1946 இந்தியக் கடற்படை கிளர்ச்சி: வளர்ந்து வரும் பிரிவினைகளுக்கு நடுவே ஒற்றுமை. -ராபர்ட் ரஹ்மான் ராமன்

 காலனித்துவ அதிகாரிகள் பெரும்பாலும் இந்த எழுச்சியை ஒரு 'கலகம்' (mutiny) என்று அழைத்தனர். கடற்படை வீரர்களின் ஒழுக்கமின்மையால் ஏற்பட்ட ஒரு சிறிய, உள்ளூர் அளவிலான பிரச்சனை என்று அவர்கள் இதை விவரித்தனர். ஆனால், அன்றைய நிகழ்வுகளை ஆராய்ந்து பார்க்கும்போது, அந்த கிளர்ச்சியின் அளவு மிக பிரம்மாண்டமானது என்பது தெளிவாகத் தெரிகிறது.


1946-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியக் கடற்படைப் புரட்சியின் (Royal Indian Navy’s revolt (RIN)) 80-வது ஆண்டு நினைவு தினம் பிப்ரவரி மாதம் 18-ஆம் நாளான இன்று கடைபிடிக்கப்படுகிறது. பம்பாயில் உள்ள கடற்படைத் தளத்தில் ஒரு சிறிய ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாகத் தொடங்கிய இது, பொதுமக்களின் பலத்த ஆதரவுடன் மிக விரைவாக வீதிகளில் பெரிய அளவிலான போராட்டமாக மாறியதாகக் கூறப்படுகிறது. 


எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு, குறிப்பாக தெற்காசியாவில் மீண்டும் மதங்களுக்கு இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வரும் இவ்வேளையில், இந்தச் சிறு கிளர்ச்சியின் முக்கியத்துவம் குறித்த மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும்.


கலகமா அல்லது கிளர்ச்சியா?


காலனித்துவ அதிகாரிகள் பெரும்பாலும் இந்த கிளர்ச்சியை ஒரு 'கலகம்' (mutiny) என்றே அழைத்தனர். மத்திய தலைமை அல்லது ஒருங்கிணைப்பு ஏதுமின்றி, கடற்படை வீரர்களிடையே ஏற்பட்ட ஒரு உள்ளூர் பிரச்சனை என்று அவர்கள் கூறினர். ஆனால், பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரையிலான நிகழ்வுகளை மேலோட்டமாகப் பார்த்தாலே, அந்த எழுச்சி உண்மையில் எவ்வளவு பெரியதாக இருந்தது என்பது தெரியும் என்கின்றனர். 


பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி, 1946-ஆம் ஆண்டு, மும்பையில் உள்ள 'HMIS தல்வார்' (HMIS Talwar) கப்பற்படைத் தளத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இந்தியக் கடற்படை வீரர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியபோது இந்தப் புரட்சி வெடித்ததாகக் கூறப்படுகிறது. மோசமான உணவு, குறைந்த ஊதியம் மற்றும் ஆங்கிலேய அதிகாரிகளின் இனவெறிப் பாகுபாடு ஆகியவற்றை எதிர்த்து அவர்கள் போராடினார்கள். இந்த செய்தி பரவியவுடன், மும்பை கோட்டைப் பகுதிகளில் இருந்த கடற்படைப் பிரிவுகளும், மும்பை துறைமுகத்தில் இருந்த 22 கப்பல்களும் வேலையை நிறுத்தின. கடற்படை வீரர்கள் நகரத்தில் ஊர்வலம் சென்றனர். சுபாஷ் சந்திர போஸின் உருவப்படத்தை ஏந்திச் சென்ற அவர்கள், தங்கள் கப்பல்களில் காங்கிரஸ், முஸ்லீம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளை ஏற்றினர். விரைவில், அவர்கள் ஒரு மத்திய போராட்டக் குழுவை அமைத்தனர். இந்தக் குழு, தங்களுடைய கோரிக்கைகளை இந்திய தேசிய ராணுவ வீரர்களை விடுதலை செய்வது போன்ற பெரிய தேசியப் போராட்டங்களுடன் இணைத்ததாகத் தெரிவிக்கின்றனர். 


பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி, அந்த நகரத்தில் அமைதியான முறையில் தொடங்கப்பட்ட ஒரு உண்ணாவிரதப் போராட்டம், திடீரென ஒரு ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாக மாறியது. கடற்படை வீரர்கள் தங்கியிருந்த இடத்தின் மீது ஆங்கிலேயப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, அதற்குப் பதிலடியாக வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக அமைந்தது. கப்பலில் இருந்த கிளர்ச்சியாளர்கள், கரையில் இருந்த வீரர்களைப் பாதுகாப்பதற்காகத் தங்களின் பீரங்கிகளை இயக்கியதால், ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் உருவானது. அடுத்த ஐந்து நாட்களில், இந்தக் கிளர்ச்சி மற்ற கடற்படைத் தளங்களுக்கும் பரவியது. மேற்கு கடற்கரையில் உள்ள கராச்சி மற்றும் மும்பை முதல் கிழக்கு கடற்கரையில் உள்ள சென்னை, கொச்சி, அந்தமான் தீவுகள், விசாகப்பட்டினம் மற்றும் கொல்கத்தா வரை பரவியதாகவும் கூறப்படுகிறது.  இந்தக் கிளர்ச்சி அதன் உச்சத்தில் இருந்தபோது, 78 போர்க்கப்பல்கள், டெல்லியில் உள்ள கடற்படை முகாம்கள் உட்பட, மேலும் 20 கடற்படை முகாம்கள் மற்றும் சுமார் 20,000 கடற்படை வீரர்கள் இதில் பங்கேற்றனர்.


இந்திய சுதந்திரப் பயணத்தில் இது ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாக இருந்தபோதிலும், பொதுமக்களின் நினைவிலிருந்து இந்த நிகழ்வு காலப்போக்கில் மறைந்து போனது. விரைவில் ஏற்பட்ட மதக்கலவரங்களும், பிரிவினையின்போது நடந்த வன்முறைகளும் இதன் அடையாளத்தை நீர்த்துப்போகச் செய்துவிட்டன.



ஒற்றுமையின் தருணம்


இந்தக் கிளர்ச்சியின் முக்கியத்துவத்தைக் கணிக்கும்போது, ​​செப்டம்பர் மாதம் 1945-ஆம் ஆண்டில் சிம்லா மாநாடு தோல்வியடைந்த பிறகு நாட்டில் அதிகரித்த வகுப்புவாத பதற்றங்களை மக்கள் பெரும்பாலும் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். அந்தக் காலகட்டத்தில் மும்பையிலும் வகுப்புவாத கலவரங்கள் நடந்தன. இருப்பினும், பிப்ரவரி மாதம் 1946-ஆம் ஆண்டில் நடந்த இந்தியக் கடற்படை (Royal Indian Navy) கிளர்ச்சியின்போது, ​​அங்கு ஒரு குறுகிய காலத்திற்கு இந்து-முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை நிலவியதாகக் கூறப்படுகிறது. ஆங்கிலேய ராணுவத்திற்கும் கடற்படை வீரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டபிறகு, இந்து மற்றும் முஸ்லிம் போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து வீதிகளில் இறங்கினர். கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 'ஹர்த்தால்' (வேலைநிறுத்தம்) செய்ய அழைப்பு விடுத்தனர். அன்று மதியம், மக்கள் கூட்டமாகத் தபால் நிலையங்களைத் தாக்கினர், டிராம் தண்டவாளங்களை உடைத்தனர், தடுப்புகளை அமைத்தனர் மற்றும் சாலைகளில் தீ மூட்டிப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அந்த மாநகரமே ஸ்தம்பித்ததாகக் கூறப்படுகிறது. 'பெண்டி பஜார்' மற்றும் ஆலைப்பகுதிகளில் தொழிலாளர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கல்வீச்சு மற்றும் பெரிய அளவிலான கலவரம் நடந்ததாகவும் கூறுகின்றனர். 


பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி, இந்த ஒற்றுமை காலனித்துவ ஆட்சிக்கு எதிரான ஒரு மக்கள் எழுச்சியாக மாறியது. கடற்படை வீரர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏழை மக்கள் வீதிக்கு வந்து ஆங்கிலேய அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தனர். அவர்கள் ஊர்வலங்களை நடத்தினர்; கற்கள் மற்றும் பேரெல்களைக் கொண்டு தெருக்களை மறித்தனர். மேலும் போக்குவரத்து சேவையை முடக்க பேருந்துகள் மற்றும் ராணுவ வாகனங்களை தீயிட்டு எரித்தனர். முந்தைய காங்கிரஸ் போராட்டங்களின் போது பெரும்பாலும் அமைதியாக இருந்த முஸ்லிம் பகுதிகள், இந்த எழுச்சியின் முக்கிய மையங்களாக மாறின. அந்தப் பகுதிகள் தடுப்புகளால் சூழப்பட்டு, பல்வேறு சமூகக் குழுக்களைச் சேர்ந்த மக்களால் பாதுகாக்கப்பட்டன. ஊர்வலங்கள் இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரு பகுதிகளின் வழியாகவும் சென்றன. மக்கள் மூவர்ணக் கொடி, முஸ்லிம் லீக் கொடி மற்றும் கம்யூனிஸ்ட் கொடிகளை ஏந்திச் சென்றனர்.


