வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதே வேளையில், வரி வசூலிக்கும் முறையும் அதிகத் திறனுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் நேரடி வரி முறை கணிசமாக விரிவடைந்துள்ளது. வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்துள்ளதுடன், நிர்வாகத்திலும் சீரான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வளர்ச்சியானது பரவலாகவும் நிலையானதாகவும் இருப்பதை வருமான வரித்துறையின் தரவுகள் காட்டுகின்றன. இது ஏதோ தற்காலிகமாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது மட்டும் அல்ல, மாறாக நாட்டின் முறையான பொருளாதார அமைப்பில் மக்கள் ஆழமாகப் பங்கேற்பதையே குறிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
மதிப்பீட்டு ஆண்டு (Assessment Year (AY)) 2013-14-ஆம் ஆண்டு முதல் 2024-25-ஆம் ஆண்டு வரை, வருமான வரி தாக்கல் செய்தவர்கள் அல்லது வருமான வரி மூலத்தில் பிடிக்கப்பட்டவர்கள் (tax deducted at source (TDS)) உட்பட ஒட்டுமொத்த வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 5.26 கோடியிலிருந்து 12.13 கோடியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்திருப்பது, கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 7.89 சதவீதம் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்திற்கு (compound annual growth rate (CAGR)) சமமாக உள்ளது. இது ஒரு நிலையான வளர்ச்சியைக் குறிக்கிறது. நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number (PAN)) பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இந்தியாவின் நேரடி வரி முறையில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான கட்டமைப்பு மாற்றங்களில் இதுவும் ஒன்றாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
தரவுகளை விரிவாகப் பார்க்கும்போது, இந்த வளர்ச்சியில் தனிநபர் வரி செலுத்துவோரே முக்கியப் பங்கு வகித்துள்ளனர் என்பது தெரிகிறது. விளக்கப்படம் 1-ல் காட்டியுள்ளபடி, தனிநபர் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மதிப்பீட்டு ஆண்டு (AY) 2013-14-ஆம் ஆண்டில் 4.96 கோடியாக இருந்தது, இது 2024-25-ஆம் ஆண்டில் 11.61 கோடியாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது சுமார் 8 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைக் (CAGR) குறிக்கிறது.
விளக்கப்படம் 1 இடது அச்சில் உள்ள தனிப்பட்ட வரி செலுத்துவோரின் எண்ணிக்கையையும் (பார்களாகக் குறிப்பிடப்படுகிறது) வலது அச்சில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியையும் (ஒரு கோடாகக் குறிப்பிடப்படுகிறது) காட்டுகிறது.
கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பு, வளர்ச்சி சீராக இருந்தது; பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் 7 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை வளர்ச்சி காணப்பட்டது. ஆனால், 2020-21-ஆம் நிதியாண்டில் தனிநபர் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 9 சதவீதம் குறைந்தது. இது பெருந்தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பையே காட்டுகிறது.
இதனைத் தொடர்ந்து ஒரு வலுவான மீட்சி ஏற்பட்டது; சமீபத்திய மதிப்பீட்டு ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. இது தனிநபர் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதில் புதிய வேகத்தைக் காட்டுகிறது.
வரி செலுத்தும் முறையில் தனிநபர்களே (Individuals) பெரும் பங்கு வகித்தாலும், வளர்ச்சி என்பது அவர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. நிறுவனங்கள், இந்து கூட்டுக் குடும்பங்கள் (Hindu Undivided Families (HUF)), நபர்களின் கூட்டமைப்பு, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பிற வகை வரி செலுத்துவோரின் பொதுவான வளர்ச்சிப் போக்கை விளக்கப்படம்-2 (Chart 2) காட்டுகிறது.
விளக்கப்படம் 2-ல் (Chart 2), தனிநபர் அல்லாத வரிசெலுத்துவோரின் எண்ணிக்கை இடதுபுற அச்சிலும், ஆண்டுக்காண்டு வளர்ச்சி விகிதம் வலதுபுற அச்சிலும் காட்டப்பட்டுள்ளது.
தனிநபர் அல்லாத வரி செலுத்துவோரின் எண்ணிக்கை, மதிப்பீட்டு ஆண்டு 2013-14-ஆம் ஆண்டில் சுமார் 0.29 கோடியாக இருந்தது. இது ஆண்டுக்குச் சராசரியாக 5 சதவீத வளர்ச்சியைப் பெற்று, 2024-25-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 0.48 கோடியாக உயர்ந்துள்ளது.
தனிநபர் வரி செலுத்துபவர்களைவிட இந்த பிரிவினரின் வளர்ச்சி மெதுவாக இருந்தாலும், மிகவும் நிலையானதாக உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு, இவர்களின் ஆண்டு வளர்ச்சி பெரும்பாலும் 4 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இருந்தது. ஆனால், பெருந்தொற்று காரணமாக 2020-21 மதிப்பீட்டு ஆண்டில் இந்த வளர்ச்சி 1 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது என்கின்றனர். அதன் பிறகு வந்த ஆண்டுகளில் இது படிப்படியாக மீண்டும் முன்னேற்றம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
தனிநபர்களைப் போலன்றி, தனிநபர் அல்லாத வரி செலுத்துவோரின் (நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள்) பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சி மிதமானதாகவே உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இவர்களின் வளர்ச்சி சுமார் 5 சதவீதம் என்ற அளவில் நிலைபெற்றுள்ளது. வணிகங்கள் மற்றும் அமைப்புகளிடையே முறைப்படுத்துதல் தொடர்வதையே இது காட்டுகிறது, ஆனால் இது தனிநபர்களிடம் காணப்படும் வேகத்தை விடக்குறைவான மற்றும் சீரான வேகத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
வரி வசூலிப்புச் செலவு
வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், வரி நிர்வாகம் மிகவும் திறமையானதாக மாறியுள்ளது. விளக்கப்படம் 3-ல் காட்டியுள்ளபடி, நேரடி வரிகளை வசூலிப்பதற்கான செலவு, நிதி ஆண்டு 2000-01-ஆம் ஆண்டில் 1.36 சதவீதமாக இருந்தது, அது 2024-25-ஆம் நிதி ஆண்டில் 0.41 சதவீதமாக குறைந்துள்ளது.
2024-25-ஆம் நிதியாண்டிற்கான இந்த புள்ளிவிவரம் தற்காலிகமானது மற்றும் பின்னர் மாற்றியமைக்கப்படலாம். வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மற்றும் மொத்த வரி வசூல் கணிசமாக அதிகரித்த போதிலும், இந்த தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விளக்கப்படம் 3, நேரடி வரிகளை வசூலிப்பதற்கான செலவை (சதவீதத்தில் %) காட்டுகிறது.
2020–21-நிதியாண்டில் செலவு விகிதம் (cost ratio) அதிகரித்தது ஒரு தற்காலிகமான நிகழ்வுதான் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். இது முக்கியமாகப் பெருந்தொற்று ஏற்படுத்திய இடையூறுகளால் ஏற்பட்டதே தவிர, நிறுவனத்தின் கட்டமைப்புக் குறைபாடு அல்ல என்றும் அதன் பிறகு, இந்த விகிதம் தரவுகளில் உள்ளதிலேயே மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது நிர்வாகத் திறனில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றத்தைக் காட்டுவதாகவும் தெளிவுபடுத்துகின்றனர்.
இந்த மாற்றங்களை சில நிறுவன ரீதியான மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் மூலம் விளக்க முடியும் என்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில், வரி நிர்வாகமானது டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்தல் (Digital filing), முன்-நிரப்பப்பட்ட படிவங்கள் (Pre-filled returns), முகமற்ற மதிப்பீடு (Faceless assessments) மற்றும் பரவலான மூன்றாம் தரப்பு தகவல் அறிக்கையிடல் (Third-party reporting) ஆகியவற்றையே அதிகம் சார்ந்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் விதிமுறைகளைப் பின்பற்றுவதில் உள்ள சிரமங்களைக் குறைத்துள்ளன. மேலும், கூடுதல் நிர்வாக ஆதாரங்கள் தேவைப்படாமலேயே அதிகப்படியான வரி செலுத்துவோரை கையாள இந்த அமைப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் வரி செலுத்துவோர் எண்ணிக்கை எந்தளவிற்கு நிலையாக உயர்ந்துள்ளது என்பதைத் தீர்மானிக்க, வெறும் மேலோட்டமான புள்ளிவிவரங்களை மட்டும் நம்பியிருக்காமல், தனிப்பட்ட வரி செலுத்துவோரின் தரவுகள், ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி மற்றும் நீண்டகால கூட்டு வளர்ச்சி விகிதம் (CAGR) போன்றவற்றை இந்த ஆய்வு பயன்படுத்துகிறது.
ஒட்டுமொத்தமாக, வரி செலுத்துவோர் எண்ணிக்கை, வளர்ச்சி விகிதங்கள், கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகித (CAGR) போக்குகள் மற்றும் வரி வசூல் செலவுகள் ஆகியவை இந்தியாவின் நேரடி வரி முறை வலுவடைந்துள்ளதைக் காட்டுகின்றன. நிர்வாகத் திறன் மேம்படும் அதே வேளையில், பரவலான வரி செலுத்துவோரிடமிருந்து வருவாய் வசூலிக்கப்படுகிறது. இது நிலையான பொது நிதிக்கு ஆதரவளிப்பதோடு, வரி விதிப்பை முறையான பொருளாதாரத்திற்குள் கொண்டு வருகிறது. இந்த மாற்றம் நாட்டின் வருவாய் நிலைத்தன்மை, நேர்மை மற்றும் நீண்ட கால நிதித் திட்டமிடலில் முக்கிய தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
வரி செலுத்துவோரின் எண்ணிக்கை தரவுகளைப் பயன்படுத்தி, வளர்ச்சி விகிதங்கள் ஆண்டுக்கு ஆண்டு கணக்கிடப்படுகின்றன.
சுருக்கப்படாத மதிப்புகளைக் கொண்டு, மதிப்பீட்டு ஆண்டு (AY) 2013-14 முதல் 2024-25 வரையிலான காலத்திற்கு கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதமானது (CAGR) கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், மதிப்பீட்டு ஆண்டு (AY) 2024-25 மற்றும் நிதி ஆண்டு (FY) 2024-25 ஆகியவற்றிற்கான புள்ளிவிவரங்கள் தற்காலிகமானவை ஆகும்.
எழுத்தாளர், இந்திய புள்ளிவிவரப் பணியில் (Indian Statistical Service) பணிபுரிகிறார்.
Original article : India’s taxpayer base more than doubled in the last decade -Chandrasekar K.