மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. முதலாவதாக, யார் ஒரு குடிமகன் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. அந்த அதிகாரம் உள்துறை அமைச்சகத்திற்கு மட்டுமே உள்ளது. இரண்டாவதாக, ஒரு பெரிய அளவிலான வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்குச் சட்டம் அனுமதிப்பதில்லை, மேலும் இது குறிப்பிட்ட வழக்குகளில் மட்டுமே அனுமதிக்கிறது. மூன்றாவதாக, யாரோ ஒருவர் வெளிநாட்டவரா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் குடியுரிமைச் சட்டத்தின்கீழ் மட்டுமே உறுதிசெய்ய முடியும் என்கின்றனர். மேலும், 1946-ன் வெளிநாட்டினர் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் (Foreigners Tribunals) போன்ற அமைப்புகளால் மட்டுமே செய்ய முடியும் என்றும் தெளிவுபடுத்துகின்றனர்.


 

தனிநபர் குடியுரிமை நீரூபிப்பு 


நாடு முழுவதும் இந்திய குடியுரிமையைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும் எந்த ஒரு ஆவணமும் இல்லை. அனைவரின் குடியுரிமையையும் சரிபார்க்க பாராளுமன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டஅமைப்பு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியக் குடியுரிமையை ஒரு தனிநபர் நிரூபிக்க என்ன ஆதாரம் உள்ளது என்று பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டபோது, “2004-ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டமானது (1955) ஒவ்வொரு இந்திய குடிமகனையும் பதிவுசெய்து அவர்களுக்கு ஒரு தேசிய அடையாள அட்டையை வழங்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது”  என்று உள்துறை அமைச்சர் கூறினார்.


“இதற்கான நடைமுறை குடியுரிமை (குடிமக்களைப் பதிவு செய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்குதல்) விதிகள், 2003-ல் கொடுக்கப்பட்டுள்ளது.” இந்த விதிகளின்படி, தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டின் (National Population Register (NPR)) மூலம் உருவாக்கப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (National Register of Citizens (NRC)) விவரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள குடிமக்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படும். தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்பது நாட்டின் அனைத்து குடிமக்களையும் உள்ளடக்கிய பட்டியல் ஆகும். தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு சட்டத்தின் கீழான விதிகளால் அனுமதிக்கப்படுகிறது. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இந்திய குடிமக்கள் என்று நிரூபிக்க முடிந்தவர்கள் மட்டுமே பட்டியலில் இடம்பெறுவார்கள்.


சட்டத்தின்படி, ஒருவரது குடியுரிமை கேள்விக்குள்ளாகும் பட்சத்தில், அதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இல்லை. மாறாக, அந்த நபருக்கே உள்ளது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்கீழ் நடந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது, தேசிய மக்கள் பதிவேட்டுக்கான (NPR) தரவு சேகரிக்கப்பட்டது. இது பின்னர் 2015-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு, 119 கோடி குடிமக்களை உள்ளடக்கியது. 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் பதிவேடு புதுப்பிக்கப்படுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) தனது 2024 தேர்தல் அறிக்கையிலிருந்து தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) குறித்த வாக்குறுதியை நீக்கியுள்ளது. தேசிய மக்கள் பதிவேட்டில் யார் வேண்டுமானாலும் பட்டியலிடப்படலாம் என்கின்றனர்.  ஆனால், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (National Register of Citizens (NRC)) சேர்க்கப்பட வேண்டுமானால், ஒரு நபர் தாம் குடியுரிமைச் சட்டத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதை நிரூபிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 