மும்பையின் ஆலைப்பகுதி கிளர்ச்சியின் மையப்புள்ளியாக மாறியது. ஜவுளி ஆலைகள், இரயில்வே பணிமனைகள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன, அதைத் தொடர்ந்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டன. தொழிலாளர்கள் அந்தப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மக்கள் காவல் நிலையங்களை எரித்தனர், மேலும் காவல்துறை மற்றும் ஆங்கிலேய வீரர்களுடன் நேரடிப் போரில் ஈடுபட்டனர். இது பல உயிரிழப்புகளுக்கும் காயங்களுக்கும் வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த எழுச்சியை ஒடுக்க, ஆங்கிலேய அரசாங்கம் இராணுவப் படைகளையும் கவச வாகனங்களையும் நிலைநிறுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 


காமதிபுரா மற்றும் மதன்புரா பகுதிகளில் கடும் போர் வெடித்தது. அங்கே இந்து மற்றும் முஸ்லிம் ஆலைத் தொழிலாளர்கள் தடுப்புகளை அமைத்து, முன்னேறி வந்த ஆங்கிலேயப் படைகள் மீது கற்களையும் பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். இதற்குப் பதிலடியாக, ஆங்கிலேயப் படைகள் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி முனை கத்திகள் கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்தத் தீவிரமான மற்றும் சமமற்ற மோதலில், சுமார் 200 ஏழைத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இவ்வளவு பெரிய அளவிலான பலத்தைப் பயன்படுத்திய பிறகும், பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி கடற்படை வீரர்கள் சரணடைந்த பின்னரும் கூட, ஓரிரு நாட்களுக்கு ஆலைப்பகுதி மற்றும் நகரப் பகுதிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ராணுவப் படைகள் திணறியதாகக் கூறப்படுகிறது. 


அழியாத சுவடுகள்


இந்த வரலாற்று நிகழ்வினால் உருவான வலுவான ஒற்றுமை நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஆகஸ்ட் மாதம்  1946-ஆம் ஆண்டு முதல், அமைச்சரவைத் தூதுக்குழுவின் தோல்வியும், நேரடி நடவடிக்கைக்கான (Direct Action) அழைப்பும் பரவலான இனக்கலவரங்களுக்கு வழிவகுத்தன. இருப்பினும், பின்னோக்கிப் பார்க்கையில், இந்த எழுச்சியானது போருக்குப் பிந்தைய காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இது மக்கள் ஒன்றிணைவதற்கும் அணிதிரள்வதற்கும் வேறு பல வழிகள் இருப்பதைக் காட்டியது. இந்த புரட்சி கடற்படைக் கப்பல்களிலும் படைத்தளங்களிலும் நடந்த ஒரு முக்கிய கிளர்ச்சியாக இருந்தபோதிலும், இது பம்பாய் தெருக்களில் சாதாரண மக்கள் ஒன்றிணைந்த ஒரு தருணமாகவும் அமைந்ததைச் சுட்டிக்காட்டுகின்றனர். 


வளர்ந்து வந்த மதவாத பதற்றங்களுக்கு மத்தியிலும், 1946-ஆம் ஆண்டு நடைபெற்ற கடற்படை புரட்சியானது (RIN revolt) இந்து-முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. புரட்சிக் கவிஞர் சாஹிர் லூதியானவி, 'சுட்டெரிக்கப்பட்ட பாழ்நிலத்தில் பூத்த ஒரு நம்பிக்கை மலர்' என்று இந்த நிகழ்வினை வர்ணித்தார். ஆங்கிலேயர் ஆட்சியின் கடைசி ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் இந்தப் போராட்டம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் வீரர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் என அனைவரும் மதப் பிரிவினைகளைக் கடந்து ஒன்றிணைந்து செயல்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.  


போருக்குப் பிந்தைய காலத்தில் மதவாத பதற்றங்கள் அதிகரித்த போதிலும், சாதாரண மக்களிடையே இருந்த ஒற்றுமை உணர்வு முற்றிலும் மறைந்துவிடவில்லை என்பதை 80 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் இந்த நிகழ்வு நமக்கு நினைவூட்டுவதாக பெருமிதம் கொள்கின்றனர். 


ராபர்ட் ரஹ்மான் ராமன், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள SRM பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையின் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.


Original article : The 1946 Royal Navy revolt: solidarity amid sharpening polarisation -Robert Rahman Raman

Share: