சிவகங்கை மாவட்டம் காட்டுநெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழிபாட்டு சுதந்திரமும், தங்கள் விவகாரங்களை தாங்களே நிர்வகிக்கும் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி ஒரு கையெழுத்துப் பிரதியை அனுப்பியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு, புகழ்பெற்ற தலைவர்கள் மூலம் மட்டுமல்லாமல், சாதாரண மக்கள் மூலமாகவும் அமைந்திருந்தது.
இந்த பங்களிப்புகள் இரண்டு வகைகளில் அமைந்திருந்தன: ஒன்று, உரிமைகளை வடிவமைப்பதன் மூலம் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வருவது; மற்றொன்று, பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்குவதன் மூலம் பாதுகாப்பை உறுதி செய்வது. குறிப்பாக, பட்டியல் இனத்தவர் (Scheduled Caste (SCs)) மற்றும் மத சிறுபான்மையினர் போன்ற நலிவடைந்த பிரிவினரைப் பாதுகாப்பதில் அரசின் பங்களிப்பு முக்கியமாக இருந்தது.
மார்ச் மாதம் 9-ஆம் தேதி, 1947-ஆம் ஆண்டு தேதியிட்ட தி இந்து நாளிதழ் செய்தியின்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையினரைப் பாதுகாப்பது குறித்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்காக, மார்ச் மாதம் 1947-ஆம் ஆண்டில் அரசியல் நிர்ணய சபையின் ஆலோசனைக் குழுவின்கீழ் இயங்கிய சிறுபான்மையினர் துணைக் குழு, ஆறு அம்சங்கள் கொண்ட கேள்வித்தாள் ஒன்றை வெளியிட்டது. வங்காளத்தைச் சேர்ந்த கிறிஸ்தவத் தலைவரான எச்.சி. முகர்ஜி தலைமையிலான இந்தக் குழுவில் ஜக்ஜீவன் ராம், சி. ராஜகோபாலாச்சாரி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், பி.ஆர். அம்பேத்கர், எஸ்.பி. முகர்ஜி, ராஜ்குமாரி அம்ரித் கவுர், எம். ரத்னசாமி, கே.எம். முன்ஷி மற்றும் கோவிந்த் வல்லப் பந்த் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.
ஜூலை மாதம் 1937-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதம் 1939-ஆம் ஆண்டு வரை சி. ராஜகோபாலாச்சாரி தலைமையிலான சென்னை மாகாண அரசில் விவசாய அமைச்சராகப் பணியாற்றிய வி.ஐ. முனுசாமி பிள்ளை, மற்ற பட்டியல் சாதித் தலைவர்களுடன் இணைந்து, பட்டியல் சாதியினருக்கான கல்வி மற்றும் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்குத் தொடர வேண்டும் (ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்படும் விதிமுறை) என்று கோரிக்கை விடுத்தார். இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும், ஆலோசனைக் குழுவின் தலைவருமான சர்தார் வல்லபாய் படேல், இந்தக் கோரிக்கையை ஏற்று, மே மாதம் 1949-ஆம் ஆண்டில் அரசியல் நிர்ணய சபையில் சமர்ப்பித்த அறிக்கையில் இதனைச் சேர்த்ததாகக் கூறப்படுகிறது.
சிறுபான்மையினருக்குத் தனித்தொகுதி (separate electorates) வழங்கும் யோசனை, சிறுபான்மையினர் துணைக்குழு மற்றும் ஆலோசனைக் குழுவால் விவாதிக்கப்பட்டது. ஜூலை மாதம் 1947-ஆம் ஆண்டில்கூட, சிறுபான்மையினருக்குத் தனித் தொகுதி வழங்கக் கூடாது என்ற துணைக்குழுவின் முடிவை ஆலோசனைக் குழு ஏற்றுக்கொண்டது.
முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் மற்றும் பி. போக்கர் சாஹிப் பகதூர் ஆகியோர் தனித்தொகுதி முறைக்கு வலுவான ஆதரவை வழங்கினர். சிறுபான்மையினர் தங்கள் குறைகளை முன்வைக்க ஒரு வழி தேவை என்று போக்கர் சாஹிப் பகதூர் வாதிட்டார். இதற்காகவே தனி பிரதிநிதித்துவம் கோரப்பட்டதாகவும், இடஒதுக்கீடு முறைகள் கைவிடப்பட்ட நிலையில், தனித்தொகுதி கோரிக்கை இயற்கையாகவே எழுந்ததாகவும் அவர் கூறினார். தங்களுக்குத் தாங்களே கருத்துக்களை வெளிப்படுத்தவும், மற்றவர்கள் அதைக் கேட்கவும், தங்களுக்குள் ஒன்றிணையவும் உரிமை வேண்டும் என்று இஸ்மாயில் கூறினார். தனித்தொகுதி என்பது பிரிவினைவாதம் என்று அர்த்தமல்ல. அது குழுக்களுக்கிடையிலான வேறுபாடுகளை அங்கீகரிப்பதே தவிர, மக்களைப் பிரிப்பதற்காக அல்ல என்றும் அவர் வாதிட்டார்.
இருந்தபோதிலும், சிறுபான்மையினர் துணைக் குழு இந்த யோசனையை நிராகரித்தது. ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்த (தற்போதைய உத்தரப்பிரதேசம்) முஸ்லீம் லீக் உறுப்பினர் Z.H. லாரி கூறுகையில், எந்தவொரு பிரிவினரையும் பொது வாழ்விலிருந்து தனிமைப்படுத்தும் எந்தவொரு விதியும் இருக்கக்கூடாது என்றார். சிறுபான்மையினர் தேசத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக மாற முயற்சி செய்ய வேண்டும் என்றும், தங்களை ஒரு தனி அமைப்பாகக் கருதாமல், ஒட்டுமொத்த தேசத்தின் ஒரு பகுதியாகக் கருதி, ஆட்சியில் தங்களுக்கு ஒரு கௌரவமான இடத்தைப் பெற்றுத்தரும் பாதுகாப்பு வழிமுறைகளை மட்டுமே கோர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு நிர்ணய சபை சாதாரண மக்களிடமிருந்தும் ஆலோசனைகளைப் பெற்றது. மதச் சமூகங்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரத்தில் அரசு தேவையற்ற முறையில் தலையிடுவதைத் தடுத்து, அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான கே.வி. சுந்தரேச ஐயர் கருதினார். சமபந்தி போஜனம் (ஒன்றாக அமர்ந்து உண்ணுதல்) அல்லது வரதட்சணை போன்றவற்றை தனிப்பட்ட மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளாகக் கருதிய அவர், இதில் அரசாங்கம் ஏன் தலையிட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இருப்பினும், குடியரசுக் கொள்கைகளை (Republican Principles) அடிப்படையாகக் கொண்டு, அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அவரது கருத்தை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.
Assembling India’s Constitution என்ற புத்தகத்தின்படி, சிவகங்கை மாவட்டம் காட்டுநெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த எஸ். ஒப்பிலியப்பன் என்பவர், அரசியல் நிர்ணய சபையின் செயலகத்திற்குத் தமிழில் ஒரு கைப்பட எழுதிய கோரிக்கை மனுவை அனுப்பினார். அந்தச் சமயத்தில் அரசியல் நிர்ணய சபையின் செயலகமும், பத்திரிகை தகவல் பணியகமும் (Press Information Bureau (PIB)) எச்.வி.ஆர். ஐயங்கார் மற்றும் ஏ.எஸ். ஐயங்கார் ஆகிய இரு தமிழர்களின் தலைமையில் இருந்தபோதிலும், அந்த கடிதத்தின் முக்கிய கருத்துக்களைப் புரிந்துகொள்வது அவர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. அந்தக் கடிதத்தை எழுதியவர் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அதிகாரிகளால் துல்லியமாகத் தீர்மானிக்க முடியவில்லை. இருப்பினும் அவர் ஒரு இந்து பட்டியலின (தலித்) சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பதை அவர்கள் கண்டறிந்தனர். ஒப்பிலியப்பன் தனது கடிதத்தில் முக்கியமாக, தங்கள் சமூகத்தினர் சுதந்திரமாக வழிபாடு செய்வதற்கும், தங்கள் சமூக விவகாரங்களைத் தாங்களே நிர்வகிப்பதற்கும் உரிமை வேண்டும் என்று கோரியிருந்ததாக அந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது.
காட்டுநெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்த நபர் கோரிய இந்த விரிவான சுதந்திரம், அரசியலமைப்பின் பிரிவு 25-ல் (Article 25) பிரதிபலிக்கிறது. இது மத சுதந்திரத்திற்கான உரிமையை (Right to Freedom of Religion) உறுதி செய்கிறது. பொது ஒழுங்கு மற்றும் அறநெறி போன்ற சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, அனைத்து மக்களும் தங்கள் மனசாட்சிப்படி செயல்படவும், எந்தவொரு மதத்தையும் சுதந்திரமாகப் பின்பற்றவும், கடைப்பிடிக்கவும் மற்றும் பரப்புவதற்கும் உரிமை உண்டு என்பதை இந்த சட்டப்பிரிவு தெளிவுபடுத்துகிறது.
இந்த நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள், மனதில் கொள்ள வேண்டியது என்னவென்றால், அரசியலமைப்பு என்பது சிறந்த சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கூட்டு முயற்சிகளின் விளைவு மட்டுமல்ல, ஒப்பிலியப்பன் போன்றவர்களின் முயற்சிகளின் விளைவும் ஆகும்.
Original article : How ordinary people of Tamil Nadu participated in the making of the Constitution? -T. Ramakrishnan