இந்தியாவின் அரசியலமைப்பு நிறுவனர்கள் முதலில் “இங்கு பிறந்த அனைவருக்கும் குடியுரிமை” மண்ணின் உரிமை (Jus Soli) வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், காலப்போக்கில் “பெற்றோர் மூலம் வரும் குடியுரிமை”  இரத்தத்தின் உரிமை (Jus Sanguinis) அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. தற்போது, பிறப்பால் ஒருவரைக் குடிமகனாக வரையறுக்க சில விதிகள் கூறப்படுகின்றன. ஜூலை 1, 1987-ஆம் ஆண்டுக்குமுன் பிறந்த எவரும் தானாகவே குடிமகனாவார். ஜூலை 1, 1987 மற்றும் டிசம்பர் 2, 2004 ஆகிய தேதிகளுக்கு இடையில் பிறந்தவர்கள், அவர்களின் பெற்றோரில் குறைந்தபட்சம் ஒருவர் அவர்கள் பிறக்கும்போது குடிமகனாக இருந்திருந்தால் மட்டுமே குடிமக்களாகக் கருதப்படுவார்கள். டிசம்பர் 3, 2004, அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள், அவர்களின் பெற்றோரில் குறைந்தபட்சம் ஒருவர் குடிமகனாகவும், மற்றவர் சட்டவிரோதமாகக் குடியேறியவர் அல்லாமலும் இருந்தால் மட்டுமே குடிமக்களாகக் கருதப்படுவார்கள். 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் பலமுறை திருத்தப்பட்டுள்ளது. 2003-ஆம் ஆண்டில், அது சில குடியிருப்பாளர்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று அடையாளம் கண்டது. அவர்களும் அவர்களின் குழந்தைகளும் பிறப்பின் மூலம் குடியுரிமை பெற முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது தகுதிபெற, ஒருவருக்கு ஒன்று அவர்களின் பெற்றோர் இருவரும் குடிமக்களாக இருக்க வேண்டும் அல்லது ஒரு பெற்றோர் குடிமகனாகவும் மற்றவர் சட்டவிரோதமாகக் குடியேறியவர் அல்லாமலும் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்படுகிறது. சில சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள், குடியுரிமை (திருத்தச்) சட்டம், 2019-ன் கீழ் குடியுரிமை பெறலாம். இந்தச் சட்டம் ஒரு மதக் காரணியைச் சேர்த்ததற்காகவே சர்ச்சைக்குரியதாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.


கடந்த 2008-ஆம் ஆண்டில், மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு முன்னோடித் திட்டமாக சில லட்சம் இந்தியர்களுக்கு பல்நோக்கு தேசிய அடையாள அட்டையை (Multi-Purpose National Identity Card (MNIC)) வழங்கியது. 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்த அட்டையில் கைரேகைகள், ஒரு கருவிழி ஊடுகதிர் படம், ஒரு புகைப்படம் மற்றும் பெயர், பிறந்த தேதி, பெற்றோரின் பெயர்கள், பிறந்த இடம் மற்றும் வழங்கப்பட்ட இடம் போன்ற தனிப்பட்ட விவரங்களுடன் கூடிய மின்னணு சிப் இருந்தது. 2019-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பாஜக நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்திருந்தது. ஆனால், தற்போது தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியானது இந்த முயற்சிக்கு நேர்மாறாக உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.


தொடர்ந்து வரும் மோதல்


எந்த அமைச்சகம் அல்லது துறை பொறுப்பில் இருந்தாலும், குடியுரிமை, தேசத்துரோகம் மற்றும் ராஜதுரோகம் போன்ற விவகாரங்கள் பொதுவாக உள்ளூர் அதிகாரிகளாலும் காவல்துறையினராலும் தீர்மானிக்கப்படுகின்றன. அரசின் அதிகாரம் மக்களிடமிருந்து வருகிறது. மக்கள்தான் இறையாண்மையாளர்கள், மேலும் அவர்களுக்குச் சேவை செய்வதற்காகவே அரசு உள்ளது.


எனவே, குடிமக்கள் யார் என்பதைக் கணக்கிடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள இந்த நவீன அரசு இயந்திரம், தன்னுள்ளேயே ஒரு பெரிய முரண்பாட்டைக் கொண்டிருக்கிறது. ஒரு தனிநபர் குடிமகனா இல்லையா, அவர்கள் தேசத் துரோகியாகவோ அல்லது கிளர்ச்சியாளராகவோ இல்லையா என்பதையெல்லாம் எல்லை அதிகாரி, காவலர், கிராம அலுவலர் மற்றும் வாக்காளர்களைப் பதிவுசெய்பவர் ஆகியோரே அன்றாட அடிப்படையில் தீர்மானிக்கின்றனர். 


இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (SIR) மேற்கொள்வதிலிருந்து தடுக்கப்பட்டாலும், இந்த மோதல் தொடரும் என்றே கூறுகின்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையின்கீழ் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபடும் அதே தொடக்கப் பள்ளி ஆசிரியர், தேவைப்பட்டால், மக்கள் தொகைப் பதிவேட்டுக்கும் (NPR), பின்னர் உள்துறை அமைச்சகத்தின்கீழ் (Ministry of Home Affairs (MHA)) தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் (NRC) அதே முடிவுகளை எடுப்பார். குடிமக்கள் யார் என்பதை அரசே தீர்மானிக்கும் வகையில் குடியுரிமைச் சட்டங்கள் வரையறுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.


அசாம் பயிற்சி


அசாம் மாநிலத்தில் மட்டும் வரைவு தேசிய குடிமக்கள் பதிவேடு (Draft NRC) செயல்படுத்தப்பட்டுள்ளது. அசாம் ஒப்பந்தத்தை நிறைவேற்ற, 1985-ஆம் ஆண்டில் குடியுரிமை (திருத்த) சட்டம் இயற்றப்பட்டு, 1955 குடியுரிமைச் சட்டத்தில் பிரிவு-6A சேர்க்கப்பட்டது. இதனால் அசாமுக்கு இந்தியாவின் மற்றப் பகுதிகளிலிருந்து வேறுபட்ட தனிக்குடியுரிமை விதிமுறைகளும், மூன்று வெவ்வேறு காலக்கெடு தேதிகளும் (cut-off dates) உருவாக்கப்பட்டன. 2019-ஆம் ஆண்டில் வெளியான அசாமின் வரைவு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 3.29 கோடி பேரில் சுமார் 19 லட்சம் பேர் “D” சந்தேகத்திற்குரிய குடிமக்கள்” (Doubtful citizenship) என்று குறிக்கப்பட்டனர். அசாமில் பின்பற்றப்பட்ட விதிப்படி, ஒருவர் தன் குடியுரிமையை “நியாயமான சந்தேகம் இல்லாமல்” நிரூபிக்க முடியாவிட்டால், அவர் தானாகவே சந்தேகத்திற்குரியவராகக் கருதப்படுவார்.


அசாமில் உள்ள பாஜக அரசு வரைவு தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) நிராகரித்தது, ஏனெனில், “D” எனக் குறிக்கப்பட்ட பலரும் இந்துக்கள் ஆவர். “D” எனக் குறிக்கப்படுவது ஒரு நபரின் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படலாம், அவர்களின் குடியுரிமையை வெளிநாட்டவர் தீர்ப்பாயம் (foreigner's tribunal) தீர்மானிக்க வழிவகுக்கலாம், மேலும் நாடுகடத்தலுக்கும் (deportation) வழிவகுக்கலாம். இந்த செயல்முறை, குடியுரிமை மற்றும் பரம்பரைக்கான கடைசித் தேதிகளை பூர்த்திசெய்ய, பல ஆண்டுகளாக பெற்றோர் மற்றும் வசிப்பிட ஆவணங்களை பெரிதும் சார்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


ஒருவரின் குடியுரிமை அல்லது வாக்களிக்கும் உரிமைகள் தெளிவான விதிகளுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை யாரும் மறுக்கவில்லை.  ஆனால், குடியுரிமையை யார் தீர்மானிக்க வேண்டும், அந்தச் செயல்முறை எவ்வளவு நியாயமானதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்கவேண்டும் என்பதே விவாதிக்கப்படக்கூடியதாகும். ஒவ்வொரு தனிநபரும் தான் குடியுரிமை பெறத் தகுதியானவர் என்பதை நிரூபிக்க வேண்டிய சங்கடமான நிலை உள்ளது. இறுதியில் நாட்டின் “குடிமக்கள்” யார் என்பதை அரசாங்கமே முடிவு செய்கிறது. இதனால், ஜனநாயகத்தில் மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான உறவில் ஒரு அடிப்படையான முரண்பாடு ஏற்படுகிறது.


Original article :Democracy’s paradox, the chosen people of the state -Varghese K  George

Share: